சனி, 30 ஜூலை, 2016

அசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 31

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 30 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....



ஹோட்டல் மயூர், Gகௌகாத்தி இருக்கும் இடத்தின் எதிர் புறத்தில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது. அங்கே தான் எங்கள் பயணத்திற்கான சீட்டினை முன்பதிவு செய்திருந்தோம். கணினி மூலம் முன்பதிவு செய்து அதற்கான ரசீதைக் கொண்டு போய் காண்பிக்க, ஒரு பேருந்தின் எண்ணை எழுதிக் கொடுத்து இந்தப் பேருந்தில் சென்று அமருங்கள் எனச் சொல்லி, அதன் பின் இன்னுமொரு பேருந்தின் எண்ணையும் தந்து அது தான் உங்களை உங்கள் இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும் என்றார்! என்ன குழப்பம்?


ASTC பேருந்து.....
படம்: இணையத்திலிருந்து....

அதாவது முதலில் சொன்ன பேருந்தில் அமர்ந்து Gகௌகாத்தி நகரின் மற்றொரு பகுதியில் இருக்கும் பெரிய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே சென்றால், மற்றொரு பேருந்து காத்திருக்கும், அதில் தான் நாங்கள் பயணிக்க வேண்டுமாம். இதை அவரிடம் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அது தெரியாத பலரும் முதல் பேருந்தில் ஏறி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சீட்டு எண்ணில் பார்த்தால் வேறு யாரோ அமர்ந்திருக்க அவர்களோடு சண்டை – புரியாத மொழிச் சண்டை.  எங்களிடமும் அப்படி சிலர் சண்டை – அசாமி மொழியில் ஏதேதோ சொல்கிறார்கள்!

அனைவரிடமும் ஹிந்தி மொழியில் இந்தப் பஸ் போகாது, பெரிய பஸ் ஸ்டாண்டுக்குப் போய் அங்கே வேறு பஸ்ஸில் தான் போக வேண்டும் என்பதை புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது! அதுவும், இந்தப் பேருந்தில் சென்று பெரிய பஸ் நிலையத்தில் வேறு வேறு பேருந்துகளில் பயணிக்கப் போவதால், பலருக்கும் ஒரே சீட்டு எண் அமைந்திருக்க, மூன்று நான்கு பேரிடம், ஒரே சீட்டு எண் இருக்க, ஒரே கலாட்டா....  இங்கே இதெல்லாம் நடந்து கொண்டிருக்க, இவற்றைக் கவனித்து சரி செய்ய, புரிய வைக்க, பேருந்து நடத்துனரோ, ஓட்டுனரோ இல்லை. அவர்கள் கூவிக் கூவி பெரிய பேருந்து நிலையம் தாண்டி போக வேண்டிய இடத்திற்கு ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.


ASTC பேருந்து நிலையம்.....
படம்: இணையத்திலிருந்து....

இதற்குள் எங்களுக்குச் சொன்ன, பேருந்து புறப்படும் நேரம் கடந்து கொண்டிருந்தது. எங்களை அழைத்துப் போகப்போகும் பேருந்து பெரிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு விடுமோ என்ற எண்ணம் தோன்ற, கீழே நின்றிருந்த பேருந்து நடத்துனரிடம் சென்று கேட்டேன். அவரோ, கூலாக, நாங்க உங்களை அங்கே கொண்டு சென்று சேர்த்த பிறகு தான் அந்தப் பேருந்து புறப்படும் – கவலைப்படேல் என்று சொல்லி விட்டார். சில பல சண்டைகளுக்கும், குழப்பங்களுக்கும் பிறகு பெரிய பேருந்து நிலையம் நோக்கி பேருந்து சென்றது.  Gகௌகாத்தி நகரின் சில பகுதிகளைப் பார்த்தவாறே பெரிய பேருந்து நிலையம் சென்றடைய அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. அந்தப் பேருந்து நிலையம் அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் ஒரு பாலாஜி கோவிலும் இருந்தது. திரும்பி வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தோம்!

பேருந்து நிலையத்தில், எங்களை அழைத்துச் செல்லப் போகும் பேருந்து காத்திருந்தது. எங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அந்தப் பேருந்து நிலையத்தில் சில பிஸ்கெட் பாக்கெட்டுகளும், நொறுக்குத் தீனிகளும் வாங்கிக் கொண்டோம். கூடவே இரண்டு மூன்று தண்ணீர் பாட்டில்களும். செல்லும் வழி எப்படி என்பது தெரியாமல் பயணம் செய்வதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது! மதியம் ஒரு மணிக்கு பேருந்து புறப்பட்டது. மதிய உணவினை வழியில் எங்காவது சாப்பிடலாம், அது வரை நொறுக்ஸ் சாப்பிடலாம் என்றும் முடிவு!


