எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 29, 2016

ப்யாஸ் நதியில் ராஃப்டிங்.....

ப்யாஸ் நதியின் ஒரு பள்ளத்தில் இறங்கும் போது....

ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூ நகர்.  குளிர் பிரதேசமான மணாலி என்று சொல்லும்போது குலூவையும் சேர்த்து, குலூ-மணாலி என்று தான் சொல்வார்கள். இரண்டுமே அருகருகே இருக்கும் இரு நகரங்கள்.  மணாலியில் பனிப்பொழிவும் பனிபடர்ந்த சிகரங்களும் பார்க்கலாம் என்றால் குலூவில் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யும் த்ரில் அனுபவம் பெறலாம்.  வாருங்கள் கூழாங்கற்கள் நிரம்பிய [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யலாம்.

ப்யாஸ் நதி....

குளிர் மற்றும் மழை அதிகம் இல்லாத மாதங்களில் மட்டுமே இங்கே ராஃப்டிங் செய்ய முடியும். மார்ச் முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை மற்றும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் இறுதி வரை ராஃப்டிங் செய்ய உகந்த மாதங்கள். [B]ப்யாஸ் நதிக்கரையில் நதியைப் பார்த்தபடியே பயணித்து பிர்டி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் அங்கே சின்னச்சின்ன தனியார் கடைகளைக் காணமுடியும். அவர்களிடம் இருக்கும் காற்றடைத்த ரப்பர் படகுகளில் தான் நாம் ராஃப்டிங் செய்ய வேண்டும். சில அரசு நிறுவனங்கள் உண்டென்றாலும், தனியார் படகுகள் தான் அதிகமான அளவில் இருக்கின்றன.

ப்யாஸ் நதியின் ஒரு பயணம்.....

Small, Medium, Large என மூன்றுவிதமான பயணங்கள் உண்டு – பிர்டியிலிருந்து தொடங்கி, ஜீரி எனும் இடம் வரை கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவு தூரத்தினை நீங்கள் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்து கடக்க முடியும்.  14 கிலோமீட்டர் தொலைவும் ராஃப்டிங் செய்ய சில மணி நேரங்கள் ஆகலாம் – என்றாலும், ராஃப்டிங் செய்து பழக்கமில்லாதவர்களுக்காக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ராஃப்டிங் செய்யும் வசதிகள் இங்கே உண்டு.

ஏலேலோ ஐலேசா......

சீசனைப் பொறுத்து ராஃப்டிங் கட்டணங்கள் மாறுபடுகின்றன. நீங்கள் பயணிக்கும் தூரத்தினைப் பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணங்கள் கொடுத்து ராஃப்டிங் செய்யலாம். முழு தொலைவும் பயணிக்க கட்டணம் இன்னும் அதிகம்.  பாதுகாப்பு உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு ரப்பர் படகில் அமர்ந்து கொள்ள, அனுபவம் பெற்ற படகோட்டி ஒருவர் ராஃப்டிங் செய்ய நம்மை அழைத்துச் செல்கிறார்.

காற்றடைத்த ரப்பர் படகுகள்....

ராஃப்டிங் தொடங்குமுன்னரே, நமக்கு இந்த த்ரில் பயணத்தினை தாங்க முடியுமா? இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வர வேண்டாம் என்பதையும் சொல்லி விடுகிறார்கள். கூழாங்கற்கள் நிறைந்த [B]ப்யாஸ் நதிக்குள் பயணிக்கத் துவங்குகிறோம். சமவெளியாக இல்லாமல் பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த பகுதி என்பதால் படகு செலுத்துபவரின் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். சில இடங்களில் தண்ணீரின் வேகம் மிக அதிகம் என்பதால் படகும் வேகமாக நகர்கிறது. 

ப்யாஸ் நதியின் ஓரத்தில் அமர்ந்து த்யானம் செய்யும் மூதாட்டி....

