எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, July 26, 2016

WhatsApp – வரமா சாபமா?என்ன திடீர்னு WhatsApp பத்தி பதிவு எழுதறீங்க? என்று நீங்கள் கேட்பதற்கு முன்னர் ஒரு WhatsApp செய்தி ஒன்று உங்கள் ரசனைக்கு......

வாட்ஸப் க்ரூப் அட்ராசிட்டீஸ்…

'எங்கடி ஃபேஸ்புக்ல ஆளே காணோம்?'

'கொஞ்சம் பிஸி டி'

'வாட்ஸப்ல ஆன்லைன்லயே இருக்க, ஆனா இந்த பக்கம் மட்டும் வர்றதேயில்ல'

'ஹி ஹி  கொஞ்சம் வாட்ஸப் க்ரூப்ல பிஸியா இருக்கேன்டி'

'அதனால தான் நைட்ல கூட ஆன்லைனா',,??

'ஆமா'

'இப்ப எத்தனை க்ரூப்ல இருக்க?'

'பதினொன்னு'

'அடிப்பாவி போன மாசம் கேட்டப்ப கூட ஆறோ ஏழோ க்ரூப்ஸ் தான் சொன்ன?'

'இப்ப புது க்ரூப்ஸ் நெறையடி'

'என்ன புது க்ரூப்ஸ்? '

'ஸ்கூல் க்ரூப் ஒண்ணு'

'ஆமா அதுல தான் நானும் இருக்கேனே'

'இல்லடி இது மூணாவது வரைக்கும் வரைக்கும் ஒ்ண்ணாப் படிச்சவங்க'

'ம்ம் அப்புறம்?'

'ட்யூஷன் க்ரூப் ஒண்ணு'

'ஆமா நானும் இருக்கேனே அதுல'

'இல்லடி இது கெமிஸ்ட்ரி ட்யூஷன் க்ரூப், நீ இருக்கறது ஃபிஸிக்ஸ் ட்யூஷன் க்ரூப்ல'

'ஓ இது வேறயா? அப்புறம்....'

குழந்தைகள் ஸ்கூல் மிஸ்லாம் இருக்காங்க இல்ல.. அவங்களோட ஒரு க்ரூப்..

தேவைதான்.. அப்பறம்..?

எங்க ஃபேமிலி க்ரூப் நாலு...

என்னது...பேமிலி க்ரூப் நாலா..?? உங்க பேமிலியில மொத்தமே நாலு பேர் தானடி ..??

இல்ல... நாங்க ஓரகத்திங்க எல்லாம் ஒரு க்ரூப்...

வெளங்கும்.... அப்பறம்....??

எங்க வீட்டுக்காரரோட சித்தப்பா பெரியப்பா பசங்க எல்லாரும் சேர்ந்து ஒரு க்ரூப்..

எங்க பேமிலி பிரதர்ஸ் லாம் ஒரு க்ரூப்....

தெய்ய்ய்வமே.....

'நமக்கு தெரிஞ்ச க்ரூப் அட்மின்ஸ் எல்லாம் இருக்காங்க தான, அவிங்க எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப்'

'எதுக்குடி வேலை வெட்டி இல்லாம?

சரி. விடு. வேற?'

'எங்க ஏரியா ஹவுஸ் மெய்ட்ஸ் எல்லாம் ஒரு க்ரூப் வச்சிருக்காங்க'

'ஹவுஸ் மெயிட்ஸ் க்ரூப்ல உனக்கு என்னடி வேலை?'

'இல்ல, நான் தான் அந்த க்ரூப் கோ- அட்மின்'

'அட கொடுமையே! சரி அப்ப கூட நீ சொன்ன கணக்கு சரிவரலையே, இன்னும் ஒரு க்ரூப் இடிக்குதே'

'ம்ம்ம் ஆமா'

'என்னடி க்ரூப் அது?'

