எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, June 4, 2016

எனக்கு 48 உனக்கு 45சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது திருச்சி கல்லணையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறு கிராமத்துக் கோவில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். எனது பெரியம்மாவின் குலதெய்வக் கோவில் அங்கே இருக்கிறது. நான் வரும் ஒவ்வொரு முறையும் அங்கே சென்று வழிபாடுகள் நடத்தவேண்டும் என்பது பெரியம்மாவின் விருப்பம். எல்லா முறையும் சென்று வழிபாடுகள் நடத்தினாலும், குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வருவதே இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார். இம்முறையும் அதே பாட்டு.  தில்லி புறப்படும் அவசரத்திலும் ஒரு நாள் அங்கே சென்று அவரின் விருப்பப்படி அவர் சொன்ன எல்லா வழிபாடுகளையும் முடித்து வந்தோம்.

அந்த கோவிலுக்கு நாங்கள் சென்றிருந்த சமயம் ஒருவர் கோவிலைச் சுத்தம் செய்வது, சுற்று தேவதைகளுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்வது என பல பணிகளைச் செய்து கொண்டிருந்தார். இதற்கு முன் சென்ற போதெல்லாம் அவரை பார்த்த நினைவில்லை.  சமீபத்தில் தான் இங்கே வேலைக்குச் சேர்ந்திருக்க வேண்டும். கோவில் பிரதான அர்ச்சகர் இன்னும் வந்திருக்கவில்லை.  எங்களைப் போலவே இன்னும் ஒரு குடும்பத்தினரும் காத்திருந்தார்கள்.  தூங்கா நகரம் மதுரையைச் சேர்ந்தவர்களாம்.  அம்மா, அப்பா, மகன் மற்றும் பாட்டி....  மகனுக்கு திருமணம் நடக்கவில்லையாம்.  வயது ஏறிக்கொண்டே போகிறது என்கிற கவலையில் கோவில் கோவிலாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கணினித் துறையில் படித்து நல்ல வேலையில் இருக்கிறார், வருமானமும் குறைவில்லாமல் இருக்கிறது, சொந்த வீடு, வாகனம் என போதிய வசதிகள் இருந்தும் திருமணம் நடக்காமல் ஏதோ தடை வந்தபடியே இருக்கிறது என்பதில் பெற்றோர்களுக்கு மன வருத்தம். அர்ச்சகர் வரும் வரை அனைவருக்கும் பொழுது போக வேண்டுமே..... தனது மகனின் திருமணம் தடையாகிக் கொண்டிருப்பதைப் பற்றி அங்கே வந்திருந்தவர் பேச ஆரம்பித்தார்.  மகனுக்கு வயது 44 ஆகிவிட்டது என்றார். அவரின் மனைவிக்கும் கவலை தோய்ந்த முகம். 

கவலைப்படாதீர்கள், நல்லதே நடக்கும் என எங்கள் வீட்டுப் பெரியவர்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேரம் வரும்போது எல்லாம் சரியாக நடக்கும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தங்களுக்குத் தெரிந்த ஜாதகப் பரிவர்த்தனை நிலையங்களைப் பற்றியும் சொல்லி முகவரி தந்து அங்கே பேசும்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலும் இந்த மாதிரி மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நான் கவனிப்பது மட்டுமே வழக்கம்.  திருமணம் என்பது அவரவர் சொந்த விஷயம் அதில் நாம் தலையிடுவது சரியில்லை என்பது எனது எண்ணம்.  அவரவருக்கு அவரவர் கவலை.

அப்படியும் இப்படியும் நடக்கும்போது இந்த பேச்சுகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கோவிலில் சுத்தம் செய்து கொண்டிருந்தவரும் தனது சொந்தக் கதையைப் பேச ஆரம்பித்தார்.....