படகின் ஓரங்களிலும் நடுவிலும் இருக்கும் கயிறுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாம் அமர்ந்திருக்க, படகோட்டி மிக லாவகமாக படகைச் செலுத்துகிறார்.  பள்ளமான இடம் வரும்போது இப்போது நாம் கீழ்நோக்கி வேகமாகச் செல்லப்போகிறோம் என்பதையும் சொல்லி விடுவதால் நம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ஒரு வித சத்தத்தோடு படகு தண்ணீரில் கீழ் நோக்கி இறங்க, நாமும் தண்ணீரில் நனைகிறோம்.  நம்மை மீறி நம்மிடமிருந்தும் உற்சாகக் குரல் வெளிவருகிறது – சிலருக்கு பயத்தில் கூச்சலும்!

கயிற கெட்டியா புடிச்சுக்கோங்க.... பள்ளம் வரப் போது.....

சில இடங்களில் படகைச் சுற்றிச் சுற்றி ஓட்டியும் துடுப்பினால் தண்ணீரில் அடித்து தண்ணீர் திவலைகள் நம் மீது படும்படியும் செய்து மகிழ்விக்கிறார் படகோட்டி.  எங்களுக்கு அமைந்த படகோட்டி நேபாள் நாட்டைச் சேர்ந்த கர்மாஎனும் 23 வயது இளைஞர்.  எங்களுடன் சேர்ந்து “ஐலேசாபாட்டுப் பாடியதோடு நேபாளி மொழியிலும் சில பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தார். குழுவாக பயணித்த நாங்களும் அவருடன் பயமின்றி உற்சாகமாக பயணிக்க, அவருக்கும் மகிழ்ச்சி. [B]ப்யாஸ் நதியில் இருக்கும் குறுகிய பாதைகளிலும், பெரிய பள்ளங்களிலும் படகைச் செலுத்தி எங்கள் அனைவரையும் நனைய வைத்தார்.

இதோ வந்துடுச்சு பள்ளம்....

எப்படியும் தண்ணீரில் நனைந்து விடுவோம் என்பதால், கரையிலேயே காமிரா, மொபைல், பர்ஸ் போன்றவற்றை நீங்கள் சென்ற வாகனத்தில் விட்டுவிடுவது நல்லது.  பயணிக்கும் போது செல்ஃபி எடுத்துக்கொள்ள காமிரா வைத்துக் கொண்டு அது முழுவதும் நனைந்து செயலிழப்பதையும் காணமுடிந்தது.  நீங்கள் ராஃப்டிங் செய்வதை படம்/காணொளியாக எடுத்துத் தரவும் இங்கே வசதிகள் உண்டு.  படகொன்றுக்கு 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆரம்பத்திலிருந்து முடியும் இடம் வரை உங்களைத் தொடர்ந்து சாலையோரமாக பைக்கில் வந்து ஆங்காங்கே நின்று வீடியோவும், புகைப்படமும் எடுக்கிறார்கள்.  நீங்கள் கரையேறிய பிறகு உங்களுக்கு அந்த படங்களையும் காணொளியையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து தருவார்கள்.

என்ன நனைஞ்சுட்டீங்களா....

உற்சாகமாக பயணித்து, நதியில் இருக்கும் நெளிவு சுளிவுகளைக் கடந்து கரையோரம் வருகிறோம். வாழ்க்கையில் ஒரு முறையாவது நிச்சயமாக அனுபவிக்க வேண்டிய விஷயம் இந்த ராஃப்டிங்.  இந்தியாவில் பல இடங்களில் இந்த ராஃப்டிங் வசதிகள் இருக்கிறது – ரிஷிகேஷ் [கங்கை நதி, உத்திராகண்ட் மாநிலம்], குலூ [[B]ப்யாஸ் நதி - ஹிமாச்சலப் பிரதேசம்], ஓர்ச்சா [[B]பேத்வா நதி - மத்தியப் பிரதேசம்] ஆகிய இடங்களில் ராஃப்டிங் வசதிகள் உண்டு.

ப்யாஸ் நதியின் ஒரு பள்ளத்தில் இறங்கும் போது....

குலூ-மணாலி செல்வது எப்படி?