'நீ என்னை பத்தி ஏதாவது நெனச்சுக்குவே'

'க்கும்ம்ம் இதுக்கு மேலயுமா? சொல்லித் தொலை'

'அது போன ஜென்மத்துல ஒன்னா இருந்தவங்க எல்லாரும் இப்ப சேர்ந்து ஒரு க்ரூப் ஆரம்பிச்சிருக்கோம்...'

'அடியேய்ய்ய்ய்ய்... நல்ல்ல்லா இருடீ இவளே!'

என்ன நண்பர்களே....  மேலே படித்த்தை ரசிச்சீங்களா? இப்ப பதிவு எழுத வேண்டிய விஷயத்துக்கு வரேன்..... 

ரொம்ப நாளாவே இணையத்தில் இருந்தாலும், பதிவுகள் எழுதிட்டு இருந்தாலும், இணையத்தில் உலவுவது எல்லாம் மடிக்கணினி மூலமா தான். சாதாரண அலைபேசி – Camera, Blue Tooth போன்றவை இல்லாத சாதாரண அலைபேசி தான் வைத்திருந்தேன். எங்கேயாவது போகும்போது, குறிப்பா மெட்ரோல, விமானத்துல போகும்போது எல்லார் கையிலும் பெரிசு பெரிசா தோசைத் திருப்பி மாதிரி ஃபோன் வைச்சுருக்கும்போது உள்ளங்கைக்குள்ள சின்ன பூச்சி மாதிரி இருக்கற ஃபோன எடுத்து பேசவே கொஞ்சம் வெட்கமா தான் இருக்கும். 

ஆனாலும், Android, Blackberry அலைபேசிகளை அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடியாது என்பதாலும், பெரும்பாலான நேரங்களில் அலுவலகத்திலேயே இருப்பதால் இது போன்ற அலைபேசியை வாங்கினாலும், வீட்டிலேயே வைத்துச் செல்ல வேண்டும் என்பதாலும் வாங்காமலேயே இருந்தேன். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும், நண்பர்களைப் பார்க்கும்போதும் என்னய்யா இது, எல்லாரும் புதுசு புதுசா Android phone வச்சுருக்காங்க, நீ மட்டும் பச்சை பட்டன், சிவப்பு பட்டன் வைச்ச அந்தக் காலத்து ஃபோன் வச்சுருக்கைய்யா என்று நிறைய பேர் கிண்டல் பண்ணவும் செய்தார்கள்.

இத்தனை நாளாக அதிலிருந்து விலகியே இருந்த நானும் இப்போது களத்தில் குதித்து விட்டேன். சமீபத்தில் ஒரு Android அலைபேசி வாங்கி, அதற்காகவே ஒரு Nano Sim-ம் வாங்கியாயிற்று.  தெரிந்த அளவு உபயோகித்து, சில பல Apps-உம் தரவிறக்கம் செய்தாயிற்று. முதலில் செய்தது செல்லினம்.... இரண்டாவதாக WhatsApp! வீட்டிலுள்ளவர்களுக்கு கொடுத்தது தவிர இந்த ஒரு வாரத்தில் பத்து நண்பர்களுக்கு இந்த புது எண்ணைக் கொடுத்திருந்தால் அதிகம்!

ஆனாலும் பாருங்கள், அதற்குள் நான்கு WhatsApp Group-களில் என்னைச் சேர்த்திருக்கிறார்கள்.  யார் யார் என்று தெரிந்து கொள்வதற்குள் நாலு Group! இந்த புது அலைபேசியை பயன்படுத்துவது மாலை 07 மணிக்கு மேல் இரவு பத்து மணி வரை மட்டுமே. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபிறகு Wifi On செய்து, அலைபேசியிலும் WifiOn செய்தால், தொடர்ந்து மணி அடித்துக் கொண்டே இருக்கிறது – நேற்று மாலை பார்த்தபோது 45 New Messages எனக் காண்பிக்கிறது. 