அவருக்கு 48 வயது.  இப்படி சில கோவில்களில் வேலை செய்து மாதம் 5000 வரை சம்பாதிக்கிறாராம். பக்கத்து கிராமத்தில் சொந்த வீடு இருக்கிறதாம்.  தனக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், 45 வயதில் ஏதாவது பெண் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார். அதிக வயது வித்தியாசம் கூடாதாம்....  அவருக்கு இருக்கும் மாத வருமானத்தில் திருமணம் செய்து கொண்டால், வீட்டுச் செலவுகளை எப்படி சமாளிக்க முடியும் என மனதில் தோன்றியது.  ஒருவர் கேட்கவே கேட்டு விட்டார் – வரப் போகும் பெண் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும், ஆண்டவன் வழி காட்டுவார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த இரண்டு விஷயங்களும் கேட்டபோது மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.  இத்தனை வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது அவசியமா? அப்படி திருமணம் செய்து கொண்டு, தப்பித் தவறி குழந்தைகள் பிறந்தால் அவர்களை வளர்ப்பதில் இருக்கும் சிரமங்கள், சரியான மாத வருமானம் இல்லாத நிலையில் அவர்களை எப்படி படிக்க வைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.  கணினித் துறையில் வேலை செய்பவருக்கும் இனி மேல் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனைகள் வரக் கூடும். 

நமது தேசத்தில் முதிர் கன்னிகள் மட்டுமல்ல, பல ஆண்களுக்கும் சரியான வயதில் திருமணம் நடப்பதில்லை.  சரியான வயதில் இருக்கும் போது “மணல் கயிறுபடத்தில் வருவது போல பல கட்டளைகள் போட்டு அதனால் திருமணம் நடக்காமல் போவதும், ஆணோ, பெண்ணோ, திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை சம்பந்தப்பட்ட பல எதிர்பார்ப்புகளோடு இருப்பதால் கல்யாணத்திற்கு அதிகமாகவே நிபந்தனைகள் சொல்கிறார்கள். வரும் எல்லா சம்பந்தங்களும் தடைபட்டுக் கொண்டே இருக்க, காலமும் வேகமாக ஓடிவிடுகிறது.  40 வயதான பிறகு தான், தப்பான கணக்குப் போட்டு விட்டோமோ என்று அவர்களுக்குத் தோன்றுகிறது.

அந்த 48 வயது மனிதர் இனிமேல் திருமணம் செய்து கொண்டு என்ன செய்யப் போகிறார், அவருக்கு திருமணம் அவசியமா? கடைசி காலத்தில் ஒரு துணை வேண்டும் என்பதற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? வாழ்க்கைத் துணையை இழந்த ஒரு பெண்ணுக்கு அவர் வாழ்வு கொடுக்கும் விதமாக திருமணம் புரிந்து கொள்ள முன்வருவாரா என்று பல எண்ணங்கள் அன்று முழுவதும் எனது மனதினை ஆக்கிரமித்தது. எல்லா விஷயங்களுமே நடக்க வேண்டிய தருணத்தில், நடக்க வேண்டிய வயதில் நடந்தால் தான் நல்லது, அந்த வயது தவறி விட்டால் திருமணம் செய்து கொள்வதில் அர்த்தமே இல்லை என்று தோன்றுகிறது.....

மீண்டும் வேறு சில எண்ணங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

32 comments:

 1. என் நட்பிலும், உறவிலும் கூட டிட்டோவாக இதே பிரச்சினைகள் உண்டு. பையன் விரும்பாவிட்டாலும் அவனைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தாயின் விருப்பம்.

  இந்தக் காலத்தில் பெண் கிடைப்பது ரொம்பவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. கவலையாகவும் இருக்கிறது. என் மகன்களுக்குப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. பல இடங்களிலும் இப்படித்தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. 30-35 வயதில் கல்யாணமில்லாமல் பெண்களை வைத்துக்கொண்டும் பலர் இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆண்-பெண் என இரண்டு பேருக்குமே இப்படி பிரச்சனைகள் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 3. இருக்கட்டும்.. அவர்களது வாழ்வும் மலர்ந்திருக்கட்டும்.. இத்தனை வயதுக்குப் பின்னால் திருமணம் என்றாலும் அவர்களுடைய தன்னம்பிக்கை அவர்களை வாழவைக்கும்...

