எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, May 19, 2016

மணிப்பூரும் மாம்பழமும்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 11

படம்: இணையத்திலிருந்து.....

திருவிளையாடல் படத்தில் மாம்பழத்திற்காக நடந்த சண்டையையும், யார் உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் மாம்பழம் என்று தீர்ப்பு சொன்னதையும் உங்களில் பலரும் அறிவீர்கள்.  அம்மையப்பனைச் சுற்றி வந்து பிள்ளையார் மாம்பழம் பெற்றதையும், உலகத்தை மயில் மீதேறி முருகன் சுற்றி வந்து ஏமாந்து போய் பழனியாண்டியாகப்போனதும் நாம் படித்த/பார்த்த கதை....  மணிப்பூரிலும் இப்படி ஒரு கதை உண்டு.  ஆனால் அங்கே மாம்பழம் கிடையாது!  தலைப்பில் மட்டுமே மாம்பழம்....

மணிப்பூரில் வைஷ்ணவம் முக்கிய இடத்தைப் பெறுகிறது என எனது பதிவொன்றில் முன்னர் எழுதி இருந்தேன். அதற்கு முன்னர் அவ்வூர் Meitei இன மக்கள், இயற்கை, விலங்குகள், மூதாதையர்கள், ராஜா-மஹாராஜாக்கள், என பலவற்றையும் கடவுள்களாக வணங்கி வந்திருக்கிறார்கள்.  தங்களைச் சுற்றி இருக்கும் இவை, நோய், மயக்கம், இறப்பு போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் என நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தந்திரம், சடங்குகள், திருவிழாக்கள் இவை மூலம் மாய்பா/மாய்பி என அழைக்கப்பட்ட ஆண்/பெண் பூசாரிகள் தங்களை பேய், பிசாசு போன்றவற்றிலிருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்கள்.

சூரியன், சந்திரன், வானம், நட்சத்திரங்கள், இருட்டு, காற்று, நீர், நெருப்பு, மின்னல், நிலநடுக்கம் ஆகிய அனைத்தையும் கடவுள்களாக வணங்கி இருக்கிறார்கள்.  தங்கள் இனத்தின் முக்கிய கடவுள்கள் என மூன்று பேர்களை – அங்கேயும் மூவர் அணி – நம்புகிறார்கள். அந்த மூவர் அணி – அதிய குரு சிதபா [அ] சோராலேல், அவரது மகன்கள் பகங்க்பா [சந்திரக் கடவுள்] மற்றும் சனமாஹி [சூரியக்கடவுள்] ஆகிய மூவர் தான். இதில் சனமாஹி மூத்தவர், பகங்க்பா இளையவர். இவர்கள் மூவருமே உலகத்தை தோற்றுவித்த தைபங்க் பன்பா மாபு எனும் ஆதி கடவுளின் அவதாரங்கள் என நம்பிக்கை.

சரி மாம்பழம் கதைக்கு வருவோம்.  Meitei இன மக்களின் நம்பிக்கைப் படி அதிய குரு சிதபா, இவ்வுலகில் பிரதான கடவுளாக இருக்க தனது மகன்களில் யாருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு போட்டி வைத்தாராம். தான் மறைந்து கொள்ள இவ்வுலகினை ஏழு முறை சுற்றி வந்து யார் தன்னை முதலில் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் தான் பிரதான கடவுளாக இருப்பார்கள்.....  கடவுளாக இருப்பதிலும் இங்கே போட்டி!

படம்: பகங்க்பா/பப்பல்....

சூரியக் கடவுளான சனமாஹி – மூத்தவர் என்பதை நினைவில் கொள்க – இதோ ஒரு நொடியில் உலகைச் சுற்றி வருகிறேன் என புறப்பட்டுவிட்டார்.  இளையவர் – சந்திரக் கடவுள் பகங்க்பா, தனது அன்னையான இமா லைமாரல் சிதபி அவர்களிடம் சென்று அப்பா எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுவாரே என அப்பாவின் இருப்பிடம் பற்றிக் கேட்க, அவர் அரியணையின் கீழே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லி விட்டாராம்.  உடனே இளையவரான பகங்க்பா அரியணையை ஏழு முறை சுற்றி வந்து அப்பாவைக் கண்டுபிடித்து விடுகிறார். 

உலகத்தினை ஏழு முறை சுற்றி வந்த பிறகு தந்தையைக் கண்டுபிடிக்க வந்த சனமாஹி நடந்த கதையைக் கேட்டதும் பெருங்கோபம் கொள்கிறார். தனது இளைய சகோதரனோடு யுத்தம் செய்கிறார்.  பலத்த யுத்தம் நடக்கிறது. எங்கே உலகமே அழிந்து விடுமோ என்ற பயம் அனைவருக்கும் வருகிறது.  அப்பாவான அதிய குரு சிதபா மகன்கள் இருவரையும் அமைதிப்படுத்தி ஒரு தீர்ப்பு சொல்கிறார் – அது பகங்க்பா [சந்திரன்] இந்த உலகம் முழுவதற்கும் பொதுவான கடவுள், சனமாஹி [சூரியன்] ஒவ்வொரு வீட்டிற்கும் கடவுள் என்பது தான் அந்த தீர்ப்பு. 

படம்: பகங்க்பா கோவில் - கங்க்லா கோட்டை

மணிப்பூர் ராஜா ஒருவரும் பகங்க்பா என்ற பெயரில் இருந்திருக்கிறார் – அவரையும் இவரையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.  இந்த பகங்க்பாவிற்கு ஒரு கோவில் கூட கங்க்லா கோட்டையில் உண்டு.

