எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, July 14, 2016

மதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 25

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 24 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில்.....
எருமையின் தலை  முகப்பில்!

சென்ற பகுதியில் நாகாலாந்து மாநிலத்தின் மாநில அருங்காட்சியகம் பார்த்தது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். அந்தப் பகுதியில் சொல்லாத, சொல்ல விட்டுப்போன இன்னும் சில விஷயங்கள் இந்தப் பகுதியில். கூடவே மதிய உணவுக்கு சென்ற உணவக அனுபவமும். 

பழங்குடியினரின் வீடுகள்....

மாநில அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் நாகா மக்களின் வீடுகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும், அவர்கள் பயன்படுத்திய விவசாயக் கருவிகள் பற்றியும் காட்சிப் படுத்தி இருந்தார்கள். எத்தனை விதமான கருவிகள், வீடுகளின் வடிவங்களில் வித்தியாசங்கள் என அனைத்தும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு பழங்குடியினரின் வீடுகள் அமைப்பில் கூட வித்தியாசம் இருந்தது. ஒரே பகுதியில் இருந்தாலும் வீட்டின் அமைப்பினை வைத்து அவர்களின் பிரிவுகளைத் தெரிந்து கொள்ளும் வசதி போலும்.

விவசாயத்திற்கான கருவிகள்.....
வீட்டு உபயோகப் பொருட்கள்....

வேட்டையாடும் விலங்குகளின் எலும்புகளைக் கொண்டு நகைகள் செய்து கொள்வது, குறிப்பாக மாலைகள் செய்து கொள்வது அவர்களுக்குப் பிடித்த விஷயம் போலும். மாலைகளில் சில மண்டை ஓடு வடிவங்களையும் பார்க்க முடிந்தது. ராசிக் கற்களிலும் நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்கள் என்பதையும் அங்கே வைத்திருந்த பொருட்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. வித்தியாசமான பழக்க வழக்கங்கள் கொண்ட நாகா பழங்குடியினர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

விதம் விதமாய் குடுவைகளும் குப்பிகளும்....  
மது அருந்தப் பயன்பட்டவை....

அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் மதிய உணவு உண்பதற்குத் தான். ஓட்டுனரிடம் எந்த உணவகத்தில் உணவு நன்றாக இருக்கும், சைவ உணவு கிடைக்கும் என்றெல்லாம் கேட்க, Blank ஆக ஒரு பார்வையை வீசினார்.  “சாப்பாடு சாப்பாடு என்று கூவ வேண்டியிருந்தது அவரிடம்! அதன் பிறகு கொஞ்சம் நடித்தும் காண்பிக்க வேண்டியிருந்தது. நல்ல ஹோட்டல் என்று அவர் எங்களை அழைத்துச் சென்ற இடம் Hotel Blue Bayou வின் ஒரு அங்கமான Oasis Restaurant.

மூங்கில் பையும் மண்டையோட்டு அலங்காரமும்!

வெளியிலிருந்து பார்க்கும் போது அப்படி ஒன்றும் பிரமாதமான உணவகமாகத் தெரியாவிடினும், முதல் மாடியில் உள்ள உணவகத்திற்குள் சென்ற பிறகு நன்றாகவே தெரிந்தது. எங்கள் ஐந்து பேரைத் தவிர வேறு எவருமே உணவகத்தில் இல்லை. பெரும்பாலும் Room Service தான் போலும் என நினைத்துக் கொண்டு ஆறு பேர் அமரக்கூடிய இடத்தில் அமர்ந்தோம். உணவகத்தில் நாகா பெண்கள் தான் சிப்பந்திகள்.  நாங்கள் அமர்ந்தவுடன், AC-on செய்து, சுவற்றில் மாட்டியிருந்த பெரிய LED தொலைக்காட்சியையும் On செய்தார். 

விலங்கு எலும்பில் செய்த மாலை.....

ஏதோ கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு இன்னுமொரு நாகா பெண்மணி வந்து தண்ணீர் வைத்து விட்டு, மெனு கார்டினை வைத்தார்.  அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.  மெனு கார்டு நான்கு பக்கம் – முதல் பக்கத்திலிருந்தே பெயர் தெரியாத உணவு வகைகள் – பெரும்பாலானவை அசைவம் – படித்துக் கொண்டே இருந்தோம் – எதைப் பார்த்தாலும் அசைவம் போன்றே தெரிந்தது – சாலட் ஒன்று தான் சைவம் போலிருக்கிறது என்று நினைத்தபடியே படித்துக் கொண்டிருந்தோம்.  கடைசி பக்கத்தில் வெஜ் என ஏதோ ஒன்று எழுதி இருந்தது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி அளித்தது.

