எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 5, 2015

த்வாரகாநாதன் – கண்டேன் கிருஷ்ணரை!


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 10

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9


படம்: இணையத்திலிருந்து.....


இதோ துவாரகா நகரினுள் பிரவேசித்து விட்டோம். நேராக த்வாரகாநாதன் குடிகொண்டிருக்கும் கோவிலுக்குத் தான் செல்லப் போகிறோம். போர்பந்தர் நகரிலிருந்து காலையில் புறப்பட்டதால் சில மணி நேரத்திற்குள் இடைப்பட்ட தொலைவினை கடந்து கோவிலின் அருகே வந்து விட்டோம். வழியெங்கிலும் கடைகளும், கடைகளில் த்வாரகாநாதனை அலங்கரிக்க விற்கப்படும் பொருட்களும் நிரம்பி இருக்கிறது. மக்கள் ஸ்ரீகிருஷ்ணனை தங்களில் ஒருவராகவே நினைத்து விதம் விதமாய் அலங்கரித்து பார்க்க ஆசைப்படுகிறார்கள்.


 படம்: இணையத்திலிருந்து.....

கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்விடத்தில் கிருஷ்ண பரமாத்மாவிற்கு கோவில் இருந்திருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கிறது என கோவில் தகவல் மையம் தெரிவிக்கிறது.  பல்வேறு கால கட்டத்தில் இக்கோவில் சில அழிவுகளை கண்டாலும் வெவ்வேறு அரசர்களாலும், மக்களாலும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது.  1903-ஆம் ஆண்டு மஹாராஜா கெய்க்வாட்  அவர்கள் தங்கத்தில் கலசம் வைத்து கும்பாபிஷேகம் நடத்த, 1958-ஆம் வருடம் சங்கராச்சார்யா தலைமையில் மீண்டும் ஒரு கும்பாபிஷேகம். 1960-ஆம் ஆண்டு கோவில் குஜராத் மாநில அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகு பல்வேறு முன்னேற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.காலை 06.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரையும், மாலை நேரத்தில் 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.  அப்படி இருந்தாலும், நடுநடுவே கோவில் நடை மூடி இருக்கும். அதிக பட்சமாக காலை 08.00 மணி முதல் 09.00 மணி வரை நடை மூடி இருக்கும். இது மட்டுமல்லாது த்வாரகாநாதனுக்கு நைவேத்தியம் செய்யும் வேளைகளான ஸ்னான் [Bh]போக்[G], ஷ்ருங்கார் [Bh]போக்[G], [G]க்வால் [Bh]போக்[G], ராஜ் [Bh]போக்[G], உத்தப்பன் [Bh]போக்[G], சந்த்யா [Bh]போக்[G], ஷயன் [Bh]போக்[G], [Bh]பண்டா [Bh]போக்[G] என அவ்வப்போது பத்து பதினைந்து நிமிடங்களுக்கு நடை மூடி இருப்பார்கள்.இப்படி நடுநடுவே மூடி விடுவதால் எப்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாய் காத்திருப்பதைக் காண முடிகிறது. த்வாரகாநாதனை தரிசிக்க சுற்று வட்டாரத்திலிருந்து வரும் மக்களைத் தவிர தொலை தூரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். எப்போதும் இப்படி வந்தபடியே இருந்தாலும், விசேஷ நாட்களில் இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பாதுகாப்பிற்கென இருக்கும் காவல்காரர்களை பார்க்கும்போது தினம் தினம் அவர்கள் எத்தனை வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று தோன்றியது. பக்தர்கள் விதம் விதமாக கைகளில் பூக்களையும், பால், தயிர், வெண்ணை, பாலில் செய்யப்பட்ட மிட்டாய்களையும் எடுத்துக் கொண்டு வந்தபடியே இருக்கிறார்கள். இதற்கு நடுவே உங்களுக்கு சிறப்பாக தரிசனம் செய்து வைப்பதாக கூறிக்கொண்டு இருக்கும் இடைத்தரகர்களையும், பண்டாக்களையும் நிறைய பேரை பார்க்க முடிகிறது.  எல்லா பிரபல வழிபாட்டுத் தலங்களிலும் இதற்கென்றே சிலர் இருக்கிறார்கள்! அவர்களுக்கு இதுவே தொழிலாக மாறி இருக்கிறது.