ஞாயிறு, 31 ஜூலை, 2016

வாங்க பழகலாம்! - நாளைய பாரதம் – 9


நாளைய பாரதம் தலைப்பில் புகைப்படங்கள் வெளியிட்டு மூன்று மாத காலம் ஆகிவிட்டது. கடைசியாக வெளியிட்டது மார்ச் 6-ஆம் தேதி. அதன் பிறகு நிறைய ஊர்களுக்குப் பயணித்துவிட்டேன். நிறைய புகைப்படங்களும் எடுத்திருந்தேன் – ஆனாலும் ஏனோ வெளியிட முடியவில்லை. சோம்பல் தான் காரணம்....  புகைப்படங்களை தேடி எடுத்து ஒன்று சேர்த்து வெளியிட வேண்டும் – ஆனாலும் ஒரு தொகுப்பாய் வெளியிட்டு நாளைய பாரததின் வேர்களைக் காணும்போது மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது என்னவோ உண்மை......

இதோ இந்த ஞாயிறில் நாளைய பாரதம் தொகுப்பின் ஒன்பதாம் பகுதி. சமீப மாதங்களில் சென்ற பயணங்களின் போது எடுத்த படங்கள் ஒரு தொகுப்பாய் இங்கே – வடக்கே ஹிமாச்சலப் பிரதேசத்தில் எடுத்த சில படங்களும் தெற்கே விசாகப்பட்டினத்தில் எடுத்த சில படங்களும் இந்தத் தொகுப்பில் உங்கள் பார்வைக்கு.... கூடவே நான் ரசித்த சில பொன்மொழிகள் – ஆங்கிலத்தில் – மொழி பெயர்ப்பதில் விருப்பம் இல்லாததால்! இதோ உங்கள் ரசனைக்கு.....  படங்களைப் பற்றியும் பதிவு பற்றியும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்


படம்-1: மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன? [எடுத்த இடம்: குல்லூ அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றபோது அங்கே வேலை செய்பவரின் குழந்தை]

Children are one third of our population and all of our future. ~Select Panel for the Promotion of Child Health, 1981படம்-2: இப்பதான் மம்மு சாப்பிட்டு முடிச்சேன்.....  [[எடுத்த இடம்: குல்லூ அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றபோது அங்கே வேலை செய்பவரின் இன்னுமொரு குழந்தை]

Even when freshly washed and relieved of all obvious confections, children tend to be sticky. ~Fran Lebowitzபடம்-3: என் ஸ்டைல் எப்படி இருக்கு? உங்களுக்குப் பிடிச்சுருக்கா? [எடுத்த இடம்: மணாலி-Solang Valley செல்ல கேபிள் காருக்கு காத்திருந்தபோது]

Every child comes with the message that God is not yet discouraged of man. ~Rabindranath Tagoreபடம்-4: நான் நல்லா இருக்கேனா, என் தொப்பியும் நல்லா இருக்கா?[எடுத்த இடம்: மணாலி-Solang Valley செல்ல கேபிள் காருக்கு காத்திருந்தபோது]

Anyone who thinks the art of conversation is dead ought to tell a child to go to bed. ~Robert Gallagher


படம்-5: சின்னதா ஒரு நடனம்.....  பிடிச்சுருக்கா? [எடுத்த இடம்: ஹிமாச்சல் அருகே உள்ள மணிக்கரன் குருத்வாரா சென்றபோது]

Kids: they dance before they learn there is anything that isn't music. ~William Staffordபடம்-6: அட இந்த மனுஷன் என்னப்பா, ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருக்காரே? [எடுத்த இடம்: ஹிமாச்சல் பிரதேசத்தின் கஜியார் எனும் இடத்தில்!]

