திங்கள், 11 ஜூலை, 2016

நாகாலாந்து - தலை எடுத்தவன் தல!...

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 24 

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 23 பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....

நுழைவாயிலில் சில முக்கிய நாகா பிரிவுகள் பற்றிய பதாகை....

எந்த மாநிலத்தின் தலைநகருக்குச் சென்றாலும், அங்கே மாநில அருங்காட்சியகம் இருக்கிறதா என்பதை பயணம் செய்வதற்கு முன்னரே பார்த்து விடுவது எனக்கு வழக்கமான ஒரு செயல். நாகாலாந்து மாநிலம் பற்றியும் இப்படி தேடித் தெரிந்து கொண்டு, அங்கே செல்லும் போது நிச்சயம் மாநில அருங்காட்சியகத்திற்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.  எங்கள் ஓட்டுனர் மார்க்கெட்டிலிருந்து எங்களை அழைத்துச் சென்ற இடமும் அது தான். மாநில அருங்காட்சியகத்தில் நாங்கள் கண்ட காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் இந்தப் பதிவில் – அங்கே நான் எடுத்த புகைப்படங்களோடு – இதோ.....


PHOM பிரிவைனைச் சேர்ந்த நாகா பெண்.....

SUMI பிரிவைனைச் சேர்ந்த நாகா பெண்.....

கொஹிமா நகரின் Upper Bayavu Hills பகுதியில் தான் இந்த மாநில அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். இந்தியாவிலுள்ள அனைத்து அருங்காட்சியகங்களைப் போலவே இங்கும் திங்களன்று விடுமுறை.  நுழைவுக்கட்டணமும், காமிராவுக்கான கட்டணமும் உண்டு.  நாகாலாந்தில் இருக்கும் அனைத்து பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களது பாரம்பரிய உடை, இருப்பிடம், அணிகலன்கள், போர் செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள், அரிய கற்கள் மற்றும் சங்கு கொண்டு செய்யப்பட்ட நகைகள் என பல விஷயங்கள் இங்கே பார்க்க முடியும்.


YIMCHUNGRU பிரிவைனைச் சேர்ந்த நாகா குடும்பம் - 
தறியில் வேலை செய்கிறார்கள்.....

KONYAK பிரிவைனைச் சேர்ந்த நாகாக்கள்....
ஆயுதம், விவசாயக் கருவிகள் தயாரிப்பில்....

ஒவ்வொரு பழங்குடியினருக்கும் உடை, அணிகலன்கள், தங்குமிடம் என அனைத்துமே வேறுபடுகின்றன.  அவர்கள் செய்த தொழிலிலும் வேறுபாடு உண்டு. எருமைகளின் கொம்புகள், மற்றும் மூங்கில்கள் கொண்டு அவர்கள் உருவாக்கிய இசைக் கருவிகள், விலங்குகளின் எலும்புகள் கொண்டு உருவாக்கிய பொம்மைகள் என பலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.  இறந்து போன ஒரு யானையின் மண்டையோடு மற்றும் எலும்புகள் கொண்டு அவர்கள் உட்கார்ந்து கொள்ள ஒரு இருக்கையை வடிவமைத்து வைத்திருப்பதையும் அங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.  அதில் அமர்ந்திருக்கும்போது அந்த யானை உயிருடன் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்!


நாகா வீரர்.....

CHAKHESONG பிரிவைனைச் சேர்ந்த நாகா ஆண்....
மூங்கிலில் கூடை செய்து கொண்டிருக்கிறார்....

அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் பழங்குடி மக்களின் பாரம்பரிய அமைப்பு நம்மை வரவேற்கிறது. உள்ளே அனைத்து பழங்குடியினர்களின் குடிசைகளின் மாதிரிகள், அதன் உள்ளே இருக்கும் பழங்குடி மக்களின் சிலைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எனப் பார்க்கப் பார்க்க ஒவ்வொன்றும் ஆச்சரியம் தருபவையாக இருக்கின்றன. பல வகை பழங்குடியினர்கள் நாகாலாந்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அருங்காட்சியகத்தின் ஒரு நுழைவாயிலில் 14 பழங்குடியினர்களின் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்கள்


RENGMA பிரிவைனைச் சேர்ந்த நாகா .....
வயலில் வேலை செய்யும்போது மழையிலிருந்து காத்துக்கொள்ள பயன்படுத்தும் உடையில்.....


நாகா சமையலறை.....

வேட்டையாடும் நாகா .....

