எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, March 9, 2016

நான் சாப்பிடப் பொறந்தவண்டா….. – கட்டிக்கோ, கடிச்சிக்கோ…. – மாற்றம்

முகப் புத்தகத்தில் நான் - 4

மாற்றம் அவசியம்! – 28, February 2016தேர்தல் சமயத்தில் இப்படிச் சொன்னால் அரசியல் என்று நினைத்து விடப் போகிறீர்கள்! இது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல!

கிடைப்பதே கொஞ்சம் நேரம் தான் – அந்த நேரத்தில் தொடரும் வலைப்பூக்களைப் படிப்பதோடு மட்டுமல்லாது, அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகளாவது எழுத வேண்டும், தமிழ்மணத்தில் வாக்களிக்க வேண்டும், முகப் புத்தகத்தில் உலவ வேண்டும், கூடவே LIKE செய்யணும், SHARE பண்ணனும் எத்தனை வேலைகள் இருக்கு! ஆனால் அதை எல்லாம் கிடைத்த நேரத்திற்குள் செய்ய இணையம் ஒத்துழைக்க வேண்டும் இல்லையா! 

இந்தியாவின் மற்ற பகுதிகளில் BSNL என்றால், தலைநகர் தில்லியிலும் வணிகத் தலைநகர் மும்பையிலும் MTNL!  பெயரின் பாதி போலவே Empty! இணைப்பு பாதி நேரம் இருப்பதில்லை – ஊசலாடிக் கொண்டே இருக்கிறது.  எப்போது வேண்டுமானாலும் உயிர் போய்விடும் என்ற நிலையிலேயே இணையத்தில் உலவ வேண்டியிருக்கிறது!

ஒரு படம் வலையில் சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது! இவர்களிடமிருந்து விலகி வேறு எதாவது இணைய வசதியைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. என்றாலும் முன்னரே ஒரு முறை  Tata Photon வாங்கி பட்ட அவஸ்தை நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது……  எல்லோரும் கொள்ளைக் காரர்களாக இருக்கிறார்கள்…..  தில்லியில் எந்த இணைய வசதி நன்றாக இருக்கிறது எனத் தேடத் துவங்கி இருக்கிறேன்…. 

இதைத் தான் தலைப்பில் மாற்றம் அவசியம் என்று சொல்லி இருக்கிறேன்.

கட்டிக்கோ…. கடிச்சிக்கோ! – 2 March 2016வீடு இருக்கும் பகுதியில் சில தெருநாய்கள் உண்டு.  ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது – அவற்றுக்கு ஏதோ நோய் போல! குரைத்துக்கொண்டே இருக்கின்றன. அதுவும் எங்கள் பகுதியில் எந்த பைக் வந்தாலும் குரைத்தபடியே பின்னாடியே துரத்துகின்றன.  ஓட்டுபவர் கால்களை மேலே வைத்துக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். சின்னச் சின்ன சந்து – வளைவு-நெளிவுகள் அதிகம் என்பதால் வேகமாகவும் ஓட்ட முடியாது. நின்றால் கடித்துவிடுமோ என்ற பயம் ஓட்டுனர்களுக்கு.  ஒரு வாரமாக நாய்கள் குரைத்துக் கொண்டே துரத்துவதும், பைக் ஓட்டுனர்கள் பயந்தபடியே பைக்கை செலுத்துவதும் நடக்கிறது. 

இந்த தெரு நாய்களுக்கு தினமும் உணவளிக்கும் சிலர், நாய்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் – “ஏண்டா ஓடறே, எல்லாம் நம்ம ஏரியா மக்கள் தான்…. துரத்தக் கூடாது, சரியா….  இந்தா சாப்பிடு!”  பயத்துடன் பயணித்த சில பைக் வாசிகள் பைக்கை நிறுத்தி விட்டு வந்து நாய்களைப் பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். அவைகளோ “எங்க கிட்டயா மோதறே! என்று கூரிய பற்களை காட்டிச் சீறுகின்றன. 

