எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, March 2, 2016

ஒரு கோப்பை மனிதம் – மு.கீதா
ஜனவரி மாதம் புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தபோது “தென்றல்” எனும் வலைப்பூவில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவரும் மூ. கீதா அவர்களைச் சந்தித்தேன். சந்திப்பின் போது அவரது கவிதைத் தொகுப்பான ”ஒரு கோப்பை மனிதம்” புத்தகத்தினை எனக்குக் கொடுத்தார்.  கருத்துச் செரிவு அதிகமுள்ள அவரது கவிதைகளை வலைப்பூவிலேயே ரசித்து வாசித்திருக்கும் எனக்கு அவரின் சிறந்த சில கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் வாய்ப்பு கிடைக்க விட்டுவிடுவேனா..  புதுக்கோட்டையிலிருந்து திருவரங்கம் திரும்பிய அன்றே வாசிக்கத் துவங்கினேன்.  ஒவ்வொரு கவிதையும் என்னுள் பல எண்ணங்களை விதைக்க, நானும் நினைவுகளில் மூழ்கிப் போனேன். 

தமிழகத்தில் இருக்கும்போதே படித்து விட்டாலும், மீண்டும் ஒரு முறை படிக்கும் எண்ணத்தோடு தில்லிக்கும் எடுத்து வந்துவிட்டேன்.  சென்ற வாரத்தில் மீண்டும் படித்தேன்.  இரண்டாம் முறையாக இருந்தாலும், சில கவிதைகள் என்னுள் நினைவுகளைக் கிளறி விட்டது…….

சின்னச் சின்னதாய் பல கவிதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும் நிச்சயம் உங்கள் உணர்வுகளைத் தொடும் கவிதைகள்….. 

மெத்தப் படித்த ஒரு பெண், திருமணத்திற்குப் பிறகு அவளுக்குக் கிடைக்கும் அனுபவம் பற்றிய கவிதை – எரிமலைக் குழம்பாய்…”

கண்விழித்து
வகைவகையாய் வரைந்து
கட்டிடப் பொறியியலில்
களிப்புடனே தங்கப்பதக்கம்
பெற்ற மனைவியை
வட்ட வட்டமாய் ஆடைதனை
கண்ட இடத்தில் கழட்டி வீசுபவன்
வட்டமாய் தோசையில்லையென்றும்
அம்மாவின் பக்குவமாய் வாராதென்றும்
குடும்பத்தோடு நக்கலடிக்கின்றான்
எரிமலைக் குழம்பென ஆக்கி…

எங்கள் தாத்தா வீடு விழுப்புரத்தில் இருந்தது. நெய்வேலியிலிருந்து வெகு சில முறை மட்டுமே விழுப்புரம் வீட்டிற்குச் செல்வோம் – அங்கே போகப் பிடிக்காது – தாத்தா பாட்டி பிடிக்காது என்பது காரணமல்ல – பெரிய வீடு என்றாலும் அங்கே கழிவறை இல்லை – வீட்டின் கடைசியில் இருக்கும் ஒரு சிறிய அறைக்குள் இருக்கும் வாய்க்காலில் தான் காலைக்கடன் – பிறகு யாரோ ஒருவர் வந்து எடுத்துச் சுத்தம் செய்வாராம்….  நம் அசுத்தத்தை வேறொருவர் சுத்தம் செய்யும் அவலம்…  அதனாலேயே விழுப்புரம் செல்லப் பிடிக்காது.  அந்த அனுபவத்தினை நினைவுக்குக் கொணர்ந்த கவிதை – தோட்டிச்சி பாட்டி…..

சிறுவயது நினைவலைகளில்
சந்து வழி வந்து சென்ற
மலம் சுமந்த தோட்டிச்சி
அடிக்கடி வருகின்றாள்.
விடியும் முன்
வீட்டருகே கிடக்கும்
சாணியைக் கரைத்து
கோலமிடும் அக்கா
அறியாமல் ஒரு நாள்
பன்றிவிட்டையைக் கரைத்துவிட்ட
கையைக் கழுவிக்கொண்டே இருப்பாள்
எப்போதும்….
சோப்பு வாங்கியே காசு கரையுதென
கோபிக்கும் அம்மாவிடம் கேட்பேன்
தோட்டிச்சி பாட்டிக்கு சோப்பு
வாங்க யார் கொடுப்பா காசு?

பட்டாசுத் தொழிற்சாலையில் வெடித்துச் சிதறிய அம்மா பற்றிய கவிதை, கதவு இல்லா குடிசையில் தூங்கிய சிறுமியின் கதறல் பற்றிய கவிதை ஆகிய இரண்டுமே மனதினை ஏதோ செய்யும்…. 