காட்சிப்படுத்திய பொருட்கள், வீடுகள், சிலைகள், அணிகலன்கள் ஆகியவற்றின் அருகிலேயே நல்ல வேளையாக ஆங்கிலத்தில் அவை பற்றிய குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் அந்த ஊர் மொழியில் மட்டும் எழுதி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படி இருந்தால் பார்க்க மட்டும்தானே முடியும் – அவை என்ன என்று நமக்குத் தெரிந்து கொள்ள முடியாது – இங்கே ஆங்கிலத்தில் இருப்பதால், கூர்ந்து கவனித்து அவர்களது பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது.


KHIAMNIUNGAN பிரிவைனைச் சேர்ந்த நாகா பெண்.....
வயலில் வேலைக்குச் செல்லும் போது...


RENGMA பிரிவைனைச் சேர்ந்த நாகா பெண்.....
வயலில் வேலை செய்யும்போது.....

SANGTEM பிரிவைனைச் சேர்ந்த நாகா பெண்.....
மூங்கிலில் தண்ணீர் எடுத்து வருகிறார்.

பழங்குடி மக்கள் என்று சொன்னாலும், கலைத்திறன் மிகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களது கழுத்தணிகள், இடுப்பில் அணிந்து கொள்ளும் அணிகள், வளையல்கள், தலைக்கவசங்கள் என ஒவ்வொன்றிலும் அவர்களது கலைத்திறனும், கலையார்வமும் தெரிகிறது.  பார்க்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  Konyak பிரிவினைச் சேர்ந்தவர்கள் அணிந்து கொள்ளும் காதணி, நாகா ஆண்கள் அணிந்து கொள்ளும் வளையல்கள், குறிப்பாக நாகா பிரிவினரின் தலைவர்கள் அணிந்து கொள்ளும் யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட வளையல்கள் கண்களைக் கவர்ந்தன.


AO பிரிவைனைச் சேர்ந்த நாகா பெண்.....
விழாவுக்குச் செல்லும் உடையில்...


CHANG பிரிவைனைச் சேர்ந்த நாகா ஆண்.....
போருக்குச் செல்லும் உடையில்


ZELIANG பிரிவைனைச் சேர்ந்த நாகா பெண்.....
பட்டாம்பூச்சி நடனம் என அழைக்கப்படும் நடன பாவனையில்..

விவசாயம் செய்யப் பயன்படுத்திய பொருட்களும் வித்தியாசமாகவே இருந்தன.  மழையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் போட்டுக்கொள்ளும் ஒரு உடை வித்தியாசமாக இருந்தது. அதைப் போட்டுக் கொண்டு குனிந்து வேலை செய்யும் ஒரு நாகாவின் சிலையையும் அங்கே வைத்திருந்தார்கள். தண்ணீர் எடுத்து வர நாமெல்லாம் குடங்களைப் பயன்படுத்த, அவர்களோ மூங்கில்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். முதுகில் ஒரு கூடை, அந்த கூடைக்குள் ஐந்தாறு மூங்கில் குழாய்கள் வைத்து அதில் தான் தண்ணீர் நிரப்பி எடுத்து வருவார்களாம். முதுகில் இப்படி மூங்கில் குழாய்களோடு வரும் ஒரு பெண்ணின் சிலையும் அங்கே பார்க்க முடிந்தது.


நாகா தலையலங்காரம்.....


எலும்புகள் மற்றும் மணிகள் கொண்டு செய்த கழுத்தணி....


இடுப்புக்கு ஒட்டியாணம்.....


யானைத் தந்தத்தில் செய்த வளையல்கள்.....
ஆண்களுக்கான அணிகலன் இது....


AO பிரிவினைச் சேர்ந்த ஒரு பெண்மணி அணிந்திருக்கும் உடையைப் பார்த்தபோது இத்தனை எடையை எப்படி தாங்குகிறாரோ என்று வியக்க வைத்தது. காது, கழுத்து, உடல் என அனைத்திலும் ஏதேதோ அணிகலன்கள். உடலுக்குக் குறுக்கே பல மணிகளைக் கட்டி ஒரு அணிகலன்.  அதுவே அதிக எடையோடு இருக்குமே என்று தோன்றியது.  விழாக்களுக்குச் செல்லும் போது இந்த மாதிரி உடை அணிந்து கொள்வது அவர்களது வழக்கமாம்! எனக்கு வடிவேலு ஒரு படத்தில் உடல் முழுவதும் மணிகளைக் கட்டிக் கொண்டு வருவாரே அது நினைவுக்கு வந்தது!


யானையின் மண்டைஓடு மற்றும் எலும்புகள் 
கொண்டு செய்யப்பட்ட நாற்காலி......

மரத்திலும், எலும்புகளிலும் செய்யப்பட்ட பல சிற்பங்கள் ஆங்காங்கே வைத்திருந்தார்கள். கூடவே புகைப்பதற்கான குழல்கள், கழுத்தணிகள் ஆகியவற்றையும் விலங்குகளின் எலும்புகள் கொண்டு செய்திருந்ததையும் காண முடிந்தது. வித்தியாசமான வடிவங்கள், உருவங்கள் என அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தோம்.


