ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 30
இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 29 பகுதிகளைப்
படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே
அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down
Menu.....
மா காமாக்யா தேவி கோவிலில் பார்த்த இன்னுமொரு
விஷயத்தினை சென்ற பதிவில் குறிப்பிடவில்லை – அது அங்கே கொடுக்கப்படும் பலிகள். தாந்த்ரீக
முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் அதிகம் வரும் இடம் இக்கோவில். தினமும் காலை
நேரத்தில் ஆடுகள், புறாக்கள், சில சமயங்களில் எருமைகள் கூட இங்கே பலி
கொடுக்கப்படுவதுண்டு. இதற்காகவே கோவிலின் ஒரு பகுதியில் பலி கொடுக்கும் வசதிகள்
இருக்கின்றன. நாங்கள் சென்ற போதும் ஆடுகள்
பலி கொடுக்கப்பட காத்திருந்தன. அங்கேயே
விற்பனைக்கு வைத்துக் கொண்டு பலர் காத்திருக்கிறார்கள். சிலர் வீடுகளிலிருந்தே
கொண்டு வருகிறார்கள்.
பலி என்பதே தேவையில்லாத விஷயம் என்று நானும், என்னைப்
போல் பலரும் நினைத்துக் கொண்டிருக்க, பலி கொடுப்பதை காணொளிகளாக எடுத்துப்
பகிர்பவர்களும் இருக்கிறார்கள். விருப்பமிருப்பவர்கள் youtube-ல் பகிர்ந்து இருக்கும் காணொளிகளை தேடிப் பார்த்துக்
கொள்ளலாம்... நிச்சயம் உங்களால் மனது
சஞ்சலப்படாமல் பார்க்க முடியாது. என்னவொரு வழக்கமோ? சற்றே வளர்ந்த ஒரு எருமையை, பலர் பிடித்து, மரச்சட்டங்களுக்கு
இடையே கட்டி, ஒரே வெட்டில், தலை தனி உடல் தனியாக இரண்டு துண்டாக்கிவிடுகிறார்.
தினம் தினம் இப்படி பல ஆடுகள், ஒன்றிரண்டு எருமைகள் பலியிடப்படுகின்றன என்பது தான்
சோகம்.
சரி சென்ற பதிவின் முடிவில் சொன்ன விஷயத்திற்கு
வருகிறேன். மா காமாக்யா தேவியின் கோவில் வாசலிலிருந்து புறப்பட்ட நாங்கள், நாங்கள்
அமர்த்திய வாகன ஓட்டியிடம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும்
பாலத்தினைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவரும் எங்களை அழைத்துச்
சென்றார். சராய் Gகாட் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே Gகௌகாத்தி நகரில் கட்டப்பட்ட முதல் பாலம் – அதாவது ரயில் மற்றும்
சாலைப்போக்குவரத்து இரண்டும் செல்ல பயன்படும் முதல் பாலம்.
பிரம்மபுத்திரா நதியின் வடக்குக் கரையில் உள்ள ஓர்
சிற்றூர் சராய். அந்தப் பகுதியில் இருக்கும் கரைகள் சராய் Gகாட் என அழைக்கப்படுகிறது. அப்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பாலமும் சராய்
Gகாட் பாலம் என்றே அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானம் ஜனவரி 1958 ஆம் ஆண்டு
தொடங்கியது. நான்கு ஆண்டுகளில் சுமார் 11 கோடி ரூபாய் செலவில் ரயில் மற்றும்
சாலைப் போக்குவரத்து இரண்டும் பயணிக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. 1962-ஆம்
ஆண்டிலேயே சரக்கு ரயில் மற்றும் சில பயணிகள் ரயில்களும் இந்தப் பாலத்தினை
பயன்படுத்தினாலும், ஜூன் 7, 1963 அன்று அன்றைய பிரதமர் திரு நேரு அவர்களால் பாலம்
திறந்து வைக்கப்பட்டதாம்! பாலத்தின் மொத்த நீளம் 4258 அடி! 2012-ஆம் ஆண்டில்
இந்தப் பாலத்தின் ஐம்பதாம் ஆண்டு விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டது.
