திங்கள், 30 மே, 2016

அம்மா மார்க்கெட்....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 13

அம்மா மார்க்கெட்....

அம்மா தண்ணீர், அம்மா மருந்தகம், அம்மா உணவகம் வரிசையில் அம்மா மார்க்கெட்? என்று நினைக்க வேண்டாம்.... 

”இன்னிக்கு உங்களுக்கு விற்பனை எப்படி?” என்று பேசிக் கொள்கிறார்களோ?

சென்ற பகுதியில் தேவாலயத்திற்குச் சென்றது பற்றி எழுதி இருந்தேன்.  தேவாலயத்திலிருந்து அடுத்ததாய் நாங்கள் சென்றது இம்ஃபால் நகரில் இருக்கும் இமா கைதல் – அதாவது அம்மா மார்க்கெட். மணிப்பூரி மொழியில் இமா என்றால் அம்மா.  அவர்கள் நடத்தும் கடைகள் தான் இமா மார்க்கெட். Meitei ராஜாக்கள் காலத்திலிருந்தே இந்த இமா மார்க்கெட் நடந்து வந்திருக்கிறது. 

வாங்குபவர்களை எதிர்பார்த்து......

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்பதற்கு சரியான உதாரணமாக இந்தக் கடைகளை சொல்கிறார்கள்.  பல்லாண்டுகளாக இந்த இமா மார்க்கெட் நடத்தப்பட்டிருக்கிறது என்றாலும் சாதாரணமான கடைகளாக – அதாவது வானம் பார்த்த கடைகளாகவே இருந்திருக்கின்றன.  இக்கடைகளை ஒட்டு மொத்தமாக இடித்து விட்டு தனியார் வசம் எடுத்துக் கொள்ளவும் முயற்சிகள் நடந்திருக்கின்றன.  என்றாலும் அனைத்து மகளிர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தி அம்முயற்சியைத் தகர்த்து இருக்கிறார்கள்.

 வரவு செலவு எல்லாம் சரியா இருக்கா?......

தற்போது வானம் பார்த்த கடைகளாக இல்லாமல் இம்ஃபால் நகராட்சியே இவர்களுக்கு மூன்று பெரிய பெரிய கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்க அங்கே 400 கடைகள் இருக்கின்றன.  அனைத்துமே தாய்மார்கள் நடத்தும் கடைகள் தான். அங்கே உணவுப் பொருட்கள் முதல் உடைகள் வரை மகளிர் பல பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.  இங்கே சென்று கடைகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன என்பதைப் பார்ப்பதோடு, முடிந்தால் அவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அங்கே சென்றோம்.

மண்பானைகளும் கருவாடும்.....

சிறு கை பை......

உணவுப் பொருட்கள், உடைகள், மண் பானைகள், காய்கறிகள், கைவினைப் பொருட்கள் என பவற்றையும் அங்கே விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  அனைத்து கடைகளுமே பெண்களால் நடத்தப்பட்டாலும், ஒரு சில கடைகளில் வேலைக்கு ஆண்களையும் அமர்த்தியிருக்கிறார்கள்.  பல பெண்கள் தங்களது குழந்தைகளை முதுகில் கட்டியபடி அமர்ந்து கொண்டு விற்பனை செய்வதையும் பார்க்க முடிந்தது.  அங்கே நண்பர் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்க, நான் ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

எங்களைத் துரத்திய மூதாட்டி......

ஒரு மூதாட்டி அதே ஊரிலேயே பிறந்து அங்கேயே வாழ்க்கைப்பட்டு கிட்டத்தட்ட 70 வருடங்களாக இங்கே கடை நடத்துகிறாராம். அவரிடம் மேலும் பேச முனைந்தபோது “சும்மா தொந்தரவு பண்ணாம போங்க! எனக்கு நிறைய வேலை இருக்கு – ஏதாவது வாங்காமல் சும்மா பேச்சு மட்டும் உதவாது, பேசவும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் வந்தா எனக்கென்ன லாபம்? என்று சிரித்தபடியே எங்களைத் துரத்தினார்...... எங்களை எனும்போது எங்கள் குழுவில் இருந்தது அனைவரும் ஆண்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.

சுடச்சுட சப்பாத்தியும் பக்கோடாவும்.....

பழங்கள் விற்கும் மூத்த பழம்.....

நிறைய இடங்களில் பதிவுக்காக, பயண அனுபவத்திற்காக பேச முயன்று, படம் எடுக்க முயன்று திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம் – எத்தனை முன் ஜாக்கிரதையாக இருந்தாலும்.....

வித்தியாசமான ஒரு கனி......

எத்தனை தடவை கூட்டினாலும் சரியா வரலையே.....