Children seldom misquote. In fact, they usually repeat word for word what you shouldn't have said. ~Author Unknownபடம்-7: முதல் மொட்டையடிச்சு நாமமும் போட்டாச்சு...... [எடுத்த இடம்: விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்ஹாச்சலம் கோவில் அருகே]

A three year old child is a being who gets almost as much fun out of a fifty-six dollar set of swings as it does out of finding a small green worm. ~Bill Vaughanபடம்-8: இந்தச் சிரிப்பும் மகிழ்ச்சியும் எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்குமா? [எடுத்த இடம்: விசாகப்பட்டினத்திலிருந்து அராக்கு Valley சென்றபோது – பாசஞ்சர் ரயிலில்!]

You are worried about seeing him spend his early years in doing nothing. What! Is it nothing to be happy? Nothing to skip, play, and run around all day long? Never in his life will he be so busy again. ~Jean-Jacques Rousseau, Emile, 1762படம்-9: எனக்கு பெரிசா ஆசையெல்லாம் இல்லை என சட்டையின் வாசகத்தில் எழுதி வைத்திருக்கும் இச்சிறுவனுக்கு ஒரே ஆசை – இந்த ஃபோட்டோ எடுக்கற மாமா வைச்சிருக்காரே காமெரா அதைக் கொடுக்க வேண்டும் என்பதே! [எடுத்த இடம்: விசாகப்பட்டினம்]

We worry about what a child will become tomorrow, yet we forget that he is someone today. ~Stacia Tauscherபடம்-10: அச்சச்சோ.... இந்த மாமா நம்மள படம் பிடிக்கிறாரே... எனக்கு ஒரே வெக்கமா இருக்கு! [எடுத்த இடம்: விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமம்].

While we try to teach our children all about life, our children teach us what life is all about. ~Angela Schwindtபடம்-11: நான் போட்டிருக்கும் காதணி நல்லா இருக்கா? பிடிச்சு இருக்கா உங்களுக்கு? [எடுத்த இடம்:  கைலாச கிரி, விசாகப்பட்டினம்]

Children make you want to start life over. ~Muhammad Aliபடம்-12: சாப்பிட விடாம என்ன ஃபோட்டோ எடுக்க வேண்டியிருக்கு? [விசாகப்பட்டினம் தசபெல்லா உணவகத்தில் சாப்பிட வந்த ஒரு குழந்தை]

A child can ask questions that a wise man cannot answer. ~Author Unknown

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களையும், கொடுத்துள்ள வாசகங்களையும் ரசித்தீர்களா? உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்களேன்....

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

டிஸ்கி: இந்தப் படங்களில் ஏதாவது ஒரு படத்திற்கு, கவிதை எழுத விரும்புவர்கள் கவிதை எழுதி எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைக்கலாம்.....  எனது பக்கத்திலும் பகிர்ந்து கொள்வேன் - படமும் கவிதையும் பகுதியாக!

சனி, 30 ஜூலை, 2016

அசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவுஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 31

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 30 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....ஹோட்டல் மயூர், Gகௌகாத்தி இருக்கும் இடத்தின் எதிர் புறத்தில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது. அங்கே தான் எங்கள் பயணத்திற்கான சீட்டினை முன்பதிவு செய்திருந்தோம். கணினி மூலம் முன்பதிவு செய்து அதற்கான ரசீதைக் கொண்டு போய் காண்பிக்க, ஒரு பேருந்தின் எண்ணை எழுதிக் கொடுத்து இந்தப் பேருந்தில் சென்று அமருங்கள் எனச் சொல்லி, அதன் பின் இன்னுமொரு பேருந்தின் எண்ணையும் தந்து அது தான் உங்களை உங்கள் இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும் என்றார்! என்ன குழப்பம்?


ASTC பேருந்து.....
படம்: இணையத்திலிருந்து....

அதாவது முதலில் சொன்ன பேருந்தில் அமர்ந்து Gகௌகாத்தி நகரின் மற்றொரு பகுதியில் இருக்கும் பெரிய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே சென்றால், மற்றொரு பேருந்து காத்திருக்கும், அதில் தான் நாங்கள் பயணிக்க வேண்டுமாம். இதை அவரிடம் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அது தெரியாத பலரும் முதல் பேருந்தில் ஏறி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சீட்டு எண்ணில் பார்த்தால் வேறு யாரோ அமர்ந்திருக்க அவர்களோடு சண்டை – புரியாத மொழிச் சண்டை.  எங்களிடமும் அப்படி சிலர் சண்டை – அசாமி மொழியில் ஏதேதோ சொல்கிறார்கள்!

