வெள்ளி, 3 ஜூன், 2016

ஃப்ரூட் சாலட் – 165 – மக்களும் அரசாங்கமும் - Bபல்லே Bபல்லே - சிறை

நள்ளிரவு ரயில் குழப்பங்கள்:

செம்மொழி விரைவு வண்டி – கோவையிலிருந்து மன்னார்குடி வரை செல்லும் ரயில் – இரவு 12.15 மணிக்கு கோவையிலிருந்து புறப்படுகிறது. இந்த நேரம் முன்பதிவு செய்யும் பலருக்கும் குழப்பத்தையும் தேவையில்லாத அவஸ்தைகளையும் தருகிறது.  கோவையிலிருந்து திருச்சி பயணிக்கும் போது ஓர் இரவு பார்த்த காட்சி – ஒரு கூட்டுக் குடும்பம் – 7 பேர் கொண்டது. தத்கால் மூலம் ஏழு பேருக்கும் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

கைகளில் பயணச்சீட்டை வைத்துக் கொண்டு பேர் பட்டியலில் பார்த்தால் அவர்கள் யாருடைய பெயரும் இல்லை.  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வேறு யாருடைய பெயரோ இருக்கிறது.  மீண்டும் மீண்டும் சரிபார்த்து மேலே இருக்கும் தேதியைப் பார்த்தால் வித்தியாசம்.  தத்கால் டிக்கெட் ஒன்றின் கட்டணம் 315 ரூபாய்....  7 பேருக்கும் சேர்த்து ரூபாய் 2205/- நஷ்டம். 

இத்தனைக்கும் கோவையிலிருந்து தான் புறப்படுகிறது.  திருச்சியிலிருந்து வரும் வண்டி காலையிலேயே கோவைக்கு வந்து விடுகிறது என்பதால் அன்றைய இரவு 12.15க்கு புறப்படுவதற்கு பதிலாக கொஞ்சம் முன்னே நேரத்தை மாற்றினால் இந்தக் குழப்பங்களைத் தவிர்க்கலாம். வேறிடத்திலிருந்து வரும் ரயில் என்றால் இந்த மாற்றம் செய்யவியலாது. அங்கிருந்தே புறப்படுகிறது என்பதால் இந்த மாற்றம் செய்வதில் ரயில்வேக்கு எந்த சிரமமும் இல்லை.

பல சமயங்களில் இந்த மாதிரி குழப்பங்களைக் கண்டதுண்டு. பண விரயம் மட்டுமல்லாது எத்தனை குழப்பங்கள். தவிர்க்க முடியும் குழப்பங்களையும் பணவிரயத்தினையும் ஒரு சிறிய மாற்றம் உருவாக்க முடியும் எனும்போது அரசு நிச்சயம் இந்த மாற்றத்தினைச் செய்ய வேண்டும்....

நீங்க என்ன நினைக்கறீங்க! சொல்லுங்களேன்...

யதார்த்தம்:

முன்பெல்லாம், சைக்கிள், பேனா ஆகியவை பழசானால், அப்பா அவற்றை மகனுக்குத் தருவார்..... இப்போ.... பழசா போன செல்ஃபோன பையன் அப்பாவுக்கு தருகிறார்!

மக்களும் அரசாங்கமும்:

சிறப்பானதோர் கார்ட்டூன்....  பாருங்களேன்




படமும் கவிதையும் – படம்-3, கவிதை-2

படமும் கவிதையும் தலைப்பில் பதிவுகள் வந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.  அந்த வரிசையில் மூன்றாம் படத்திற்கு வந்த இரண்டாவது கவிதை இங்கே....  கவிதை எழுதியவர் எங்கள் பிளாக் வலைப்பூவில் எழுதும் ஸ்ரீராம் அவர்கள்.  அவர் எழுதிய கவிதை இதோ...



சிறை

பின்னால் இருக்கிறது
இன்னும் நாட்கள்
அடைபட்டுக் கிடக்க..

கல்விச்சிறை,
பண்பாட்டுச் சிறை
காதல் சிறை, கல்யாணச் சிறை
எனும் வாழ்க்கைச் சிறை!

இப்போது வெளியில் வந்து
விளையாடு மகளே.

ஸ்ரீராம்

மகளின் ஓவியம்:

சமீபத்தில் மகள் வரைந்த ஓவியம்...  பஞ்சாபி பிள்ளையார் – டோல் வாசிக்கிறார்!  Bபல்லே Bபல்லே என ஆட வேண்டியது தான்!



ராஜா காது கழுதை காது..... 

திருவரங்கம் ராஜா மெடிக்கல்ஸ் – தூதுவளை மிட்டாய் வாங்கிக் கொண்டிருந்த போது – ராஜா மெடிக்கல்ஸ் வாசலில் ராஜா காது!

வீட்டுல எந்நேரமும் டி.வி ஓடுதுங்க.... பசங்க கார்ட்டூன் பார்க்கறாங்க, இல்லைன்னா மனைவியும் அம்மாவும் சீரியல் பார்க்கறாங்க.... நம்ம கையில ரிமோட் வரதே இல்லை...  தப்பித் தவறி எப்பவாது ரிமோட் கையில் கிடைச்சால் நியூஸ் பார்க்கலாம்னு போட்டா, நாலு பேரு சுத்தி உட்கார்ந்துக்கிட்டு வம்படிச்சுட்டு இருக்காங்க... நியூஸ் சேனல்ல நாட்டு நடப்பு பத்தி சொல்லாம என்னாத்துக்கு இந்த வம்பு! அதுவும் என்னமோ குழாயடிச் சண்டை மாதிரி பேசிக்கறாங்க! என்னவோ போங்க! 