அதிலும் காணொளிகளும், புகைப்படங்களும் வந்தால் ஒவ்வொன்றும் தரவிறக்கம் செய்து பார்க்க வேண்டியிருக்கிறது! தவிர, இதில் பயன்படுத்தப்படும் பல Smiley யின் அர்த்தமும் புரிவதில்லை. என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரிந்தால் தானே நான் பதில் சொல்ல! படா பேஜாரா கீதுபா.... 

Group-களில் இருந்து வெளியே வருவது எப்படி என்று தெரிந்து கொண்டேன். சிலவற்றிலிருந்து வெளியே வந்தேன்.  ஏற்கனவே Blog, Facebook, Mail என அனைத்தும் மாலை நேரத்தில் நிறைய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது – புத்தகங்கள் படிக்க முடிவதில்லை.  இப்போது இந்த Whatsapp….. 

குடும்பத்தினருடன் தினமும் அளவளாவ முடிகிறது என்றாலும் இப்படி தேவையில்லாத விஷயங்களும் வந்து சேர்கிறது...... புதுப்புது Group களில் யாரும் சேர்த்தால், விட்டு விலகி நிற்பது நல்லது என்று தோன்றுகிறது! 

WhatsApp வரமா சாபமா?

யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.56 comments:

 1. வாட்ஸ் அப்பை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. ஆதலால் நீங்கள் கூறும் தொல்லைகளை இதுவரை எதிர்கொள்ளும் சூழல் எழவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை தப்பித்தீர்கள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. ஹா..... ஹா.... ஹா...

  தவிர்க்க முடியாத ஆனால் தவிக்க வைக்கும் வரம் அல்லது சாபம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. நாம் அதை எப்படி பயன்படுதுகிறோம் என்பதை பொறுத்து அது வரமாகவும் சாபமாகவும் இருக்கிறது. நான் வாட்ஸப்பில் இரண்டு குழுக்களில்தான் இருக்கிறேன் ஒன்று நான் இருக்கும் குடியிருக்கும் அசோசியேஷன் குழு ஒன்று அசோசியேஷன் தகவல்கள் எல்லாம் இதன் மூலம் பறிமாறப்படுகிறது அதுமட்டுமல்ல நமக்கு உதவிகள் ஏதும் வேண்டுமானால் உதாரணமாக நல்ல கண்க்கு டீச்சர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் என்றால் அது பற்றி தகவல் தருவார்கள் இந்த மாதிரி தகவல்களை தவிர வேறு ஏதும் பறிமாறக் கூடாது அடுத்தது எனது இரண்டு மைச்சினிச்சிகளிடம் அரட்டை அடிக்க எனது மனைவி வீட்டாரை சேர்ந்த ஒரு குருப்பு அவ்வளவுதான் மற்றபடி என் அம்பர் தெரிந்தவர்கள் நேர்டியாக தகவல் ஏதும் சொல்ல வேண்டும் என்றால் அதில் தகவல்களை பறி மாறிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான் அதனால் அது எனக்கு வரமாகவும் இல்ல சாபமாகவும் இல்லை

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 4. வரம் சாபம் - என இரண்டும் கலந்த கலவை தான் வாட்ஸப்!..

  நல்லவேளை!.. எனக்குக் கிடைத்தது வரம் மட்டுமே!..
  மகன், மருமகன் - நான்!.. அவ்வளவு தான்.. தலைவலி மிச்சம்!..

  ReplyDelete
  Replies
  1. வரம் - சாபம் இரண்டும் கலந்த கலவை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. குடும்பம் & முக்கிய நபர்களைத் தவிர்த்து மற்றதிலிருந்து வெளியேறிவிட வேண்டியதுதான், முக்கியமா குரூப்'ல இருந்து !

  ReplyDelete
  Replies
  1. முக்கியமா க்ரூப்ல இருந்து. சரியாச் சொன்னீங்க...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி....

   Delete
 6. வரமாக இருக்கும் என்று நினைக்கவைத்து சாபத்தில் முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. நினைப்பது ஒன்று.... நடப்பது ஒன்று!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாஸிர் அசனப்பா....