மிகவும் பழமையான
பிரம்மபுத்திராவின் குறுக்கே அமைக்கப்பட்ட இந்த பாலங்கள் தான் இந்தியாவின்
மற்ற பகுதிகளை வடகிழக்கு மாநிலங்களோடு இணைக்கிறது என்பதால் மிகவும் முக்கிய
இடத்தினைப் பெறுகிறது இந்தப் பாலம். கீழ்
பகுதியில் ரயிலும் அதன் மேல் பகுதியில் சாலைப் போக்குவரத்தும் செல்லும்படியான
பாலம் இது.
சராய் Gகாட் பகுதி சரித்திரத்திலும் முக்கிய இடம்
பெற்றிருக்கிறது. முகலாயர்களுக்கும் அசாம்
பகுதியை அக்காலத்தில் ஆண்ட அஹோம் மன்னர்களுக்கும் நடந்த யுத்தம் இந்தப் பகுதியில்
தான் நடைபெற்றது – சராய் Gகாட் யுத்தம் என்றே அந்த யுத்தத்தினை
அழைக்கிறார்கள். அந்த யுத்தத்தில் அஹோம்
மன்னர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது கூடுதல் செய்தி! 1671-ஆம் ஆண்டு நடந்த இந்த முகலாய
– அஹோம் போரில் படைத்தளபதியாக இருந்த Lachit Borphukan
என்பவரின் நினைவாக இந்தப் பாலத்திற்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற
கோரிக்கையும் இருந்தது என்றாலும் சராய் Gகாட் பாலம் என்றே இதுவரை
அழைக்கிறார்கள்.
இந்தப் பாலம் பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்திய சீன எல்லைப்பகுதி மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் செல்லும் தேசிய
நெடுஞ்சாலையில் இந்தப் பாலமும் அமைந்திருக்கிறது.
பாலம் கட்டிமுடிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் சீனாவுடனான யுத்தம்
துவங்கியது. எல்லைப் பகுதியில் போராடிய இந்திய வீரர்களுக்கு உணவு, ஆயுதங்கள், போர்
தளவாடங்கள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல இந்தப் பாலம்
இருந்ததால் வசதியாக இருந்தது என்பதும் ஒரு செய்தி.
சரி எங்கள் பயணத்திற்கு வருகிறேன். இந்தப் பாலத்தின் வழியே பயணித்து பிரம்மபுத்திரா நதியைக் கடந்த பிறகு வண்டியை நிறுத்தச் சொன்னோம். பாலத்திலிருந்து சற்றே தள்ளி சாலையின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினார் வாகன ஓட்டி. நாங்கள் அங்கே இறங்கிக் கொண்டு சாலையிலிருந்து கீழே இறங்கி ரயில் பாதைக்கு வந்தோம். அங்கே சில ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்து அந்த பழைய பாலத்தினை நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். படங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சாலைக்கு வந்தோம்.
காரின் அருகே வர இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள்
எங்களை நோக்கி வந்து வாகன ஓட்டியிடம் அசாமி மொழியில் விசாரிக்கத் துவங்கினார்கள்.
கேரள நண்பர்கள் முன்னே சென்றிருக்க, நான் பின்னாலே வந்து கொண்டிருந்தேன். கேரள நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த
ஹிந்தியில் ஏதோ காவல்துறையினரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் முன்னே சென்று கேட்க, பாலத்தினை
புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதைச் சொல்லி எங்களைப் பற்றி விசாரிக்க,
கொஞ்சம் பொறுமையாக அவரிடம் பேசினேன்.
மற்றவர்களை வாகனத்திற்கு அனுப்பிவிட்டு, நான் அந்த
காவலாளிகளிடம் பேசினேன். நாங்களும் அரசுத்
துறையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும், வேண்டுமெனில் அவர்களது மேலதிகாரியிடம்
பேசுகிறேன் என்றும், எடுத்த புகைப்படங்களை அழித்து விடுகிறோம் என்றும் சொல்ல,
எங்களை அனுப்பி வைத்தார்கள். இனிமேல் எந்த ஒரு பாலத்திலும் புகைப்படம்
எடுக்காதீர்கள், பெரும்பாலான ரயில்வே பாலங்களை புகைப்படம் எடுப்பது தடை
செய்யப்பட்டது என்பதையும் சொன்னார்கள்.