நேற்று இரவு ஒரு பைக்கை துரத்திக் கொண்டே கேட் வரை நாய்கள் போக, கேட்டிலிருந்து உள்ளே ஒருவர் பைக்கில் வந்தார். அவரையும் குரைத்தபடியே நாய்கள் துரத்தின…..  அவர் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார்! ஒரு நாயின் பக்கத்தில் போனார் – தள்ளாடியபடயே…  சீரியஸாக நாயின் அருகே சென்று அதைத் தடவிக்கொடுத்து “என்ன ஆச்சு! ஏன் இப்படி கத்தற செல்லம்” என்று கொஞ்சினார் .  அதன் வாயை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டு [கன்றுக்குட்டிக்கு மண் தின்றுவிடாமல் இருக்க வாயில் கட்டிவிடுவார்களே அப்படி] கொஞ்ச, நாய்க்கு கோபம் வந்து ஒரு சத்தத்தோடு அவரிடமிருந்து துள்ளியது!  அப்படியே கொஞ்சம் கடிக்கவும் செய்தது…… 

அந்த நபரோ, கொஞ்சம் கூட அலறாமல் – நாயை மீண்டும் கட்டிப்பிடிக்க முயன்றதோடு, “இன்னும் கடி….” என்று அதனிடம் பேசிக் கொண்டிருந்தார்…..  அவரைக் கடக்கும்போது தான் அவர் ஒருவரல்ல, இருவர் எனப் புரிந்தது – உள்ளே சாராயக் கடையே இருக்கும் போல! சாராய நெடியின் வீச்சு அப்படி!  சரி சரி…. ‘கட்டிக்கோ… கடிச்சிக்கோ…” என்று இருக்கட்டும் என நான் கடந்தேன்!

நான் சாப்பிடப் பொறந்தவண்டா! – 8 March 2016எனக்குத் தெரிந்த ஒரு நபர் இருக்கிறார்.  அலுவலகத்திற்குச் செல்லும்போது ஏதோ நான்கு நாட்கள் பயணம் செல்பவர் போல மூட்டைகளை எடுத்துக் கொண்டு செல்வார். அது அவர் இஷ்டம், என்னவோ எடுத்துக் கொண்டு போகட்டும், அதைக் கேட்கக் கூடாது என்று இருந்துவிடுவேன்.  ஆனாலும் என்னதான் எடுத்துக் கொண்டு போவாரோ என்று அவ்வப்போது நினைப்பதுண்டு……

இன்று அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரைப் பார்த்தபோது He let the cat out of the bag! அந்த நபரைப் பற்றிய தகவலை என்னிடம் சொல்லி விட்டார்.  அந்த மூட்டை முழுவதும் உணவுப் பொருட்களாம்!  நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சம் இடைவெளியில் பையிலிருந்து எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார் என்று சொல்லி ஒரு பெரிய பட்டியலையே தந்தார்.

காலை அலுவலகம் சென்றவுடன் ஏதோ ஒரு Stuffed Parantha – உருளை, காலிஃப்ளவர், முள்ளங்கி, கேரட் – எதுவாக இருந்தாலும் சரி, 11.30 மணிக்கு முளைவிட்ட பயிர்கள், 12.30 மணிக்கு கொஞ்சம் பச்சைக் காய்கறிகள், 01.15 மணிக்கு மதிய உணவு, 3.00 மணிக்கு மீண்டும் கொஞ்சம் முளைவிட்ட பயிர், 04.30 மணிக்கு சில பல சமோசா/கட்லேட் என எதையாவது பையிலிருந்து எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாராம்.  இது அனைத்துமே அவர் மனைவி வீட்டில் செய்து தர அவற்றை எடுத்து வருவாராம்.  போதாத குறைக்கு அலுவலக உணவகத்திலும் அன்றைய மெனுவில் எது அவருக்குப் பிடித்ததோ அதையும் வாங்கி உண்பது அவருக்கு வழக்கம்…..