அனைவரிடமும் ஹிந்தி மொழியில் இந்தப் பஸ் போகாது, பெரிய பஸ் ஸ்டாண்டுக்குப் போய் அங்கே வேறு பஸ்ஸில் தான் போக வேண்டும் என்பதை புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது! அதுவும், இந்தப் பேருந்தில் சென்று பெரிய பஸ் நிலையத்தில் வேறு வேறு பேருந்துகளில் பயணிக்கப் போவதால், பலருக்கும் ஒரே சீட்டு எண் அமைந்திருக்க, மூன்று நான்கு பேரிடம், ஒரே சீட்டு எண் இருக்க, ஒரே கலாட்டா....  இங்கே இதெல்லாம் நடந்து கொண்டிருக்க, இவற்றைக் கவனித்து சரி செய்ய, புரிய வைக்க, பேருந்து நடத்துனரோ, ஓட்டுனரோ இல்லை. அவர்கள் கூவிக் கூவி பெரிய பேருந்து நிலையம் தாண்டி போக வேண்டிய இடத்திற்கு ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.


ASTC பேருந்து நிலையம்.....
படம்: இணையத்திலிருந்து....

இதற்குள் எங்களுக்குச் சொன்ன, பேருந்து புறப்படும் நேரம் கடந்து கொண்டிருந்தது. எங்களை அழைத்துப் போகப்போகும் பேருந்து பெரிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு விடுமோ என்ற எண்ணம் தோன்ற, கீழே நின்றிருந்த பேருந்து நடத்துனரிடம் சென்று கேட்டேன். அவரோ, கூலாக, நாங்க உங்களை அங்கே கொண்டு சென்று சேர்த்த பிறகு தான் அந்தப் பேருந்து புறப்படும் – கவலைப்படேல் என்று சொல்லி விட்டார். சில பல சண்டைகளுக்கும், குழப்பங்களுக்கும் பிறகு பெரிய பேருந்து நிலையம் நோக்கி பேருந்து சென்றது.  Gகௌகாத்தி நகரின் சில பகுதிகளைப் பார்த்தவாறே பெரிய பேருந்து நிலையம் சென்றடைய அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. அந்தப் பேருந்து நிலையம் அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் ஒரு பாலாஜி கோவிலும் இருந்தது. திரும்பி வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தோம்!

பேருந்து நிலையத்தில், எங்களை அழைத்துச் செல்லப் போகும் பேருந்து காத்திருந்தது. எங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அந்தப் பேருந்து நிலையத்தில் சில பிஸ்கெட் பாக்கெட்டுகளும், நொறுக்குத் தீனிகளும் வாங்கிக் கொண்டோம். கூடவே இரண்டு மூன்று தண்ணீர் பாட்டில்களும். செல்லும் வழி எப்படி என்பது தெரியாமல் பயணம் செய்வதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது! மதியம் ஒரு மணிக்கு பேருந்து புறப்பட்டது. மதிய உணவினை வழியில் எங்காவது சாப்பிடலாம், அது வரை நொறுக்ஸ் சாப்பிடலாம் என்றும் முடிவு!


ASTC சின்னத்திலும்  காசிரங்கா காண்டாமிருகம்.....
படம்: இணையத்திலிருந்து....

அது சரி இலக்கு நோக்கி பயணிக்கிறோம் என்றே இது வரை சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். அந்த இலக்கு என்ன என்பதை இது வரை சொல்லாமலே இருந்திருக்கிறேன்! அசாம் என்றவுடன் சுற்றுலா நிறுவனங்கள் சொல்லும் இரண்டு இடங்கள் உண்டு – ஒன்று மா காமாக்யா தேவி கோவில், இரண்டாவது காசிரங்கா தேசிய பூங்கா.......  நாங்களும் காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்லும் நோக்கத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தோம். அங்கே தான் மலையாளத்தில் “ஒற்றைக் கொம்பன் மூரிஎன அழைக்கப்படும் காண்டாமிருகங்கள் இயற்கையான சூழலில் இருக்கின்றன.