வித்தியாசமான சில பழங்கள், அழகிய துணிப் பைகள் என எத்தனை விஷயங்கள் அங்கே விற்பனைக்கு இருந்தன.  நண்பர்களும் நானும் சில அலங்கரிக்கப்பட்ட துணிப்பைகளை வாங்கிக் கொண்டோம். சொல்லும் விலையில் கறாராக இருக்கிறார்கள் அந்தப் பெண்கள் – விலை குறைப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை.  குறிப்பாக மூதாட்டிகள்.  சில இடங்களில் பூஜைக்குத் தேவையான பொருட்களும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள் – எல்லாமே கலந்து இருக்கிறது இங்கே.

அம்மா மார்க்கெட் - வேறு ஒரு கோணத்தில்.......

கறுப்பு அரிசி...... 

அங்கே மூன்று கட்டிடங்களில் இருக்கும் 400 கடைகளையும் பார்த்தவாறே சுற்றி வந்தோம்.  மதிய நேரம் ஆகி இருந்தது – மதிய உணவிற்கான மணி வயிற்றில் அடிக்க ஆரம்பித்திருந்தது. எங்கே சாப்பிடப் போகிறோம், என்ன சாப்பிடக் கிடைக்குமோ என்ற எண்ணத்திலேயே வெளியே வந்தோம்.  ஷரத்தின் எண்ணில் அழைக்க அது அடித்தவாறே இருந்தது! எங்களுக்கும் வயிற்றில் மணி அடித்தவாறே இருந்தது.  ஷரத் வந்தாரா, சாப்பிட எங்கே சென்றோம், என்ன சாப்பிட்டோம் என்பதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.....
  
மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


22 கருத்துகள்:

  1. அம்மா மார்கெட்... சும்மா Dhதூளா இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம தூள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  2. நான் இங்கே ஶ்ரீரங்கத்தில் உள்ள பண்ணைப் பசுமைக் கடைகளைப் பற்றித் தான் சொல்றீங்கனு நினைச்சேன். நல்ல அருமையான மார்க்கெட் தான். அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      நீக்கு
  3. அருமையான படக்காட்சிகள் ஐயா.நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்....

      நீக்கு
  4. அங்கேயும் அம்மா மார்க்கெட்டா?! படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. நல்ல முயற்சியாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. மகளிர் குழுக்களாக கடை வைக்கிறார்களா தனிப்பட்ட முறையிலாபொருட்கள் போக்குவரத்துக்கும் ஆண்கள் உதவுகிறார்களா அம்மா மார்க்கெட் கான்செப்ட் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிப்பட்ட கடைகள் தான். மகளிர் சுய உதவிக் குழு அல்ல. பெரும்பாலான கடைகள் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றன. பொருட்கள் போக்குவரத்தும் அவர்களே செய்து கொள்கிறார்கள். சில கடைகளில் மட்டும் தான் ஆண்களை உதவிக்கு வைத்திருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. மிக அருமை..இத்தனை வகைக் கடைகளை
    இந்த மாதிரி பார்த்ததில்லை. வகை வகையாக,சுத்தமாக இருக்கிறது. மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா......

      நீக்கு
  8. அம்மா மார்க்கெட் அசத்துகிறது. பொருட்கள் உட்பட.

    அந்த வித்தியாசமான கனி பைன் கோன் போல உள்ளதே பார்க்க. வாங்கிப் பார்த்தீர்களா வெங்கட்ஜி? அது என்ன பழம் என்று தெரிந்து கொள்ளத்தான்...

    அங்கேயே சப்பாத்தி விற்கிறார்களே அது சாப்பிடறா மாதிரி இல்லையோ ஜி?

    நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சப்பாத்தி சாப்பிட முடியும் எனத் தோன்றவில்லை - ஒரு கரண்டி எண்ணை அதில்! அதுவும் பகோடா பொரித்த எண்ணையே இதற்கும்! பார்த்த பிறகு சாப்பிடத் தோன்றவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. அம்மா மார்க்கெட்! அபாரம்! தாதாவுக்கு கொட்டைப் பாக்கு வாங்க இந்த அங்காடிக்குள் சுத்தி வந்தது ஞாபகம் வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட தாதா எங்கே சென்றாலும் இந்த கொட்டப்பாக்கை விடுவதில்லை.... அதுவும் அந்த பாக்கு வெட்டி பார்க்கும்போதே ஒரு வித பயம் நமக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      நீக்கு
  10. அம்மா மார்க்கெட்! அந்த பெண்மணிகளை பாராட்டத்தான் வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. அம்மா மார்க்கெட் மிக நன்றாக இருக்கிறது. மூதாட்டியிடம் என்ன வாங்கினீர்கள் வாங்கவில்லை என்றால் திட்டதான் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களிடம் எங்களுக்குத் தேவையானது ஒன்றுமில்லை.... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....