   Delete
 7. அன்பு நண்பரே

  WhatsApp இது வரமும் அல்ல சாபமும் அல்ல. இது ஒரு டைம் பாஸ் நைனா. ஆனா ஒரு தாபா உள்ளே வண்டியான வெளியே போறது கஸ்டம்பா.
  வாழ்த்துக்கள்

  விஜயராகவன்

  ReplyDelete
  Replies
  1. ஒரு தபா உள்ளே வந்தியாகண்டி.... வெளியே போறது கஸ்டம்பா.... அதே தான் நைனா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 8. நானும் வாட்ஸப்பில் குடியிருப்பு அசோசியேஷன் குழுவில் மட்டும் இருக்கேன் என்றாலும் பெரும்பாலும் செய்திகளைப் பார்ப்பதே இல்லை! :) மற்றபடி அவசரமாக் குழந்தைகளைத் தொடர்பு கொள்ள உதவுகிறது! அவ்வளவே! ஒவ்வொரு முறையும் குழுவில் வந்த செய்திகளை அழிப்பதற்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது! :)

  ReplyDelete
  Replies
  1. செய்திகளை அழிப்பதற்குள் போதும் போதும்னு ஆயிடுது! Delete chat என ஒரு வசதி இருக்கிறது... மொத்தமாய் அழிக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
  2. எனக்கும் இந்த படங்களை வீடியோக்களை அழிப்பதே சில நேரம் தொல்லையாக தெரிந்தாலும் பல புதிய தகவல்களும் அதனுடன் அறிய முடிவதால் வரும் செய்திகளை படித்து விட்டு உடனே டெலிட் செய்து விடுவேன்.

   Delete
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 9. வணக்கம்
  ஐயா
  வாட்ஸ்ப் பெரிய தொல்லை ஐயா எனது தொலை பேசியில் 5 குறுப் உள்ளது அதுவும் பெரிய பெரிய குறுப் விலக முடியாமல் தவியாக தவிக்கிறேன் தூங்க முடியாத நிலை சைலன்டில் போட்டாலும் பிறர் எடுக்கிற அழைப்பு தெரியாது...அதனால் 2 தொலை பேசி பாவிக்கிறேன் இரண்டும் Android போன்தான்.நண்மை தீமை இரண்டும் உள்ளது..கருத்து பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அடடா உங்களையும் தவிக்க வைத்து விட்டதா இந்த WhatsApp!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 10. நானும் வாட்சப் வைத்துள்ளேன்! நமக்குத் தேவையானதை தேவையான போது பயன்படுத்துவதால் சாபமாக தெரியவில்லை! பல குப்பைகள் சேர்ந்தாலும் அரிதாக முத்துக்களும் வாட்சப்பில் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. தேவையான போது மட்டும் பயன்படுத்துவது நல்ல விஷயம தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. வாட்சப் குருப் இரண்டோ மூன்றிலோ என்னை இணைத்திருக்கின்றார்கள், இன்று பிசினஸ் ரிதியிலான வீட்டுத்தயாரிப்பு மசாலா பொடிகள் பற்றியது, அடுத்தது இணையத்தளமொன்றின் குருப், ஆனால் அவை எதிலும் நான் கலந்து கொள்வதில்லை,போன வருடம் வரை சர்ச் குருப் ஒன்று இயங்கியது, அதை இப்போ டெலிட் செய்திட்டாங்க போல, காணோம்.

  எத்தனை குருப்பில் இணைத்தாலும் நாமும் அதனுடன் இணைந்து நம் நேரத்தை வேஸ்ட் செய்தால் அது சாபம் தான், வீட்டில் போட்டது போட்ட படி இருக்க அதிக நேரம் இந்த மாதிரி அரட்டைகளில் ஈடுபடுவது சாபம் தான். அத்தோடு அளவுக்கு மிஞ்சிய எதுவுமே தேவையில்லாத பிரச்சனைகளை தரும்.

