திங்கள், 6 ஜூன், 2016

இறந்த பின்னும் வித்தியாசம்.....



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 15

மதிய உணவினை சாப்பிட்ட பிறகு நாங்கள் சென்ற இடம் என்ன?  சென்ற பதிவின் முடிவில் அந்த இடம் பற்றி எழுதும் போது நாம் கடைசியாகப் போகும் இடம்என்று எழுதி இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்....  ஆமாம் மனிதன் கடைசியாக போகும் இடம் தான் நாங்கள் சென்ற இடம்.



இம்ஃபால் நகரின் மத்தியில் இருக்கும் ட்யூலாலாண்ட் எனும் பகுதியில் அமைந்திருப்பது போர் வீரர்களுக்கான இடுகாடு. 1600 வீரர்களின் உடல்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன.  வீரர்கள் எனும்போது நிச்சயம் போரும் நடந்திருக்க வேண்டுமே.....  நடந்தது. கடுமையான போர்.

இரண்டாம் உலகப் போர் சமயம் – ரங்கூனிலிருந்து [தற்போதைய மியான்மார்] ஜப்பானியர்கள் படை ரென்யா முடாகுச்சி தலைமையில் இந்திய எல்லை நகரமான மணிப்பூர் வழியாக பிரம்மபுத்திர சமவெளியான அசாம் வரை கைப்பற்றும் எண்ணத்தோடு உள்ளே நுழைந்தது. மணிப்பூர் பகுதியில் இருந்த ஆங்கிலேய-இந்திய படை வீரர்களின் திறமையை, போராடும் குணத்தினை, குறைவாக எடை போட்ட ஜப்பானிய படை வெகு விரைவில் தங்களது தவறை உணர்ந்தது.  மூன்று மாதங்கள் கடுமையான சண்டைகள் நடக்க, இரு பக்கத்திலும் பலத்த உயிர் சேதங்கள் – ஜப்பானியர்கள் பக்கம் ஆயிரக் கணக்கில்...



சில வாரங்களில் மணிப்பூர் வீழ்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இந்தியா வந்த ஜப்பானியர்களுக்கு பலத்த சேதம். அவர்கள் கொண்டுவந்திருந்த உணவு மற்றும் தளவாடங்கள் தீர்ந்து போக, இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை வந்த போது ரங்கூனை நோக்கி திரும்பியது ஜப்பானிய படைகள்.  இரு பக்கத்திலும் பலர் உயிரிழக்க, ஜப்பானியர்கள் அல்லாதவர்களின் உடல்களை இந்த இடத்தில் தான் புதைத்து அவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அமைத்தார்கள்.  முதலில் 950 போர் வீரர்களுடைய கல்லறைகள் இருந்தாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகப் போர் காலத்தில் [1939 முதல் 1945 வரை], உயிரிழந்த, இம்ஃபால் நகரின் மற்ற இடங்களில் இருந்த கல்லறைகளும் இங்கே கொண்டு வரப்பட்டு இப்போது மொத்தம் 1600 போர் வீரர்களுடைய கல்லறைகள் இங்கே இருக்கின்றன.

1600 போர் வீரர்களில் – அனேகம் பேர் ஆங்கிலேயர்கள் – 1300 ஆங்கிலேயர்கள், 220 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் காமன்வெல்த் நாடுகளிலிருந்து என பலருக்கும் இங்கே கல்லறைகள் இருந்தாலும், அவர்கள் வகித்த பதவியைப் பொறுத்து அவர்களின் கல்லறைகள் அளவும் கொடுக்கப்பட்ட இடமும் வித்தியாசப்பட்டது.  பெரும்பாலான போர்களைப் போலவே இறந்தவர்களில் சிப்பாய்கள் தான் அதிகம் என்பதை சின்னச் சின்னதாய் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்கள் சொல்லாமல் சொன்னது.



