வெள்ளி, 17 ஜூன், 2016

ஃப்ரூட் சாலட் – 166 – நீச்சல் போராட்டம் - கில்லர்ஜி கவிதை – எதுவும் நடக்கலாம்....


நீச்சல் போராட்டம்:

அர்ஜூன் சந்தோஷ் – 14 வயது சிறுவர் – கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பெரும்பாலம் எனும் கிராமத்தினைச் சேர்ந்தவர். தனது பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனில் ஆற்றைக் கடந்து மூன்று கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் – ஆற்றைக் கடக்க படகு/தோணிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை. கடந்த 25 வருடங்களாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தரக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் கிராம மக்கள். ஒவ்வொரு ஐந்து வருடமும் மாறி மாறி ஆட்சி அமைத்தாலும் இது வரை எந்த அரசும் பாலம் கட்டித் தரவில்லை.

கிராமத்தினர் போராடிக் கொண்டிருந்தாலும், இப்போராட்ட்த்தில் தனது பங்கும் இருக்க வேண்டும் என நினைத்த அர்ஜூன், கடந்த சில நாட்களாக தினமும் ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கும் நிலையிலும் நீச்சலடித்து ஆற்றைக் கடந்து தனது பள்ளிக்குச் செல்கிறாராம்.  அப்படியாவது மாவட்ட ஆட்சியாளர்களும், மாநில அரசும் முனைந்து பாலம் கட்டித் தரமாட்டார்களா என்ற ஆசை அவருக்கு!

போராட்டம் பற்றித் தெரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியாளர்கள், இப்போது அர்ஜூன் இப்படி நீச்சல் அடிக்கக் கூடாது என தடை செய்து இருக்கிறார்களாம். எப்படியும் கட்டிக் கொடுத்து விடுவோம் என்றும் சொல்லி இருக்கிறார்கள் போலும். இல்லை எப்போதும் போல் இது பேச்சுக்கு சொன்னதாக இல்லாமல் இருக்க வேண்டும்!

கிராமத்துப் பிரச்சனையை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு வித்தியாசமாகக் கொன்டு சேர்த்த அர்ஜுனுக்கு இந்த வாரப் பூங்கொத்து!

சாலைக் காட்சி:

இரண்டு தினங்களுக்கு முன்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன்.  எதிர் புறத்திலிருந்து ஒருவர் வந்து கொண்டிருந்தார்.  சிவப்பு வண்ண
பனியனில் வெள்ளை வண்ணத்தில் ஏதோ எழுதி இருந்தது. அவர் பனியனில் பொறித்திருந்த வாசகம் மிகவும் பிரபலமான ஒரு வசனம் – I TRIED TO BE NORMAL ONCE….  IT WAS THE WORST TWO MINUTES OF MY LIFE”..... 

அவர் அந்த வாசகத்தில் சொன்னதை கடைபிடிப்பது கன கச்சிதமாகத் தெரிந்தது – அவர் நடை அப்படி – ஃபுல் மப்புல நடந்தார்! நடக்கும்போதே எட்டு போட்டு தான் நடந்தார்!
விளம்பரமும் நிதர்சனமும்....:படமும் கவிதையும் – படம்-5, கவிதை-2

கடந்த புதன் அன்று வெளியிட்ட ஐந்தாவது புகைப்படத்திற்கு வந்த இரண்டாம் கவிதை.  புகைப்படம் பற்றிய குறிப்புகள் படிக்க ஓய்வு – படமும் கவிதையும்பதிவினை படிக்கலாமே!
இந்த படத்திற்கு நண்பர் கில்லர்ஜி அவர்கள் எழுதிய கவிதை கீழே.

அழைப்பு விடுப்பாயாடா ?

திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து
மகனே தவசி உன்னை பெற்றோமடா
தெருவோரம் தவிக்க விட்டாயடா
பாசம் கொட்டி வளர்த்தோமடா
பாதையோரம் படுக்க விட்டாயடா
கால் கடுக்க பாதயாத்திரை சென்று
வந்தோமடா உன்னைப்பெற இன்று
என் கால் வலி தீர வழி இல்லையடா
உன்னை ஈன்றபோது வலிக்கவில்லையடா
உன்னவள் ஈட்டி வார்த்தை இன்னும் வலிக்குதடா
மனைவியவள் வந்தவுடன் மதி மயக்கமாடா
மனிதநேயம், பாசம், நேசம் மறந்து விட்டாயடா
உனை மறக்க எமக்கு முடியாதடா உடன் நாங்கள்
மரணித்தால் மீண்டும் உனக்கே வந்து பிறப்போமடா
அப்பொழுதாவது உனது நேசம் கிடைக்குமடா
இறைவா எங்கள் குரல் கேட்பாயடா
இன்றே மரணம் கொடுப்பாயடா...
உடனே ஜனனம் கொடுப்பாயடா...
எங்களுக்கு அழைப்பு விடுப்பாயாடா ?

அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

மகளின் ஓவியம்:

சென்ற ஃப்ரூட் சாலட் போலவே இந்த ஃப்ரூட் சாலட் பகுதியில் மகள் வரைந்த ஒரு பிள்ளையார் ஓவியம் – அவருடைய வாகனமாக மௌஸை விட கணினியின் மௌஸ் ரொம்ப பிடித்து விட்டது போலும் இவருக்கு!


இன்சூரன்ஸ் விளம்பரம் – எதுவும் நடக்கலாம்! 

PNB METLIFE விளம்பரம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன்.  மிக அருமையாக எடுத்து இருக்கிறார்கள்...  பாருங்களேன். 
படித்ததில் பிடித்தது:

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."...

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.

ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.

தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.....

23 கருத்துகள்:

 1. அர்ஜூனுக்குப் பாராட்டுகள்.

  கில்லர்ஜி... அசத்திட்டீங்க!

  ரோஷிணியின் ஓவியம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

  கடைசிக் கதை சொல்லும் செய்தி மனதில் குறித்துக் கொள்ளப்பட வேண்டியது.

  பதிலளிநீக்கு
 2. உழைத்து வாழவேண்டும் - பிறர்
  உழைப்பில் வாழ்ந்திடாதே...

  அடித்து அடித்து சொல்லுங்கள்.

  அடுத்து பிடித்தது.

  கனானான் தஃவா கணபதி
  கணபதி கும் ஹவாமஹே ...

  பிள்ளையாரை எந்த சிச்சுவேஷனும் லேயும் நமக்கு
  நம்பிக்கை தரும் தெய்வம்.

  ரோஷினிக்கு ஜே .

  தங்கக்கட்டி ரோஷினி, தாத்தாவுக்கு ஒரு மோதகம்
  எடுத்து தாயேன் ...!!
  நான் இங்கே தான் இருக்கேன்.

  subbu thatha
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த மோதகம் இதோ உங்களுக்கு அனுப்பச் சொல்லி இருக்கேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   நீக்கு
 3. அனைத்தும் அருமை அய்யா ...https://ethilumpudhumai.blogspot.in/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   நீக்கு
 4. அர்ஜீன் ஆசையை அரசு நிறைவேற்றட்டும்...
  ஜில்லர்ஜி கவிதை சூப்பர்
  விளம்பரம்...வேற நடைமுறை வேற...தான்
  பிள்ளையார் அழகாக இருக்கிறார்.
  கதை முன்பே படித்து இருக்கிறேன்...நல்ல கருத்து...
  தம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 5. அர்ஜூனுக்கு ஒரு சல்யூட்
  தங்களது மகளின் ஓவியத்துக்கு பாராட்டுகள்
  காணொளி ஸூப்பர் அவளது புருசனுக்கு பலூன் வியாபாரியால் விடுதலை கிடைச்சுருச்சு சந்தோசமாக பறந்திருப்பான் ஹாஹாஹா
  படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது
  அடடே நம்ம கவித.... கவித.... நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. அர்ஜூனுக்கு வாழ்த்துக்கள்.
  தேவகோட்டை ஜியின் கவிதை அருமை.
  ரோஷ்ணியின் ஓவியம் அழகு , வாழ்த்துக்கள்.
  எல்லோர் நலம் விரும்பும் கதை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 7. அர்ஜுனின் போராட்டம் வெற்றி பெறட்டும்! கவிதை சிறப்பு! குட்டிக்கதை சொன்ன பாடம் அருமை! ரோஷிணியின் ஓவியங்கள் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது! அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 8. கில்லர் ஜி அவர்களின் கவிதை மனதை நெருடுகின்றது..

  மற்ற அனைத்தும் அருமை.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 9. இந்த வார பழக்கலவையில் வழக்கம்போல் அனைத்தும் அருமை. குறிப்பாக திரு KILLERGEE அவர்களின் மனதை உருக்கும் கவிதையும், தங்கள் மகளின் ஓவியமும், ஆயுள் காப்பீட்டு விளம்பரமும் மிக மிக அருமை. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 10. அர்ஜுனுக்கு எங்கள் பூங்கொத்தும்! (துளசி : கிராமம் பற்றி எழுதி அர்ஜுனைப் பற்றியும் எழுத நினைத்து நேரம் இல்லாததால் எழுதாமல் போயிற்று. நீங்கள் எழுதியமைக்கு வாழ்த்துகள் ஜி!)

  ரோஷிணிக் குட்டிக்கு வாழ்த்துகள்! படம் அருமையாக வரைகிறார்.

  கில்லர்ஜி அசத்திட்டீங்க போங்க! வாழ்த்துகள்!

  இரு விளம்பரங்களையும் ரசித்தோம்.

  படித்ததில் பிடித்தது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி! அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 11. Article was really good thanks for the Information! When oil is refined, it loses a lot of nutrients but cold pressing it in a marachekku oil in chennai ensures that you retain all of it,” says the 35-year-old who works in a software firm. you can try with this oil next time

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....