எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, June 14, 2016

Amazon – Blue Dart அட்டூழியங்கள்.....பொதுவாகவே இணையம் மூலம் பொருட்கள் வாங்குவதில்லை என்றாலும் சில சமயங்களில் வாங்க வேண்டிய/பொருட்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது.  எனது மகள் தான் செய்யும் கைவினைப் பொருட்களுக்கான மூலப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் ஆகியவற்றை இணையத்தில் பார்த்து எனக்குச் சொல்ல அவற்றை இணையத்தின் மூலம் தேர்ந்தெடுத்து மகளுக்கு நேரடியாக கிடைக்கும்படிச் செய்வது வழக்கம்.

சில சமயங்களில் பூக்கள், பொருட்கள் ஆகியவற்றை பரிசாக அனுப்ப வேண்டிய தருணங்களில் இணையத்தில் குறிப்பாக Amazon, Flipkart போன்ற தளங்களைப் பயன்படுத்துவேன்.  சமீபத்தில் அப்படி ஒரு பொருளை அனுப்ப வேண்டியிருந்தது. Amazon தளத்தில் தேவையான பொருள் இருக்கவே அதைத் தேர்ந்தெடுத்து தமிழகத்தில் இருக்கும் முகவரிக்கு அனுப்ப தில்லியிலிருந்தபடியே அதற்கான கட்டணத்தினையும் கட்டி இருந்தேன். 

Amazon தளத்திலிருந்து உங்கள் விருப்பம் ஏற்கப்பட்டது, விற்பனையாளருக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டது, பெட்டியில் வைத்து கட்டப்பட்டது, அனுப்புவதற்காக Blue Dart நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது என வரிசையாக மின்னஞ்சல் மூலம் தகவல் வந்தபடியே இருந்தது. இதெல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. சரி குறிப்பிட்ட நாளுக்குள் தேவையான பொருள் உரிய நபரிடம் போய்ச் சேர்ந்துவிடும் என்று நானும் என் மற்ற வேலைகளில் மூழ்கி இருந்தேன்.

மூன்று நான்கு நாட்கள் கழித்து சேமிப்பில் இல்லாத எண்ணிலிருந்து அலைபேசியில் எனக்கு அழைப்பு.  Blue Dart – லிருந்து பேசுகிறேன், நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளை எந்த முகவரியில் கொடுக்க வேண்டும் எனக் கேட்க, முகவரி தான் கொடுத்திருக்கிறதே என்று சொன்னேன்.  வழி சொல்லுங்கள் என்று சொல்ல, நானும் வழியைச் சொன்னேன்.  முழுவதும் கேட்ட பிறகு அங்கே நாங்கள் கொடுக்க முடியாது, எங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட இடம் அது என்று சொல்லி, நீங்கள் எங்கள் அலுவலத்திலோ அல்லது நாங்கள் வரும் ஏதாவது ஒரு இடத்திற்கோ வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். நானோ தில்லியில், பொருள் சேர வேண்டியது தமிழகத்தில்.....  யாருக்கு அனுப்புகிறேனோ, அவரையே போய் வாங்கிக் கொள் எனச் சொல்வது முடியாத காரியம்.

வீட்டிலேயே பொருட்களை நேரடியாக கொண்டு தரும் வசதி இருப்பதால் தானே இணையத்தின் மூலம் பொருளை வாங்குகிறோம், வீட்டில் வந்து தராமல் வேறு எங்கோ வந்து வாங்கிக் கொள்ளச் சொல்வது என்ன விதத்தில் நியாயம் என்று கேட்க, மீண்டும் மீண்டும் ஒரே பதில் – “எங்கள் எல்லைக்கு அப்பால் நாங்கள் வர மாட்டோம், உங்களுக்கு வேண்டாமெனில் நாங்கள் திருப்பி அனுப்பி விடுவோம்என்று திமிராக பதில் வந்தது.  Amazon தளத்தில் உள்ள அவர்களது Call Center-தொடர்பு கொள்ள, உங்கள் வீட்டிலேயே கொடுப்பது தான் முறை, நாங்கள் Blue Dart Courier-ஐ தொடர்பு கொள்கிறோம் எனச் சொன்னார்கள்.