விதம் விதமாய் ஆயுதங்கள்......

அசைவம் சாப்பிடும் நண்பர்களும், அன்றைய காலை மார்க்கெட் சென்று, அங்கே கிடைத்த அனுபவங்களால் சைவமே சாப்பிட வேண்டிய நிலையில் இருந்தார்கள். அந்த நாகா பெண்மணி மீண்டும் எங்கள் மேஜை அருகில் வர, அவரிடம் ஹிந்தியில் பேச ஆரம்பித்தேன்.  எங்களுக்குச் சைவ உணவு வேண்டும், என்ன கிடைக்கும் எனக் கேட்க, எங்களை வேற்றுக் கிரக வாசிகள் போல பார்த்தார். இங்கே நாய்க்கறி மிகவும் பிரபலம் – சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்லவே சீட்டிலிருந்து ஒருவர் எழுந்து விட்டார்! இல்லை இல்லை எங்களுக்கு நாய்களை ரொம்பவே பிடிக்கும், வளர்க்க மட்டும் தான், சாப்பிட அல்ல!என்று சொல்லி சைவ உணவு என்ன கிடைக்குமோ அதையே சாப்பிடுகிறோம் எனச் சொன்னோம்.

மண் பாண்டங்கள்......

சரி உள்ளே சென்று என்ன இருக்கிறது என்று பார்த்து வருகிறேன் என சென்று பத்து நிமிடம் கழித்து திரும்பி வந்தார்.  தவா ரொட்டியும், தாலும் கிடைக்கும், கூடவே உருளைக்கிழங்கு ஃப்ரை கிடைக்கும் என்பதைச் சொல்ல, ஐந்து பேருக்கும் அதையே தரும்படிச் சொன்னேன். கூடவே தயிரோ அல்லது ராய்தா-வோ கிடைத்தால் நல்லது என்று சொல்ல, அவை இரண்டுமே இல்லை என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.  காத்திருக்க ஆரம்பித்தோம்.  நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. 

இசைக் கருவிகள்......

சமையல் அறையிலிருந்து ஒரு சிப்பந்தி வெளியே செல்வதைப் பார்க்க முடிந்தது. பத்து நிமிடத்திற்குப் பிறகு உள்ளே நுழைந்தார் – கையில் ஒரு நெகிழி பை – பையில் உருளைக்கிழங்கு! ஆஹா இனிமே தான் சமைக்கவே ஆரம்பிக்கணும் போல! என்று நினைத்துக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கினோம்.  கூடவே உணவகத்தின் சுற்றுப் புறத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.  இந்த உணவகம் அமைந்திருப்பது நாம் சில பதிவுகள் முன்னர் டென்னிஸ் கோர்ட் யுத்தம் பதிவில் பார்த்த போர் நினைவுச் சின்னத்திற்கு எதிர் புறம் தான்.

மூங்கிலால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள்......

உணவகத்தில் நாகா பெண்களின் அழகிய ஓவியங்கள், அவர்களது வாழ்க்கை முறை ஆகியவை பற்றிய படங்கள் மாட்டி வைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் பார்த்து, நேரத்தினை கடத்திக் கொண்டிருந்தோம்.  நாகா பெண் சிப்பந்திகள் இங்கும் அங்கும் சென்று கொண்டிருந்தார்கள். எங்களைத் தவிர வேறு எவரும் வரவே இல்லை.  ஒரு பெண்ணிடம், ஏன் யாரும் இங்கே சாப்பிட வரவில்லை என்று கேட்கவே, பெரும்பாலானவர்கள் தங்கும் அறையிலேயே சாப்பிடுவார்கள் என்ற பதில் தான் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு நாங்கள் சொன்ன சப்பாத்தி, தால், உருளைக் கிழங்கு ஃப்ரை ஆகிய மூன்றும் வந்தது. 

படம்: இணையத்திலிருந்து.....