ASTC சின்னத்திலும்  காசிரங்கா காண்டாமிருகம்.....
படம்: இணையத்திலிருந்து....

அது சரி இலக்கு நோக்கி பயணிக்கிறோம் என்றே இது வரை சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். அந்த இலக்கு என்ன என்பதை இது வரை சொல்லாமலே இருந்திருக்கிறேன்! அசாம் என்றவுடன் சுற்றுலா நிறுவனங்கள் சொல்லும் இரண்டு இடங்கள் உண்டு – ஒன்று மா காமாக்யா தேவி கோவில், இரண்டாவது காசிரங்கா தேசிய பூங்கா.......  நாங்களும் காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்லும் நோக்கத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தோம். அங்கே தான் மலையாளத்தில் “ஒற்றைக் கொம்பன் மூரிஎன அழைக்கப்படும் காண்டாமிருகங்கள் இயற்கையான சூழலில் இருக்கின்றன.

பேருந்துப் பயணம் பிடித்ததுதான் என்றாலும், தெரியாத ஊர், தெரியாத பாதைகளில் பயணிப்பது ஒரு சவாலான விஷயம். Gகௌகாத்தி நகரிலிருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் காசிரங்கா தேசியப் பூங்காவின் கொஹரா நுழைவு வாயில் பகுதி அமைந்திருக்கிறது. இந்த கொஹரா நுழைவு வாயில் தேசிய நெடுஞ்சாலை எண் 27-ல் அமைந்திருப்பதால் இந்த நெடுஞ்சாலை வழியாகத் தான் பெரும்பாலான வாகனங்கள் பயணிக்கின்றன. சுமார் ஐந்து மணி நேர பயணத்தில் பேருந்து மூலம் இங்கே சென்று சேர முடியும்.


அசாமீ ஃபிஷ் ஃப்ரைட் ரைஸ்
படம்: இணையத்திலிருந்து....

பேருந்து புறப்பட்டு இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு நகாவ்ன் பேருந்து நிலையத்தில் நுழைந்தது. “அரை மணி நேரம் நிற்கும், சாப்பிடறவங்க சாப்பிடலாம்என்று நடத்துனரே கூவினார்! என்ன கிடைக்கும் என்று பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தினுள் சென்று பார்த்தோம் – உள்ளே நுழைந்ததும் ஒரே மீன் வாசம்! ஒரு தட்டில் சோறு – அதன் மேல் ஒரு மீன் வைத்துக் கொண்டு கலந்து சாப்பிடுகிறார்கள். ஹோட்டலும் அத்தனை சுத்தம் இல்லை! நண்பர்களுக்கும் அங்கே சாப்பிட மனமில்லை. வெளியே வந்தோம்.

பேருந்து நிலையத்தின் வெளியே சில கடைகள் இருக்க, அங்கேயும் மீன் தான்! சரி இன்னிக்கு மதியம் பட்டினி தான் என்று நினைத்து வெளியே வந்தோம். பக்கத்திலேயே ஒரு சிறிய ஜூஸ் கடை – அதிலே சாத்துக்குடி, மாதுளை போன்றவற்றின் ஜூஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பக்கத்திலேயே ஒரு பெட்டிக்கடை – அங்கே Brittania Cakes, Biscuits போன்றவை இருக்க அவற்றையும் வாங்கிக் கொண்டு, ஆளுக்கொரு பெரிய கிளாஸ் ஜூஸ் – முப்பது ரூபாய் ஒரு கிளாஸ் – வாங்கிக் குடித்து விட்டு, பேருந்துக்குத் திரும்பவும், நடத்துனர் வரவும் சரியாக இருந்தது.

பேருந்தில் அமர்ந்து பிஸ்கெட், கேக் ஆகியவற்றை காலி செய்தோம். அன்றைக்கு மதிய உணவு அது மட்டுமே! ஜூசையும் குடித்து, தண்ணீரையும் குடித்ததால் வெகு விரைவிலேயே அதை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்பதையும் மறந்து விட்டோம்.  பேருந்து தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. நடுநடுவே புராணிகுடாம், சாமாகுரி, காலியாபோர், குவாரிதோல் போன்ற சில சிற்றூர்களில் பேருந்து நின்று சிலரை இறக்கி விட்டும், வேறு சிலரை ஏற்றிக் கொண்டும் சென்று கொண்டிருந்தது.

கொஹரா கேட் பகுதியில் இருக்கும் காசிரங்கா ரிசார்ட் என்பதில் தங்குவதாக முன்பதிவு செய்து வைத்திருந்தோம். அங்கே செல்ல எந்த இடத்தில் இறங்க வேண்டும் எனக் கேட்க, அவர் சொன்ன இடம் எங்களுக்குப் புரியவில்லை. அலைபேசியை பேருந்து நடத்துனரிடம் கொடுத்து அவரைக் கேட்டுக் கொள்ளச் சொன்னோம். அந்த இடத்தில் எங்களை இறக்கி விடுவதாகச் சொல்லி எங்களை கவலை இன்றி அமர்ந்திருக்கச் சொன்னார். கொஹரா கேட் பகுதி வந்ததும் எங்களை பேருந்திலிருந்து இறக்கி விட்டபோது மாலை ஆறு மணி!

