வியாழன், 3 மார்ச், 2016

உள்ளங்கையளவு பாவ்-பாஜி – விமானத்தில்!

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 2 
[பகுதி 1 இங்கே!]

படம்: இணையத்திலிருந்து....

ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கப்படும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செல்ல முடிவாகிவிட்டது. நான் தில்லியிலிருந்து இம்ஃபால் செல்ல ஏர் இந்தியாவின் விமானத்தில் தான் முன்பதிவு செய்திருந்தேன்.  தில்லியிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமானங்கள் பெரும்பாலும் Terminal 1-லிருந்து தான் புறப்படும். ஏர் இந்தியாவின் விமானம் மட்டும் புதிய தளமான Terminal-3-லிருந்து தான் புறப்படும்.  எனது வீட்டின் அருகிலேயே Terminal 3 செல்ல நேரடியாக Airport Express Metro இருப்பதால், அதில் செல்வது தான் வசதி. வாடகைக் கார் என்றால் கிட்டத்தட்ட 500 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். மெட்ரோவில் 80 ரூபாய் மட்டுமே! அதிகம் Luggage இல்லை எனில் மெட்ரோவில் பயணிப்பதே நல்லது!

பயணச் சீட்டையும், அடையாள அட்டையையும் காட்டிய பிறகு விமான நிலையத்திற்குள் என்னை அனுமதித்தார்கள். ஏர் இந்தியாவின் அலுவலகத்திற்குச் சென்று Boarding Pass வாங்கிக் கொண்டேன் – ஜன்னலோர இருக்கையே கிடைத்தது – கேட்காமலேயே!  வசதி தான் – நிம்மதியாக தொந்தரவு ஏதுமின்றி அமர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியபடியே பாதுகாப்புச் சோதனைக்கான இடத்தினை நோக்கி முன்னேறினேன். அங்கே இருந்த காவல்துறை நண்பர் என் பெயரையும் போகுமிடத்தினையும் பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வி – “பணிபுரிவது தில்லியில் என்றாலும், நீங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன்… நீங்கள் இம்ஃபால் செல்லும் நோக்கம் என்னவோ?”

அவர் இந்த கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமில்லை! அவருக்கு ஆர்வம் எதற்கு என்றால் அவர் மணிப்பூரைச் சேர்ந்தவர்! அவரிடம் ”நான் உங்கள் ஊரைச் சுற்றிப் பார்க்கும் எண்ணத்துடன் பயணிக்கிறேன்” என்று சொன்னவுடன், ”எங்கள் ஊரில் பார்க்க நிறைய இடங்கள் உண்டு. நிச்சயம் அவை உங்களுக்கும் பிடிக்கும்” என்று சொல்லி Boarding Pass-ல் Security Checked என்று Stamp செய்து கொடுத்து “உங்கள் பயணம் மகிழ்ச்சியுள்ளதாக அமையட்டும்” என்று வாழ்த்தி அனுப்பினார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்து நானும் முன்னேறினேன்.

போகப்போவது இம்ஃபால் என்றாலும், நான் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த விமானம் முதலில் அசாம் மாநிலத் தலைநகரான திஸ்பூர் இருக்கும் கௌகாத்தி நகருக்குச் சென்று அதன் பிறகு இம்ஃபால் செல்லும். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டும். அதைத் தவிர கௌகாத்தியில் சில நிமிடங்கள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிக் கொண்டு செல்லும்.  அதனால் விமானத்தில் கௌகாத்தி செல்லும் அசாம் மாநிலத்தவர்கள் மற்றும் மணிப்பூர் மாநிலத்தவர்கள் இருவருமே இருந்தார்கள் – என்னைத் தவிர வேறு யாரும் தமிழர் இல்லை! – Odd man out!

படம்: இணையத்திலிருந்து....

மற்ற இந்திய விமானங்களில் இளைஞர்களும் இளைஞிகளும் பணிபுரிய, ஏர் இந்தியாவில் இன்னமும் ஆரம்ப காலத்தில் சேர்ந்தவர்களே பணிபுரிகிறார்கள் போலும் – வந்திருந்த Air Hostess மூன்று பேருமே நாற்பதைக் கடந்தவர்கள் போலும் – வயதைக் குறைத்துக் காட்ட அதிகமான மேக்கப் செய்திருந்தார்கள்! கடமைக்கு பாதுகாப்பு அறிவிப்புகளைச் சொன்ன பிறகு வேலையை ஆரம்பித்தார்கள்.  ஏர் இந்தியா விமானங்களில் இன்னமும் உணவு தருகிறார்கள் – பாவ் பாஜி, Pudding, Tea என உணவு – அதைச் சாப்பிடுவதற்கு சாப்பிடாமலேயே இருந்திருக்கலாம் எனத் தோன்றியது!