பேருந்துப் பயணம் பிடித்ததுதான் என்றாலும், தெரியாத ஊர், தெரியாத பாதைகளில் பயணிப்பது ஒரு சவாலான விஷயம். Gகௌகாத்தி நகரிலிருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் காசிரங்கா தேசியப் பூங்காவின் கொஹரா நுழைவு வாயில் பகுதி அமைந்திருக்கிறது. இந்த கொஹரா நுழைவு வாயில் தேசிய நெடுஞ்சாலை எண் 27-ல் அமைந்திருப்பதால் இந்த நெடுஞ்சாலை வழியாகத் தான் பெரும்பாலான வாகனங்கள் பயணிக்கின்றன. சுமார் ஐந்து மணி நேர பயணத்தில் பேருந்து மூலம் இங்கே சென்று சேர முடியும்.


அசாமீ ஃபிஷ் ஃப்ரைட் ரைஸ்
படம்: இணையத்திலிருந்து....

பேருந்து புறப்பட்டு இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு நகாவ்ன் பேருந்து நிலையத்தில் நுழைந்தது. “அரை மணி நேரம் நிற்கும், சாப்பிடறவங்க சாப்பிடலாம்என்று நடத்துனரே கூவினார்! என்ன கிடைக்கும் என்று பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தினுள் சென்று பார்த்தோம் – உள்ளே நுழைந்ததும் ஒரே மீன் வாசம்! ஒரு தட்டில் சோறு – அதன் மேல் ஒரு மீன் வைத்துக் கொண்டு கலந்து சாப்பிடுகிறார்கள். ஹோட்டலும் அத்தனை சுத்தம் இல்லை! நண்பர்களுக்கும் அங்கே சாப்பிட மனமில்லை. வெளியே வந்தோம்.

பேருந்து நிலையத்தின் வெளியே சில கடைகள் இருக்க, அங்கேயும் மீன் தான்! சரி இன்னிக்கு மதியம் பட்டினி தான் என்று நினைத்து வெளியே வந்தோம். பக்கத்திலேயே ஒரு சிறிய ஜூஸ் கடை – அதிலே சாத்துக்குடி, மாதுளை போன்றவற்றின் ஜூஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பக்கத்திலேயே ஒரு பெட்டிக்கடை – அங்கே Brittania Cakes, Biscuits போன்றவை இருக்க அவற்றையும் வாங்கிக் கொண்டு, ஆளுக்கொரு பெரிய கிளாஸ் ஜூஸ் – முப்பது ரூபாய் ஒரு கிளாஸ் – வாங்கிக் குடித்து விட்டு, பேருந்துக்குத் திரும்பவும், நடத்துனர் வரவும் சரியாக இருந்தது.

பேருந்தில் அமர்ந்து பிஸ்கெட், கேக் ஆகியவற்றை காலி செய்தோம். அன்றைக்கு மதிய உணவு அது மட்டுமே! ஜூசையும் குடித்து, தண்ணீரையும் குடித்ததால் வெகு விரைவிலேயே அதை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்பதையும் மறந்து விட்டோம்.  பேருந்து தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. நடுநடுவே புராணிகுடாம், சாமாகுரி, காலியாபோர், குவாரிதோல் போன்ற சில சிற்றூர்களில் பேருந்து நின்று சிலரை இறக்கி விட்டும், வேறு சிலரை ஏற்றிக் கொண்டும் சென்று கொண்டிருந்தது.