சிறிய இடம், ஊரே அமைதியாக இருந்தது. சில வனப் பயணம் போகும் சஃபாரி ஜீப்கள் நின்று கொண்டிருக்க, எங்களை ரிசார்ட் வரை அழைத்துச் செல்லப் போகும் வாகனம் எது எனப் புரியாமல், மீண்டும் ரிசார்ட் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். சில நிமிடங்களில் எங்களை அழைத்துச் செல்ல ஒரு ஜீப் வர, அதில் ஏறிக்கொண்டு சில நிமிட பயணத்தில் காசிரங்கா ரிசார்ட் சென்றடைந்தோம். அங்கே கிடைத்த அனுபவங்கள், காசிரங்கா வனத்தினுள் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை வரும் பகுதிகளில் சொல்கிறேன்....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.

22 கருத்துகள்:

  1. ஒற்றைக் கொம்பன் மூரி மேல் சவாரி செய்து இருப்பீர்கள் என நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  2. அசாம் பேருந்து நிலையத்திற்குள் சுற்றி வந்ததைப்போல் இருக்கின்றது..

    காசிரங்கா காட்டுக்குள் பயணிக்கக் காத்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. சாப்பாட்டுக் கஷ்டம் பெரிய கஷ்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. எப்படி காசிரங்கா வனப்பகுதி சுற்றுலாவில் குடும்மத்தைக் கூட்டிச்செல்லாமல் விட்டுவிட்டீர்கள்? அது அபூர்வமான வாயப்பல்லவா? சாப்பாட்டைப் பற்றி ரொம்பக் கவலைப்படாமல் சௌகரியத்தைப் பற்றியும் (அலைச்சல்) கவலைப்படாமல் இருந்தால்தான் இத்தகைய பயணங்கள் சாத்தியப்படும். தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதினைந்து நாள் பயண்ம் இது - உணவுக்கு பிரச்சனையா இருக்கும் என்று அவர்களைக் கூட்டிச் செல்லவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. மொழி தெரியாவிட்டால் முழி பிதுங்கி விடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அதுவும் ஹிந்தி இல்லாவிட்டால் இன்னும் கஷ்டமாக இருந்திருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  6. இந்த மாதிரி பயணங்கள் மேற்கொள்ள அசாத்திய தைரியம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தைரியம் மட்டுமல்ல, ஆசையும், வாய்ப்பும் கூடவே பணமும், அதைச் செலவு செய்ய மனதும், தகுந்த நண்பர்களும் தேவை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  7. சாப்பாடுக்கஸ்ரத்தைவிட அதை வெளியேற்றத்தான் போக்குவரத்தில் சிறந்த இடம் இல்லாமல் அவதியுறச்செய்கின்றது. ஆசாம் ஓசியில் உங்கள் மூலம் காண்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  8. ஜி எனக்கும் ஆசையை தூண்டி விட்டது பயணக்குறிப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று வாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. நமது ஊர்களில் தமிழ் நன்றாக தெரிந்த இடத்திலேயே இப்படி மாட்டிக்கொண்டு விழித்த அனுபவம் பயணத்தில் உண்டு. தங்கள் பயணம் எனது வடகிழக்கு பயணத்தை நினைவு படுத்தியது.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  10. அருமையான பயணக் கட்டுரை...
    வாசிக்க வாசிக்க நாங்களும் சேர்ந்து பயணித்தது போல் இருக்கிறது அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  11. அருமையான அனுபவங்கள்...உங்கள் வழியாகக் கிடைக்கின்றன. செல்ல முடியுமா என்று தெரியவில்லை... தங்கள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது...

    கீதா: ஜி நாங்கள் நெடு நாட்களாக காசிரங்கா செல்ல வேண்டும் என்று வடகிழக்கு மாநிலப் பயணமே அதற்காகவும் பிரம்மபுத்திரா பார்க்கவும் என்று சில இடங்கள் குறித்து வைத்து...நடக்காமல் போன ஒன்று. இப்போது மகனும் இங்கு இல்லை...அவன் வரும் போதுதான் மேற்கொள்ள முடியும்...இப்போது தங்கள் பயணக் குறிப்புகள் உதவியாக இருக்கின்றன. எங்களுக்கும் சாப்பாடு பற்றியோ, சிரமமான பயணம் பற்றியோ கவலை இல்லை என்பதால் மேற்கொள்ள வேண்டும் என்ற அவா கூடிக்கொண்டேதான் போகிறது...

    மிக்க நன்றி வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....