சனி, 23 ஜூலை, 2016

காலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 28

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 27 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....





ஹோட்டல் மயூரில் ஒரு அறை மட்டும் எடுத்து நண்பர்கள் ஐந்து பேரும் தயாரானோம்.  நானும் நண்பர் பிரமோத்-உம் முதலில் தயாராகி தங்குமிடத்திற்கு எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்று எங்கள் அடுத்த இலக்கிற்குச் செல்ல அசாம் மாநிலப் பேருந்துக்கு முன்பதிவு செய்து விட்டு வந்தோம். அடுத்த இலக்கு எங்கே என்பதை பிறகு சொல்கிறேன்!  தங்குமிடம் வந்து மதியம் வரை Gகௌகாத்தி நகரில் உள்ள சில இடங்களுக்குச் சென்றுவர வாகனம் ஏற்பாடு செய்து தர விசாரித்தோம்.  அவர்களிடம் ஐந்து பேர் செல்லக்கூடிய வாகனம் இல்லை என்று கைவிரித்து, வாயிலில் நிறைய வண்டிக்காரர்கள் இருப்பார்கள் என்றும் சொல்லி விட்டார்கள்.



வரவேற்பறையில் விசாரித்த இன்னுமொரு விஷயம் எங்கள் உடைமைகளில் சிலவற்றை நாங்கள் திரும்பி வரும் வரை வைக்க ஏதாவது வசதி அந்த தங்குமிடத்தில் உண்டா என்பது தான்.  அதற்கு அவர் சொன்ன பதில் அப்படி வசதி ஒன்றும் இல்லை – வேண்டுமெனில் நீங்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் உங்கள் உடைமைகளை வைத்து விட்டுச் செல்லுங்கள் – எத்தனை நாள் வேண்டுமோ அத்தனை நாளுக்கும் அறை வாடகையை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்பது தான்! இது சரி வராது என்பதால், வேறு என்ன செய்யலாம் என்பதை யோசித்தோம்.

சிறிது நேரம் கழித்து வரவேற்பறையில் வேறு ஒரு நபர் வரவே, அவரிடமும் கேட்கலாம் என முடிவு செய்தோம். அவர் அறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லாமல், இங்கே வசதி இல்லை – பேருந்து நிலையத்தில் Cloak Room வசதி உண்டு என்பதையும் நாள் வாடகையில் எத்தனை உடைமைகளை வேண்டுமானாலும் வைக்கலாம் என்பதையும் சொன்னார். கட்டணமும் அதிகமில்லை – ஒரு பெட்டி அல்லது பை வைத்தால் ஒரு நாளுக்கு [24 மணி நேரத்திற்கு] இருபது ரூபாய் மட்டும். அந்த நல்ல மனிதருக்கு நன்றி சொல்லி வாழ்த்தவும் செய்தோம்.



இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் – Gகௌகாத்தி நகர் முழுவதும் கமிஷன் ஏஜண்டுகள் நிறையவே இருக்கிறார்கள் – எதற்கும் கமிஷன், எதிலும் கமிஷன். எந்த வேலை செய்தாலும், வேலை செய்பவர் யாரோ, ஏற்பாடு செய்து தருபவர் வேறு யாரோ, அதன் பிறகு மூன்றாவது மனிதர் யாரோ என சுத்திச் சுத்தி கமிஷன்.  தங்குமிட வாயிலில் நிறைய பேர் இப்படி சுற்றுகிறார்கள். எங்கே போக வேண்டும், என்னென்ன பார்க்க வேண்டும் என்பதைச் சொல்லி விட்டால் அதற்குத் தகுந்த மாதிரி வண்டி வாடகை சொல்கிறார்கள். அதன் பிறகு பார்த்தால் வேறு ஒரு ஓட்டுனர் வண்டி கொண்டு வருகிறார்.  நம் கண்ணெதிரேயே, முதலாமவர் தனது கமிஷனை எடுத்துக் கொண்டு மீதியை ஓட்டுனரிடம் கொடுக்கிறார்! இப்படி ஒரு ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொண்டோம்.  மதியம் வரை சுற்றி வர வேண்டும், இரண்டு மூன்று முக்கிய இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது திட்டம்.



இந்த ஏற்பாடுகளை எல்லாம் முடித்து நாங்கள் இருவரும் வரவும் மற்ற நண்பர்களும் தயாராக இருந்தார்கள்.  அறையைப் பூட்டி சாவியை வரவேற்பில் கொடுத்து விட்டு தங்குமிடத்திலேயே இருந்த கோவிந்த் உணவகத்தில் காலை உணவினைச் சாப்பிடச் சென்றோம். நம் தமிழகத்தினைத் தவிர பல மாநிலங்களில் பார்த்த விஷயம் – காலை நேரத்தில் உணவகங்கள் திறப்பதே இல்லை – பயங்கர சோம்பல் இவர்களுக்கு எட்டு மணி ஆகியிருந்தாலும் கிழக்கேயும் மேற்கேயும் சென்றார்களே தவிர Order எடுக்க ஒருவரும் வந்தபாடில்லை!



