எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 20, 2016

முகம் காட்டச் சொல்லாதீர்.....

[படம்-1 கவிதை-2]

இந்த புதன் கிழமை கீழுள்ள புகைப்படம் வெளியிட்டு அதற்கு நண்பர் செல்வக்குமார் எழுதிய கவிதையையும் வெளியிட்டிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கும். கவிதையைப் படித்த எனது தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள் இன்று எனக்கு ஒரு கவிதையை எழுதி அனுப்பி இருக்கிறார்.  அந்த புகைப்படமும், அவர் எழுதிய கவிதையும் இதோ.....  இன்றைய பதிவாய்....

புகைப்படம்-1:எடுக்கப்பட்ட இடம்:  திண்டுக்கல் அருகே சிறுமலை எனும் சிற்றூர். திண்டுக்கல் நகரிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சிறுமலை பிரிவு எனும் இடம் உண்டு. அந்தப் பிரிவுச் சாலையில் 18 கொண்டைமுனை வளைவுகளைக் கடந்து சென்றால் சிறுமலை எனும் மிகச் சிறிய ஊர் இருக்கிறது. அங்கே சென்ற போது மலைப்பாதையில் ஒரு குதிரையின் மீது விறகுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். படத்திற்கு நண்பர் பத்மநாபன் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-2:

முகம் காட்டச் சொல்லாதீர்....

முகம் காட்டச் சொல்லாதீர்! என்னை
முகம் காட்டச் சொல்லாதீர்!

கவின் மொட்டாய் முகிழ்ந்த போதே
கன்னியின் கூந்தலிலே கமழ்ந்திடுவேன்,
காதலனைக் கவர்ந்திடுவேன் என்று
கனவு கண்ட நறுமண மலர் ஒன்று,
காலையில் மலர்ந்தபோது
காசுக்காய் தன்னை விற்ற 
கணிகையின் கல்லறையில் ஓய்ந்ததுபோல்,
ஓய்ந்துபோய் நிற்கின்றேன்!

முகம் காட்டச் சொல்லாதீர்! என்னை
முகம் காட்டச் சொல்லாதீர்!வானின்று வீழுமுன்பே, காத்திருக்கும் சிப்பி வாய் புகுந்து
சீரான முத்தாவேன், சிங்காரச் சொத்தாவேன் என்று
கனாக் கண்ட கார்மேகத் துளி ஒன்று,
கார்மழையாய் பொழிந்த போது
கடலிலும் வீழாமல், காத்திருந்த கழனியிலும் வீழாமல்
கற்ற மனிதரும், கல்லா மனிதரும் சேர்ந்தே சீரழித்த
கூவம் நதியில் கூறு கேட்டு ஓய்ந்தது போல்
ஓய்ந்துபோய் நிற்கின்றேன்!

முகம் காட்டச் சொல்லாதீர்! என்னை
முகம் காட்டச் சொல்லாதீர்!

புல்லாய் முளைத்தபோழ்தே
வானுயர வளர்ந்து பின்பு ஏணியாய் மாறிடுவேன்
ஏற்றம்பெற உதவிடுவேன் என்று ஓயாமல் கனாக் கண்ட
ஒற்றை மூங்கிலொன்று, ஒய்யாரமான போது
மதுபானச் சாக்கடையில், மதி கெட்டு, மிதி பட்டு
மூச்சடைத்த மானுடனை சுமந்து
சுடுகாட்டில் ஓய்ந்தது போல்
ஓய்ந்துபோய் நிற்கின்றேன்!

முகம் காட்டச் சொல்லாதீர்! என்னை
முகம் காட்டச் சொல்லாதீர்!

கருவாய் இருந்த போதே நானும் கனவு கண்டேன்!
நீலவேணிக் குதிரையாவேன்! காலதேவன் குதிரைபோலக்
காற்றினிலும் கடுகிச் செல்வேன்! ஆலமர நிழலினிலே,
நெஞ்சம் நிமிர நிற்பேன்! திமிரில் கிளர்ந்து நிற்பேன்!
கனவும் கலைந்தது! நனவும் கசந்தது!
அடிமை ஆகிடவா  ஆண்டவன் எனைப் படைத்தான்!
அடிமை ஆனதனால் அழகு முகம் தொலைத்தேன்!
அழகு முகம் தொலைந்ததனால் -

முகம் மட்டும் காட்டச் சொல்லாதீர்! என்னை
முகம் மட்டும் காட்டச் சொல்லாதீர்!

     ஆர்.ஈ. பத்மநாபன்

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் முதலாம் படமும் படத்திற்கான இரண்டாம் கவிதையாக நண்பர் பத்மநாபன் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? நண்பர் பத்மநாபன் தனியாக வலைப்பூ வைத்தில்லை என்றாலும், எனது பதிவுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துரைகள் எழுதுவதைப் பார்த்திருக்கலாம்....

இதே படத்திற்கேற்ற கவிதையை நீங்களும் எழுத நினைத்தால் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு ( venkatnagaraj@gmail.com ) அனுப்பி வைத்தால் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன்.  கவிதை எழுத விருப்பம் இருந்தால் உங்களது மின்னஞ்சலிலிருந்து எனக்கு அனுப்புங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து....32 comments:

 1. அடடே.... அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஆஹா..வித்தியாசமான கவிதை..வாழ்த்துகள் கவிஞருக்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.....

   Delete
 3. அருமையான ஊக்கம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 4. மிக அருமையான கவிதை! வாழ்த்துகள் திரு பத்மநாபன்! வெங்கட்ஜி தங்களுக்கும் நன்றி. அருமையான முயற்சி ஜி. வாழ்த்துகள் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. கவிதை அருமையாக உள்ளது ... http://ethilumpudhumai.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 6. அருமையான கவிதை...
  கவிஞருக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப்.

   Delete
 7. கவிஞருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. புதுக்கவிஞர்களை உருவாக்க நல்ல வாய்ப்பு. தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. கவிதையை ரசித்தேன் ஜி ஆர்.ஈ. பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete

 10. மாறுபட்ட கோணத்தில் புனையப்பட்ட கவிதையை இரசித்தேன்! வாழ்த்துக்கள் திரு பத்மநாபன் அவர்களுக்கு! பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. அருமையான வரிகளை இரசித்தேன் பத்மநாபன் ஐயாவுக்கு வாழ்த்துகள்.
  தங்களின் வலையின் மூலம் கவிஞர்கள் மலர வாழ்த்துகள்.நல்ல முயற்சி தொடருங்கள் தொடர்கிறேன் ஐயா.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்....

   Delete
 12. சிறப்பான கவிதை! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. கழுதையே தன் அகத்தை காட்டிய பின் எதற்கு முகம் காட்டணும்:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. மிக அருமை. வலி மிக்க வரிகள். அந்த ஜீவனுக்குப் பேச வாயிருந்தால் இப்படித்தான் சொல்லி இருக்கும். மிக நன்றி நண்பருக்கு வெங்கட். படமும் அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 15. கவிதை அருமை. வலைப்பூவிலோ அல்லது முக நூலிலோ அவர் தொடர்ந்து எழுத வேண்டுகிறான். வாழ்த்துகள் பத்மநாபன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் ஜி!

   Delete
 16. எனது கவிதையை பதிவிட்ட தங்களுக்கும், படித்து கருத்துரையிட்டோர்க்குதற்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. கவிதை அனுப்பி வைத்ததற்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி... தொடர்ந்து எழுதுங்கள்....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....