திங்கள், 4 ஜூலை, 2016

டென்னிஸ் கோர்ட் யுத்தம்ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 22

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 21 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....


மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்த பின்னும் மாமிசங்கள், விலங்குகளின் வாசம்/நாற்றம் எங்களைத் தொடர்ந்து வருவது போன்ற ஒரு எண்ணம்....  அங்கே கிடைத்த அனுபவங்களை மனதிற்குள் நினைத்தபடியே எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.  எங்கள் ஓட்டுனர் அடுத்ததாய் எங்கே அழைத்துச் செல்லப் போகிறாரோ என்ற எண்ணம் மனதுக்குள் ஓடியது. வடகிழக்கு மாநிலங்கள் பயணத்தில் எல்லா இடங்களிலும் எங்கே செல்ல வேண்டும், எங்கே தங்கவேண்டும், என்ன பார்க்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தாலும், நாகாலாந்து பற்றி ஒரு முன்னேற்பாடும் இல்லை. எல்லாம் நண்பர் கையில் விட்டுவிட்டோம்.

கல்லறைகளும் நினைவுச் சின்னமும்

எங்கள் ஓட்டுனர் எங்களை அடுத்ததாய் அழைத்துச் சென்றது போர் நினைவுச் சின்னத்திற்கு.  இத் தொடரின் ஒரு பகுதியாக “இறந்த பின்னும் வித்தியாசம்என்ற தலைப்பில் மணிப்பூர் மாநிலத்தின் இம்ஃபால் நகரில் இருந்த கல்லறைகளை பார்த்தது பற்றி எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். அதே போரில் ஜப்பானிய படைகள் கொஹிமா வரை வந்துவிட்டன.  கொஹிமா போரின் ஒரு பகுதி தான் இந்த டென்னிஸ் கோர்ட் யுத்தம்.  மிகவும் தீவிரமான போர் அது. 

யுத்தம் - ஒரு ஓவியரின் கைவண்ணத்தில்....
படம்: இணையத்திலிருந்து....

ஏப்ரல் 4 முதல் ஜூன் 22 1944 வரை தொடர்ந்து நடந்தது இந்த டென்னிஸ் கோர்ட் யுத்தம்.  கொஹிமா நகரின் அப்போதைய Deputy Commissioner ஆக இருந்த Charles Pawsey என்பவரின் பங்களாவின் ஒரு பகுதியான டென்னிஸ் கோர்ட் தான் யுத்த பூமி.  ஜப்பானியர்களுக்கு போரில் ஒரு நாள் முன்னிலை என்றால் பிரிட்டிஷ் தலைமையிலான காமன்வெல்த் படைகளுக்கு ஒரு நாள் முன்னிலை.  மாறி மாறி போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. போரில் இரு பக்கமும் பலத்த சேதங்கள், உயிரிழப்பு.  Grenade வீச்சுகளும், ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும் என தொடர்ந்து நடந்த போர் இது.

மலர் வளையம் வைத்து நினைவு நாள் அஞ்சலி....

ஒரு வழியாக ஜூன் மாதத்தில் ஜப்பான் பின்வாங்கியது. காமன்வெல்த் படைகள் வென்றன.  பின்வாங்கிய ஜப்பானிய படைகளை பர்மா வரை [தற்போதைய மியான்மார்] துரத்தியது காமன்வெல்த் படைகள்.  போர் முடிந்த பிறகு இழப்புகள் தெரிந்தன – பிரிட்டிஷ் தலைமையிலான காமன் வெல்த் படைகளில் மொத்தமாக நான்காயிரத்திற்கும் மேலான உயிரிழப்புகள்.  அதிலே தொள்ளாயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் – தமிழர்களும் உண்டு.

கல்லறையில் எழுதப்பட்ட வாசகங்களை படித்துக் கொண்டிருந்தபோது....