  தொழில் நுட்ப வளர்ச்சிகளை நாம் நம் தேவைக்கு பயன் படுத்திக்கொண்டால் அனைத்துமே வரம் தான், நான் பத்து வருடங்களுக்கும் அதிகமாக இணையத்தில் உலாவுகின்றேன், என்னளவில் பேஸ்புக்கோ, வாட்சப்போ இல்லை ஸ்கைப், வைபர் போன்ற தொடர்பாடல் அப்ஸ்களோ, கேம்ஸ்களோ ஒரு எல்லைக்குள் தான், என் வேலைகள் முடிந்த நேரம் வெறும் பொழுது போக்காக மட்டும் தான் இங்கே அமர்வேன், பல நேரம் பயன் தரு பொழுது போக்குகள் தான், நல்ல நட்புகள் ஆலோசனைகளை அடைந்துள்ளேன்,

  ReplyDelete
  Replies
  1. விரிவான கருத்துரைக்கும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 12. வாட்ஸ் அப் - ரொம்ப உபயோகமான செயலி, ஸ்கைப் போல. எங்கிருந்தும் ஃபேமிலியோடு தொடர்புகொள்ளலாம். அவசர மெசேஜ் அனுப்பலாம். ஷாப்பிங் போனா, டிரஸ் படமெடுத்து அத்துடன் விலையையும் அனுப்பி கன்ஃபர்ம் பண்ணிக்கலாம். ஏகப்பட்ட உபயோகம். (அங்க இருக்கேன். இங்க இருக்கேன் என்று புளுக முடியாது. ஆபீஸ் நண்பர்களையும், உடன் படமெடுத்து அனுப்பச்சொல்லலாம். எத்தனையோ உபயோகம்) இதிலும் சில பல குழுக்களில் தேவையில்லாதவைகளை அனுப்புவார்கள். அதையெல்லாம் புறக்கணித்துவிடவேண்டியதுதான்.

  முக'நூலைவிட ஸ்கைப்பும் வாட்ஸ் அப்பும்தான் ரொம்ப உபயோகம்.

  ReplyDelete
  Replies
  1. முக நூலை விட உபயோகமானது.... ம்ம்ம். தொடர்ந்து பயன்படுத்தினால் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 13. அருமையாக சொன்னீர்கள் ஜி
  நானும்... அல்ல என்னை எப்படி சேர்த்துக்''கொன்றார்''கள் என்பதே விளங்கவில்லை தினம் 50 தகவல்கள் வருகின்றது. நீங்கள் சொல்வதுபோல நமக்கு வலைப்பூ எழுத, படிக்க, பின்னூட்டமிடுவதற்க்கே நேரம் போதவில்லை காலையில் எழுந்தவுடன் 7.30 க்குள் அலுவலகம் வந்து விட வேண்டுமாம் இல்லையென்றால் சம்பளம் வராதாம் என்ன செய்வது நமக்கு சம்பளம் முக்கியமில்லையா ? முகநூல் போவதற்கே முகம் சுழிப்பவன் நான்.

  இவையெல்லாம் டௌண்லோட் ஆவதற்கு இந்த நாட்டில் பிரச்சினை இல்லை இந்தியாவில் எவ்வளவு டேட்டா செலவு ஆகும் என்பதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்

  மேலும் எனக்கு வரும் தகவல்கள் எல்லாம் தமிழில் என்றாலும் எழுத்துகள் தெலுங்கு போலவே தெரிகின்றது காரணம் நமது செல்லின் லட்சணம் அப்படி (ஹி ஹி ஹி நானும் உங்கள் ஜாதிதான்)

  எவ்வளவோ சிறந்த பதிவர்கள்கூட வாட்ஸ்-அப்பில் மூழ்கி கிடப்பது வருத்தமான செய்தி ஜி

  முக்கியமான விடயம் வாட்ஸ்-அப் வரவுக்குப் பிறகு இன்றைய இளைஞர்கள் 24 மணி நேரமும் செல்லை நோண்டிக் கொண்டு இருப்பது உண்மையே.

