ஏழு சகோதரி மாநிலங்கள்
பயணம் – பகுதி 3
படம்: இணையத்திலிருந்து....
சென்ற பகுதியை முடிக்கும்
போது மணிப்பூரின் இம்ஃபால் நகரில் நாங்கள் தங்குவதற்கு இடம் கிடைத்ததா இல்லையா என்பதை
அடுத்த பதிவில் சொல்கிறேன் எனச் சொல்லி முடித்திருந்தேன். அதைச் சொல்வதற்கு முன்னர் கொஞ்சம் தில்லிக்குத்
திரும்பிச் செல்வோம்! அதுவும் தங்குமிடம் முன்பதிவு
செய்ய நான் செய்த முயற்சியும் அதன் பலனாக நான் வாங்கிக் கொண்ட திட்டு பற்றியதும் தான்!
இதை நிச்சயம் பலரும் ரசிப்பார்கள் – காரணம் அடுத்தவர் திட்டு வாங்கினால் அவர்களுக்கு
மகிழ்ச்சி உண்டாகுமே!
இணையத்தில் இம்ஃபால் நகர
தங்குமிடங்கள் பற்றித் தேடியதில் சில இடங்களின் முகவரியும் அவற்றின் தொலைபேசி எண்களும்
கிடைத்தன. ஒவ்வொரு இடமாக அழைத்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலான இடங்களில் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.
அழைப்பை யாராவது ஏற்றாலும் மீண்டும் அழையுங்கள் என்று சொல்பவர்களாகத் தான் இருந்தார்கள்.
நடுவே அழைப்பதை நானும் விட்டுவிட்டேன். புறப்படும்
நாளுக்கு முதல் நாள் இரவு பத்தரை மணிக்கு மேல் நண்பர் பிரமோத் இடமிருந்து அழைப்பு. இம்ஃபாலில் தங்குமிடம் முன்பதிவு செய்ய மீண்டும்
முயற்சிக்கச் சொன்னார்.
நானும் அந்த இரவில் இம்ஃபால்
எண்களை அழைக்கத் துவங்கினேன். இருப்பதே ஒரு
சில தங்குமிடங்கள் தான். ஒவ்வொரு இடத்திலும் தங்குமிடம் இல்லை, இல்லை என்றே சொல்லிக்
கொண்டிருந்தார்கள். நகரில் இரண்டு நாட்களுக்கு ஏதோ Lion’s Club Meeting இருப்பதாகவும்,
அவர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் பதில் வந்தது. நீங்கள் நேரடியாக வந்தால்,
அறைகள் காலியாக இருந்தால், நிச்சயம் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக ஒரு தங்குமிடத்தின் தொலைபேசி எண்ணைத் தேடி
எடுத்து தொடர்பு கொண்டேன். நேரம் நள்ளிரவுக்கு
சில நிமிடங்கள் தான் இருந்தது!
ட்ரிங்… ட்ரிங்….. ட்ரிங்…..
ட்ரிங்….. ட்ரிங்….. ட்ரிங்….. ட்ரிங்….. ட்ரிங்….. போய்க் கொண்டே இருந்தது…
சரி தங்குமிடத்தில் இருக்கும்
சிப்பந்தி தூங்கி விட்டார் போலும் என நினைத்து இணைப்பைத் துண்டிக்க நினைத்தபோது தூக்கக்
கலக்கத்தில் ஒரு குரல்….. அதுவும் பெண் குரல்!
நாங்கள் பேசியது ஹிந்தியில்
என்றாலும் இங்கே தமிழில்….
நான்: ”ஹலோ….
நான் தில்லியிலிருந்து பேசுகிறேன். நாளைக் காலை விமானத்தில் புறப்பட்டு இம்ஃபால்
நகருக்கு வருகிறேன். கூடவே நான்கு நண்பர்களும்
உண்டு. உங்கள் ஹோட்டலில் எங்களுக்கு இரண்டு அறைகள் தேவை. காலியாக இருக்கிறதா?”
பெண் குரல்: ஹலோ….
நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?”
