செவ்வாய், 3 மே, 2016

ஐஸ்க்ரீம் அலப்பறைகள்

படம்: இணையத்திலிருந்து....

ஐஸ்க்ரீம் யாருக்குத் தான் பிடிக்காது? என் நண்பர் ஒருவருக்கு விதம் விதமான ஐஸ்க்ரீம் சாப்பிட விருப்பம் இல்லை. குச்சி ஐஸ் இருந்தால் போதும். ஆனால் அதில் ஒரு கண்டிஷன் கூடவே உண்டு! ஒன்று போதாது! ஒன்றுக்குப் பின் ஒன்றாக குறைந்தது இரண்டு குச்சி ஐஸாவது சாப்பிட வேண்டும்.  அதற்கு மேலும் சாப்பிடலாம் – தவறில்லை என்பது அவரது எண்ணம்.

படம்: இணையத்திலிருந்து....

தில்லியில் Mother Dairy, Vadilal, Amul, Kwality Walls, Nirulas என விதம் விதமாக ஐஸ்க்ரீம்கள் கிடைத்தாலும், தள்ளு வண்டிகளில் வைத்திருக்கும் குல்ஃபிக்கு இருக்கும் வரவேற்பு சற்றே அதிகம்.  வகை வகையான குல்ஃபிக்களை அதன் குப்பிகளில் இருந்து வெளியே எடுத்து குச்சியில் ஒரு Tissue சுற்றி கொடுப்பார் தள்ளுவண்டிக்காரர். இரவு உணவு உண்டபிறகு காலாற ஒரு நடைநடக்கும் பலர்   இந்த குல்ஃபி ஐசை ருசித்தபடியே உலாத்துவதை நீங்கள் பார்க்க முடியும்.

நேற்று திருவரங்கத்தில் இருக்கும் ஒரு அருண் ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்றிருந்தேன் – திருவரங்கம் வரும்போதெல்லாம் அங்கே குடும்பத்துடன் செல்வது வழக்கம். அங்கே எங்களுக்கு முன்னதாக ஒரு அம்மாவும் அவரது மகனும் இருந்தார்கள்.

மகன் கையில் ஒரு அரை கிலோ Blackcurrant டப்பி! ஒற்றை ஆளாக அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.  நடுவிலே புறையேற அம்மா கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீரை புகட்டி நெஞ்சைத் தடவிக் கொடுக்க, மகன் நடுநடுவே ஐஸ்க்ரீமை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். “எதுத்துக்கிட்டு வந்தாலும், நான் உன்னை விட மாட்டேன்!”  என்று அதகளம்!


 படம்: இணையத்திலிருந்து....

நான் கடைக்காரரிடம் எங்களுக்குத் தேவையானவற்றை – ஒரு சண்டே, ஒரு கசாட்டா மற்றும் ஒரு இடாலியன் டிலைட் – சொல்லி வாங்கிக்கொண்டேன்.  அட்டைப் பெட்டிக்குள் இருந்த கசாட்டாவைப் பிரிக்கு முன்னரே இது எப்படி இருக்கும்?என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். பதில் ஏதும் சொல்லாது, அட்டையைப் பிரித்து மகளிடம் தந்தேன்.  கசாட்டாவைப் பார்த்த பின்னர் அந்தப் பெண்மணி “அட இது இப்படி இருக்குமா? நடுநடுவில ஐஸ்க்ரீம் இருக்குமா? என பல கேள்விகளை எழுப்பினார்.  கூடவே மற்ற இரண்டையும் பற்றிய கேள்விகளும் வந்தன. 


அங்கே சத்தமில்லாமல் மகன் ஐஸ்க்ரீமை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். அரை கிலோ ஐஸ்க்ரீம் – சிறிய ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால் கொஞ்சம் நேரம் ஆகத்தானே ஆகும்? அதற்குள் ஐஸ்க்ரீம் உருகி இருந்தது. நடுநடுவே ஸ்பூனிலிருந்து சில சொட்டுகள் சிறுவனின் சட்டையில் விழ, அம்மா அதனை வழித்தெடுத்து மகனின் வாயில் அப்பிக் கொண்டிருந்தார். குழி இல்லாத தட்டை ஸ்பூனால் அதைச் சாப்பிடுவது கடினமாக இருந்தது அச்சிறுவனுக்கு.  சிறுவனின் அம்மாவிடம் அதற்கும் வழி இருந்தது. அப்படியே டப்பாவின் ஓரத்தில் வாயை வைத்து குடித்துவிடடா மகனே என்று சொன்னார். 