வெற்றிச் சின்னங்கள்....

பார்த்துக் கொண்டே வரும் போது, ஒரு மரத்தில் சில மண்டை ஓடுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.  அவை அனைத்துமே உண்மையான மண்டை ஓடுகள் என்பதும் எழுதி வைத்திருந்தனர்.  நாகா பழங்குடியினருக்கு ஒரு பழக்கம்.  தங்கள் எதிரிகளைப் போரில் வென்று, எதிரியின் தலையைக் கொய்து அதை வெற்றிப் பரிசாக எடுத்து வருவார்களாம். எத்தனை தலை எடுத்தார்களோ அதை வைத்து தான் அவரது பெருமையும் புகழும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை.  தங்களது உடலிலும் ஒவ்வொரு தலை எடுத்த பின்னும் ஒரு தலையின் வடிவத்தினை பச்சைக் குத்திக் கொள்வார்களாம். இப்படி தலைகளைக் கொய்வதால் பெருமையும் புகழும் பூமியில் மட்டுமல்லாது, இறந்த பின்னும் மேலுலகத்தில் சிறப்பான இடத்தினையும், பெருமையையும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு!


 வகைவகையாய் Walking Stick-குகள்

பல தலைகளைக் கொய்த நாகாக்கள் உண்டு. இந்த பழக்கம் 20-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்ததாகவும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.  என்றாலும், வெளியுலகில் பழகாத சில நாகா பழங்குடியினர்கள்,  இன்னமும் இதைக் கடைபிடிப்பதாகவும் சொல்வதுண்டு.  எப்படியோ, கொஹிமா நகருக்குள் இப்படி யாரும் இல்லை என்பது மனதுக்கு இதம் தந்தது.

கொஹிமா நகரில் இருக்கும் நாகாலாந்து மாநில அருங்காட்சியகம் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடம்.  அங்கே செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக பாருங்கள். அடுத்ததாய் நாங்கள் எங்கே சென்றோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

22 கருத்துகள்:

 1. அருமையான தகவல்கள். துணைக்கு அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. விரிவான தகவல்களுடன் நாகா பழங்குடி மக்களின் படகளும் அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 3. தண்ணீர் மூங்கில் குழல்களில்? உணவு வேகவைப்பது தான் செய்வார்கள் .கேள்விப்படாத
  நிறைய புது விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 4. அருமை! அருமை! சிறப்பான தகவல்கள்.

  இன்றைய தினமலர் செய்தி - நாகாலாந்தில், நாய் இறைச்சிக்கு தடை விதிக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. உங்களது நாகாலாந்து பதிவுகளை அவர்கள் படித்து மனம் மாறியிருப்பார்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாய் இறைச்சிக்கு தடை.... அட அப்படியா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 5. அச்சு அசலாய் ஒரே மாதிரி தெரியும் இவர்களுக்குள்ளும் இவ்வளவு பிரிவுகளா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 6. வணக்கம்
  ஐயா
  அறிய முடியாத தகவலை மிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். படங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டம் போல காட்சி தருகிறது... த.ம4
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் ஜி!

   நீக்கு
 7. சுவாரஸ்யமான தகவல்கள்! இணைய வேகம் குறைவாக இருப்பதால் படங்கள் லோட் ஆகவில்லை! மீண்டும் ஒரு முறை வந்து பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 8. பிரமிப்பான தகவல்கள் ஓவியப்புகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவை ஓவியங்கள் இல்லை - சிலைகள் - கண்ணாடிக் கூண்டுக்குள் சிலைகளை வைத்திருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. சுவாரசியமான செய்திகள் .கொடுத்து வைத்தவர் நீங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 10. நல்ல தகவல்கள் வெங்கட்ஜி! புகைப்படங்கள் வெகு அருமை. வாக்கிங்க் ஸ்டிக்??!! அதுவும் ஏதோ ஆயுதம் போன்று உள்ளது!!! நிச்சயமாகச் செல்வோம் வாய்ப்புக் கிடைத்தால்...ஜி

  கீதா: மேலே சொன்ன கருத்துடன் வடகிழக்கு மாநிலம் செல்ல வேண்டும் என்று ஒரு எண்ணம் மனதில் 8 வருடங்களுக்கு முன்னரேயே தோன்றியதுதான் என்றாலும் இன்னும் நிறைவேறவில்லை...மகனும் ஊரில் இல்லை இப்போது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு மாநிலத்திலும் நிறைய பார்க்க வேண்டிய விஷயங்கள். முடிந்த போது சென்று வாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Sendhu அம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....