குலூ வருவதற்கு முக்கிய வழி சாலை வழி தான். தில்லி வரை விமானத்தில்/ரயிலில் வந்து அங்கிருந்து குலூ-மணாலி வரை செல்ல நிறைய வோல்வோ பேருந்துகளும், சாதாரண பேருந்துகளும் உண்டு.  பன்னிரெண்டு மணி முதல் பதினான்கு மணிநேர பயணத்தில் நீங்கள் குலூ சென்றடையலாம்.  ரயிலில் பயணிப்பதென்றால் சண்டிகர் வரை ரயிலில் பயணித்து, பிறகு தனியார் வாகனத்திலோ அல்லது பேருந்துகளிலோ செல்ல முடியும்.  நேரடி விமான சேவை இல்லையென்றாலும், சென்னையிலிருந்து தில்லி வரை வந்துவிட்டால், தில்லி-சண்டிகர் வரை விமானத்திலும், பிறகு சண்டிகரிலிருந்து 9 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்திலும் வரலாம். 

யாருப்பா அது எழுந்து நிக்கறது....

குலூ-மணாலி தங்குவது எங்கே?

குலூ-மணாலி இரண்டு இடங்களிலுமே தங்குமிடங்கள் நிறையவே இருக்கின்றன. சீசன் சமயங்களில் [ப்ரல்-ஜூன்] அறை வாடகை மிக அதிகமாக இருக்கும்.  மற்ற சமயங்களில் வசதிகள் பொறுத்து 1000 ரூபாய் முதல் தங்குமிடங்கள் கிடைக்கின்றன. குழுவாக பயணிப்பவர்கள் காட்டேஜ் எடுத்தும் தங்கலாம். நான்கு அறைகள், ஒரு ஹால், டைனிங், சமையல் அறை என மொத்தமாக இருக்கும் காட்டேஜ் 8000 முதல் 10000 வரை கிடைக்கிறது.

என்ன ராஃப்டிங் நல்லா இருந்துதா?....

நீங்களும் ஒரு முறை குலூ-மணாலி சென்று ராஃப்டிங் செய்து இந்த த்ரில் அனுபவத்தினை பெறுங்கள்.


-          வெங்கட் நாகராஜ்

ஜூன் மாத ஹாலிடே நியூஸ் இதழில் வெளிவந்த எனது கட்டுரை.  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.
30 comments:

 1. மறக்க முடியாத பயணம்தான்
  வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 2. நல்ல அனுபவம். இவற்றை ஏதாவது திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்களோ?

  ReplyDelete
  Replies
  1. திரைப்படங்களில் காட்டியிருக்கலாம்.... திரைப்படங்கள் பார்ப்பது அரிது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. இவ்வளவு அருமையான இடங்கள் இந்தியாவில் இருந்தும் அது வெளியுலகிற்கு அதிகம் தெரியாமல் இருக்கிறது என்பது வருத்ததை தருகிறது. இது போன்ற அனுபவங்களை பலர் வெளிநாடு சென்ரு வந்து அதைப் பற்றி பெருமையாக எடுத்து சொல்லும்போது நீங்கள் இதுவெல்லாம் இந்தியாவிலே இருக்கிறது என்பதை மிக அழகிய படங்களோடு எடுத்து சொல்லும் விதம் மிகவும் பாராட்டடதக்கது.. வலைத்தளம் மூலம் பயனுள்ள செய்தியை தரலாம் என்பது உங்களால் மீண்டு நிருபிக்கப்பட்டு பதிவர்களில் நீங்கள் சிகரமாக இருக்கின்றீர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஊக்கமளிக்கும் கருத்துரைக்கு மிக மிக நன்றி. இந்தியாவிற்குள் எத்தனையோ அருமையான சுற்றுலாத் தளங்கள் உண்டு - காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை எத்தனை எத்தனை அருமையான இடங்கள் உண்டு. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை. தெரிந்தாலும் அவை பெரிதாகத் தோன்றுவதில்லை. ஹிமாச்சலப் பிரதேசத்தில் இப்படி நிறைய இடங்கள் உண்டு. அடுத்த பயணத் தொடரில் முழுவதும் ஹிமாச்சலப் பிரதேசம் பற்றி தான் எழுத எண்ணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. அருமையான இடங்கள் அதை புகைப்படம் எடுத்த விதம் அழகு வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. வாவ் படங்களும் தகவலும் என்னை அதிகம் ஈர்க்கின்றன சார் ... சீக்கிரம் வர வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். வரும்போது சொல்லுங்கள் ஸ்ரீ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 6. குலு மானாலி பற்றி ஓரளவுக்குத் தெரியும்.. இன்னும் விரிவாக தங்களது பதிவின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. படங்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 8. ஜாலியான பயணமாக இருக்கும் போல.
  குளிர் என்பதால் குலு மனாலியைத் தவிர்த்து வந்தேன்

