திங்கள், 9 மே, 2016

விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்கு!



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 9

பிஷ்ணுபூர் விஷ்ணு கோவில் சென்று வந்ததைப் பற்றி பதிவு எழுதி ஒரு மாதம் ஆகிவிட்டது. பதிவுகளுக்கு இடையே, குறிப்பாக பயணத் தொடர் எழுதும் போது இத்தனை இடைவெளி இருந்தால் படிப்பவர்களுக்கு குழப்பம் தான். தவிர்க்க முடியாத காரணங்களால் இத்தனை இடைவெளி வந்து விட்டது. இப்பதிவினை தொடங்கு முன்னர் ஒரு Flashback…..

ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கப்படும் North Eastern States பற்றிய பயணத் தொடர் இது. இதுவரை வந்த பகுதிகள் – கீழே. தலைப்பைச் சுட்டினால் பதிவினை படிக்கலாம்....


பிஷ்ணுபூர் கோவில் பற்றிய பதிவினை முடிக்கும்போது இப்படி முடித்திருந்தேன்....



மணிப்பூர் ராஜாவான க்யாம்பாவும் போங் நகர ராஜாவான சாவ்பா கெ கோம்பா என்பவரும் இணைந்து தற்போதைய மியான்மார் பகுதியில் இருக்கும் க்யாங் எனும் நாட்டை கைப்பற்றினார்கள்.  வெற்றியில் மகிழ்ச்சி கொண்ட போங் ராஜா, தன்னுடன் சேர்ந்து போரிட்ட க்யாம்பாவுக்கு ஒரு சிறிய விஷ்ணு சிலையைப் பரிசளித்தாராம்.  அந்தச் சிலை கிடைத்த பிறகு க்யாம்பா விஷ்ணுவின் மீது பக்தி செலுத்த ஆரம்பித்ததோடு, ஒரு கோவில் கட்டச் செய்து அதில் விஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்.

விஷ்ணுவின் சிலை இங்கே வந்த பிறகு இந்த இடத்தின் பெயரும் விஷ்ணுவின் பெயராலேயே பிஷ்ணுபூர் என அமைந்துவிட்டது!

இனி தொடர்வோம். 



கோவிலிலிருந்து புறப்பட்ட எங்கள் வண்டி, அடுத்ததாய் மணிப்பூரின் இம்ஃபால் நகர் நோக்கி பயணித்தது. இம்ஃபால் நகரில் இருக்கும் கங்க்லா கோட்டையின் மேற்கே இருக்கும் ஒரு இடம் தான் எங்கள் இலக்கு. அந்த இடம் மணிப்பூரில் ஆங்கிலேயர்களுக்கும் மணிப்பூர் பழங்குடியினருக்கும் நடந்த போர் சம்பந்தப்பட்டது. 1891-ஆம் வருடம் – ஆங்கிலேயர்களுக்கும் மணிப்பூர் நகர மன்னர் யுவராஜ் [b]பீர் திகேந்திரஜீத் சிங் மற்றும் தளபதி தங்கல் தலைமையில் கடுமையான போர் நடக்கிறது. பலத்த எதிர்ப்பிற்குப் பிறகு மணிப்பூர் ஆங்கிலேயர்கள் வசமாகிறது.



ஆங்கிலேயர்கள் தங்களது வழக்கப்படி பிடிபட்ட யுவராஜ் [b]பீர் திகேந்திரஜீத் சிங் மற்றும் தளபதி தங்கல் ஆகியோரை தூக்கிலிட முடிவு செய்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் ஃபைடாபுங் என அப்போது அழைக்கப்பட்ட இதே இடம் தான்.  மணிப்பூர் ராஜாவையும் மக்களையும் அவமதிக்கும் விதமாக இவர்கள் தூக்கிலடப்பட்ட போது 8000 பெண்களை விதவைக் கோலத்தில் – அதாவது வெள்ளை உடையில் இங்கே நிற்கவைத்து யுவராஜாவையும் தளபதியையும் தூக்கிலிட்டார்களாம் ஆங்கிலேயர்கள்.