அடுத்த நாளும் அந்த Blue Dart Courier ஆளிடமிருந்து அழைப்பு – நீங்கள் வந்து வாங்கிக் கொள்கிறீர்களா? அல்லது திருப்பி அனுப்பவா?எனக் கேட்க, நானும் கோபத்தோடு, “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாது என்னை வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னால் வரமாட்டேன், நான் Amazon தளத்தில் தொடர்பு கொண்டதையும் சொல்லி அவர்கள் வீட்டில் கொடுக்க வேண்டும் என்று சொன்னதையும் சொல்ல, “கொடுக்க முடியாதுங்க! நாங்க திருப்பி அனுப்பி விடுகிறோம்என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.

அதன் பிறகு எனக்கு Amazon தளத்திலிருந்து மின்னஞ்சல் – “நீங்கள் பொருளை வாங்கிக் கொள்ள மறுத்ததால், நீங்கள் கேட்ட பொருள் விற்பனையாளருக்கே திருப்பி அனுப்பப் படுகிறது.  நீங்கள் கொடுத்த பணம் உங்களுடைய கணக்கிற்கு விரைவில் அனுப்பப்படும்”.  இதைப் பார்த்த நான் மீண்டும் Amazon தளத்தில் உள்ள அவர்களது Call Center-தொடர்பு கொண்டு, Blue Dart Courier ஊழியர், இப்படி பேசியதைச் சொல்லி, வீட்டில் கொண்டு தந்தால் மட்டுமே வாங்கிக் கொள்வேன் என்ற காரணத்தினைச் சொல்லாமல் நான் வாங்கிக் கொள்ள மறுத்ததாக எழுதி இருப்பது தவறு எனச் சொல்ல, அவர்கள் Blue Dart Courier மூலம் அனுப்பப்படும் பொருட்களில் அடிக்கடி இப்படி பிரச்சனைகள் வருகிறது. இதை மேலதிகாரிகளிடம் எடுத்துச் செல்கிறோம், உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு வருந்துகிறோம் என்று ரெக்கார்டட் வாய்ஸ் போல பதில் சொல்கிறார்!

இப்படி Blue Dart Courier மூலம் அனுப்புவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தும் ஏன் அவர்கள் மூலம் அனுப்ப வேண்டும், வாடிக்கையாளர்களை ஏன் இக்கட்டான சூழலில் விட வேண்டும் என்பதை எல்லாம் Amazon தளத்தில் கேட்டிருந்தேன்.  மீண்டும் மீண்டும் ஒரே பதில் – உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு வருந்துகிறோம், இனிமேல் இப்படி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம், தொடர்ந்து எங்கள் மூலம் பொருட்களை வாங்குங்கள் என்று பதில் வருகிறதே தவிர Blue Dart Courier மூலம் இனிமேல் பொருட்களை அனுப்ப மாட்டோம் என்ற முடிவினை எடுக்கத் தயங்குகிறது Amazon நிறுவனம். 

பொதுவாகவே நமது பக்கத்தில் இருக்கும் கடைகளில் வாங்குவதே வழக்கம் என்றாலும், பொருட்களை அனுப்ப வேண்டிய சமயத்தில் இந்த மாதிரி தளங்களை உபயோகிக்க வேண்டியிருக்கிறது. இனிமேல் நிச்சயம் Amazon தளத்தினை பயன்படுத்தக் கூடாது என்ற முடிவினை அப்போதே எடுத்து விட்டேன்.  அப்படியே தவிர்க்க முடியாத காரணங்களினால் பயன்படுத்தினாலும் COD – அதாவது Cash On Delivery முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். தளத்தினை பயன்படுத்தும் எனது நண்பர்களிடம் இந்த நிகழ்வுகளைச் சொல்ல, தங்களுக்கும் சில சமயங்களில் பிரச்சனைகள் இருந்திருக்கிறது என்றும், இனிமேல் அவர்களும் பயன்படுத்தப் போவதில்லை என்ற முடிவினை எடுத்திருக்கிறார்கள்.

இது போன்ற தளங்களை பயன்படுத்தும் போது நீங்களும் முன்னெச்சரிக்கையோடு இருங்கள்....