குண்டும் குழியுமாய் இருக்கும் சாலை பற்றிய கவிதையும் தான்….  அக்கவிதை…

”சாலை”

நிலமகளின்
கருப்பு புடவை
ஓட்டைகளும்
ஒட்டுகளுமாய்
தறிநெய்பவளின்
கிழிந்த துகிலென….

சில கவிதைகள் இரண்டு மூன்று வரிகளே என்றாலும் அவரின் கற்பனை ரசிக்கமுடியும் – உதாரணத்திற்கு “வெட்கம்” என்ற தலைப்பில் எழுதிய மூன்று வரிகள்!

என்ன வெட்கம்
தேநீருக்கு?
அவசரமாய் மேலாடை.

பசி கொடுமையானது….  உண்மை தான்! ஒரு வேளை சாப்பிடவில்லை என்றால் எத்தனை கஷ்டம்…..  “பறை” என்ற தலைப்பிட்ட மூன்று வார்த்தை கவிதை சொல்வதும், “கழைக்கூத்து” தலைப்பிட்ட கவிதை சொல்வதும் இந்த வேதனையைத் தான்!

பறை

தோல் அதிர்ந்தது
இசையிலும்
பசியிலும்….

கழைக்கூத்து

கயிற்றிலாடும் சிறுமியை
புகைப்படமெடுக்க
படத்தில் தெரிந்தது
பசி…

சமீப வருடங்களில் முதியோர் இல்லங்கள் நிறையவே வந்து விட்டன.  ”வருடல்” என்ற தலைப்பிட்ட கவிதை இது பற்றி தான்…

அடிக்கடி கை தடவுகின்றதது
மகனை சுமந்த வயிற்றை
முதியோர் இல்ல மூதாட்டி.

தொகுப்பில் இருக்கும் அனைத்து கவிதைகளுமே அருமையாக இருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே எடுத்துச் சொல்லிவிட்டால் என்னாவது!  தொகுப்பினில் படித்தால் தானே அந்த உணர்வினை நீங்களும் பெற முடியும்…..  புத்தகம் பற்றிய தகவல்கள் கீழே….

தலைப்பு:             ஒரு கோப்பை மனிதம்

ஆசிரியர்:              மு. கீதா [தேவதா தமிழ்]

வெளியீடு:           கீதம் பப்ளிகேஷன்ஸ்,
3/3, பத்மாவதி அவென்யூ,
திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி, சென்னை-600096.

விலை:                  ரூபாய் 60/-

பதிவில் சொன்ன கவிதைகளையும் தொகுப்பில் இருக்கும் கவிதைகளையும் படித்து மகிழுங்கள்….

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

48 comments:

 1. நல்ல அறிமுகம். நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வணக்கம் சார்.நலமா?எதிர்பார்க்கவில்லை ...மிக்கநன்றி எனது நூலை வாசித்து பகிர்ந்தமைக்கு....மீண்டும் உங்களின் பயணங்களை ரசிக்க காத்திருக்கின்றேன்....நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அட எதிர்பார்க்கவில்லையா? :)))

   அடுத்த பயணத் தொடர் ஆரம்பித்து விட்டது - ஏழு சகோதரிகள் - பயணத் தொடர்... முதல் பகுதி திங்களன்று வெளியிட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா.

   Delete
 3. முன்னரே நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நூல். தற்போது தங்களால், தங்களின் நடையில். ஆசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. மதிப்புரை அருமை கீதா அவர்களின் இந் நூலை நானும் படித்திருக்கிறேன் சரளமாக வந்து விழும் வார்த்தைகள் நம்மை சிந்திக்க வைப்பவை .வாழ்த்துகள் கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 5. தங்களின் இந்த நூல் அறிமுகம் மிக அருமை வெங்கட்ஜி. பகிர்வுக்கு நன்றிகள்.

  (1) நூலின் தலைப்புத்தேர்வு நல்லாயிருக்கு.

  (2) அட்டைப்படம் அசத்தல்.

  (3) பதிப்பகத்தார் உணர்ச்சி மேலிட எழுதியுள்ளது வரிகளை ரஸித்து உணர முடிகிறது.

  (4) தாங்கள் இந்த நூல் அறிமுகத்திற்காக எடுத்துக்கொண்டுள்ள ஒருசில கவிதைகள் மிகச் சிறப்பாகவும் சிந்திக்க வைப்பவைகளாகவும் உள்ளன.