நான்: உங்கள் ஹோட்டலில் தங்க இடம் வேண்டும்! என்று அதே
பாட்டைப் படித்தேன்!
பெண் குரல்: ஒரு வித கோபத்தோடு, நட்ட நடு ராத்திரியில ராங்
நம்பர் போட்டு கழுத்தறுக்காதய்யா…. இது ஹோட்டல் இல்ல! வீடு… தங்க இடம் வேணுமாம்ல இடம்!
படம்: இணையத்திலிருந்து...
இப்படி திட்டு வாங்கிய
பிறகு “சாரி” என்று சொல்வதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. நம்பரை சரி பார்த்து
மீண்டும் அழைக்க அதே பெண் குரல் கேட்டது. பதில் சொல்லாது வைத்து விட்டேன். இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து இம்ஃபால்
சென்று தங்குமிடம் தேடிக்கொள்ளலாம் என விட்டு விட்டேன்.
படம்: இணையத்திலிருந்து...
மீண்டும் இம்ஃபால் நகரின்
Tulihal International Airport வாயிலுக்கு வருவோம்! நானும் நண்பர்களும் விமான நிலையத்திலிருந்து வெளியே வர, அங்கே நிறைய வாகங்களும், அவற்றின் ஓட்டுனர்களும்
எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் பேச்சுக் கொடுத்தபடியே ஒருவரைத்
தேர்ந்தெடுத்தோம் – மரியாதையாகவும் பேசும் அதே நேரத்தில் அதிகமாய் பேசாதவருமாக இருந்தார். அவரையே தேர்ந்தெடுத்த பிறகு எங்கள் தேவைகளைச் சொன்னோம்
– தங்குவதற்கு வசதியான நல்ல ஹோட்டலில் எங்களை இறக்கி விட வேண்டும் – அதைத் தவிர அங்கே
இருக்கும் சமயத்தில் மணிப்பூரில் நாங்கள் பார்க்க நினைத்திருக்கும் இடங்களுக்கு அழைத்துச்
செல்ல வேண்டும் என்று சொல்ல அவரும் அவரது தேவையைச் சொன்னார்!
ஓட்டுனர் ஷரத்..... இம்ஃபால்.
அவர் சொன்ன உழைப்பிற்கான
ஊதியம் எங்களுக்கும் ஒத்து வர, அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டோம் – எங்கள் உடைமைகளோடு.
வாகனம் விரைந்தது – விமான நிலையத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரின்
மையப் பகுதியை நோக்கி. செல்லும் வழியிலேயே
அவருடம் பேச ஆரம்பித்திருந்தேன். இருப்பதில் நல்ல தங்குமிடம் நோக்கி அழைத்துச் செல்ல
வேண்டும், ஆடம்பரம் தேவையில்லை என்பதை நடுநடுவே சொல்லிக் கொண்டே, அவரைப் பற்றியும்
அவரது குடும்பம் பற்றியும் கேட்டேன்.
படம்: இணையத்திலிருந்து...
எந்த இடத்திற்குச் சென்றாலும்
ஓட்டுனர்களிடம் இப்படி பேசுவது எனக்கு வழக்கம் – அவர்களின் குடும்பம், வாகனம் ஓட்டுவதில்
அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள், கஷ்டங்கள் என்பவற்றை பேசும்போது அவர்களும் நம்மிடம்
நல்லபடியாக நடந்து கொள்வார்கள் என்பதும் ஒரு காரணம். இவரிடமும் அப்படியே. பேசிக் கொண்டே வர, வாகனம் நேரடியாக வந்த இடம் –
Hotel Bheigo [முகவரி: Keisampat Thokchom Leikai,Wahengbam
Leikai Road, Imphal, Manipur 795001].
எங்கள் ஐவருக்கும் இரண்டு
அறைகள் தேவை என்று சொல்ல, ஹோட்டல் சிப்பந்தி அறை இருப்பதைச் சொல்லி, நாள் வாடகையையும்
சொல்ல அது எங்களுக்கு ஒத்து வந்தது. அறைக்குச் சென்று சில நிமிடங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்துக்
கொண்டோம். நாங்கள் அமர்த்திய ஓட்டுனர் ஷரத்
அதற்குள் வீடு சென்று சாப்பிட்டு வந்தார்.