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


40 comments:

 1. இது அதிகம் பகிரப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய பதிவு. ஒரு எல்லைக்கு மேல் அவர்களுக்கு அலட்சியம் வந்து விடுகிறது! அதிகம் லாபம் பார்ப்பதன் விளைவு. இந்த "உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு வருந்துகிறோம்" அனுபவம் போல எனக்கும் ஒரு அனுபவம் உண்டு. உங்களுக்கு இதையாவது சொன்னார்களே..!!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. உண்மை சில கொரியர் நிறுவனங்கள் இதே வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 3. இதுபோன்ற அனுபவம்எனக்கும் உண்டு ஐயா
  ஒரு முறை இதே அமேசனில் ஒரு பொருளை வாங்கினேன்
  தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள்
  பொருளும் தஞ்சை புளூ டார்ட் வந்தடைந்து விட்டது
  ஆனாலும் பல நாட்கள் அலைபேசிக்குகுறுஞ்செய்தி மட்டுமே வந்தது
  தங்களது வேண்டுகோளுக்கு இணங்க, டெலிவரி தள்ளிவைக்கப்பட்டுள்ளது
  நான் எங்கே கேட்டேன்
  அலைபேசியில் தொடர்பு கொண்டால்
  இன்று வரும் என்றார்கள்
  ஆனால் மீண்டும் குறுஞ்செய்திதான் வந்தது
  அமேசான் கால் செண்டரைத் தொடர்புகொண்டு
  புகார் செய்தேன்
  அடுத்த நாள் பொருள் வீடு தேடி வந்தது
  பிறகுதான் உண்மை புரிந்தது
  புளூ டார்ட் ல் பணியாற்ற போதுமான ஆட்கள் இல்லை
  விடுமுறை நாட்களில் கல்லலூரி மாணவர்களைக் கொண்டே பொருட்களை
  டெலிவரி செய்கிறார்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவமும் கசப்பானதாகவே அமைந்திருக்கிறது. அவர்களாகவே இப்படி ஒரு பொய்யான நிலையைச் சொல்கிறார்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. ஒப்பந்தம் முடியும் வரை வைத்திருப்பார்கள். இணைய சந்தையில் எனக்கும் ஐயம் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. அப்படித் தோன்றவில்லை. இரண்டு நிறுவனங்களும் ஒரே குழுமத்தைச் சேர்ந்ததோ எனும் ஐயம் எனக்குண்டு......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 5. புளூ டார்ட் அனுபவம் அறிந்தேன். நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். அவர்களுடைய வியாபார பிணைப்பை நம்மால் பிரிக்கமுடியாது. அமேசானைத் தவிர்ப்பது நலம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. முடிந்த அளவு, நகரை விட்டு வெளியில் பொருட்களைப் பெற வேண்டிய முகவரி இருந்தால், பொருளைப் பெற்றுக்கொண்டு பணம் தரும் முறையை பயன்படுத்தினால், நிச்சயம் குறித்த நேரத்தில் வந்து சேரும். நமக்கும் தேவையில்லாத மன உளைச்சல் இல்லை. அவசியம் அந்த பொருள் தேவையாயிருந்தால், நகரிலுள்ள நமக்கு வேண்டிய முகவரியைத் தந்து, அவர்களிடம் இருந்து நாம் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். வளைந்து கொடுத்தால், மன உளைச்சல் மிச்சம்.

  ReplyDelete
  Replies
  1. ஊருக்கு வெளியே கொடுக்க மாட்டோம் என்பதை முன்னரே சொல்லி இருக்கலாம். இத்தனைக்கும் அந்த முகவரி ஊருக்கு வெளியே இல்லை. ஊருக்குள் தான் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவக்குமரன்.

   Delete
 7. நான் பெரும்பாலும் இணைய சந்தையையே பயன்படுத்துபவள். உங்கள் பதிவு எனக்கு ஒரு எச்சரிக்கை.ஆனால் மன உளைச்சலை தவிர்ப்பதற்காக COD முறையே பயன் படுத்துகிறேன். பரிசுப் பொருள் அனுப்பும் போது மட்டுமே முதலிலேயே பணம் கட்டி விடுவது வழக்கம்.
  உங்கள் அனுபவத்தை எச்சரிக்கைக்காக பதிவிட்டமைக்கு நன்றி வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. COD முறை தான் நல்லது எனத் தோன்றுகிறது - பணம் வாங்கிக் கொள்ள வந்து தானே ஆக வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 8. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன்

  எனும் வள்ளுவனின் வாக்கு
  என்றும் சத்த்தியம்.

