எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 17, 2016

மணிப்பூர் – பழமையும் பெருமையும்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 10

படம்: அருங்காட்சியகம் - நுழைவாயில்....

சென்ற பகுதியில் தியாகிகள் ஸ்தூபி பற்றிய தகவல்களும் அங்கே கிடைத்த அனுபவங்களையும் பற்றிப் பார்த்தோம்.  அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் மணிப்பூர் மாநிலத்தின் பழமையையும் பெருமையையும் பறை சாற்றும் ஒரு இடம்! எந்த ஒரு ஊருக்கும், நாட்டிற்கும் இருந்த நாகரிகம், பெருமை ஆகியவற்றை அடுத்த தலைமுறைகள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் அவை காட்சிப்படுத்தப்பட வேண்டும்....  அப்படி மணிப்பூர் பழங்குடி மக்களின் நாகரிகத்தினை, அவர்கள் பயன்படுத்திய உடைகள், பொருட்கள், ஆபரணங்கள் என பலவற்றையும் பாதுகாத்து வைத்திருக்கும் இடம் தான் அது.

இம்ஃபால் நகரின் பிரபலமான போலோ விளையாட்டு மைதானத்தின் அருகே அமைந்திருக்கும் மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்திற்கு தான் நாங்கள் சென்றோம்.  இந்த அருங்காட்சியகத்திற்கு உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் உண்டு – எல்லா அருங்காட்சியகங்கள் போலவே, இங்கேயும் இந்தியர்களுக்குக் குறைவான கட்டணமும், வெளிநாட்டவர்களுக்கு அதிக கட்டணமும் வசூலிக்கிறார்கள். புகைப்படக் கருவிகளுக்கும் கட்டணம் உண்டு. உரிய கட்டணத்தினைக் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே நுழைகிறோம்.....  இன்னும் ஒரு விஷயம் – இந்தியாவின் மற்ற அருங்காட்சியகங்கள் போலவே இங்கேயும் திங்கள் அன்று விடுமுறை.

ஒரு அழகிய கட்டிடத்தில் 23 செப்டம்பர் 1969-ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 7 தனித்தனி பிரிவுகள் இருக்கிறது – மனிதவியல், தொல்பொருளியல், இயற்கை வரலாறு, ஓவியம், குழந்தைகளுக்கான பிரிவு, திறந்தவெளி அரங்கு போன்ற பிரிவுகள் உண்டு.  ஹியங் ஹிரென் என அழைக்கப்படும்  78 அடி நீள மணிப்பூர் ராஜாக்கள் பயன்படுத்திய படகு ஒன்று திறந்தவெளி அரங்கில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

மணிப்பூரை ஆண்ட மஹாராஜாக்களின் ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், போர் சமயத்திலும் மற்ற நேரங்களிலும் அவர்கள் உடுத்திய உடைகள், அணிகலன்கள் என அனைத்தும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ராஜாக்கள் மட்டுமல்லாது மணிப்பூர் பழங்குடி மக்களின் உடைகள், அணிந்து கொண்ட பாரம்பரிய நகைகள், புகைபிடிக்க பயன்படுத்திய குழாய்கள், மிருக வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், விவசாயத்திற்கு பயன்படுத்திய கருவிகள், வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்திய பொருட்கள் என பலவற்றையும் இங்கே பார்க்க முடியும்.

பள்ளி மாணவர்களுக்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.  அது போலவே நம் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இங்கே அழைத்து வரப்பட்டு அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும், பிரத்தியேக வகுப்புகளும் இங்கே நடத்தப்படுகின்றன. பாரம்பரிய நடனங்கள், கலாச்சார வகுப்புகள் என அவ்வப்போது நடத்துவதால் அவற்றிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.     

மணிப்பூரின் பழங்குடி மக்கள் வழிபட்ட கடவுள்களின் சிலைகள், அவர்களின் நம்பிக்கை போன்றவற்றையும் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.  ஃபகங்க்பா என்று அழைக்கப்படும் ஒரு ட்ராகனாக தன்னை மாற்றிக்கொள்ளும் மனிதனின் உருவமும் இங்கே உண்டு.  ட்ராகனாக மாறிய ஃபகங்க்பா மணிப்பூர் வாசிகளின் முதல் கடவுள் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த ஃபகங்க்பாவிற்கு மான் போன்ற கொம்புகள் இருந்ததாகவும், மிக நீண்ட உருவம் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.  ஃபகங்க்பா பற்றிய சில கதைகளும் உண்டு.