காத்திருந்தாலும், சுடச் சுட கொஞ்சம் நன்றாகவே சமைத்திருந்தார். உணவைக் கொண்டு வைத்து, மீண்டும் ஒரு புன்னகை வீசி, “Are you sure, that you don’t want to try Naga special foods?” என்று கேட்க, நானும் ஒரு மந்தகாச புன்னகை செய்து, “We will try, if it is vegetarian!” என்று பதிலளிக்க சீச்சீ, இவங்க கதைக்கு உதவாதவர்கள்என்று மனதில் நினைத்தபடியே நகர்ந்தார் போலும் – முகத்தில் வேறு விதமான புன்னகை!

படம்: இணையத்திலிருந்து.........

நீண்ட நேர காத்திருப்பிற்குப் பிறகு கிடைத்த உணவு – சுடச் சுட கிடைத்த உணவு – அதனால் பேசி நேரத்தினைக் கடத்தாமல் சாப்பிட்டு முடித்தோம். அதன் பிறகு தேநீர் – Black Tea தான் – கொஞ்சம் சூடாக டீ குடித்த பிறகு உணவுக்கான Bill வந்தது – அப்படி ஒன்றும் அதிகமில்லை – ஐந்து பேர் சைவ உணவு சாப்பிட 650 ரூபாய்...  எங்கள் ஓட்டுனரை சாப்பிட அழைத்தும் அவர் வரவில்லை – நான் வீட்டில் சென்று தான் சாப்பிடுவேன் என்று சொல்லி விட அவரை வற்புறுத்தவில்லை.  எங்கே சென்றாலும், ஓட்டுனரையும் எங்களுடன் சாப்பிட அழைத்துச் செல்வது தான் எனது வழக்கம். முடியாது என மறுப்பவரை கட்டாயப் படுத்துவதிற்கில்லை!

மதிய உணவு சாப்பிட்ட பிறகு எங்கே சென்றோம், அடுத்த பயணம் எங்கே என்பதை வரும் பதிவில் சொல்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

30 comments:

 1. எனக்கும் அந்த பிளாக் டீ குடிக்கணும் போல இருக்கு !நாய்க்கறி நினைத்தாலே குடலை ......:)

  ReplyDelete
  Replies
  1. பிளாக் டீ குடிக்கணும் போல இருக்கு! குடிக்க வேண்டியது தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 2. சும்மா ஒரு மாறுதலுக்காக அந்த நாய்க் கறியை டேஸ்ட் பண்ணியிருக்கலாம். அந்த நாகாலாந்து பெண்மணியும் திருப்திப்பட்டிருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பெண்மணியும் திருப்திப்பட்டிருப்பார்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 4. மூங்கில் பை மண்டை ஓடு அலங்காரம் பார்க்கவே கொஞ்சம் பகீர் என்றுதான் இருக்கிறது. வெளியே அலங்காரமான ஓடு. உள்ளே சுட சுட தலை இருக்குமா?

  சாப்பாட்டுப் படத்தைப் பார்த்ததும், நன்றாகத்தானே கொடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன் "இணையத்திலிருந்து" என்பதைப் பார்க்கும்வரை. நீங்களும் பெரும்பாலும் சாப்பிடும் உணவைப் புகைப்படம் எடுப்பதில்லை என்பதையும் கவனித்திருக்கிறேன். நாய் ஸ்பெஷல் சமைக்கும் இடத்தில் சைவ உணவு சாப்பிட கொஞ்சமல்ல நிறையவே சகிப்புத்தன்மை இருக்கவேண்டும். இது எல்லோருக்கும் இருக்காது (குறிப்பா எனக்கு இது சுத்தமாகக் கிடையாது)

  ReplyDelete
  Replies
  1. சகிப்புத் தன்மை - இது இல்லாவிட்டால் அங்கே சாப்பிட முடியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. வழக்கம்போல அழகான படங்களுடன் அருமையான பதிவு. எங்களது பயணத்தின்போது இவ்வாறான பல ஓட்டுநர்களைப் பார்த்துள்ளேன். சிலர் அன்னியோன்யமாகப் பழகுவர். சிலர் மாறுபடுவர். பலர் நம் மனதில் நின்றுவிடுவர். உங்களுடன் வரும் ஓட்டுநர் பெரும்பாலும் மனதில் நிற்பவர் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஓட்டுனர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்! சில இடங்களில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைப்பதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. ப்ளாக் வைத்திருப்பவர்கள் ப்ளாக் டீ தான் குடிக்க வேண்டுமோ!!!