கொஹரா கேட் பகுதியில் இருக்கும் காசிரங்கா ரிசார்ட் என்பதில் தங்குவதாக முன்பதிவு செய்து வைத்திருந்தோம். அங்கே செல்ல எந்த இடத்தில் இறங்க வேண்டும் எனக் கேட்க, அவர் சொன்ன இடம் எங்களுக்குப் புரியவில்லை. அலைபேசியை பேருந்து நடத்துனரிடம் கொடுத்து அவரைக் கேட்டுக் கொள்ளச் சொன்னோம். அந்த இடத்தில் எங்களை இறக்கி விடுவதாகச் சொல்லி எங்களை கவலை இன்றி அமர்ந்திருக்கச் சொன்னார். கொஹரா கேட் பகுதி வந்ததும் எங்களை பேருந்திலிருந்து இறக்கி விட்டபோது மாலை ஆறு மணி!

சிறிய இடம், ஊரே அமைதியாக இருந்தது. சில வனப் பயணம் போகும் சஃபாரி ஜீப்கள் நின்று கொண்டிருக்க, எங்களை ரிசார்ட் வரை அழைத்துச் செல்லப் போகும் வாகனம் எது எனப் புரியாமல், மீண்டும் ரிசார்ட் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். சில நிமிடங்களில் எங்களை அழைத்துச் செல்ல ஒரு ஜீப் வர, அதில் ஏறிக்கொண்டு சில நிமிட பயணத்தில் காசிரங்கா ரிசார்ட் சென்றடைந்தோம். அங்கே கிடைத்த அனுபவங்கள், காசிரங்கா வனத்தினுள் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை வரும் பகுதிகளில் சொல்கிறேன்....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 29 ஜூலை, 2016

ஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்ணம் கொண்ட.... – தாய்க்குணம்!


இந்த வார செய்தி:

பெங்களூருவில் உள்ள ஒரு 36 வயது ஓவியர் பாதல் நஞ்சுண்டஸ்வாமி. திறமையுள்ள இந்த ஓவியருக்கு பொதுநலத்திலும் அக்கறை உண்டு. வடக்கு பெங்களூருவில் உள்ள சுல்தான்பாளையா சாலையில் 12 அடி அளவிற்கு சாலையில் நீண்ட பள்ளம்.  பெங்களூரு நகராட்சியோ, குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியமோ இதை நீண்ட நாட்களாகவே கண்டு கொள்ளவில்லை. அங்கே தான் நஞ்சுண்டஸ்வாமி தனது திறமையை பயன்படுத்துகிறார்.


இப்படி இருந்த சாலை....


இப்படியாக.....  கவனைத்தினை ஈர்க்க.....

9 அடி நீளமும், 18 கிலோ எடையும் கொண்ட ஒரு முதலை பொம்மையை, ஆறாயிரம் ரூபாய் செலவில் தயாரித்து, அந்த 12 அடி நீள் பள்ளத்தில் வைத்து, கூடவே பச்சைக் கலர் பொடிகளையும் தூவி வைத்து, நகராட்சி மற்றும் வாரியங்களின் கவனத்தினை ஈர்க்க முயன்றிருக்கிறார். 

மற்றுமொரு கவன ஈர்ப்பு....

பெங்களூருவின் நயந்தஹள்ளி ஜங்ஷனில் அமைத்த The Frog Prince காட்சியில் கன்னட நடிகை சோனு கௌடாவும் இவருடன் சேர்ந்து கொள்ள அந்த இடம் இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது!

திறந்திருக்கும் சாக்கடை.....
எமதர்மன் வாய் போல!

அதே போல திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை ஒன்றினை எமதர்மன் வாயைப் போல வரைந்து வைக்க, அதனை ஒரே நாளில் சரி செய்திருக்கிறது மாநகராட்சி.  இப்படி தொடர்ந்து அவரது திறமையால் மாநகராட்சியை ஈர்த்து பிரச்சனைகளை தீர்க்க வைக்கும் திரு நஞ்சுண்டஸ்வாமி அவர்களை வாழ்த்துவோம்.

அவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே!  நீங்களும் வாழ்த்தலாமே.....