போலவே கோவில் முன்னர் உங்களை அழகாய் வண்ணப் படம் எடுத்து உடனுக்குடன் Print போட்டு தருகிறேன் என நிறைய பேர் தங்களது DSLR காமிராக்களோடு சுற்றி வருகிறார்கள். எனது கையில் காமிரா இருப்பதைப் பார்த்த அவர்கள் ஒரு விரோதியைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு நகர்ந்தார்கள்! நானும் அவர்களை பார்த்துக் கொண்டே சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். இங்கேயும் கோவிலின் உள்ளே காமிராவை எடுத்துச் செல்ல முடியாது என்பதால் நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். பொருட்கள் பாதுகாப்பு அறை இருந்தாலும் அத்தனை பாதுகாப்பு இல்லை! முதலில் நண்பரும் அவரது துணைவியும் சென்று வர அவர்களிடம் காமிராவையும் மற்ற பொருட்களையும் கொடுத்துவிட்டு நான் உள்ளே சென்று த்வாரகாநாதனை தரிசித்து வந்தேன்.[CH]சார் [DH]தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்கள் – துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத் புரி மற்றும் ராமேஸ்வரம்.  போலவே சப்த மோக்‌ஷபுரி என அழைக்கப்படும் ஏழு இடங்கள் – அயோத்யா, மதுரா, ஹரித்வார், வாரணாசி, காஞ்சீபுரம், உஜ்ஜயின் மற்றும் துவாரகா.  [CH]சார் [DH]தாம் மற்றும் சப்த மோக்‌ஷபுரி என அழைக்கப்படும் இவ்விடங்கள் இரண்டிலுமே துவாரகா மட்டுமே இடம் பெறுகிறது என்பதால் இவ்விடத்திற்கு கூடுதல் மரியாதை! பலர் இந்த இடங்கள் அனைத்திற்கும் தமது வாழ்நாளுக்குள் ஒரு முறையாவது பயணித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.நான் தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் போது ஒரு குடும்பத்தினர் துவாரகாநாதனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களுடன் பலரும் வாத்தியங்கள் முழங்க, ஒரு பெரிய மூங்கில் கூடையில் குழந்தை ரூபத்தில் கிருஷ்ணனின் விக்ரஹத்தினை சுமந்த படி வந்து கொண்டிருந்தார்கள்.  இப்படி பலரும் விதம் விதமான பிரார்த்தனைகளுடனும், கோலகலமான கொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியாக இங்கே வருவதைப் பார்க்கும் போது நமக்கும் அவர்களது மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.  அவர்கள் கொண்டுவந்திருந்த கிருஷ்ணரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்!கிருஷ்ணரை எப்படியெல்லாம் கொண்டாட முடியுமோ அப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்.  ஒவ்வொரு நாளும் இக்கோவிலில் நடக்கும் பூஜைகள், நைவேத்தியங்கள் என அனைத்திற்கும் ஒரு திட்டம் வகுத்து அதன் படியே நடத்துகிறார்கள்.  நான் பல முறை  ப்ருந்தாவனத்திற்கும், மதுராவிற்கும் சென்றதுண்டு.  இங்கே ஒரு விதமாய் கொண்டாடுகிறார்கள் என்றால் த்வாரகாவில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடுகிறார்கள். விதம் விதமாய் அலங்காரம் செய்து பார்க்கிறார்கள். விதம் விதமாய் உணவினைப் படைத்து அவனையும் சந்தோஷம் கொள்ளச் செய்து தாங்களும் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.


 CHAPPAN BHOG - 56 வகை பிரசாதங்கள்! 

இங்கே நடக்கும் பல வித [Bh]போக்[G] பற்றியும், கிருஷ்ணருக்கும் விதம் விதமாய் அலங்காரம் செய்வது பற்றியும் நிறைய பேசி மகிழ்கிறார்கள் இங்கே இருக்கும் மக்கள். அங்கே நாங்கள் சென்றபோது சில பக்தர்கள் பேசிக் கொண்டதிலிருந்தும், எனது அலுவலக குஜராத்தி நண்பர்கள் சிலரிடம் பேசியதில் கிடைத்த தகவல்களும், படித்த சில புத்தகங்களிலிருந்தும் எனக்குக் கிடைத்த தகவல்களை அடுத்த பகுதியில் சொல்லட்டா!  விருந்துக்கு நீங்கள் தயாரா?

விரைவில் அடுத்த பதிவில் ஒரு விருந்துடன் வருகிறேன். அதுவரை.......

நட்புடன்


 

38 comments:

 1. அழகிய படங்களுடன் பதிவு. சுவாரஸ்யமான விவரங்கள். தொடர்கிறேன்.