படம்: இணையத்திலிருந்து....

அதிலும் அந்த பாவ்-பாஜி! இவ்வளவு சிறிய பாவ் வேறு எங்கும் பார்க்க முடியாது. உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவிற்கு பாவ் – ஏர் இந்தியா விமானத்தில் தருவதற்காகவே தயாரிப்பார்கள் போலும்! அதை இரண்டாகக் குறுக்கே நறுக்கி வெண்ணை வேறு தடவ வேண்டும் – வெட்டுவதற்குக் கொடுக்கும் கத்தியோ வெண்ணையைக் கூட வெட்டாது!  தேநீர் பற்றிச் சொல்லாது இருப்பது மேல் – சூடும் இல்லாமல், சாதாரணமாகவும் இல்லாமல் ஏதோ குடிப்பது போல இருக்கும்! இப்படி ஒரு உணவினைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி சாப்பிடுவதைப் பார்க்க முடிந்தது – காசு இதுக்கும் சேர்த்து தானே கொடுத்துருக்கோம்! வாங்கி சாப்பிட்டு வைப்போம்!

அனைவருமே அவரவர் மொழியில் பேசிக்கொண்டிருக்க, நான் அனைத்தையும் கேட்டபடி அமர்ந்திருந்தேன். எப்படியும் புரியப்போவதில்லை! எதையாவது கேட்டு வைப்போமே! ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன் புற இருக்கையின் முதுகில் ஒரு சிறிய திரை – பாடல்கள், படங்கள் பார்க்க விரும்பினால் பார்க்கலாம் – அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாது காதில் wire சொருகிக் கொண்டு கேட்கலாம்! என் அதிர்ஷ்டம் – எனக்கு முன் இருந்த திரை வேலை செய்யவில்லை.  பக்கத்து இருக்கையில் இருந்தவர் ஏதோ படம் பார்த்து, வசனம் காதில் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கோ மௌன மொழிப்படம் பார்க்க விருப்பமில்லை! மற்ற நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு விமானம் கௌகாத்தி விமான நிலையத்தில் தரையிரங்கியது. அங்கே இறங்க வேண்டியவர்கள் இறங்கியபிறகு புதிய பயணிகள் விமானத்திற்குள் வந்தார்கள்.  அனைவருமே மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் – பெரும்பாலான மணிப்பூர் வாசிகள் விஷ்ணு பகவானைத் துதிப்பவர்கள் – வெள்ளை நிறத்தினை அதிகம் விரும்புபவர்கள் போலும்… பல பெண்கள் வெள்ளை மேலாடை உடுத்தியிருந்தார்கள். அனைவரும் அமர்ந்து கொள்ள கௌகாத்தியிலிருந்து விமானம் புறப்பட்டது. 

லோக்டக் ஏரி

கிலோ கணக்கில் பஞ்சுப் பொதிகளை கொட்டி வைத்தது போல வானம் முழுவதும் வெண்பஞ்சு மேகங்கள்… ஜன்னல் வழியே அவற்றைப் பார்த்து ரசித்தபடியே அமர்ந்திருந்தேன். கேமரா பை மேலே இருந்ததால் படம் எடுக்க முடியவில்லை. கண்களாலேயே ரசித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்ஃபால் நகரில் தரையிறங்கத் தயார் என்று விமானி அறிவித்துக் கொண்டிருந்தார்.  இம்ஃபால் நகரினை நெருங்கும்போதே லோக்டக் ஏரியைப் பார்க்க முடிந்தது.  அந்தக் காட்சி மிக அழகாய் இருந்தது.  ஏரியின் அழகைப் பார்த்தபடியே இருக்க, விமானம் தரையிறங்கியது.