தளபதி தங்கல் இதற்கெல்லாம் பயப்படாது பலமாக சிரித்தபடியே உயிர் துறந்தாராம்.  இப்படி இவர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தற்போது போரில் உயிரிழந்த தியாகிகளுக்காக நினைவுச் சின்னமாக ஷாஹீத் மினார் [தியாகிகள் ஸ்தூபி] எழுப்பி இருக்கிறார்கள் – மூன்று தூண்கள் கீழிருந்து மேல் நோக்கி சென்று மேலே சேர்கிறது – அங்கே மணிப்பூர் நகரச் சின்னமான ட்ராகன்கள் மூன்று வைத்திருக்கிறார்கள்.  இச்சின்னம் இருக்குமிடத்தில் ஒரு அழகிய பூங்காவும் வடிவமைத்திருக்கிறார்கள் – யுவராஜ் [b]பீர் திகேந்திரஜீத் சிங் பெயரிலேயே பூங்காவும் அழைக்கிறார்கள்.

இந்த தியாகிகள் ஸ்தூபி திறக்கப்பட்ட தினம் – அக்டோபர் 2, 1980 – திறப்பு விழாவிற்கு நல்லதோர் தினத்தினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 



நினைவுச் சின்னத்தின் வெளியே சின்னச் சின்னதாய் நடைபாதை கடைகள். அங்கே ஒரு மூதாட்டி – இலந்தைப் பழம் மற்றும் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார்.  அவரிடம் வேர்க்கடலை வாங்கிக் கொண்டோம். அவருக்கு விற்பனையும் ஆக, எங்களுக்கும் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கும் வரை கொரிப்பதற்கு வேர்க்கடலையும் கிடைத்தது. நண்பர் வேர்க்கடலை வாங்க, அம்மூதாட்டியை படம் எடுக்கவும் ஒரு வாய்ப்பு. 



வேர்க்கடலை கொறித்துக் கொண்டே எங்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம். பயணித்தது எங்கே என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை உங்களுக்கும் இதோ வேர்க்கடலையும் இலந்தைப் பழமும்!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..


நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 கருத்துகள்:

  1. நாட்டுக்காக தம்முயிர் ஈந்த தியாகிகளுக்கு அஞ்சலி..

    தங்களுடன் பயணம் தொடர்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. மணிப்பூர் படங்கள் நன்றாக உள்ளன. அங்கேயுமா நம்ம வேர்க்கடலையும், இலந்தையும்!
    சுதந்திரப்போராட்ட வீரர்களின் சோகக்கதை மனதைத்தொடுகிறது. நாட்டிற்காக உயிர்நீத்த, அவதிப்பட்ட எத்தனையோ பெயர்தெரியா வீரர்கள், தியாகிகள். அவர்களுக்கு நித்திய வந்தனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி!

      நீக்கு
  3. அங்கேயும் ஒரு கட்டபொம்மன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  4. அப்படியே அந்த வேர்க்கடலையில் விலையையும் எழுதியிருக்கலாமே. சென்னையில், ஒரு சேர் (1/2 படிக்கும் அரைப் படிக்கும் இடையிலானது) 30 ரூ. இவ்வளவு நாள் கழித்து எழுதுகிறீர்கள்.. உங்கள் நினைவில் இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு அளவுகளில் கிடைத்தது. வேர்க்கடலை - சிறிய டப்பா - 10 ரூபாய், பெரிய டப்பா 20 ரூபாய்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லத்தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நாங்களும் பயணிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  7. என்னுடைய வேலைப்பளுவினால் தொடரின் முந்தைய பகுதிகள் படிக்க முடியவில்லை! இணைப்பு கொடுத்தமை சிறப்பு! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. //மணிப்பூர் ராஜாவையும் மக்களையும் அவமதிக்கும் விதமாக இவர்கள் தூக்கிலடப்பட்ட போது 8000 பெண்களை விதவைக் கோலத்தில் - அதாவது வெள்ளை உடையில் இங்கே நிற்கவைத்து யுவராஜாவையும் தளபதியையும் தூக்கிலிட்டார்களாம் ஆங்கிலேயர்கள் //
    வேதனையான விடயம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. அந்தந்த ஊர் சரித்திரமும் பதிவாவது நன்று வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  10. நாட்டைக் காத்த உத்தமர்களின் கதை, படங்கள் எல்லாம் மிக அருமை.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  11. முன்கதையைக் கூறியதால் தொடரை எளிதாகப் புரிந்துகொள்ளமுடிந்தது. புனிதப்பயணம் சென்றதுபோலிருந்தது இப்பதிவு மூலமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. தொடர்கிறேன் வேர்க்கடலையை கொறித்துக்கொண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  13. சரித்திரத் தகவல்கள் பல அறிய முடிந்தது வெங்கட்ஜி....தொடர்கின்றோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....