  ReplyDelete
  Replies
  1. இளைஞர்கள் - என்னத்த சொல்ல.....

   இப்போதைக்கு WIFI மட்டுமே பயன்படுத்துகிறேன். Data பயன்படுத்துவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. ஒழுங்கா பயன்படுத்தினால் வாட்ஸ் அப். இல்லைன்னா வாட்ஸ் ஆப்பு!

  ReplyDelete
  Replies
  1. ஆப்பு! நாமளே வச்சுக்கற ஆப்பு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 15. தெரியலையேப்பா,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 16. ”வாட்ஸ்அப் குப்பைகள்’ - என்ற எனது பதிவினில், “ இது வரை இந்த வாட்ஸ் அப்பில் மாட்டிக் கொள்ளவில்லை.. தப்பித்துக் கொண்டிருக்கிறேன்! :) “ – என்று கருத்துரை எழுதிய நீங்களே சிக்கி விட்டீர்கள். விதி வலியது. வாட்ஸ்அப் வரமும் அல்ல; சாபமும் அல்ல. ஒரு நல்ல தகவல் தொடர்பு ஊடகம். நமது குடும்பத்தினர், உறவுகள், நெருங்கிய நண்பர்கள் என்று மட்டும் தொடர்பு இருந்தால் நல்லது. ஃபேஸ்புக் போல நண்பர்கள் வட்டம் பெரிதானால் தொந்தரவுதான்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அங்கே அப்படி சொல்லி, அதற்குள் மாட்டிக் கொண்டேன்! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 17. எனக்கு வரம் போலவே படுகிறது
  அளவாகப் பயன்படுத்துவது
  காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அளவாகப் பயன்படுத்தினால் நல்லது தான் என்ற உங்கள் கருத்தினை ஏற்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 18. உண்மைதாங்க... சில நெருங்கிய உறவுகளுடனும் நட்புகளுடனும், மகனுடனும் , எங்கள் வேலை சார்ந்த இரண்டு க்ரூப்களுக்கும் மட்டுமே வாட்ஸ் அப் பயன்படுத்தினாலும் என்னுடைய எண் தெரிந்த நட்புகள் அதில் குட்மார்னிங் சொல்வதும் ஏதாவது கேட்பதும் நடக்கத்தான் செய்கிறது என்னுடையது மிகவும் குறைந்த மெமரி உள்ள போன் என்பதால் ஒரு அளவிற்கு மேல் நட்புகள் இணைத்தால் நோ ஸ்பேஸ் என்றபடி என்னை யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் செய்துவிடும் பிறகு நான் அழித்துவிட்டு ரீ-லோட் செய்யணும் இதோடு மூன்று முறை செய்துவிட்டேன். யாரிடமும் சொல்லவும் முடிவதில்லை..

  ReplyDelete
  Replies
  1. அடடா உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 19. பதிவின் தொடக்கத்தை வாசித்த போது சிரிப்புதான் வந்தது, ஒருவிதத்தில் உண்மையும் கூட. வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் வைத்துத்தான் உயிருடன் இருக்கிறார்களா என்று பார்க்கமுடிகிறது. எனக்கு ஏறக்குறைய 100-150 UNREAD MESSAGES ஒவ்வொரு குழுவிலும் இருப்பதுணடு, பார்க்கும்போதெல்லாம் தலைவலி தான் வருகிறது.

  டெக்னாலஜியை அளவாகப் பயன்படுத்த நமக்குத் தெரியவில்லை.

  சுவாரஸ்யமான பதிவு, வாழ்த்துக்கள்!.

  ReplyDelete
  Replies
  1. 100-150 Unread Messages! அம்மாடி..... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
  2. அதில் உருப்படியாக எதுவும் இருக்காது!!