பிறகு உணவகத்தின் மேற்பார்வையாளரை அழைத்து எப்போது காலை உணவு கிடைக்கும் எனக் கேட்க, பத்து நிமிடத்தில் கிடைக்கும் என்று சொல்லி எங்களது தேவைகளைக் கேட்டுக் கொண்டு போனார். பூரி, தோசை, இட்லி என்று சில உணவுகளைச் சொல்லி, குடிக்கவும் ஃப்ரெஷ் ஜூஸ் சொன்னோம். அரை மணி நேரத்தில் ஒவ்வொன்றாக வர சாப்பிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  காத்திருப்பது தான் கடினமான வேலை!

நாங்கள் காலை உணவை முடித்துக் கொண்டு தங்குமிட வாயிலுக்கு வருவதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த வண்டி வரவும் சரியாக இருந்தது. தங்குமிட வாயிலில் நிறைய வண்டியோட்டிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்துப் பாய்கிறார்கள். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் செல்வது Gகௌகாத்தி நகரிலுள்ள மா காமாக்யா தேவி கோவிலுக்கு தான். அதனால் அங்கே சென்று வர தனியாக வாடகை பேசிக் கொள்கிறார்கள். கோவிலில் அதிக அளவு மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் எத்தனை நேரம் எடுக்கும் என்பது யூகிக்க முடிவதில்லை.



நாங்கள் ஐவரும் மா காமாக்யா தேவி கோவிலுக்குப் புறப்பட்டோம்.  மா காமாக்யா தேவி கோவில் நீலாச்சல் குன்றின் மேல் அமைந்துள்ள ஒரு கோவில்.  சக்தி பீடங்களில் ஒன்றாகவும், முதலாம் இடத்தினைப் பெறுவதுமான கோவில் இது தான். வருடம் முழுவதும் இங்கே பக்தர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.  மிகவும் பழமையான கோவில் – கோவிலின் கர்ப்பக்கிரஹம் ஒரு சிறிய குகைக்குள் இருக்கிறது. சக்தி பீடங்கள் உருவான கதை முன்னரே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன்.  சதி தேவியின் உடலை வைத்துக் கொண்டு சிவன் தாண்டவமாட, சிவனின் ருத்ரத்தினைக் குறைக்க சதி தேவியின் உடலை 51 துண்டுகளாகச் செய்து பல இடங்களில் வீசி எறிந்ததாகவும் ஒவ்வொரு உடல் பகுதி விழுந்த இடத்திலும் ஒரு சக்தி பீடம் அமைந்ததுவும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  இந்த மா காமாக்யா தேவி கோவில் அமைந்திருப்பது சதி தேவியின் யோனிப்பகுதி விழுந்த இடம் என்பதும் நம்பிக்கை. 

கோவிலில் கண்ட காட்சிகள், அங்கு கிடைத்த அனுபவங்கள், இப்போதும் தேவிக்கு தினம் தினம் கொடுக்கப்படும் பலி ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

16 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. விலைப்பட்டியல் தலையை சுற்ற வைக்கின்றதே... ஜி தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவை ஒன்றுமே அல்ல.. மற்றவை இன்னும் விலை அதிகம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. எத்தனை சுவாரஸ்யங்கள் பயணத்தில். தங்கும் இடத்திலிருந்து, உணவிலிருந்து, சுற்றுப்பார்க்கும் இடத்திற்கு வண்டி ஏற்பாடு செய்து சுற்றிப்பார்ப்பது வரை என்று...தொடர்கின்றோம் ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. பரவாயில்லை.. நிறைய கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பும் உங்களுக்குக் கிட்டுகாறது. பகோரான்னா என்ன? பஜ்ஜியா அல்லது வெஜிடபிள் ரோல் மாதிரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லும் இடங்களைப் பொறுத்து, கோவிலோ, சர்ச்சோ, தர்காவோ, குருத்வாரோ..... ஏதோ ஒன்று.

      பகோரா - பகோடா தான் இங்கே பக்கோரா - ஹிந்தியில் “டா” வை ரா என்று தான் எழுதுகிறார்கள்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. தேவி காமாக்யா திருக்கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்பது ஆவல்..

    அன்னையின் விருப்பம் எப்படியோ... அறியேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையின் அழைப்பு வரட்டும்..... வெகு விரைவில் மா காமாக்யா தேவியை தரிசிக்க Gகௌஹாத்தி சென்று வர வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. சுவராஸ்யம் அண்ணா...
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்....

      நீக்கு
  7. அடச்சீ ,இப்படியும் ஒரு நம்பிக்கையா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. இதில் அடுத்தவர் தலையிட உரிமை இல்லை.......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  8. சுவாரஸ்யமான அனுபவங்கள் தகவல்பகிர்வுடன் கட்டுரை அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....