செவ்வாய், 12 ஜூலை, 2016

சாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்

குந்த்ரு துவையல்

குந்த்ரு – இது என்ன புது காய்? என கேள்விக் கணைகளை வீச வேண்டாம்....  தெலுங்குல தொண்டைக்காய்னு சொல்ற கோவைக்காயைத் தான் ஹிந்தில குந்த்ருன்னு சொல்வாங்க! சாதாரணமா இந்த குந்த்ருவை சப்பாத்தியோட தொட்டுக்கொள்ள சப்ஜியாக அதாவது சூக்கா சப்ஜியாகத் தான் செய்வது வழக்கம் – வடக்கே இரண்டு விதமான சப்ஜிகள் சப்பாத்திக்கு – ஒண்ணு சூக்கா சப்ஜி, இரண்டாவது தரி வாலி சப்ஜி!  அதாவது Dry-ஆக இருப்பது சூக்கா சப்ஜி, கொஞ்சம் Liquid-ஆ இருந்தா அது தரி வாலி சப்ஜி! அப்பாடா ஒரு ஹிந்தி பாடமே எடுத்துட்டேனா...... 

இரண்டு நாள் முன்னாடி காய்கறி மார்க்கெட்டிலிருந்து கையில பையோட, பையில குந்த்ருவோட திரும்பி வரும்போது வழக்கம் போல பாலாஜி கோவில்ல இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நண்பர்களைச் சந்தித்தேன்.  அவங்கள்ல ஒருத்தர், அதாங்க என்னோட பதிவுகள்ல சுதா த்வாராகாநாதன் அப்படிங்கற பேர்ல கருத்துரை போடுவாங்களே அவங்க தான், கையில குந்த்ருவைப் பார்த்த உடனே இதை வைச்சு துவையல் செய்தா சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க! அவங்களுக்கு அவங்க மாமியார் சொல்லிக் கொடுத்ததாம்..... 

எப்படிச் செய்யணும்னு கேட்க, அவங்க மாமியார் சொன்ன மாதிரியே, அவங்க சொன்ன அளவோட சொன்னாங்க! குந்த்ரு துவையல் செய்ய குந்த்ரு சர்வ நிச்சயமா தேவை... வேற என்னென்ன வேணும்..... பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

குந்த்ரு – 12, பூண்டு – 6 பல், தக்காளி – 1, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 3, சிவப்பு மிளகாய் – 3, தேங்காய் துருவியது – கொஞ்சம், புளி – கொட்டைப் பாக்கு அளவு, வெந்தயம், தனியா – கொஞ்சம் கொஞ்சம், உளுத்தம்பருப்பு கொஞ்சம். பாட்டுக்கு நடுவுல மானே தேனேன்னு போட்டுக்கற மாதிரி கொத்தமல்லி, கருவேப்பிலையும் உண்டு!  தாளிக்க – கடுகு, உளுத்தம்பருப்பு.  எண்ணையும் உப்பும் – அளவு சொல்லணுமா என்ன, தேவையான அளவு தான்.

எப்படிச் செய்யணும் மாமு?குந்த்ருவை நல்லா சுத்தம் செய்த பிறகு, இரண்டு ஓரங்களையும் கத்தியால நறுக்கிடுங்க, அப்புறமா நீள வாக்கில ஒவ்வொரு குந்த்ருவையும் நாலா நறுக்கிடுங்க – 12 X 4 = 48 துண்டு குந்த்ரு இப்ப உங்கக்கிட்ட இருக்கும்!

வெங்காயத்தையும் தோலை நீக்கிட்டு நீளவாக்கில நறுக்கிடுங்க. தக்காளியையும் அதே மாதிரி சதக் சதக்! பூண்ட எடுத்து யாருக்கிட்ட, எங்கிட்டேயேவான்னு சொல்லி அதோட தோல உரிச்சுடுங்க! பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் ரெண்டுலயும் காம்பு இருந்தா அதை எடுத்து குப்பையோடு குப்பையா போடுங்க!

அடுப்புல வாணலியை வைச்சு, அடுப்ப பத்த வைக்கணும். கொஞ்சமா எண்ணை சேர்த்து அது காய்ஞ்ச உடனே, குந்த்ரு, வெங்காயம், தக்காளி, பூண்டு எல்லாத்தையும் தனித்தனியா வதக்கிக்கோங்க! குந்த்ரு வதங்க கொஞ்சம் நேரமாகும்.  இன்னும் கொஞ்சம் எண்ணை சேர்த்து தனியா, வெந்தயம், உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், புளியையும் சேர்த்து வதக்கிக்கோங்க. கருவேப்பிலை, கொத்தமல்லியும் இதுலேயே சேர்த்து போட்டுக்கிட்டாலும் நல்லது.

வதக்கிய எல்லாத்தையும் ஒரு தட்டுல போட்டு ஆற வைக்கணும்.  ஆறினதுக்கு அப்புறமா எல்லாத்தையும் ஒரு மிக்சி ஜார்ல போட்டு, உப்பு சேர்த்து மைய அரைச்சிக்கோங்க!  கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிச்சு அரைச்சு வைச்ச துவையல்ல கொட்டுங்க!  முடிஞ்சு போச்சு..... 