இந்த வார முகப்புத்தக இற்றை:

வீட்டுக்கு வந்த விருந்தாளிட்ட போகும்போது பாத்து பத்திரா போயிட்டு வாங்கன்னு சொன்னா அது கிராமம்.
...
...
...
அதுவே போறப்ப கேட்ட சாத்திட்டு போங்கன்னு சொன்னா அது நகரம்!

இந்த வார காணொளி:

மனதைத் தொட்ட காணொளி.....  Robin Hood Army செய்யும் நற்செயல்...  பாருங்களேன்.
இந்த வார குறுஞ்செய்தி:

The best thing about speaking the truth is you don’t have to remember what you said!

ஒரு பொய் சொன்னா பரவாயில்லை நினைவில் வைத்துக் கொள்ளலாம்! பல பொய்கள் சொல்லும்போது அவை, அனைத்தையும் நினைவில் வைத்து, மேலும் மேலும் பொய் சொல்ல வேண்டியிருக்கும்!

இந்த வார ரசித்த பாடல்:

சிகரம் படத்திலிருந்து.....  “வண்ணம் கொண்ட வெண்ணிலவே!” பாடல்.படித்ததில் பிடித்தது:

தாய்க்குணம்கரப்பான் பூச்சி
மயிர்க்கொட்டிப் புழு
பல்லி எனப் பார்த்து
அம்மா பயந்து கொள்ளும் பட்டியலில்
பூனையும் உண்டு
நேற்றிரவு பக்கத்து வீட்டுப் பூனையின்
பிரசவத்தின் போது
அம்மா கூடவே இருந்தாள்.
எங்க வீட்டு நாயின் பசி வேட்டைக்கு
பூனைக்குட்டிகள் ஆளாகிவிடக்கூடாது
என்பதற்காய்

***ஜே. ஃபிரோஸ்கான். என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி....கவிதைத் தொகுப்பிலிருந்து....

திரு ஜே. ஃபிரோஸ்கான் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்
வெங்கட்.

புது தில்லி.

வியாழன், 28 ஜூலை, 2016

சராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 30

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 29 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....பலியாகப் போகும் எருமை....
படம்: இணையத்திலிருந்து....

மா காமாக்யா தேவி கோவிலில் பார்த்த இன்னுமொரு விஷயத்தினை சென்ற பதிவில் குறிப்பிடவில்லை – அது அங்கே கொடுக்கப்படும் பலிகள். தாந்த்ரீக முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் அதிகம் வரும் இடம் இக்கோவில். தினமும் காலை நேரத்தில் ஆடுகள், புறாக்கள், சில சமயங்களில் எருமைகள் கூட இங்கே பலி கொடுக்கப்படுவதுண்டு. இதற்காகவே கோவிலின் ஒரு பகுதியில் பலி கொடுக்கும் வசதிகள் இருக்கின்றன.  நாங்கள் சென்ற போதும் ஆடுகள் பலி கொடுக்கப்பட காத்திருந்தன.  அங்கேயே விற்பனைக்கு வைத்துக் கொண்டு பலர் காத்திருக்கிறார்கள். சிலர் வீடுகளிலிருந்தே கொண்டு வருகிறார்கள்.


பலியிட ஆடுகள் விற்பனைக்கு....
படம்: இணையத்திலிருந்து....

பலி என்பதே தேவையில்லாத விஷயம் என்று நானும், என்னைப் போல் பலரும் நினைத்துக் கொண்டிருக்க, பலி கொடுப்பதை காணொளிகளாக எடுத்துப் பகிர்பவர்களும் இருக்கிறார்கள். விருப்பமிருப்பவர்கள் youtube-ல் பகிர்ந்து இருக்கும் காணொளிகளை தேடிப் பார்த்துக் கொள்ளலாம்...  நிச்சயம் உங்களால் மனது சஞ்சலப்படாமல் பார்க்க முடியாது. என்னவொரு வழக்கமோ?  சற்றே வளர்ந்த ஒரு எருமையை, பலர் பிடித்து, மரச்சட்டங்களுக்கு இடையே கட்டி, ஒரே வெட்டில், தலை தனி உடல் தனியாக இரண்டு துண்டாக்கிவிடுகிறார். தினம் தினம் இப்படி பல ஆடுகள், ஒன்றிரண்டு எருமைகள் பலியிடப்படுகின்றன என்பது தான் சோகம்.


பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சராய் Gகாட் பாலம்
படம்: இணையத்திலிருந்து....

சரி சென்ற பதிவின் முடிவில் சொன்ன விஷயத்திற்கு வருகிறேன். மா காமாக்யா தேவியின் கோவில் வாசலிலிருந்து புறப்பட்ட நாங்கள், நாங்கள் அமர்த்திய வாகன ஓட்டியிடம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலத்தினைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவரும் எங்களை அழைத்துச் சென்றார்.  சராய் Gகாட் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே Gகௌகாத்தி நகரில் கட்டப்பட்ட முதல் பாலம் – அதாவது ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து இரண்டும் செல்ல பயன்படும் முதல் பாலம்.

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சராய் Gகாட் பாலம்
படம்: இணையத்திலிருந்து....

பிரம்மபுத்திரா நதியின் வடக்குக் கரையில் உள்ள ஓர் சிற்றூர் சராய். அந்தப் பகுதியில் இருக்கும் கரைகள் சராய் Gகாட் என அழைக்கப்படுகிறது. அப்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பாலமும் சராய் Gகாட் பாலம் என்றே அழைக்கப்படுகிறது.  இதன் கட்டுமானம் ஜனவரி 1958 ஆம் ஆண்டு தொடங்கியது. நான்கு ஆண்டுகளில் சுமார் 11 கோடி ரூபாய் செலவில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து இரண்டும் பயணிக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. 1962-ஆம் ஆண்டிலேயே சரக்கு ரயில் மற்றும் சில பயணிகள் ரயில்களும் இந்தப் பாலத்தினை பயன்படுத்தினாலும், ஜூன் 7, 1963 அன்று அன்றைய பிரதமர் திரு நேரு அவர்களால் பாலம் திறந்து வைக்கப்பட்டதாம்! பாலத்தின் மொத்த நீளம் 4258 அடி! 2012-ஆம் ஆண்டில் இந்தப் பாலத்தின் ஐம்பதாம் ஆண்டு விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டது.

ஐம்பதாவது ஆண்டு கொண்ட்டாட்டத்தில் சராய் Gகாட் பாலம்
படம்: இணையத்திலிருந்து....

மிகவும் பழமையான  பிரம்மபுத்திராவின் குறுக்கே அமைக்கப்பட்ட இந்த பாலங்கள் தான் இந்தியாவின் மற்ற பகுதிகளை வடகிழக்கு மாநிலங்களோடு இணைக்கிறது என்பதால் மிகவும் முக்கிய இடத்தினைப் பெறுகிறது இந்தப் பாலம்.  கீழ் பகுதியில் ரயிலும் அதன் மேல் பகுதியில் சாலைப் போக்குவரத்தும் செல்லும்படியான பாலம் இது.

சராய் Gகாட் பகுதி சரித்திரத்திலும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.  முகலாயர்களுக்கும் அசாம் பகுதியை அக்காலத்தில் ஆண்ட அஹோம் மன்னர்களுக்கும் நடந்த யுத்தம் இந்தப் பகுதியில் தான் நடைபெற்றது – சராய் Gகாட் யுத்தம் என்றே அந்த யுத்தத்தினை அழைக்கிறார்கள்.  அந்த யுத்தத்தில் அஹோம் மன்னர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது கூடுதல் செய்தி! 1671-ஆம் ஆண்டு நடந்த இந்த முகலாய – அஹோம் போரில் படைத்தளபதியாக இருந்த Lachit Borphukan என்பவரின் நினைவாக இந்தப் பாலத்திற்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது என்றாலும் சராய் Gகாட் பாலம் என்றே இதுவரை அழைக்கிறார்கள்.