படித்ததில் பிடித்தது:

பல சமயங்களில் தேவையில்லாத விஷயத்திற்கு கோபம் வந்து பல சந்தோஷ தருணங்களை இழந்து விடுகிறோம். அதைச் சொல்லும் கவிதை ஒன்று படித்தேன்.  படித்ததில் பிடித்ததாக யாரோ எழுதிய கவிதை ஒன்று இங்கே....

கோபம்

உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய
எச்சரிக்கையின் இறுக்கங்களை
நம் முகங்களில் படரவிட்டு
ஒருவரையொருவர் நம்பாமலேயே
ஒரு நீண்ட பயணம் முடித்து
விரோதத்திற்கும் நட்பிற்கும் இடையே
நாம் விலகிநின்று
பரஸ்பரம் சிரித்துக் கொள்கையில்
கூடவே நம்மைப் பார்த்து
கைதட்டி சிரித்துப் போகும்
நாம் நழுவவிட்ட காலங்களும்!

-யாரோ-

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.....

20 கருத்துகள்:

  1. நள்ளிரவு ரயில் குழப்பங்கள்..இதிலென்ன குழப்பம் ? புரியவில்லையே ஒரே குழப்பமா இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலும் குழப்பமா? :) இன்றைக்கு 3 ஜூன். இன்று இரவு 12.15 புறப்படும் ரயில் எனில் 4 ஜூன் ரயிலுக்கு முன்பதிவு செய்ய வேண்டும். 3 ஜுன் பதிவு செய்திருந்தால் இன்று அதிகாலை 12.15க்கு சென்றிருக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  2. 12.15 என்பது தேதிக்குழப்பத்தை உண்டாக்கிவிடக்கூடும்தான்! கண்டிப்பாக நேரம் மாற்றம் செய்யலாம். கார்டூன், கவிதை எல்லாம் வெகு ஜோர். நீங்கள் எனக்கு அனுப்பிய புகைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். இன்னும் கவிதை உதிக்கவில்லை! தோன்றியவுடன் அனுப்புகிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது எழுதி அனுப்புங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  3. ஒரு முறை எனக்குத் தெரிந்த ஒருவர் கத்தார் போக விமான டிக்கெட் எடுத்துருந்தார் அவரும் இதே போல் தேதி மாறி இழந்தார் பயணப் பணம் ஸ்ரீ ராமின் கவிதையை மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  4. இந்த வார பழக்கலவை வழக்கம்போல் இனித்தது. தங்களின் புகைப்படத்திற்கு திரு ஸ்ரீராம் அவர்கள் வேறுபட்ட கோணத்தில் சிந்தித்து கவிதை படைத்திருக்கிறார்.அவருக்கு என் வாழ்த்துக்கள்! தங்கள் மகள் வரைந்த பஞ்சாபி பிள்ளையார் ஓவியம் அருமை. அவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. கலவை வித்தியாசமாய்..
    மகளின் ஒவியம் அழகு..
    கவிதைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ரயில் பயணம் பதிவு ஆம் இந்தக் குழப்பம் முதலில் இருந்தது. இப்போது இல்லை அதுவும் ஒரு முறை இதே போன்று ரயில் செம்மொழியோ என்று நினைவு ஒரு முறை இதில் பதிவு செய்த போது 12.01 என்று இருந்தது குழப்பத்தை விளைவித்தது. இப்படிப் பார்த்துக் கொண்டிருந்த போது நடு இரவு 12 மணிக்கு நிலையம் வரும் ரயில்களில் பதிவு எப்படிச் செய்வது என்ற குழப்பம். 12க்குப் பின்னால் ஒரு நிமிடம் என்றால் கூட அடுத்த நாள் தேதி என்பது புரிகிறது. அதே பொல் 12 மணிக்கு ஒரு நிமிடம் முன்பு என்றாலும் முதல் நாள் தேதி. 12 என்றும் இருக்கிறது சில ரயில்கள் இடைப்பட்ட ரயில் நிலையங்கள். இந்தக் குழப்பம் இப்போதும் மனதில் உள்ளது. கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ரயில்வே இதைக் கவனிக்க வேண்டும்தான்.

    யதார்த்தமும், கார்ட்டூனும் யதார்த்தம்!!!

    ஸ்ரீராமின் கவிதை வாவ்! மிகவும் ரசித்தோம்!!!!!! (கீதா. என் மனதிலும் இந்த பெண் குழந்தை - சிறை என்ற எண்ணத்தில் தோன்றியது ஆனால் சரிவர எழுத இயலவில்லை. ஸ்ரீராம் அருமையாக எழுதியிருக்கிறார்....!!)

    ராகாககா ஹஹஹ

    பபி அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. கவிதையை ரசித்திருப்பதாகச் சொல்லியிருக்கும் ஜி எம் பி ஸார், வே. நடனசபாபதி ஸார் ஆகியோருக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை எழுதி அனுப்பிய உங்களுக்கும் நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
  9. ரயில்வேயின் 24 மணி நேரக் கணக்கிற்கு கொஞ்சம் பேர் இன்னும் பழகவில்லைதான்.

    //இப்போ.... பழசா போன செல்ஃபோன பையன் அப்பாவுக்கு தருகிறார்!// பையன் மட்டுமா! பொண்ணும்தான்! இப்படிக்கு பாதிக்கப்பட்ட அப்பா!


    ஸ்ரீராம் அவர்களின் கவிதை அருமை!

    அட! பிள்ளையார் எப்போ பஞ்சாப் வந்தாரு! நல்லாயிருக்கே!

    யாரோ எழுதிய கவிதை, எல்லோருக்கும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....