மகனும் அப்படியே செய்து முடிக்க, டப்பாவில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த கருப்பு மின்சாரத்தை விட்டுவிட மனசில்லை அம்மாவுக்கு! இருக்கவே இருக்கு கையில் தண்ணீர் பாட்டில். அதிலிருந்து ஐஸ்க்ரீம் டப்பாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு கலக்கு கலக்கி அதையும் மகனுக்கு புகட்டி விட்டார்! கடைசியாக டப்பாவில் சில திராட்சைத் துண்டுகள் டப்பாவின் அடியில் கிடக்க, கையை விட்டு அவற்றை எடுத்து மகனுக்கு ஊட்டி விட்டார். டப்பா சுத்தமாச்சு! ஐஸ்க்ரீமும் வீணாகல!  In fact, ஐஸ்க்ரீம் இருந்த அடையாளமே இல்லாமல் போனது!

பிளாஸ்டிக் டப்பாவையும் அவர் விட்டுவிடவில்லை.  அது அவரின் மஞ்சள் பைக்குள் அடைக்கலமானது! இன்னும் பல நாட்களுக்கு அவர் வீட்டில் அந்த ஐஸ்க்ரீம் டப்பா இருக்கும். ப்ளீஸ் என்னை விட்டு விடேன் என்று கதறினாலும் கதறலாம்!

இந்த அலப்பறைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், நாங்கள் மூவருமே ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம். அதன் பிறகு தான் அவர்கள் வெளியே வந்தார்கள் – சைக்கிளைத் தள்ளிக் கொண்டு எங்கள் பின்னாலேயே வர – அவர்கள் பேச்சைக் கேட்க முடிந்தது! அடுத்த கடையில் – ஜூஸ் கடை – பார்த்த உடனே அம்மா மகனிடம் கேட்டது “ஜூஸ் சாப்பிடறயா கண்ணு?

“Please give me a break” மகனின் வயிறு அலறியது தேர்தல் பிரச்சாரத்தினையும் மீறிக் கேட்ட உணர்வு!

வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....


டிஸ்கி: எங்கே இத்தனை நாட்களாக பதிவுலகம் பக்கம் காணவில்லையே என அன்புடன் விசாரித்த நண்பர்களுக்கும், மனதில் நினைத்துக் கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.  இனிமேலும் காணாது போக இருக்க வேண்டும்!

56 கருத்துகள்:

  1. லேட்டா வந்தாலும் ஜில்லுனு வந்துட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  2. இப்படியும் ஒரு அம்மாவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  4. ஜஸ்கீரிம் பற்றி ஒரு பதிவு போட்டுவிட்டு இப்ப என்னை ஜஸ்கிரிம் சாப்பிட வைச்சிட்டீங்களே நல்ல வேளை வீட்டில் ஸ்டாக் இருந்துச்சு இல்லைன்னா இந்த இரவு நேரத்தில் சாபம் விட்டு இருப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை ஸ்டாக் இருந்ததே! உங்கள் சாபத்திலிருந்து தப்பித்தேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  5. திருவரங்கத்திற்கு வந்துள்ளீர்களா ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. முடிந்தால் சந்திப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. நல்வரவு ஶ்ரீரங்கத்திற்கு. எப்போ வந்தீங்க? எங்கே ரொம்ப நாட்களாக் காணோம்? என்னோட அலைபேசி புதுசுக்கு மாறினதில் பழைய அலைபேசியில் இருந்த எண்கள் எல்லாம் அதோடயே போயிடுச்சு. எடுக்க முடியலை. எடுக்கிறதுன்னா அதுக்கு பாட்டரி புதுசாப் போடணுமாம். அந்த பாட்டரியே கிடைக்கலை! சுத்தம்! அதான் தொடர்பு கொள்ள முடியலை1 (இல்லைனா ரொம்பப் பேசிடுவியாக்கும்னு ம.சா. சொல்லிக்காட்டுது!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நாளாச்சு..... பிறகு அழைக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. இந்த மாதிரிக்குழந்தைகளுக்கு இடைவெளியே இல்லாமல் சாப்பிடக் கொடுப்பவர்கள் எங்க வீட்டிலேயே உண்டு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. >>> இன்னும் பல நாட்களுக்கு அவர் வீட்டில் அந்த ஐஸ்க்ரீம் டப்பா இருக்கும். ”ப்ளீஸ் என்னை விட்டு விடேன்” என்று கதறினாலும் கதறலாம்!..<<<