படம்: வீட்டு வாயிலில் பகங்க்பா-பப்பல்.....

பகங்க்பா மனித உருவம் மட்டுமல்லாது பப்பல் எனும் தெய்வீக உருவிலும் இருந்திருக்கிறார் என்பதும் இவர்களது நம்பிக்கை.  பப்பல் பல வடிவங்களைப் பெற்றிருந்ததாகவும் ஒரு நம்பிக்கை. Meitei இன மக்கள் அவர்களது வீடுகளின் வாயில்களிலும், கொடி, வீடுகள், கோவில்கள் என அனைத்திலும் இந்த பப்பல் குறியீடுகளை பொறித்து வைக்கிறார்கள்.  அப்படி பல குறியீடுகள் இருக்கின்றன.  
எத்தனை எத்தனை நம்பிக்கைகள் – நமது இந்திய தேசத்தில்....  ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கை. பழம்பெரும் தேசமல்லவா....  இப்படி பல விஷயங்களை மணிப்பூர் சென்று வந்த பிறகு தில்லியில் இருக்கும் ஒரு மணிப்பூர் நபரிடம் பேசி, அவரைக் கேட்டு தெரிந்து கொண்ட விஷயங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள்.

வாருங்கள் அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வருவோம். அருங்காட்சியகம் பகுதியில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர். கையில் துப்பாக்கியோடு காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.  பார்க்கும்போதே தென்னிந்தியர் போலத் தெரிந்ததால் பேச்சுக் கொடுத்தோம்.  கர்நாடகத்தினைச் சேர்ந்தவர் – ஆறு மணி நேரமாக அங்கே நின்று கொண்டிருக்கிறாராம்  - அடுத்தவர் வரும் நேரம்தான் – உட்காரவோ, இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளவோ முடியாது.....  கர்நாடகத்தைச் சேர்ந்தவர் மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் இருக்க, மணிப்பூரைச் சேர்ந்தவர் தில்லியில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்...... கடினமான வாழ்க்கை தான்...

என்ன நண்பர்களே, அருங்காட்சியகம், மணிப்பூர் வரலாறு, போன்ற சில விஷயங்களை இந்தப் பதிவிலும், சென்ற பதிவிலும் படித்து ரசித்தீர்களா? அடுத்து எங்கே சென்றோம் என்பதை வருகின்ற பதிவில் சொல்கிறேன்.....

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

30 comments:

 1. நாகதேவதை வழிபாடு அங்கே இருக்கா என்ன? 'பப்பல் ' பாம்புபோல இருக்கே!

  நிறைய புதிய தகவல்கள்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. பல உருவங்களில் பப்பல் இருக்கிறது.... ட்ராகன், பாம்பு, மான் தலை கொண்ட பாம்பு என நிறையவே சொல்கிறார்கள். உண்மையான வடிவம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்தபடியே இருக்கிறதாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. மிக அருமையான பதிவு ...இத்தனை நம்பிக்கைகளா மக்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கைகள் பலவிதம்.... ஒவ்வொன்றும் ஒருவிதம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 3. ரசித்தோம் நண்பரே....
  தொடர்ந்து பதிவுகள் தாருங்கள்
  என்னால் முடிந்தவரை வருகை தந்து
  படித்து ரசிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது படியுங்கள் அஜய். நானும் உங்கள் பக்கம் வர வேண்டும். வருவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப்.

   Delete
 4. நம்பிக்கைகள் பலவிதம் ,இனத்துக்கு இனம் ஒரு விதம் போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 5. வேற்றுமைகளுக்குள் ஒற்றுமை - அதுதானே பாரதம்!..

  ரசனையான தகவல்களுடன் - இன்றைய பதிவு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. ரசித்துத் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்வதற்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. தங்களின் ஒவ்வொரு பதிவையும் ரசிக்கின்றேன் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. நம்பிக்கைகள் நாலுவிதம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 9. மணிப்பூர் மக்களின் நம்பிக்கைகள் தெரிந்து கொண்டேன்.

  //கர்நாடகத்தைச் சேர்ந்தவர்மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் இருக்க, மணிப்பூரைச் சேர்ந்தவர் தில்லியில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்...... கடினமான வாழ்க்கை தான்..//.

  உண்மை , கடினமான வாழ்க்கை தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 10. திருவிளையாடல் சற்றே மாறுபட்ட நிலையில் இருப்பதுபோலத் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 12. திருவிளையாடல் ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. அழகான பதிவு. புதிய தகவல்கள்.

  (Meitei இன மக்கள் மட்டுமா பப்பல் குறியீடுகளைப் போட்டார்கள். நம்ம வீடுகளிலும் வெயில் காலத்தில் பப்பல் போடுகிறோம். ஆனால் என்ன, காக்கா கொத்தாம காவலுக்கு நம்மை வைத்து விடுகிறார்கள்.)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 14. அட நம்மூர் மாம்பழக் கதை அங்கேயும் கிட்டத்தட்ட அதே போன்று.

  ஒரு வேளை சைனா கொஞ்சம் மேலே இருப்பதாலும், மங்கோலியர் இனம் அங்கு வந்தது எனப்படுவதாலும் இந்த பாம்பு, டிராகன் எல்லாம் சைனாவைப் போல் சொல்லப்படுகிறது போலும். சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன நம்மூர் பழம்பெரும் கதைகள். தொடர்கின்றோம் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

 15. ஒரே கதை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும் நம்பிக்கைதான் மனிதர்களை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது என அறிய முடிகிறது தங்களின் தொடர் மூலம். தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....