  நல்லபடியாக திருமணம் நிகழட்டும்.. அவர்களுக்காகவும் வேண்டிக் கொள்வோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. வெங்கட் ஜி எங்கள் ஊரில் அவ்வளவாக இது போன்ற பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் உங்கள் கருத்துகள் அனைத்தும் ஏற்கக் கூடியதே.

  கீதா: வெங்கட்ஜி முதலில் ஒரு பெரிய கை குலுக்கல்!! பின்னே? அப்படியே வரிக்கு வரி எனது எண்ணங்களின் பிரதிபலிப்பு!! வார்த்தைகள் கூட...அப்படியே ஜி....

  இப்போதெல்லாம் எங்கள் உறவு வட்டத்திலும் கூட நிறைய ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகள் கிடைப்பது கடினமாகத்தான் இருக்கின்றது. பெண்களுக்கும் கூட என்றும் தோன்றுகின்றது. நிறைய கட்டுப்பாடுகள், கண்டிஷன்கள் போடுவதால், எதிர்ப்பார்ப்புகளால் தடைபடுகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. இதற்கு முக்கிய காரணம் மக்களிடையே இருக்கும் நட்சத்திரப் பொருத்தம் பற்றிய நம்பிக்கையே ஆகும். 30 வயதுக்கு மேல் இந்த பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள் என்று சொன்னாலும் யாரும் கேட்பது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. 30 வயதுக்கு மேல் பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை. நல்ல சிந்தனை. பலருக்கும் இந்த எண்ணம் வந்தால் நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 6. 40 வயதிற்குமேல் திருமணம் என்றால் குழந்தைகள், அதன் வளர்ப்பு, படிப்பு போன்றவற்றில் தாமதம் ஆகும் என்பது சரிதான். ஆனால் திருமணம் இல்லாமல் ஒரு மனிதனின் வாழ்க்கை பூர்த்தி ஆவதில்லை என்பது என் கருத்து. இதுவரை மணம் ஆகாமல் இருப்பது அவர்கள் தவறில்லையே! ஒரு வாய்ப்பு கிடைக்கையில் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. பல இடங்களில் இதே பிரச்சனைதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 7. திருமணம் செய்து கொண்டு இத்தனை வயதுக்கு மேல் என்ன செய்யப் போகிறார்களென்னும் கேள்வி எழுகிறது. எனக்குத் தெரிந்த நண்பரொருவரின் உறவினர் தன் எழுபதாவது வயதில் ஒரு ஆதரவற்ற 55 வயது பள்ளிக் கூட ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார் தேவை ஒரு நல்ல கம்பானியன்ஷிப். வயது காலத்தில் உதவிக்கு ஒரு ஆள், அந்தப் பெண்ணுக்கும் ( மூதாட்டிக்கும் )கணவர் இறந்தாலும் கஷ்டமில்லா ஜீவனம் கிடைக்கும் ஆக மணம் எதற்கு என்னும் புரிதல் அவசியம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. திருமணம் மட்டுமல்ல. எந்நிகழ்வு அந்தந்த வயதில் நிகழ்வதே சரி. இருந்தாலும் தவிர்க்கமுடியாத அல்லது இயலாத நிலைகளில் சிலவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டிய சூழ்நிலையில் பலர் உள்ளார்கள். அவர்களுடைய உணர்வுகளையும் நாம் புரிந்துகொண்டு நடப்பது நல்லது என்பது என் எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. திருமணம் செய்து கொள்ளட்டும் வெங்கட். தனியாக இருப்பது பாவமாக இருக்கிறது. அவரவர் மன நிலையை பதப் படுத்திக்கொண்டு நல்ல பெண் ஏழையாக இருந்தாலும் மணம் செய்யவேண்டும். அதே போல் பெண்களும் ஆரோக்கிய சிந்தனைகளுடன் ஒருவரை மணக்க வேண்டும். நட்சத்திரம் நாள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டால் பாதி பிரச்சினை தீர்ந்தது.
  இங்கே ஒருவர் 50 வயதில் மணம் செய்து பெண்குழந்தையும் பிறந்து ஆரோக்கியமாகவே இருக்கிறது.
  அந்தக் குழந்தைக்கு80,90 வயதில் பாட்டிகள் தாத்தாக்கள் இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 10. ஜம்பு சார் , வல்லிம்மா சொன்னதை வழிமொழிகிறேன் வெங்கட் சகோ. திருமணம் என்பது ஒரு கம்பானியன்ஷிப்புக்காவும், பரஸ்பரம் பார்த்துக் கொள்வதற்காகவும்தான் இருக்கும். சிலருக்குக் குழந்தைகள் பிறக்கலாம்.அந்தக் காலத்தில் ஐம்பதிலும் பெற்றுக் கொண்டு ஹெல்தியாக வளர்த்திருக்கிறார்களே. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 11. #அவரவருக்கு அவரவர் கவலை.#
  என்று முதலில் நீங்களே கூறி இருக்கிறீர்களே ,முதிர் கண்ணன்களுக்கும் இது பொருந்தும் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 12. பதிவு பலரை நினைவுபடுத்தியது. நிலை புரிந்து இறங்கி வருவதற்குள் ஆண்டுகள் ஓடிவிடுகின்றனவே !