    அது தானே!.. காசு கொடுத்து வாங்கி விட்டு கடையிலேயே விட்டு விட்டுப் போவதா!..

    ஐஸ் கிரீம் போல குளுகுளு பதிவு..

    நான் விசாரிக்க வில்லை.. ஆனாலும் - மனதில் நினைத்துக் கொண்டேன்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் என்னைக் காணவில்லையே என நினைத்திருப்பீர்கள் என நானும் நினைத்தேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. இடைவெளிக்குப் பின் குளிர்ச்சியான நல்வரவு. பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  10. அழகான டப்பாவுக்காக பன்னத்தனமான ஐஸ்க்ரீமைக் கூட சாப்பிடறவங்க நிறைய இருக்காங்க.

    குல்பியை கையில் பிடித்துக் கொண்டு ராத்திரி பத்து மணிக்கு மேலே கரோல்பாக் அஜ்மல்கான் சாலையில் உலாத்தியது ஞாபகம் வந்து விட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரோல் பாக் அஜ்மல்கான் சாலை நினைவுகளை மறக்க முடியுமா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  11. பதிவிலாவது குளுகுளுப்பு
    இருக்கட்டுமே என
    ஐஸ்கிரீம் பதிவு கொடுத்திருக்கிறீர்கள்
    என நினைக்கிறேன்

    டெல்லி வெய்யில் எப்படி இருக்கிறது ?
    இங்கு கொளுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியிலும் வெய்யில் அதிகம் தான். தற்போது திருச்சி வந்திருக்கிறேன். இன்னும் சில நாட்கள் இங்கே இருப்பேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.

      நீக்கு
  12. வெயிலுக்கு இதமான பதிவு!
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  13. இந்தியா கேட் பகுதியில் பனி கொட்டும் இரவில் நானும் குல்பி சாப்பிட்டு மகிழ்ந்து இருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  14. ஆஹா ஐஸ்கிரீம் திங்கும் ஆசையை கிளறிட்டீங்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடுங்க மனோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  15. ஐஸ்க்ரீம் அலப்பறை ...
    ஐஸ்க்ரீம் சாப்பிட வச்சுட்டீங்களே ஜி...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடுங்க அஜய்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  16. ஐஸ்கிரீமைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே என்று ஆசையாகப் படித்தால், மற்றவர்கள் ஐஸ்கிரீமைச் சாப்பிட்ட லட்சணத்தைச் சொல்லி வெறுப்பை வரவைத்துவிட்டீர்களே.. எந்த உணவையும் சாப்பிடும் முறை உண்டு.