அப்படியே அவரிடம் இருந்த மாருதி வேனில் கழற்றி வைத்திருந்த பின் புற இருக்கைகளை
மீண்டும் போட்டுக் கொண்டு வர நாங்கள் ஐவரும் வசதியாக அமர வழி செய்தார்.
அவர் அரை மணி நேரத்தில்
வர நாங்களும் தயாராக இருந்தோம். ஹோட்டல் அறையில்
எங்கள் உடைமைகளை வைத்து விட்டு, கைகளில் புகைப்படக் கருவிகளை மட்டும் எடுத்துக் கொண்டு
புறப்பட்டோம் – மணிப்பூர் மாநிலத்தின் இம்ஃபால் நகரில் பார்க்க வேண்டிய சில இடங்களை அன்றைய நாளே பார்க்கவும்,
அடுத்த நாளில் சில இடங்களைப் பார்க்கவும் திட்டம். மணிப்பூர் மாநிலத்தில் நாங்கள் பார்த்த இடங்கள்
என்ன, அவை பற்றிய குறிப்புகள், எங்கள் அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்!
சரியா?
அடுத்த பதிவில் சந்திக்கும்
வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
பாவம், அந்தச் சகோதரியை நடு இரவில் எழுப்பிக் குழப்பி விட்டீர்களே...!
பதிலளிநீக்குசிலவருடங்கள் முன்பு நடு இரவில் லேன்ட்லைனில் ஒரு அழைப்பு வரும். எடுத்துக் காதில் வைத்தால் யாரோ மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்கும். நாம் கரடியாய் ஹலோ 'ஹலோ யாரு... யாரு...' என்று கத்தினாலும் மூச்சுச் சத்தம் தவிர பதில் வராது. சில நாட்களுக்கு அந்தத் தொந்தரவு இருந்தது. பின்னர் நின்று விட்டது!
எனக்கும் இப்படி அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தினை ஒரு பதிவாகவும் எழுதி இருக்கிறேன் - யாரடி நீ மோகினி? என்ற தலைப்பில்.... சுட்டி கீழே...
நீக்குhttp://venkatnagaraj.blogspot.com/2012/07/blog-post_16.html
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நானும் அப்போதே படித்து, பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்!
நீக்கு:)))))
தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஉங்களுடன் கிளம்பிவிட்டேன். மணிப்பூரினை சுற்றுப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குமணிப் பூர் என்றாலே ஜெரோம் சர்மிளா நினைவிற்கு வருகிறார் ஐயா
பதிலளிநீக்குநன்றி
தொடர்கிறேன்
தம+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குசூப்பர் சூப்பர் சகோ. நானும் இதுபோல் ஆட்டோக்காரர் டாக்ஸிவாலாக்களிடம் சிலப்போ பேசுவதுண்டு. ரங்கமணிக்குப் பிடிக்காது என்பதால் ஆஃப் ஆகிவிடுவேன் :) ஆனால் இதன்மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது உண்மை. ! அவர்கள் தங்களைப் போல நம்மை எண்ணி நிறைய கைட்லைன் ஆலோசனைகள் சொல்வார்கள். சிலப்போ பணமும் கூட அதிகம் செலவாகாது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ
நீக்குமணிப்பூரின் இயற்கை எழிலினைக் காண்பதற்கு ஆவலாக இருக்கின்றேன்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஇப்படி இருந்தால் டூரிசம் எப்படி டெவலப் ஆகும் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குநாங்களும் கூடவே பயணிக்கிறோம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅய்யா ..ஒருதடவை எங்களையும் அலைத்துப்போங்களேன்..
பதிலளிநீக்குஎங்கே போகலாம் எனச் சொல்லுங்கள். சென்று வரலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.
பயணக்கட்டுரையில் முதல்வர் தாங்கள்தான் வெங்கட்;அருமை.