  புதிய வசதிகள் வருகின்றன. அவை என்ன என்று உள்ளே நுழையும்போது தான் புதிய எதிர்பாரா உபத்திரவங்களும் வருகின்றன.

  நாட் ஒன்லி இஸ் கோல்ட் பட்
  ஓல்ட் மெதட்ஸ் ஆல்சோ குட்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. old methods are also good! I agree.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

   Delete
 9. இந்தியாவில் பல பெரிய நிறுவனங்களும் இப்படித்தான் பொறுப்பற்ற நிலையில் நடக்கின்றன. இதற்கு அந்த நிறுவனத்தை குறை சொல்லுவதை விட அந்த நிறுவனத்தில் பொறுப்பற்ற முறையில் வேலை செய்யும் தொழிலாளியைத்தான் குறை சொல்ல வேண்டும் பலரிடமும் ஒழுக்கமின்மை இருப்பதைதான் நான் பார்க்கிறேன்

  இதை இப்படியே விட்டுவிடாமல் ஆன்லைனில் தேடினால் அந்த கம்பெனியில் வேலை பாரக்கும் உயர் அதிகாரிகளின் விபரத்தை தெரிந்து கொண்டு அவர்களிடமும் முறையிடலாம்

  மேலும் இந்த பதிவை ஷேர் செய்ய அனுமதி கொடுத்து பலரையும் ஷேர் செய்ய வேண்டுகோள் விடுவியுங்கள் உங்களின் அனுமதிகிடைத்தால் நானும் இதை வெளியிடுகிறேன் அது போல பல பதிவர்களையும் செய்ய சொல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   உங்கள் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஊழியர்கள் பொறுப்பின்றி நடப்பது பல இடங்களிலும் பரவி இருக்கிறது.

   Delete
 10. அமேசானில் ஒரு முறை T-shirt ஒன்று COD ல் order செய்திருந்தேன் தீபாவளி சமயத்தில். ஒரு நாள் amazonல் இருந்து எனது order புதுக்கோட்டை வந்துவிட்டதாக. ஆனால் அன்றைய தினம் delivery செய்யப்படவில்லை. அன்று சனிக்கிழமை என்பதால் நானும் விட்டுவிட்டேன். திங்கள்கிழமை காலை address refused என்று msg வந்ததும் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு அந்த கூரியர் ஆபீஸ் போய் கேட்டால், என்னை தொலைபேசியில் அழைத்ததாகவும் நான் எடுக்கவில்லை என்பதால் திருப்பி அனுப்பி விட்டதாக என்னிடமே கூறினர். வசைமாறி பொழிந்து விட்டு amazonல் தொடர்பு கொண்டால் ஒரு முறை refuse செய்த பொருளை return செய்ய இயலாது என கூறிவிட்டனர். என் அனுபவத்தில் flipkart விட தரமான பொருட்களை விற்பனை செய்வதில் amazon முன்னோடி. ஆனால் இந்த மாதிரி விசயங்களில் தங்கள் நற்பெயரை இழக்கின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. அடடா உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கிறதா? அமேசான் நிறுவனம் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

   Delete
 11. புளூ டார்ட்....பிளாக் டாட்...
  அவர்கள் நம்மை பார்ப்பதே அற்பனைப்பார்ப்பது போல் இருக்கும்..உங்களுக்கு நல்ல மொழியறிவு இருக்கு ஏதோ பேசி வருத்தப்படவாச்சும் வச்சீங்க...
  எனக்கெல்லாம் அது யாரோ கண்ட எதோ கனவு மாதிரி....
  ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. பிளாக் டாட்! அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்....