   Delete
  3. ஹாஹா....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 20. பதிவர்கள் நமக்கு அது சாபமே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 21. இன்னும் வாட்சப்பில் இணையவில்லை அதனால் தொல்லையில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 22. நான் ஒரே ஒரு குரூப் மட்டும்தான் வசிருக்கேன், மற்றபடி வருபவர்களை பிளாக் செய்துவிடுவேன், தனித்தனியா நண்பர்கள் வாட்சப்பில் உண்டு, பர்சனலான விஷயங்கள் பகிர்ந்து கொள்வோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 23. நான் இன்னும் ஆன்ட்ராய்ட் வைத்துக் கொள்ளவில்லை ஆனால் கைக்கு வந்துவிட்டது. ஆனால் வாட்சப் னினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என்றாலும் நாம் உபயோகப்படுத்தும் விதத்தில் தானே.

  கீதா: இதுவரை நானும் ஆன்ட்றாய்ட் வைத்துக் கொண்டதில்லை. இப்போது மகன் வெளியூர் போனதால் அவனுடன் உரையாட வாங்கிக் கொடுத்தான். உறவினர்களுடன் மகனுடன் உரையாட பெரும்பாலும் வாட்சப் கால் தான். அதுவும் வைஃபை இருப்பதால் ஃபோன் பில் மிக சொற்பமே. முன்பு போல் இல்லை. வெளிநாட்டிலிருந்தும் என் மிக நெருங்கிய கசின்களுடன் உரையாட முடிகிறது. நண்பர்களுடன் நமக்குப் பிடித்த சில பாடல்கள், நாம் பாடியது போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. மகன் பிசியாக (னைட் ட்யூட்டி...அறுவை சிகிச்சைகள் இப்படி) இர்லுந்தால் சில சமயங்களில் பேச முடியவில்லை என்றால் வாய்ஸ் மெசேஜ் விட முடிகிறது இந்த வாட்சப்பில்...

  நான் இரு குழுக்களில் மட்டுமே. அதிலும் ஒரு குழு மிகவும் அருமையான தேவைக்கு மட்டும் மெசேஜ் முக்கியமான ஷேரிங்க் செய்யும் குழு.

  துளசியும் நானும் ஒருமித்து எழுதுவதால் வாட்சப் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதால் அவருக்கும் இப்போது அன்ட்றாய்ட் போயிருக்கிறது...அதற்கு உதவும்.

  மட்டுமல்ல கத்திக்கு இரு பக்கம் இருப்பது போல் எல்லாவற்றிற்கும் உள்ளதுதான் இல்லையா வெங்கட்ஜி

  நாம் கவனமாக உபயோகித்தால் வாட்சப் வரமே.

  ReplyDelete
  Replies
  1. நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 24. அம்மா வழி உறவினர்களுக்கு ஒரு க்ரூப், அப்பா வழி உறவினர்களுக்கு ஒரு கரூப்,என் உடன் பிறந்தவர்கள்க்கு ஒரு க்ரூப் எல்லாவற்றிலும் ஒரே மெசேஜ். இதைத்தவிர லேடீஸ் க்ளப் க்ரூப் எல்லோரும் படங்களை போட்டுத் தள்ளுகிறார்கள். போன் ஸ்லோவாகி விடுகிறது. டிலீட் செய்வது பெரிய வேலை

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அத்தனை படங்களையும் தகவல்களையும் அழிப்பதும் ஒரு பெரிய வேலைதான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 25. வாட்ஸப் வரம் தான். அதனை பயன்படுத்தும் விதத்திலேயே விளைவு இருக்கிறது.
  நமது வலைத்தளம் : சிகரம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி!

   Delete
 26. எல்லோருடைய தவிப்புகளையும் படிக்க ஆனந்தமாக இருக்கிறது. நான் இதில் அகப்பட்டுக் கொள்ளவில்லை! அதேபோல பேஸ்புக் மேசெஞ்செரும் டௌன்லோட் செய்துகொள்ளவில்லை. பேஸ்புக்கிற்கும் வாரத்தில் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் போவேன்.
  ஆஆஆஆ! ஜாலி!

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை தப்பித்து இருக்கிறீர்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....