கொஹிமா போரில் உயிரிழந்தவர்களுக்கான கல்லறைகளும் நினைவுச் சின்னமும் போர் நடந்த அதே டென்னிஸ் கோர்ட் பகுதியில் அமைக்கப்பட்டது. போரில் உயிரிழந்த 1420 வீரர்களுக்கான கல்லறைகள் இங்கே உண்டு. இதைத் தவிர 917 இந்து மற்றும் சீக்கிய வீரர்களும் அவர்களது வழக்கப்படி இங்கே எரியூட்டப்பட்டார்கள்.  அவர்களுக்கான நினைவுச் சின்னமும் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு கல்லறைக்கு மேலும் ஒரு நினைவுச் சின்னம் – அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரும் பிறந்த-இறந்த தேதிகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.சிலருடைய கல்லறைகளில் சமீபத்தில் வந்து சென்ற இறந்தவரின் உறவினர்கள் வைத்துச் சென்ற பூங்கொத்துகள் இருக்கின்றன.  கல்லறைகள் அமைந்திருக்கும் பகுதியின் வெளியே அமைத்திருக்கும் ஒரு பதாகையில் எழுதப்பட்ட வாசகம் தான் நினைவுக்கு வருகிறது – வீடு சென்றதும் உங்களவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...  உங்களுடைய நாளைக்காக, எங்களுடைய இன்றை இழந்திருக்கிறோம் என்பதையும் சொல்லுங்கள்.....”  அருமையான வாசகம் தான் இல்லையா..... நாட்டிற்காக இப்படி எத்தனை எத்தனை போர்கள்... எத்தனை உயிரிழப்புகள்.....இன்னுமொரு கல்லறையில் எழுதி வைத்திருந்த வாசகம் – Gone But not forgotten……  இறந்து போன தன் மகனின் கல்லறையில் அப்பா எழுதி வைத்திருந்த வாசகமும் மனதைத் தொட்டது – “In loving memory of my dear son David.  We shall meet again in Heaven”.  இப்படி ஒவ்வொரு கல்லறையிலும் வாசகங்கள் – உயிர் நீத்தோரின் நினைவில் எழுதி வைத்த வாசகங்கள் உங்களையும் போரில் உயிர் நீத்தோர்களை ஒரு நிமிடமாவது மனதில் நினைக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.மேலே போரில் இறந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச் சின்னமும், கீழே கல்லறைகளுக்கு அருகே இன்னுமொரு நினைவுச் சின்னமும் இருக்கிறது.  மேலேயிருந்து கல்லறைகளைப் பார்க்கும்போது இந்த இடத்திலே தானே போர் நடந்தது – உயிரிழக்கும்போது எத்தனை அவதிப்பட்டிருப்பார்கள், எத்தனை வீரத்துடன் போரிட்டு மடிந்திருப்பார்கள் என்ற நினைவு உங்களுக்குள் நிச்சயம் தோன்றும். எங்களாலும் அந்த போரினை மனக்கண்ணில் பார்க்க முடிந்தது.QVO Madras Sappers and Miners என்ற பிரிவினைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் என எழுதி இருக்கும் பெயர்கள் – மேஜர் வி. பஞ்ச், ஹவில்தார் எம். ராமஸ்வாமி, லான்ஸ் நாயக் கிருஷ்ணஸ்வாமி மற்றும் Sapper எனும் பதவியில் இருந்த பூஷணம், கே.பி. கோபாலன், பி. ஐசக், குஞ்சிராமன் நாயர், ராஜகோபால், ராமஸ்வாமி, ஜே. ராமுலு..... இதைத் தவிர மற்ற பிரிவினர்களின் பெயர்களிலும் கே. ஆனந்தன், குமாரவேலு, சுப்ரமணியம், பெருமாள் என பல பெயர்கள்.  இவர்களில் பலரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெயரிலிருந்தே தெரிகிறது.  இவர்களின் குடும்பங்களின் இன்றைய நிலை என்ன, அவர்களைப் பற்றி நம்மில் ஒருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் சோகம்.....

குப்பைகளை சுத்தம் செய்ய மெஷின்....

இந்த நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் இடத்தில்  நிறைய மரங்களும் பூக்களும், இருக்கின்றன.  சுத்தமாகவும் வைத்துக் கொள்கிறார்கள் என்பதில் மனதுக்கு சந்தோஷம்.  மரங்களிலிருந்து விழும் இலைகளை பெருக்குவதில்லை – அதை எப்படி சுத்தம் செய்கிறார்கள் என்று பாருங்கள்..... அவ்வளவு பெரிய இடத்தினை துடப்பம் கொண்டு சுத்தம் செய்வது சாத்தியமில்லை என வேகமாக காற்றடித்து மரங்களிலிருந்து விழுந்த இலைகளை அகற்றுகிறார்கள்.நினைவுச் சின்னங்களையும் அங்கிருந்த கல்லறைகளையும் பார்த்து பூக்களையும் ரசித்து, சில புகைப்படங்களை நினைவுக்காக எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே எங்களுக்காக என்ன அனுபவம் காத்திருந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 கருத்துகள்:

 1. கல்லறை பற்றிய தகவல்கள் நெகிழ்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. உள்ளத்தில் ஏனோ ஒரு வலி! கல்கறை வாசகங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லறை வாசகங்கள்.... - உண்மை தான் ஐயா. வாசிக்கும் நமக்கே கஷ்டமாக இருக்கிறது. அந்த வீரரை இழந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி...

   நீக்கு
 5. இதை இம்பால் போர் என்பார்கள் . அப்போது வந்த ஜப்பானியப் படை வீரர்களில் ஒருவருக்குப் பிறந்த குழந்தை (பெண் ) பின்னாளில் தான் தந்தையைக் கண்டு பிடிக்க எடுத்த முயற்சி வெற்றியில் முடியும்.
  பெண் எழுதியிருப்பாள் .
  இது போல ஒரு கட்டுரை ரீடர்ஸ் டைஜெஸ்ட்டில் ரொம்ப நாள் முந்தி 25 வருடம் இருக்கும் படித்திருக்கிறேன் . அதன் பிறகுதான் எனக்கு நாம் சரித்திரத்தில் போர் பற்றி படிப்பது எல்லாம் மேம்போக்கானவை என்பது புரிந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 6. நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு வீர வணக்கம் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 7. இறந்து போனவரின் நினைவுகள்நெருங்கிய உறவுகளிடம் மட்டுமே இருக்கும் மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல இம்மாதிரி நினைவறைகள் அவசியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 8. புதிய புதிய தகவல்கள். தமிழன் நாகாலாந்துல போய் பெயரை நிலை நாட்டியிருக்கான்னு எடுத்துப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   நீக்கு
 9. சிறப்பான பதிவு! இந்தத் தொடரை நீங்கள் கண்டிப்பாக நூலாக வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூலாக இல்லாவிட்டாலும், மின் நூலாகவாது வெளியிடுவேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இ.பு. ஞானப்பிரகாசன் ஐயா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 11. //வீடு சென்றதும் உங்களவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்... உங்களுடைய நாளைக்காக, எங்களுடைய இன்றை இழந்திருக்கிறோம் என்பதையும் சொல்லுங்கள்.....//

  கல்லறைகளில்அமைந்திருக்கும் பகுதியின் வெளியே உள்ள ஒரு பதாகையில் எழுதப்பட்ட அந்த வரிகளைப் படித்ததூம் மனதை என்னவோ செய்தது.

  நாட்டுக்காக உயிர் துறந்த அவர்களுக்கு நாம் என்ன செய்திருக்கோம் என்ற கேள்வியும் மாந்தில் எழுந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....