நானும் வாகனத்திற்கு வந்து வாகன ஓட்டியிடம் அசாமி
மொழியில் என்ன பேசினார்கள், எனக் கேட்டதற்கு, அங்கே எங்களை அழைத்துக் கொண்டு வந்ததற்கும்,
புகைப்படம் எடுத்ததை தடுக்காததற்கும் மிரட்டினார்கள் என்றும், காசு வேண்டும் எனக்
கேட்டதாகவும் சொன்னார். அது உண்மையா
பொய்யா என்பது தெரியாததால் அவரிடம் ஒன்றும் பேசவில்லை. நண்பர்களுக்குள் இனிமேல்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டே நாங்கள் தங்கிய இடமான ஹோட்டல்
மயூருக்கு திரும்பினோம்.
தங்குமிடத்தில் இருந்த உடமைகளை எடுத்துக் கொண்டு, சில
நாட்கள் கழித்து இங்கே திரும்ப வேண்டும் என்பதால், இரண்டு அறைகளுக்கு முன்பணம்
செலுத்தி முன்பதிவு செய்து கொண்டோம். பிறகு தங்குமிடத்தின் எதிரே இருக்கும்
பேருந்து நிலையத்திற்குச் சென்று எங்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம். அந்த
அனுபவங்கள் அடுத்த பதிவில்!
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நானும் படித்திருக்கின்றேன்.. தேவி காமாக்யா கோயிலில் பலி கொடுக்கும் வழக்கம் இருப்பதை..
பதிலளிநீக்குஅதற்கு என்ன அவசியமோ - தெரியவில்லை.. மனம் வருந்துகின்றது..
வருத்தம் தான்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
பலிகளை தடை செய்யலாம். ஆனால் ஏற்கனவே அதற்கு எதிர்ப்பும் கிளம்பியதே..
பதிலளிநீக்குபோலீஸ் மிரட்டல் திகில் அனுபவம்தான். காசு கேட்டார்கள் என்பதைப் படிக்கும்போது போலீஸ் எங்கும் போலீஸ்தாதான் என்று தோன்றியது.
தடை செய்தாலும் தொடரும்.... அங்கே பலியிடப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது - எதிர்ப்புகளையும் மீறி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பலி கொடுக்கும் வழக்கம் தடை செய்யப்பட வேண்டும் ஆனாலும் ஆடு மாடு எருமை போன்றவற்றின் இறைச்சியை உண்பவர்களுக்கு கடவுள் பெயரால் அதை திங்க ஒரு சந்தர்ப்பம் அவ்வளவே புகைப் படங்கள் எடுக்கும் போதும் கவனம் தேவை இடம் பொருள் ஏவல் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் அந்தப் படங்களை அழித்து விட்டீர்களா
பதிலளிநீக்குகடவுள் பெயரால் அதை உண்ண ஒரு சந்தர்ப்பம்.... இருக்கலாம்.
நீக்குபடம் பொதுவாக எடுக்கும்போது பார்த்து தான் எடுப்பது வழக்கம். எடுக்க அனுமதி இல்லை எனில் எடுப்பதில்லை! இருந்தாலும் இங்கே எழுதி வைத்திருந்ததை பார்க்கவில்லை. படங்கள் அழிக்க வில்லை. இங்கே பகிரவும் இல்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
சுவத்துக்கும் சிவப்பு பெயிண்ட். திண்ணையில் ஆடுகள். கலவர பீதி கொடுக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை.
பதிலளிநீக்குஎன்னடா பாலத்தைப் படமெடுக்கலையா.. எல்லாமே 'இணையத்திலிருந்து' என்று போட்டுள்ளாரே என்று பார்த்தேன்.
நாங்கள் படம் எடுத்தோம். அது இருக்கிறது என்றாலும் பகிரவில்லை.