இவருக்கு சாப்பிடுவது ரொம்பவே பிடித்ததாக இருந்தாலும், என் கவலையெல்லாம் இவர் மனைவி பற்றியது தான் – தினம் தினம் இத்தனை வித உணவுகளை இவர் அலுவலக்த்திற்குப் புறப்படும் முன்னரே தயாரித்து தர வேண்டும் என்றால் அவருக்கு எத்தனை வேலை இருக்கும்…..  ஓய்வே இருக்காது என்று தான் தோன்றுகிறது……  அலுவலகத்திற்கு இப்படி என்றால், வெளியே எங்காவது அழைத்துக் கொண்டு போனாலும், அங்கே சென்று சாப்பிட வீட்டிலிருந்தே நிறைய உணவுகளை எடுத்துக் கொண்டு போவாராம் அவர்…..  சாப்பிட மட்டுமே பிறந்தவர் போலும்!

ஆனால் ஒரு விஷயம்…..  எத்தனை சாப்பிட்டாலும் அவருக்கு ஒத்துக் கொள்கிறதே!

என்ன நண்பர்களே, எனது சமீபத்திய முகப் புத்தக இற்றைகளை ரசித்தீர்களா?

நாளை வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன். இங்கு பி எஸ் என் எல்லும் அப்படித்தான் இருக்கிறது. அந்தந்த மாதத்துக்கான ஃப்ரீ யுசேஜ் (எனக்கு 5 GB - எட்டு தேதிக்கே மெசேஜ் வந்து விடும்)குறிப்பிட்ட தேதியில் உபயோகித்தாலும் உபயோகிக்கா விட்டாலும் முடிந்து விட்டதாகத் தகவல் தந்து விடுகிறார்கள். அப்புறம் மாதம் முழுவதும் சுற்றிக் கொண்டேதான் இருக்கும்.

  பெட்ரோல் லீக் ஆனால் அந்த வாடை நாய்களுக்குப் பிடிக்காது என்று என் மாமா சொல்வார். அதனால் குறைக்குமாம். ஆனால் எல்லா வண்டிகளையும் துரத்தினால் என்ன செய்ய!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நான் ஏர்டெல்லுக்குப் போய் நான்கு மாதம் ஆகிறது. பிரச்சினை ஏதும் இல்லை. ஏசிடி இதைவிட நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. இணைய இணைப்பு எல்லா இடங்களிலுமே இப்படித்தான் போலிருக்கிறது
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   Delete
 4. இணையாத ஒன்று இணையம் என்றாகி விட்டது..

  பதிவில் ஆழ்ந்திருக்கும்போது பெருமூச்சுதான் மிச்சம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜி!

   Delete
 5. இங்கே பிஎஸ் என் எல் தான் . கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கு! அன்லிமிடெட் ப்ளான். ஒரே ஒரு முறை பான்ட்வித் எக்ஸீட் ஆனதாகச் செய்தி வந்தது. அப்போக் கிட்டத்தட்ட 2 மடிக்கணினி, 2 அலைபேசி, ஒரு ஐபாட் உபயோகத்தில் இருந்தது. அப்போ மட்டும் ஆன்லைனிலேயே நீட்டித்துக் கொண்டோம். பில் மாதாந்திர பில்லோடு சேர்ந்து வரும், ஆன்லைனில் கொடுக்கவேண்டாம்னு அவங்களே மெசேஜ் கொடுத்துட்டாங்க. ஒண்ணும் பிரச்னை இல்லை. டாடா இன்டிகாம் வைத்திருக்கும்போது தினமும் கேபிள் அறுந்து போய் மோசமான அனுபவங்கள்! :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 6. எங்களுக்கு ஒரு குறைன்னா தலைநகருக்கு சொல்லலாம்,,தலைநகருக்கேன்னா ?
  சிலர் அப்படி உ(தி)நனைத்தான் செய்கிறார்கள்..
  சமீபத்தில் ஒன்று படித்தேன்..ஒருவன் உண்ணும் உணவின் அளவின் படியே அவன் வாழ்நாள் அமைகிறதென..சரியா சார்...?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

   Delete
 7. ஜி இங்கு பிஎஸ் என் எல் அப்படித்தான் ஆனால் பரவாயில்லை. அவ்வப்போது போகும். ஆனால் ஃபோட்டான் இங்கும் கொள்ளைதான்...இப்போது ஏர்டெல் 4ஜி சிலர் உபயோகிக்கின்றனர். அது நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். தெரியவில்லை போகப் போகத் தெரியும். ஏனென்றால் அப்போதுதானே டெக்னாலஜியினால் இவர்கள் கொள்ளை அடிக்க முடியும்..