பதிலளிநீக்குஎன்னை விட சிறப்பாக எழுதுபவர்கள் உண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
சிறந்த ஓட்டுநர் கிடைத்தால் பயணம் இனிக்கக் கேட்கணுமா?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குசுற்றிப்பார்த்த இடங்களின் படங்களைப் பார்க்கவும், அடுத்தடுத்த சகோதரிகளின் சந்திப்புகளையும் அறிய Waiting...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலாமகன்.
நீக்குஹாஹாஹா அந்தப் பெண்ணிடமிருந்து தப்பி விட்டீர்கள் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குவடக்கே எல்லா இடமும் சுத்திப்பார்க்கணும்னா, டெல்லில வேலை தேடணும்போலிருக்கு. நீங்கள் எழுதுவதைப் படிக்கும்போதே, சுற்றிப்பார்த்த உணர்வு வந்துவிடுகிறது. ஹிந்தி தெரியலைனா வடக்க ஒண்ணும் உருப்படியாப் பார்க்கமுடியாது போலிருக்கு
பதிலளிநீக்குஹிந்தி மட்டும் தெரிந்திருந்தால் வடக்கில் பல இடங்களிலும் சமாளித்து விடலாம்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி மாலி ஜி!
நீக்குமேக்சிமம் எந்த ஹோட்டலாக இருந்தாலும் டெலிபோனில் புக் செய்வதை ஏற்கமாட்டார்கள், பிடிகொடுக்காமலேயே பேசுவார்கள், ஆன்லைனில் புக் செய்தால் சிறந்த வரவேற்பும் ரேட் குறைவாகவும் [[நார்மல்]] ரூம் கிடைக்கும், டிரைவர்களை [[எந்த ஓட்டுனரா இருந்தாலும் அவர்களுக்கு கமிஷன் உண்டு]] நம்பாமல் ஆன்லைனில் புக் செய்து செல்வதே நன்று.
பதிலளிநீக்குbooking.com, agoda.com இப்படி நிறைய ஏஜன்சிகள் இருக்கே.
ஆன்லைனில் புக் செய்த பிறகு இல்லை என்று சொல்லி விட்டார்கள். அதனால் தான் கடைசி நேரத்தில் தேட வேண்டியிருந்தது. ஆன்லைனில் என்ன ரேட் இருந்ததோ, அதை விட குறைவாகத் தான் நாங்கள் கொடுத்தோம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
இந்த மாதிரி நடு இரவுத் தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கும் வருவதுண்டு. பல சமயங்களிலும் யாருனு தெரியாமல் மண்டையை உடைச்சுப்போம். அந்த எண்ணை மறுநாள் கூகிளில் போட்டுப் பார்த்தால் பொய்யான நபர் என்பது தெரியவரும். நைஜீரியாவிலிருந்து ஒரு அழைப்பு இப்படித் தான் வந்துட்டு இருந்தது. அப்புறமா பிஎஸ் என் எல்லுக்குச் சொல்லி அம்மாதிரியான அழைப்புக்களை நிறுத்தினோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குஹஹஹ் பாவம் அந்தச் சகோதரி.....
பதிலளிநீக்குநடு இரவு அழைப்புகள் அதுவும் ஒரே நம்பரிலிருந்து, இல்லை என்றால் பல நம்பரிலிருந்து அதே குரல் என்று வந்ததுண்டு. இப்போது அவ்வளவாக இல்லை. ஆனால் நேற்று ஒரு அழைப்பு வந்தது. நம்ம ஊர் நம்பர் போல் இல்லை. இரு முறை வந்தது. ஆனால் நான் எடுப்பதற்கு கட் ஆகிவிட்டது. நல்லது எடுக்காமல் இருந்தது. அந்த நம்பரை நெட்டில் போட்டுப் பார்த்தேன் அது அஜர்பெய்ஜைன் என்ற நாட்டு கோட் என்றது. துண்டான ரஷ்யா நாடு போலும்...
பயணம் சுவையாக ஆரம்பித்துள்ளது தொடர்கின்றோம்..
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குமணிப்பூரை சுற்றிப் பார்க்க நாங்களும் தயார் அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்கு