கல்லறைகள் அமைந்திருந்த இடத்தில் பூச்செடிகளும் மரங்களும் வளர்க்கப்பட்டு அமைதியான சூழல் இருந்தது. கல்லறைகள் அமைந்திருந்தாலும் பல இளைஞர்கள் அவ்விடத்தில் தங்களது இணைகளுடன் வந்திருந்து அமர்ந்திருந்தார்கள். வாயிலில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். போரில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இது புனிதமான இடமாக இருந்தாலும், போர் முடிந்து 70 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடம் இன்றைய இளைஞர்களுக்கு புனிதமானதாகத் தோன்றாதது அதிசயமில்லை.

இப்போதும் மறைந்தவர்களின் நினைவு நாளன்று, இந்த கல்லறைகளுக்கு வந்து அஞ்சலி செலுத்த பல வெளிநாட்டவர்கள் வந்து செல்கிறார்கள் என்பதை அங்கே வைத்திருந்த பூங்கொத்துகளும் மலர் வளையங்களும் பறைசாற்றிக் கொண்டிருந்தன.  நிலத்திற்கும், பணத்திற்கும், மற்ற நாடுகளை தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் இன்னமும் பல போர்கள் நடந்த வண்ணமே இருக்கிறது என்பது சிந்தனைக்குரிய விஷயம். மேலே சொன்ன போர் சமயத்தில் இம்ஃபால் மற்றும் பக்கத்து மாநிலமான நாகாலாந்தின் தலைநகர் கொஹிமா ஆகிய இரண்டு இடங்களிலும் பலத்த உயிர்ச் சேதங்கள்.....    

இன்னும் எத்தனை போர்...  எத்தனை உயிர்ச்சேதம்.... இறந்தவர்களின் கல்லறைகளைப் பார்த்தாலும் மனிதர்களுக்கு இந்த போர் குணம் போகுமா? சந்தேகம் தான்.....


மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

36 கருத்துகள்:

  1. //கல்லறைகள் அமைந்திருந்தாலும் பல இளைஞர்கள் அவ்விடத்தில் தங்களது இணைகளுடன் வந்திருந்து அமர்ந்திருந்தார்கள்.//

    வாழ்க்கையின் தத்துவத்தை ஆராய்கிறார்கள் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தம சப்மிட் ஆகவில்லை. அப்புறம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. போய்ப் பாருங்க....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அமைதியான இடமும்,நினைவுகளும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  5. மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது ,இருந்தும் மனிதனுக்கு ஆசை விடவில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  6. வள்ளுவர் பிறப்பொக்கும் என்றுதான் சொல்லி இருக்கிறார். இறப்பு அல்ல என்று அர்த்தமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. இதே போல் ஒரு நினைவுக் கல்லறை ஒன்றை
    மலேசியா சென்றிருந்த போது ஸபா என்னும்
    தீவில் பார்த்தேன்
    இதைப் போல் மிக அருமையாக அழகாகப்
    பராமரித்து வந்தாலும் அத்தனை பேரின்
    நினைவுக் கல்லறையைப் பார்க்க மனம்
    மிகவும் சங்கடப்பட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் சலனம் ஏற்படுத்தும் இடம் தான்...... சில நிமிடங்கள் ஒன்றும் பேசத் தோன்றவில்லை. இறந்த போது, அதுவும் போரில் இறந்த போது அந்த வீரர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று நினைக்கத் தவறவில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. இது மாதிரி நிறைய ஆங்கிலேயர்கள் சமாதி இந்தியாவில் உண்டு. நான் பாளையங்கோட்டையில் பார்த்திருக்கிறேன். "இறந்தபின்னும் வித்தியாசம்" - அது இல்லாமல் இருக்குமா? பாளையங்கோட்டையில் இது மாதிரி அழகாக வைத்துக்கொள்ளவில்லை.