மிகச் சிறிய விமான நிலையம் தான் – விமானத்தில் இறங்கி வெளியே சில அடிகள் நடந்தால் விமான நிலையத்தின் பின்புறக் கதவுகள் வழியே உள்ளே வந்துவிடலாம்! தில்லி, சென்னை போல நீண்ட தூரம் நடக்கவோ, பேருந்தில் பயணிக்கவோ அவசியம் இல்லை.  என்னுடைய Luggage வரும் வரை காத்திருந்தேன். இருப்பது ஒரே ஒரு Belt தான் என்பதால் மெதுவாக வந்து கொண்டிருந்தது. என் உடைமைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தினை விட்டு வெளியே வர, சில நிமிடங்கள் முன்னர் வந்து சேர்ந்த கேரள நண்பர்கள் அங்கே காத்திருந்தார்கள்.

கேரளத்திலிருந்து வந்ததில் பிரமோத் எனது நண்பர். மற்ற மூவரில் சுரேஷ் என்பவரை மட்டும் முன்னமே அறிவேன் – எங்களுடன் அலஹாபாத், வாரணாசி பயணத்தில் வந்திருக்கிறார்.  மற்ற இருவர் – நசீருத்தீன் மற்றும் சசிதரன் ஆகிய இருவரையும் முதல் முறை சந்திக்கிறேன் – அடுத்த பதினைந்து நாட்களும் நாங்கள் ஐவரும் ஒன்றாக இருக்கப் போகிறோம் – ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆன பிறகு விமான நிலையத்தின் வெளியே வந்தோம்.

பயணத்திற்கு முன்னரே இந்த ஊரில் தங்குவதற்கு இடம் முன்பதிவு செய்ய முயன்றோம் – அதில் சில சிக்கல்கள் – எங்கள் முயற்சிகள் பயன் தரவில்லை – நேரடியாக அங்கே சென்ற பிறகு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என விட்டிருந்தோம்…..  என்ன சிக்கல்கள், எங்களுக்கு தங்க இடம் கிடைத்ததா இல்லையா, ஆகிய விஷயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.


புது தில்லி.

42 கருத்துகள்:

 1. பாவ் பாஜி சாப்பிட எனக்கு(ம்) ஏனோ பிடிப்பதில்லை. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பயணவிவரம்அருமை ஐயா
  தொடர்கிறேன்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. பயணம் ஆரம்பித்தாச்சு. மணிப்பூர் புடவையில் தான் பார்த்திருக்கேன்.

  நல்ல பயணமாக அமைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 4. அருமையான தொடக்கம்....அடுத்தக் குறிப்புகளை அறிய ஆர்வம். தொடர்கின்றோம் ஜி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 5. ஏர் இந்தியாவில் என்றுமே உணவு நன்றாக இருக்காது. அவ்வளவு ஏன் இன்டெர்னாஷனல் ஃப்ளைட்டுகளில் இங்கிருந்து புறப்படுவனவற்றிலும் உணவு சுமார் தான். வெளி நாட்டிலிருந்து வரும் போது நம் இந்திய உணவே கூட நன்றாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. உடன் பயணிக்கிறோம்
  வெளி நாட்டு விமானங்களில் கூடுதல் கவனம் செலுத்தி
  உள்ளூர் விமான மார்க்கங்களில்
  ஒரு அசட்டையான போக்கையே தொடர்கிறது
  நமது இந்தியா என்பது அனைவரின் எண்ணமும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 7. பயண அனுபவம் அழகாகத் தொடங்கியிருக்கிறது.
  மணிப்பூர் நான் சென்றதில்லை. உங்கள் வாயிலாக அதைப்பார்த்து ரசிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 8. தற்போதெல்லாம் விமானப்பயணங்களுக்கு budget airlines அதிகம் வந்து விட்டதால் பெரும்பாலும் உள் நாட்டு, வெளி நாட்டு விமானங்களில் உணவின் தரம் நன்றாக இருப்பதில்லை. அதனால் நம் மக்கள் இப்போதெல்லாம் வீட்டிலிருந்தே உணவு எடுத்து வந்து விடுகிறார்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதெல்லாம் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருபவர்கள் அதிகம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 9. இந்தியன் ரயிலிலேயே உணவு ருசிக்காது ,பறக்கும் விமானத்தில் எப்படி ருசியாக இருக்கும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 10. எனது மணிப்பூர் பயணத்தின்போது உங்களுடன் பயணிக்க முடியவில்லை. இப்போது உங்களுடன் பயணிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   உங்களுடன் வர இயலவில்லை! வரும் நாட்களில் எங்காவது செல்லலாம்!