  அந்த நாலுகால்களுக்கு பிஸ்கெட் போட்டுவிட்டால் போதும் அடங்கி விடுவார்கள்...ரேபிசாகத் தெரியவில்லை. ரேபிஸ் என்றால் இப்படி இருக்காது..சில சமயம் வண்டியிலிருந்து டீசல், பெட்ரோல் புகை வந்தாலும் அவர்களுக்குப் பிடிக்காது. மிகவும் வேகமாகத் திடீரென்று ஓட்டினாலும் புதியவர்கள் என்றால் இல்லை அவர்கள் உடையிலிருந்து ஏதேனும் வாடை வந்தாலும் பிடிக்காது....ரொம்பக் குறைத்தால் ப்ளூக்ராஸிற்குத்தான் சொல்ல வேண்டும். அவர்கள் பரிசோதிப்பார்கள்..

  சாப்பிடுபவர் ஒருவேளை சர்க்கரைவியாதி உள்ளவராக இருந்து அவருக்கு யாராவது அடிக்கடிச் சாப்பிட வேண்டும் என்று சொல்லியதைத் தவறாக எடுத்துக் கொண்டிருப்பார் போலும்!!

  அனைத்தையும் ரசித்தோம் ஜி..

  கீதா


  ReplyDelete
  Replies
  1. அப்படி சாப்பிட்டவருக்கு சர்க்கரை வியாதி இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. மும்பையில் இரவு பதினோரு மணிவரை அலட்டிக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் நாய்கள், அப்புறம் சிலுத்திகிட்டு எழும்பி போறவாரவனை வம்புக்கு இழுக்கும், ஏரியாக்காரனை ஒன்னும் செய்யாது, பைக்கில் போறவன் பாடும், பார் போயிட்டு லேட்டா வீட்டுக்குப் போறவன் பாடும் திண்டாட்டம்தான், குடிமகன்கள் பதினோரு மணிக்கு முன்பாக வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கமாகி விட்டது இங்கே !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 9. நாய்கள் எதையாவது பைக் மோதி இருக்கும் அதைப்பார்த்த அந்த நினைபே நாய்களை பைக்கைத் துரத்தச்செய்யுமாம் தண்ணீர் அடிப்பவர்களுக்கு இந்த நாய்கள்மேல் பாசம் அதிகம் இருக்கும்போலிருக்கிறது நானும் பார்த்திருக்கிறேன் இடைவேளைக் குறைவில் கொஞ்சம் கொஞ்சமாக உண்ணச் சொல்லி மருத்துவர் அட்வைசாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது! இணைய இணைப்பு சரியாக கிடைக்கட்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 11. கதம்பம் நன்று ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. அனைத்தும் ரசித்தேன்.

  இப்போதெல்லாம் காலை வேளையில் நடைப் பயிற்சி செய்ய முடிவதில்லை. தெருவுக்குத் தெரு நாய்களின் தொந்தரவு தான்! கையில் கற்கள் எடுத்துக்கொண்டு சிலர் போவதுண்டு. இப்படி துரத்திக்கொண்டே ஓடி வந்தால் அவ்வளவு தான்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 13. அனைத்தையும் இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. அருமையான காட்சிகள் என் கண் முன் நிழலாடி சென்றன ஐயா.நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!

   Delete
 15. #எத்தனை சாப்பிட்டாலும் அவருக்கு ஒத்துக் கொள்கிறதே!#
  டாக்டர் ,அவருக்கு சர்க்கரை உள்ளதால் ஒரே நேரத்தில் மொத்தமாய் சாப்பிடக்கூடாது என்று சொல்லி இருப்பாரோ :)

  ReplyDelete
  Replies
  1. சர்க்கரை நோய் அவருக்கு இல்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 16. சிறப்பான தொகுப்பு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 17. முகப்புத்தக இற்றைகள் தொகுப்பு சிறப்பு அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....