  ReplyDelete
  Replies
  1. குளிருக்கு பயப்பட வேண்டியதில்லை. தகுந்த உடைகள் அணிந்து கொண்டால் நன்கு ரசிக்கலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 9. அருமையான பகிர்வு.
  அனுபவத்தை சொல்லி சென்றது அருமை. படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 10. குலுமணாலியில் இத்தனை விஷயங்கள் இருப்பது இப்போதே தெரிகிறது ஹொகனேகல்லில் வட்டமான பரிசலில் அமர்ந்து பயணித்ததே இதுவரை கிடைத்த த்ரில் பயணம். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. குலூ-மணாலியும் இன்னும் நிறைய விஷயங்கள் உண்டு..... இது ஹாலிடே நியூஸ் மாத இதழுக்காக ராஃப்டிங் பற்றி மட்டும் எழுதிய பகிர்வு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. படட்டைப்பார்த்தாலே தெரிகிறது த்ரில் பயணம்தான் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 12. சுவாரஸ்யம் நிறைந்த பயண அனுபவம்! விளக்கமான தகவல்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. அருமையான த்ரில்லின் அனுபவம் என்று சொல்லுங்கள் ஜி...

  கீதா: இதை பார்த்ததும் அட வாசித்துவிட்டோமே என்று தோன்ற உடன்... மாத ஹாலிடே நியூசில் என்று நினைவுக்கு வந்தது. அருமை ஜி. நானும் ராஃப்டிங்க் பியாசில் செய்திருக்கிறேன். பயங்கரமாக இருந்தது. நாங்கள் மிகவும் ரசித்துக் குரலெழுப்பி என்று. பயமில்லாதவர்கள் ஒரு முறையேனும் இதை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது..மீண்டும் செல்ல ஆசைதான். தெற்கே கர்நாடகப் பகுதியில் காவிரியில் கூட உண்டு. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜி. ஹாலிடே ந்யூசில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. ம்ம்ம்ம் கிட்டத்தட்ட இதே போன்றதொரு பயணம் அமெரிக்காவில் ஹூஸ்டன் சென்றிருந்தபோது அருகிலுள்ள சான் அன்டானியோ ரிவர் வாக் இடத்தில் கிடைத்தது. அது வட்டவடிவமான ட்யூப் பரிசல் போன்ற அமைப்புடன் கூடியது. கூடவெல்லாம் யாரும் வர மாட்டார்கள், நாம் ஏறி அமர்ந்ததும் அது கிளம்பி நீரின் போக்கிலேயே போய் நம்மை மேலே தூக்கிக் கீழே தள்ளிக் கடைசியில் புறப்பட்ட இடம் கொண்டு சேர்க்கிறது. அங்கும் படம் எடுக்க முடியாது. மற்றவர்கள் பயணிப்பதைப் படம் எடுத்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 15. தங்களோடு [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்ததுபோல் உணர்ந்தேன். அருமையான பதிவு.வாழ்த்துகள்!

  ஒரு சில காரணங்களால் தங்களது பதிவுகளை படித்து கருத்து தெரிவிக்க இயலவில்லை. விரைவில் அனைத்தையும் படித்து கருத்திடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது படியுங்கள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....