   நீக்கு
 11. பயணத்தின் ஆரம்பமே சுவையாக அமைந்திருக்கிறது ...தொடர்கிறேன்

  மாலி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாலி ஜி!

   நீக்கு
 12. வெளிநாடுகளில் நிறையப் பயணித்திருக்கிறேனேதவிர, வடகிழக்குப்பகுதியில் உள்ளே புகுந்து இன்னும் விளையாடவில்லை.சிக்கிம்,வடகிழக்கு மாநிலங்களில் பயணிக்க ஆர்வம் மிக உண்டு. மணிப்பூர் பயணம் பற்றிய எக்ஸைட்மெண்ட்டைத் தூண்டியிருக்கிறீர்கள். ஆவலுடன் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் சிக்கிம் இன்னும் செல்லவில்லை..... அங்கே செல்லும் திட்டமுண்டு. பார்க்கலாம் எப்போது போகமுடிகிறது என!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி!

   நீக்கு
 13. உணவுக்கும் சேர்த்தே பணம் கட்டுவதால் கொடுப்பது எதையும் தின்று பார்க்க வேண்டி இருக்கிறதுஎன்னுள் பல கேள்விகள் எழுந்தாலும் தொடரைப்படிக்கும் போது பல கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கேள்விகள் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

   தங்களது வருக்கைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 14. ஏர் இந்தியா'வுக்கென தனியாக ஃப்ளைட் கிச்சன் இருக்கு அண்ணே, பாவ பாஜி அங்கேதான் செய்வார்கள், வெளியிலிருந்து ஒரு சாப்பாடும் அனுமதி இல்லை...பயணிகளுக்கு வயிற்றுக்கு சிரமம் குடுக்காமல் இருக்க செய்யும் நடபடி அது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃப்ளைட் கிச்சனோ, வெளியிலிருந்து வந்ததோ எல்லாமே சாப்பிட முடியாதபடி தான் இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   நீக்கு
 15. கிலோ கணக்கில் பஞ்சுப் பொதிகளை கொட்டி வைத்தது போல வானம் முழுவதும் வெண்பஞ்சு மேகங்கள்…

  வர்ணனை அருமை .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   நீக்கு
 16. தங்கும் இடம் கிடைத்ததா என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 17. சுவாரஸ்யமாக இருக்கிறதே பயணம். நீங்கள் சொல்வது விமானத்தில் கொடுக்கும் உணவு பெரும்பாலும் நம் சுவைக்கு தகுந்த மாதிரி கிடைப்பதேயில்லை.ஆனாலும் சாப்பிட்டு வைக்க வேண்டியது தான்.வேறென்ன செய்வது ?
  உங்கள் தமிழ் ஃபான்ட் நன்றாக இருக்கிறது. வேறு பலரின் பதிவுகளிலும் இதைப் பார்த்திருக்கிறேன். எப்படி செய்கிறீர்கள் என்பது தான் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது விஜயா எனும் ஃபாண்ட்.... நீங்களும் பயன்படுத்தலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 18. இடம் கிடைத்ததா? தமிழ் நாட்டுக்குள்ளே பல இடங்களுக்குச் செல்ல நம்மில் பலர் திணறுகிறோம். உங்களின் நிலையை நினைக்கும்போது சற்றே ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 19. பயணத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு

 20. //அசாம் மாநிலத் தலைநகரான கௌகாத்தி சென்று//

  அஸ்ஸாம் மாநிலத்தலைநகர் திஸ்பூர் அல்லவா? கௌஹாத்தி என்பது அஸ்ஸாமின் பெரிய நகரம் என்று படித்திருக்கிறேன். தெளிவுபடுத்தவும்.

  இம்பாலில் தங்குமிடம் பெற நீங்கள் பெற்ற அனுபவங்கள் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திஸ்பூர் தான் தலைநகர் - அச்சிறிய இடமும் கௌகாத்தி நகரின் உள்ளேயே இருக்கிறது. தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 21. //வெட்டுவதற்குக் கொடுக்கும் கத்தியோ வெண்ணையைக் கூட வெட்டாது! // :D :D

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலாமகன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....