இந்தப் பாலம் பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது. இந்திய சீன எல்லைப்பகுதி மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பாலமும் அமைந்திருக்கிறது.  பாலம் கட்டிமுடிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் சீனாவுடனான யுத்தம் துவங்கியது. எல்லைப் பகுதியில் போராடிய இந்திய வீரர்களுக்கு உணவு, ஆயுதங்கள், போர் தளவாடங்கள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல இந்தப் பாலம் இருந்ததால் வசதியாக இருந்தது என்பதும் ஒரு செய்தி.


ஐம்பதாவது ஆண்டு கொண்ட்டாட்டத்தில் சராய் Gகாட் பாலம்
படம்: இணையத்திலிருந்து....

சரி எங்கள் பயணத்திற்கு வருகிறேன். இந்தப் பாலத்தின் வழியே பயணித்து பிரம்மபுத்திரா நதியைக் கடந்த பிறகு வண்டியை நிறுத்தச் சொன்னோம். பாலத்திலிருந்து சற்றே தள்ளி சாலையின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினார் வாகன ஓட்டி. நாங்கள் அங்கே இறங்கிக் கொண்டு சாலையிலிருந்து கீழே இறங்கி ரயில் பாதைக்கு வந்தோம்.  அங்கே சில ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அங்கேயிருந்து அந்த பழைய பாலத்தினை நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். படங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சாலைக்கு வந்தோம்.

காரின் அருகே வர இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் எங்களை நோக்கி வந்து வாகன ஓட்டியிடம் அசாமி மொழியில் விசாரிக்கத் துவங்கினார்கள். கேரள நண்பர்கள் முன்னே சென்றிருக்க, நான் பின்னாலே வந்து கொண்டிருந்தேன்.  கேரள நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் ஏதோ காவல்துறையினரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.  நானும் முன்னே சென்று கேட்க, பாலத்தினை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதைச் சொல்லி எங்களைப் பற்றி விசாரிக்க, கொஞ்சம் பொறுமையாக அவரிடம் பேசினேன். 

மற்றவர்களை வாகனத்திற்கு அனுப்பிவிட்டு, நான் அந்த காவலாளிகளிடம் பேசினேன்.  நாங்களும் அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும், வேண்டுமெனில் அவர்களது மேலதிகாரியிடம் பேசுகிறேன் என்றும், எடுத்த புகைப்படங்களை அழித்து விடுகிறோம் என்றும் சொல்ல, எங்களை அனுப்பி வைத்தார்கள். இனிமேல் எந்த ஒரு பாலத்திலும் புகைப்படம் எடுக்காதீர்கள், பெரும்பாலான ரயில்வே பாலங்களை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டது என்பதையும் சொன்னார்கள்.

நானும் வாகனத்திற்கு வந்து வாகன ஓட்டியிடம் அசாமி மொழியில் என்ன பேசினார்கள், எனக் கேட்டதற்கு, அங்கே எங்களை அழைத்துக் கொண்டு வந்ததற்கும், புகைப்படம் எடுத்ததை தடுக்காததற்கும் மிரட்டினார்கள் என்றும், காசு வேண்டும் எனக் கேட்டதாகவும் சொன்னார்.  அது உண்மையா பொய்யா என்பது தெரியாததால் அவரிடம் ஒன்றும் பேசவில்லை. நண்பர்களுக்குள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டே நாங்கள் தங்கிய இடமான ஹோட்டல் மயூருக்கு திரும்பினோம்.

தங்குமிடத்தில் இருந்த உடமைகளை எடுத்துக் கொண்டு, சில நாட்கள் கழித்து இங்கே திரும்ப வேண்டும் என்பதால், இரண்டு அறைகளுக்கு முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டோம். பிறகு தங்குமிடத்தின் எதிரே இருக்கும் பேருந்து நிலையத்திற்குச் சென்று எங்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம். அந்த அனுபவங்கள் அடுத்த பதிவில்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.