   Delete
 12. நல்ல எச்சரிக்கை பதிவு சகோ. என் கணவர் தான் இணையத்தின் மூலம் வாங்க பயன்படுத்துவார். அவரிடம் சொல்லி வைக்கிறேன் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 13. இந்த தடவை எனக்கும் இதனால் கொஞ்சம் சங்கடம் தான்,மகளுக்கு தேவையான பொருட்கள் சில ஆர்டர் செய்தேன், போஸ்ட்டுக்கும் சேர்த்து கிரெடிட்டில் காசு கட்டினேன், ஆறு விதமான பொருட்கள். சூ,சட்டை,முடி என மொத்தமே மூன்று கிலோவுக்குள் வரும், அதையே ஒவ்வொரு குட்டி பார்சலாக்கி ஆறு தடவை கூரியர் செய்து அதனால் நாங்கள் எக்ஸ்ராவாக போஸ்ட் வரி கட்டும் படி ஆகின்றது.விலை குறைவென ஆன்லைனில் ஆர்டர் செய்தால் எக்ஸ்ரா வரி அதை விட அதிகமாய் வருகின்றது. ஆன்லைனில் ஷாப்பிங்க செய்ய நிரம்ப யோசிக்க வேண்டும் எனினும் வித்தியாசமான பொருட்கள் எங்கோ தூரத்தில் கிடைப்பதை காணும் போது மனம் அலைபாயத்தான் செய்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 14. பயனுள்ள பதிவு இயன்றவரை இவைகளை தவிர்ப்பதே நலம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 15. நானும் பெரும்பாலும் இபே, அமேசான், ஸ்னாப்டீல் ஆகியவற்றில் வாங்இயிருக்கிறேன். சில கொரியர் நிறுவனங்கள் நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னாலும் நான் வீட்டில் டெலிவரி செய்யுங்கள் என்று சொல்லிவிடுவேன். இதில் இபே சிறந்த சர்வீஸ். மற்றபடி பணத்தை இழந்ததில்லை, பொருளையும் தான்...
  விஜயன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete
 16. முன்னெச்சரிக்கையான தகவல்கள்..
  பதிவின் விவரங்கள் அனைவருக்கும் பயன்படும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 17. நான் இணைய சேவையைப் பயன் படுத்துவதில்லை. எதையும் நேரில் வாங்கும் முறைதான் சிறந்தது blue dart courier கட்டணமும் மிக அதிகம் ஒரு விழிப்புண்ர்ச்சிப் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete

 18. இந்த மின்வணிக நிறுவனங்கள் பற்றி முன்பே நானும் பதிவிட்டிருக்கிறேன். கூடியவரை இவர்களிடம் எதையும் வாங்காதிருப்பதே நல்லது. இல்லாவிடில் நீங்கள் சொன்னதுபோல் பொருளைத் தரும்போது காசைக் கொடுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 19. எனக்கும் இரண்டு தடவை இப்படி ஆகி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 20. நல்ல எச்சரிக்கைப் பதிவு. பகிர்கின்றோம் ஜி!

  கீதா: தனது புத்தகங்கள் போன்றவற்றை ஃப்ளிப்கார்டில் தான் வாங்குகிறான். அதுவும் காஷ் ஆன் டெலிவரிதான் எப்போதும்.எனவே அமேசான் பற்றி அனுபவம் இல்லை. ஃப்ளிப்கார்ட்டில் இது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. டோர் டெலிவரி வரை. உங்கள் பதிவு நல்ல விழிப்புணர்வுப் பதிவு. ப்ளூடார்ட் செம காஸ்ட்லி. உங்கள் அனுபவம் மூலம்தான் தெரிய வருகிறது இப்படியும் அவர்கள் செய்கிறார்கள் என்று. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஊழியர்கள் அதாவது டெலிவரி பாய் அவர்கள்தான் இப்படிச் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. எனவே ப்ளூடார்ட் மேலிடத்தில் புகார் செய்தால் பலன் இருக்குமோ? ஆனால் அதையும் நம்ப முடியாதுதான்..

  எனக்கு இப்படிப் ப்ரொஃபஷனல் கூரியரில் நடந்துள்ளது. இத்தனைக்கும் வீடு அருகில் இருக்கிறது அவர்கள் டெலிவரி ஆஃபீஸ். 7 நிமிட வண்டிப் பயணம். நடந்தால் 20/25 நிமிடமே. இருப்பதும் நகருக்குள்தான். ஆனாலும் வீட்டிற்குக் கொண்டுவந்து தர மறுத்து நான் சென்று வாங்கிய அனுபவமும் உண்டு.

  நல்ல பதிவு ஜி

  ReplyDelete
  Replies
  1. COD -ல் வாங்குவது தான் சிறந்தது எனத் தோன்றுகிறது. நேற்று PAYTM மூலம் அலைபேசி ஒருவர் வாங்க, அவருக்கு செங்கல் வந்ததாய் ஃபேஸ்புக்கில் பார்த்தேன்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....