பல வித கலைப்பொருட்கள் இங்கே இருக்கின்றன.  ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்க்கவே நிறைய நேரம் வேண்டும் – என்றாலும் போதிய வெளிச்சம் இல்லாமலும், காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களைப் பற்றிய விளக்கங்கள் எழுதி வைக்கப்படாமல், அவை பற்றிய விவரங்களைச் சொல்ல போதிய ஊழியர்கள் இல்லாமையாலும் பார்க்கும் நமக்கு கொஞ்சம் வெறுப்பு உண்டாகிவிடுகிறது.  மேலோட்டமாக பார்த்தபடியே நடந்து சென்று விடுபவர்கள் தான் அதிகம்.

சிறப்பான பல விஷயங்களை இங்கே வைத்திருந்தாலும், சரியான பராமரிப்பு இல்லை. பல சமயங்களில் மின்சாரம் இருப்பதில்லை என்பதால் இருட்டில் திருட்டு குழக்கட்டை பிடிப்பது போல காட்சிப் படுத்தப்பட்ட பொருட்களை பார்க்க வேண்டியிருக்கிறது என்பது இங்கே வரும் பலரின் குற்றச்சாட்டு.  ராஜாக்கள் பயன்படுத்திய தங்கத்தில் செய்யப்பட்ட பல பொருட்கள், அணிகலன்கள் ஆகியவை முன்னர் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது போதிய பாதுகாப்பு இல்லாததால் மூடியே வைத்திருக்கிறார்கள் என்பதும் ஒரு குறை.

நாங்கள் சென்ற அன்று, ஏதோ ஒரு அரசியல்வா[வியா]தி/மந்திரி வருகை தரப்போவதாகவும், அதனால் புகைப்படக்கருவிகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் சொல்லி விட்டதால் இந்தப் பதிவில் புகைப்படங்கள் இல்லை.  பகிர்ந்திருக்கும் புகைப்படம், அருங்காட்சியகத்தின் வெளியிலிருந்து எடுக்கப்பட்டது.....

அருங்காட்சியகம் மற்றும் மணிப்பூர் நகரின் மேலும் சில தகவல்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்....

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

24 comments:

 1. அருங்காட்சியகத்தில் படங்கள் எடுக்க முடியாது போனது வருத்தமே.
  அடுத்த பதிவில் அழகான புகைப்படங்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 2. மணிப்பூர் ஒரு லாண்ட் லாக்ட் இடம்தானே அவர்களுக்குப் படகின் உபயோகம் இருந்ததா போக இயலாத இடம் பதிவில் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மணிப்பூரில் சில ஏரிகள், ஆறுகள் உண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 3. நிறைந்த செய்திகளுடன் - மணிப்பூர் அருங்காட்சியகம் பற்றிய பதிவு அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. படிக்கும் போது ...படங்களை காணும் ஆவல் அதிகரித்தது ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 5. அருங்காட்சியத்திலுள்ளவை பற்றிய புகைப்படங்கள் இல்லாவிட்டாலும், தகவல்களை அறிந்தோம். அடுத்த பதிவில் சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. புகைப்படம் இல்லாத உங்களின் இந்த பதிவு வடை இல்லாத விருந்து மாதிரி இருந்தது! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 7. மணிப்பூர் பற்றிய மணி மணியான தகவல் தந்தமைக்கு நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம்தான் எனக்கும் அங்கு ஏற்பட்டது.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 9. மணிப்பூர் பற்றி அறியாத தகவல்கள் பல !தொடர்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 10. இதன் முந்தைய பகுதிகளை நான் படிக்கவில்லை
  பின்னர் படிக்க வேண்டும்....
  மணிப்பூர் பற்றி அறியா தகவலை
  பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப்.

   Delete
 11. வெங்கட்ஜியின் சுர்றுலா புகைப்படங்கள் இல்லாத, பயணத்தின் ஒரு பகுதியின் பதிவு...என்றாலும் தகவல்கள் பல அறிய முடிந்தது. தொடர்கின்றோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....