நீக்குநம்பிக்கை தான். வேறு என்ன சொல்ல!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
//என்னடா பாலத்தைப் படமெடுக்கலையா.. எல்லாமே 'இணையத்திலிருந்து' என்று போட்டுள்ளாரே என்று பார்த்தேன்.// நானும் இதையேதான் நினைத்தேன்! :)
பதிலளிநீக்குஇணையப்படங்கள் எல்லாமே அழகு! அதிலும் சன்செட் சூப்பர்!!
பலி கொடுப்பதைப்பற்றி படிக்காமல் தாவிக் குதிச்சுட்டேன்!! :( :( ;(
எடுத்தோம் என்றாலும் பகிரவில்லை.
நீக்குதாவிக் குதித்தேன்! :))) நல்லது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி!
பாலத்தின் படங்கள் அழகு...
பதிலளிநீக்குஉங்கள் பயணக் கட்டுரை வாசிக்க வாசிக்க சுவராஸ்யம் அண்ணா....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குஎருமை மாடு பல் கொடுப்பது வேதனையான விடயமாக இருக்கின்றது ஜி
பதிலளிநீக்குபலி வேதனையான விஷயம் தான்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
வெங்கட்ஜி முதல் பாரா வாசிக்கவில்லை ஜி! எனக்கு அந்த அளவிற்குத் தைரியம் இல்லை பலி என்றதுமே கீழே சென்றுவிட்டேன். பலி என்பது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று.
பதிலளிநீக்குநினைத்தோம்....பாலம் எடுக்க அனுமதி இருந்திருக்காது அதற்குத்தான் போலீஸ் வந்திருப்பார்கள் என்று...உங்களது அருமையான புகைப்படங்கள் மிஸ்ஸிங்க்....
தகவல்கள் பல அறிந்தோம்...தொடர்கின்றோம்..
முதல் பாரா வாசிக்கவில்லை. படிக்கவே கஷ்டமாக இருக்கும் போது பார்த்தால் என்ன ஆவது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
என் பேரனுக்கு கௌஹாத்தி IIT இல் இடம் கிடைத்து சேர்ந்திருக்கிறான். பெண்ணும் மாப்பிள்ளையும் அசாம் போய் அவனை சேர்த்துவிட்டு வந்தார்கள். இந்த காமாக்யா கோவிலுக்கும் சென்று வந்தார்கள். நீங்கள் எழுதியிருக்கும் 7 மாநிலங்களையும் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது. இப்போதைக்கு நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடரை படிக்கிறேன்.
பதிலளிநீக்குஎன் பெண்ணிற்கும் நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்களை சொல்லுகிறேன். அடுத்தமுறை போகும்போது இந்த இடங்களைப் பார்த்துவிட்டு வரலாம், இல்லையா?
பேஸ்புக்கில் ஒருவர் எழுதியிருந்தார்: டெல்லியிலிருந்து கௌஹாத்திக்கு விமானத்தில் போகும்போது இமயமலைச் சிகரங்களைப் பார்க்கலாம் என்று. நீங்கள் பார்த்தீர்களா? இவை பற்றி எழுதியிருக்கிறீர்களா? இந்தக் கட்டுரையை முதல் பகுதியிலிருந்து படிக்க ஆரம்பிக்கிறேன்.
நீங்கள் கொடுத்திருக்கும் drop-down சுட்டி அந்தந்த கட்டுரைகளுக்கு போகவில்லையே?
இன்றைக்கு வெளியிட்டு இருக்கும் பதிவில் அனைத்து சுட்டிகளும் வேலை செய்கின்றன. மற்ற பதிவுகளிலும் சரி பார்க்கிறேன்.....
நீக்குகௌஹாத்தி செல்லும் போது நான் திஸ்பூரிலிருந்து ரயிலில் சென்றேன். தில்லியிலிருந்து நேரடியாக விமானத்தில் மணிப்பூர் தலைநகர் இம்ஃபால் சென்றேன். அங்கிருர்ந்து நாகாலாந்த் தலைநகர் கொஹிமா அப்படி பயணம் சென்றது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....