    கசாட்டா எப்போதும் அருமையாக இருக்கும். குல்ஃபி, அதுவும் குச்சியில் இருக்கும் குல்ஃபி அருமை. உங்களுக்கு வெளி'நாட்டில் ஊர் சுற்றும் வாய்ப்பு வரவேண்டும். அங்குள்ள பலவித ஐஸ்கிரீம்களைச் சுவைக்கவும், பார்க்கவும் வாய்ப்பு அதற்குரிய வயதிலேயே வரவேண்டும் என்று விழைகிறேன். நம் ஊரில் உள்ளமாதிரி, கலப்படம் எல்லாம் இல்லாமல், கானடா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தயார் செய்யும் ஐஸ்கிரீம் வகைகள் மிகவும் டேஸ்டியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியிலும் சில வெளிநாட்டு ஐஸ்க்ரீம் கடைகள் உண்டு என்றாலும் அதிலும் கலப்படம் இருப்பதாகத் தான் தெரிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. கோடைக்கு ஜில்லுன்னு,,, ஒரு பதிவு.... வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  18. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெயிலுக்கு ஏற்ற குளுமையான பதிவு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  19. ஹா..ஹா..
    கடைசி வரிகள் சிரிப்பை தந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  20. என் ஐஸ்க்ரீம் அலப்பறை இதோ. எங்கள் வீட்டில் இரு மாமரங்கள் இருப்பது பதிவர்கள் அறிந்ததே அதில் ஒரு மரத்தில் பழங்கள் புளிப்பு. பழங்களை வேஸ்ட் செய்ய மனமில்லை மாம்பழ பல்ப்பை வழித்தெடுத்து அதில் நல்ல காய்ச்சி ஆறவைத்த பாலைக் கலக்கி சிறிது கஸ்டர்ட்பௌடரும் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ஃப்ரீசரில்வைத்து விட்டேன் சும்மா சொல்லக் கூடாது நல்ல மாம்பழ ஐஸ்க்ரீம் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாம்பழ ஐஸ்க்ரீம்.... அட நல்லா இருக்குமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

      நீக்கு
  22. ஜில்லுனு ஒரு பதிவு. பொறாமையா இருக்கு அந்தப் பையன் மீது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

      நீக்கு
  23. பொது இடங்களில் அடுத்தவரை கவர்வது போல் ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் இப்படி பதிவு வரும் என்று அவர்களுக்கு தெரியாது .
    குழந்தைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அவ்வளவுதானே கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  24. ஏனோ எனக்கு ஐஸ் க்ரீம் பிடிப்பதில்லை. இப்படிச் சாப்பிடுபவர்களைக் கண்டால் உள்ளதும் வெறுத்துடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  25. ஆஹா....ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஆசையை தூண்டி விட்டீர்கள். எங்களுக்கு இன்னும் இங்கு கனடாவில், குளிர் தீர்ந்த பாடில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம் ஜி!

      நீக்கு
  26. ஐஸ்கிரீம் (பனிக்கூழ்) அலப்பறையை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  27. "இனிமேலும் காணாது போக இருக்க வேண்டும்!" டிஸ்கியில் உள்ள இந்த வாக்கியம் தவறு போன்று தோன்றுகிறது. "போகாது" என்றிருக்கவேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  28. ஆஹா ஐஸ்க்ரீம்! சில்! இங்கு மழை பெய்கிறது....ஆனால் எப்போதாவதுதான் சாப்பிடுவது. இப்போது தில்லி வந்த போது கடும் வெயிலாதலால் சாப்பிட்டோம். எங்கள் பயணமே கொஞ்சம் இழுபறியில் இருந்ததால் முன்னதாகத் தெரிவிக்க இயலவில்லை. அதனால் தங்களைத்தான் சந்திக்க இயலாமல் போனது. அடுத்த முறை சந்திக்க முயற்சி செய்வோம் வெங்கட்ஜி.

    கீதா: குல்ஃபி பதிவு!! தில்லியில் மட்டும்தான் நிருலாஸ், மதர்டயரி மற்றாவை இங்கும். நிருலாசில் பனானா ஸ்ப்லிட் மிக நன்றாக இருக்கும். பல வருடங்களாகிவிட்டது நிருலாஸ் சாப்பிட்டு. சென்றவருடம் வந்த போது கூட சாப்பிடவில்லை....சாப்பிட்டாலும் சுகர்ஃப்ரீதான் ஆனால் அதில் வெரைட்டீஸ் இங்கு இல்லை.

    என்ன அம்மா அந்த அம்மா ஆச்சரியமாக இருக்கிறது...இப்படியுமா என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்முறை உங்களைச் சந்திக்க இயலவில்லை துளசிதரன் ஜி!.. அடுத்த பயணத்தில் நிச்சயம் சந்திப்போம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....