  தனிமையும் பெரிய பிரச்சினைதான், வயது போனால் என்ன, ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுவும் சந்தோஷமே !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி...

   Delete
 13. கல்யாணமே தேவையில்லைன்னு எனக்கு தோணுது.அதுவும் இந்த வயசுல தேவையற்ற பாரம். இதை நாம்ப சொன்னா ஒதைக்க வருவாங்க சார். போன மாசம் 80 வயசு பாட்டி குழந்தை வேற பெத்திருக்கு. காலக் கொடுமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சித்ரா.....

   Delete
 14. இனிமேல் வாழ்ந்து என்ன பயன் என்று தற்கொலை செய்து செய்து கொள்பவனுக்கும், 48 வயதுக்கு மேல் கல்யாணம் எதற்கு என்று கேட்பவனுக்கும் என்ன வித்தியாசம் ? முட்டாள்தனமான சட்டங்களை தனக்குத்தானே வகுத்துக்கொண்டு கிணற்றுத்தவளை போல் வாழும் மனிதர்களுக்கு மட்டுமே இப்படி நடக்கும் ! வாழ்க்கை என்பது வாழ்வதற்கே ! அதன் அர்த்தம் புரியாதவர்களுக்கு மானிட வாழ்க்கையின் பயன் கிடைக்காது !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பெயர் சொல்ல விரும்பாத நண்பரே......

   Delete
 15. பருவத்தே பயிர் செய்! உண்மைதான். ஆனால் இப்போது அப்படி முடிகிறதா! எத்தனை தடங்கல்கள்! தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துக்கு ஆமேன்! ஆமேன்!

  (

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 16. எல்லா வீடுகளிலும் இதைப்போலத் திருமணம் ஆகாத முதிர் கன்னியர், முதிர் இளைஞர்கள் பெருகி வருகிறார்கள். எங்கள் வீட்டிலும் இப்படி உண்டு. மிகப்பெரிய பிரச்னை தான் இது.
  இன்றைய இளம்பெண்கள் தங்களுக்கு வருபவன் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறார்கள் - என் உறவினரின் பெண் சொல்வது: எனக்கென்று ஒரு வீடு, ஒரு கார் வாங்கிய பின்தான் கல்யாணம் - இது எப்படி இருக்கு?

  ReplyDelete
  Replies
  1. பல வீடுகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கும்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....