  இனி மேல்தான் சமைக்கவே போகிறார்கள் என்று தெரிந்தால் பசியோடு கூடவே எழும் எரிச்சல்....! பொறுமை வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. பசியோடு கூடவே எழும் எரிச்சல்... :) அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. இது போல வெஜிடேரியன் உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் தன்னுடன் கூட ரெடி மேட் ரவா உப்புமா ( இரண்டு பங்கு வெந்நீர் விட்டால் போதும் ) மினி பானசானிக் எலக்ட்ரிக் குக்கர் இவைகளை எடுத்துச் சொல்லணும் இல்லாவிட்டால் இன்டக்ஷன் ஸ்டவ் மொத்தமாக 6 பாத்திரங்களுக்கு மிகாமல் எடுத்துச் செல்வது உத்தமம்

  ReplyDelete
  Replies
  1. பயணம் செல்லும்போதும் சமையலா? அவ்வளவாகப் பிடிப்பதில்லை. கிடைத்ததை, அதிலும் நமக்குத் தேவையானதை மட்டும் சாப்பிட்டு வருவது தான் வழக்கம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 8. பதிவைப் படித்துக்கொண்டு வரும்பொழுது நாய்க்கறி என்றதும் சற்று நின்று விட்டேன் பழைய பதிவின் நினைவு வந்து விட்டது

  ஆஹா நமது கோடரியும் இருக்கின்றதே ?
  சுலைமாணி (Black Tea) புகைப்படம் அருமை.

  தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. சுலைமானி..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
  2. (Black Tea) இதன் பெயர் அரபு நாட்டில் சுலைமாணி

   Delete
  3. தங்களது மீள் வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. கூகுள் படமாக இல்லாமல்
  அவர்கள் உணவுப் படத்தையே
  போட்டிருக்கலாமோ ?
  படங்கள் அனைத்தும் அருமை
  எலும்புக்கூடு சம்பத்தப்பட்டவைதான்
  கொஞ்சம் பயமுறுத்துகிறது

  ReplyDelete
  Replies
  1. எலும்புக்கூடு சம்பந்தப்பட்டவை தான் கொஞ்சம் பயமுறுத்துகிறது - உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. தலைக்கறி சாப்பிடுவோரையும் இலைக்கறி சாப்பிடுவோராக மாற்ற இந்தியாவின் தலை சிறந்த ஸ்தாபனம் நாகாலாந்து நாய்க்கறி சென்டர். அது என்ன. கறுப்பு தேனீரா! என் கண்ணுக்கு ரத்தம் மாதிரியே தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 11. நாகாலாந்தில் எனக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டது. நல்லவேளையாக என்னுடன் வந்திருந்த நண்பர்கள் புளியோதரைப் பொடி, லெமன் ரைஸ் பொடி என்று பலவற்றை எண்ணெய்யுடன் எடுத்து வந்திருந்தார்கள். சூடாக சாதம் மட்டும் ஹோட்டல்களில் வாங்கி இவற்றை பிசைந்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. நல்ல விஷயம். இப்படி பொடிகள் எடுத்துக் கொண்டு வந்தால் சூடாக சாதம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 12. நாய்க்கறியா...? ஐய்யய்யோ...
  எப்படியோ சைவம் போட்டார்களே... அது போதும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 13. நல்லவேளை! நாங்க அமெரிக்காவில் இம்மாதிரிச் சில இடங்கள் செல்கையில் ரைஸ் குக்கர், புளிக்காய்ச்சல் எடுத்துப் போய்விடுவோம். அரிசி வாங்கி சாதம் சமைத்துக் கொண்டு தயிர் கிடைக்கும். புளிக்காய்ச்சலோடு சாப்பிடுவோம். காலை உணவு எல்லா ஹோட்டலிலும் இலவசம் என்பதால் ப்ரெட் டோஸ்ட் நிச்சயமாய்க் கிடைத்துவிடும். இல்லைனா கார்ன் ஃப்ளேக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. ஐந்து ஆண்கள் மட்டும் போகும்போது இந்த சமையல் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்வதில்லை! :) குடும்பத்துடன் போகும்போது இதையெல்லாம் யோசிக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 14. புகைப்படங்கள் தகவல்கள் தெரிந்து கொண்டோம்...சாப்பாடு..ம்ம் பயணம் மேற்கொண்டால் அதுவும் பயணம் தான் முக்கியம் என்று வந்துவிட்டால் உங்களைப் போல்தான் இருக்க வேண்டும். பல கண்டிஷன்களுடன் பயணம் மேற்கொள்வது கஷ்டமே.

  அருமை வெங்கட்ஜி..தொடர்கின்றோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....