    நான் இஸ்லாமிய நாடுகளில் பார்த்த விஷயம்.. அவர்கள் சமாதியில், ஆளுக்கு 6க்கு 3 அடிதான். வேறு அலங்காரமெல்லாம் பார்த்ததில்லை. அதிலும் அரசர்களுக்கு அல்லது தலைவர்களுக்கு தனியான முக்கியத்துவமோ அல்லது பெரிய அலங்காரமான சமாதிகளோ பார்த்ததில்லை. (ஔரங்கசீப்பைப் பற்றி இப்படித்தான் சொல்வார்கள். சாதாரணமான இடத்தில் அவர் விருப்பப்படி எளிமையாகப் புதைக்கப்பட்டதாக)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியில் உள்ள சில அரசர்களின் சமாதிகள்/கல்லறைகள் அலங்காரமாக இருக்கும். மற்ற நாடுகளில் நீங்கள் சொன்னது போல இருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. உங்கள் பயண ஆர்வமும் தகவல்களும் வாசிக்கிறவர்களுக்கு தூண்டுதல்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  10. இம்பாலிலும் கொஹிமாவிலும் இத்தகைய கல்லறைகளை பார்த்தபோது மனம் கனத்தது. தமிழகத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக வாழும் உணர்வு ஏற்பட்டது.
    இந்த மாத 'ஹாலிடே நியூஸ்' இதழிலும் ஒரு கல்லறையைப் பற்றிதான் எழுதியிருக்கிறேன். இது மதுரையில் இருக்கும் கல்லறை.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார். ஹாலிடே நியூஸ் இந்த மாத இதழ் வந்துவிட்டதா?

      நீக்கு
  11. போர்க்குணம் என்பது மனிதர்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் உணர்ச்சி. ஆனால், இது போர்வெறி! தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பிற மனிதர்களின் உயிரைத் துச்சமாக எண்ணி நடத்தப்படும் கொடிய விளையாட்டு! மனித இனம் இருக்கும் வரை போரும் இருக்கும். உலகமே அழிந்து கடைசியாக இரண்டே இரண்டு பேர் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு என்பது தோன்றாமல் இருக்காது. இது உயிர்களுக்கே உரிய இயல்பு. மாற்ற இயலாது. நல்ல தொடர்! நேரமிருக்கும்பொழுது வந்து பொறுமையாய் எல்லாவற்றையும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இ.பு. ஞானப்பிரகாசன் ஐயா.

      நீக்கு
  12. எத்தனை பார்த்தாலும் போர்க்குணம் போகுமா என்பது ஐயமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. வீரர்களின் கல்லறை பற்றிய தகவல் இதயம் கனக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  14. இன்னும் எத்தனை போர்... எத்தனை உயிர்ச்சேதம்.... இறந்தவர்களின் கல்லறைகளைப் பார்த்தாலும் மனிதர்களுக்கு இந்த போர் குணம் போகுமா? சந்தேகம் தான்.....//

    உண்மைதான் நீங்கள் சொல்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  15. குஜராத்தின் ஜாம்நகரிலும் சுடுகாட்டை அனைவரும் பிக்னிக் செல்வது போல் சென்று பார்த்து மகிழ்வார்கள். அவ்வளவு சுத்தமாகவும் பூங்கா போலவும் பராமரிப்பு இருக்கும். பல தத்துவக் கதைகள் அவை சார்ந்த ஓவியங்கள் எனச் செல்லும் வழியெங்கும் மிக அழகாகக் காணப்படும். பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து பார்த்துவிட்டுச் சென்றதையும் பார்த்திருக்கிறேன். அது போல இங்கேயும் இருக்கும் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  16. இன்னும் எத்தனை போர்... எத்தனை உயிர்ச்சேதம்.... இறந்தவர்களின் கல்லறைகளைப் பார்த்தாலும் மனிதர்களுக்கு இந்த போர் குணம் போகுமா? சந்தேகம் தான்..// ஆம் உன்மைதான்

    நிறைய தெரிந்து கொண்டோம். நம்மூரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வரலாற்றுக் கதை இருக்கத்தான் செய்கிறது. அருமை வெங்கட் ஜி தொடர்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....