  நூல் ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மேலேயுள்ள என் பின்னூட்டத்தில்

   (3) இல் நான்காவது வார்த்தை ‘எழுதியுள்ள’ என இருக்க வேண்டும். அவசரத்தில் அடிக்கும்போது கடைசியில் ஒரு ’து’ சேர்ந்து ‘எழுதியுள்ளது’ என என்னால் எழுதி அனுப்பப்பட்டுள்ளது. :)

   I feel sorry for it.

   >>>>>

   Delete
  2. சில சமயங்களில் இப்படி தட்டச்சுப் பிழைகள் வந்து விடுகின்றன...... நம்மை மீறி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

  ReplyDelete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. ”எரிமலைக் குழம்பாய் ....”

  நியாயமான தலைப்பு. படிக்கும் நாமே எரிமலைக்குழம்பாய்க் குழம்பித்தான் போகிறோம் ... இதுதானே பெரும்பாலான கணவர்களில் செயலாய் உள்ளதென நினைத்து.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான கணவர்களின் செயல் இதுதான்..... உண்மை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
  2. கணவர்களில் = கணவர்களின் :)

   மிக்க நன்றி, வெங்கட்ஜி.

   Delete
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. ”தோட்டிச்சி பாட்டி”:

  இந்த உணர்வுகளின் சோப்பினில் நுரை எக்கச்சக்கமாகவே உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. ”சாலை”:

  சாலையை சேலைபோல சும்மாக் கிழித்துக்கோர்த்துள்ளார்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. ”வெட்கம்”:

  மிகச் சிறிய கற்பனைக் கவிதையிலேயே எத்தனை பெரிய நகைச்சுவை :) ஜோர் ஜோர் !!

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. ”பறை”:

  பறையின் ஒலி .... பசியால் மேலும் மிளிர்கிறது .... காதே கிழிந்துவிடும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. ”கழைக்கூத்து”:

  நானே ஒரு நாள் இந்தக் கொடுமையை நேரில் கண்டு, அனுபவித்து மிகவும் அழுதுள்ளேன். :(

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. ”வருடல்”:

  படித்ததும் .... நம் நெஞ்சையும் வருடுகிறது + நெருடுகிறது.

  -=-=-=-=-

  தங்களின் இந்த ஒருசில அறிமுகக் கவிதைகளே, அந்தக் கவிதை நூலை உடனடியாக வாங்கி மீதிக்கவிதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக உள்ளன.

  நூலாசிரியருக்கும் தங்களுக்கும் மீண்டும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 15. மிக நல்ல அறிமுகம்..எங்கள் கவிஞரின் நூலை நல்ல ஆடையாக்கி அழகு செய்திருக்கின்றிர்கள் ...நன்றியும் வாழ்த்துகளும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

   Delete
 16. நூல் ஆசிரியருக்கும் அவரின் கவிதைகளை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உங்களின் நடையில் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தது சிறப்பாக இருந்தது.
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 17. கனமான கவிதைகள். அனைத்துக் கவிதைகளையுமே படிக்கத் தூண்டிய விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 18. ஏற்கனவே படித்தது என்றாலும் உங்களின் பதிவு ரசிக்க வைத்தது !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete

 19. ‘ஒரு கோப்பை மனிதம்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து நீங்கள் மாதிரிக்கு தந்த கவிதைகள் அனைத்துமே அருமை.அதுவும் அந்த’வெட்கம்’ என்ற குறுங்கவிதையில் கற்பனைத் திறனையும் கவிதை நயத்தையும் கண்டேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கவிதாயினி மூ.கீதா அவர்களுக்கு! பகிர்ந்த தங்களுக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 20. கீதாவின் கவிதைகள் அருமை.
  இதை எடுத்து எழுதிய தங்கள் வரிகளும் சிறப்பு
  இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 21. விமர்சனம் அருமை ஜி அந்த ‘’தோட்டிச்சி பாட்டி’’ என்னுள் என்றும் நிலைத்து நிற்கின்றாள் கேள்விக்குறியாய்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 22. நாங்களும் எழுத வேண்டும் சகோதரியின் புத்தகத்தைப் பற்றி. கீதா வாசித்துவிட்டார். துளசி இன்னும் வாசித்து முடிக்கவில்லை. அதனால் தாமதம். உங்கள் விமர்சனம் அருமை வெங்கட்ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 23. நல்லதொரு கவிதை நூலுக்கு நல்ல அறிமுகம் தந்தமைக்கு நன்றி நண்பரே.
  (ஆமாம், உங்கள் தளத்தில் எழுத்துருக்கள் ஏன் இவ்வளவு பெரிதாக உள்ளன? இன்னும் சற்றே சிறிதாக்கலாமே நண்பரே?)

  ReplyDelete
  Replies
  1. அடடா.... ரொம்ப பெரிய எழுத்துகளாக வந்துவிட்டனவா... மாற்றுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....