குந்த்ரு துவையல் ரெடி....  சுடச் சுட சாதம் வைச்சு, அதுல குந்த்ரு துவையல் போட்டு பிசைந்து சாப்பிடலாம்... தயிர் சாதத்துக் கூட தொட்டுக்கலாம்.  இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்! 

சனிக் கிழமை மாலை இது தான் செஞ்சேன்.  சுடச் சுட சாதம் வைச்சு, துவையல் போட்டு, கொஞ்சமா நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட்டேன்.  நல்லாவே இருந்தது! செய்யச் சொல்லித் தந்த திருமதி சுதா த்வாரகாநாதன் அவர்களுக்கு நன்றி! 

நீங்களும் செஞ்சு பாருங்களேன்.....

நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.34 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. கோவைக்காய் உடலுக்கு நல்லது தானே!..
  அவசியம் இந்த துவையலைச் செய்துவிட வேண்டியது தான்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது என்றும் சொல்வார்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. குந்த்ரு...மண மணக்குதே...அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   நீக்கு
 4. எழுதியதற்கு ஒரு சபாஷ். சோம்பல்படாம செஞ்சு சாப்பிட்டதுக்கு ட்ரிபிள் சபாஷ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமையல் விஷயத்தில் சோம்பலே இல்லை. தினசரி வேலை அது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 5. எனக்கு கோவைக்காய் அவ்வளவாகப் பிடிக்காது இருந்தாலும் உருத்தெரியாமல் அரைக்கப்பட்டு துவையல் ஆவதால் இதை செய்து பார்க்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 6. கோவைக்காய் துவையல் கேள்விப்பட்டது இல்லை! செய்முறை விளக்கத்தையும் ருசியாக சொல்லிக்கொடுத்தமை அருமை! பாராட்டுக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 7. செய்முறை நல்லாத்தான் இருக்கு. பூண்டு இல்லாமல் பண்ணிப்பார்த்துவிட வேண்டியதுதான். தோசைக்குத் தொட்டுக்க நல்லா இருக்கும்போல் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லாவே இருக்கு. செய்து பாருங்க......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. புதுமையான துவையல்தான் போல... நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. கோவைக்காய் துவையல் செய்து கோவைக்காரங்களுக்கு கொடுப்பீர்கள் அல்லவா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராஜாக்கள் மங்கலம் காரருக்கும் கொடுப்பேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. செஞ்சு பாருங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 11. ஒருதரம் செய்துதான் பார்த்துடுவோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பாருங்கள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. இன்றைய சந்தையில் இருந்து வந்திருக்கும் குந்த்ரு நாளை உங்க புண்ணியத்தில் துவையலாகப் போகிறது சகோ...

  சுயபாக சமையலில் ஜமாய்க்கிறீங்க... சொல்லிக் கொடுப்பது கூட ரசிக்கும்படி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா செவ்வாய் சந்தையா..... செஞ்சு பாருங்க சகோ. வெந்தயம், தனியா இல்லாமலும் செய்யலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 13. புதுமையான துவையல்...
  ஆஹா... செய்து பார்க்கணும்ன்னு தோணுது அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செஞ்சு பாருங்க குமார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 14. உங்களுடைய எழுத்து நடை மாறியிருக்கு!
  எப்படி என்றால்...வயது குறைந்து இளைஞர்கள் நீரோட்டத்தில் இணையறாமாதிரி எழுதுகிறீர்கள்! உதாரணமா...எப்படி செய்யணும் மாமு! (ஜெயதேவ் தாஸ் மாதிரி நடை).
  தக்காளி அதே மாதிரி சதக் சதக்! எழுதின போது தினததந்தி படித்தீர்களா?

  ஆனால், நடை நல்லாவே இளமையாக இருக்கு! Keep it up!

  பதிலளிநீக்கு
 15. சதக் சதக் - என்றாலே தினத் தந்தி தான் நினைவுக்கு வருகிறது! தினத் தந்தி படித்து பல வருடங்களாகி விட்டன.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி....

  பதிலளிநீக்கு
 16. இங்கியும் சுக்கி, கில்லி ரெண்டு சப்ஜியும் செய்துதான் பழக்கம். துவையல் இதுவரை செய்ததில்லை. செஞ்சுருவோம். கோவைக்காயை மஹாராஷ்ட்ராவில் டோண்ட்லின்னு சொல்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   நீக்கு
 17. கோவைக்காய் சாப்பிடறதில்லை. ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 18. அட ! புதுசா இருக்கே கோவைக்காய் துவையல்....குந்த்ரு..குறித்துக் கொண்டுவிட்டேன் வெங்கட்ஜி..

  செய்து சாப்பிட்டு விடுவோம்.சாப்பிடுவது மட்டுமல்ல பலருக்கும் சாட்டிலைட் வழியாகப் பறந்துவிடும்..உங்கள் பெயர் சொல்லி..ஹிஹிஹி..மிக்க நன்றி ஜி பகிர்விற்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 19. செய்து பாருங்க... நல்லாவே இருக்கும்!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....