  தமிழ்மணம் வேலை செய்யவில்லையோ? எங்களுக்குப் படுத்துகிறது. இங்கும் சப்மிட் செய்யப் படாமல் இருக்கிறது. வாக்கு பிறகு வந்து அளிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணம் ஏதோ பிரச்ச்னை போல. இரண்டு மூன்று முறை முயற்சித்த பிறகு இப்போது தான் இணைக்க முடிந்தது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. தங்களால் நாங்களும் கண்டோம் ஐயா
  படங்கள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. உங்களுடன் நாங்களும் கண்டோம் துவாரகநாதனை. நேரில் சென்றால்கூட இந்த அளவுக் காண முடியுமா என்பது ஐயமே. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. கண்ணன் என்றாலே மனம் மயங்கும்.. சொல்லவா வேண்டும்.. கூடவே வருகிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 5. மனம் மீண்டும் த்வார்க்கா போயிருச்சே!!!!!

  கண்ணா...............

  ReplyDelete
  Replies
  1. மனம் மூலம் த்வாரகா செல்வது எளிதாயிற்றே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 6. கண்ணன் அழகு. அவனைச் சுமந்து செல்லும் பக்தர்கள் அழகு. அவன் கோவிலும் அழகு. இன்று அவனைத் தரிசிக்க வைத்த காலத்துக்கு நன்றி. உங்களுக்கும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 7. அழகான படங்களுடன் அருமையான தொகுப்பு,,,,,,
  வாழ்த்துக்கள்,,,,,, நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 8. கடல் கொண்டதாகச் சொல்லப் படும் துவாரகா வேறா. மதுராவுக்கும் துவாரகாவுக்கும் இடையிலான தூரம் சிந்திக்க வைக்கிறது. பகிர்வுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பல முறை இயற்கைச் சீற்றங்களையும், அழிவுகளையும் சந்தித்த கோவில். மீண்டும் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. ஆகா!இத்தனையும் எப்படிச் சாப்பிடுவது?சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி விட்டுத்தான்!
  படங்களும் எழுத்தும் அருமை வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!.... அதே தான். பார்க்கும் போதே மலைப்பாக இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. துவாரகா நேரில் போகாமலேயே போய் வந்தது போல் போன்ற உணர்வு ஏற்பட்டது தங்கள் பதிவைப் படித்ததும். தகவல்களுக்கும் அழகிய படங்களை பகிர்ந்தமைக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. புகைப்படங்கள் மிகவும் அழகு ஜி வாழ்த்துகள்.
  த.ம. வே.செ.வி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. அழகிய படங்களுடன் விளக்கமான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. கடையிலே கூட்டம் அம்முதே! நானும் ஒரு விளம்பரம் போட்டுக்கவா?

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/01/9.html

  ReplyDelete
  Replies
  1. ஆஹா கரும்பு தின்ன கூலியா? ஹலோ மைக் டெஸ்டிங்.... 1 2 3... இந்தப் பதிவை படிக்கும் அனைவரும் நம்ம துளசி டீச்சர் பதிவையும் படிச்சு இன்னும் நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 14. துவாரகா, கிருஷ்ணர், பிரசாதத்தட்டு என எல்லாமும் நேரில் போய் வந்த உணர்வைக் கொடுக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 15. நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்...இன்னும் வரும் போலிருக்கே...காத்திருக்கின்றோம்...

  கீதா: ஆவி உமக்கு அமுது எமக்கு அப்படினு சொல்றா மாதிரி...அந்தக் கடைசில வைச்சிருக்கற தட்டைப் பார்த்தா ஒரு புறம் மலைப்பு...மறுபுறம் சுவைத்துப் பார்க்க ஆவல்....எல்லாம் இல்ல...எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 16. கோவில் கோபுரத்தின் மீது பறக்கும் கொடி இருக்கே! அது கூடப் பிரார்த்தனைகள் செய்து கொண்டு கட்டுவார்கள். நாங்கள் கடைசியாகச் சென்ற சமயம் பிரபல தொழிலதிபர் குடும்பத்தினர் அந்தக் கொடியைத் தயார் செய்து ஊர்வலமாக மேள, தாளத்துடன் பல்வகையான சீர் வரிசைகளுடன் ஆடிப்பாடிக் கொண்டு எடுத்து வந்தார்கள். படம் எடுக்கப் போனப்போ தடுத்துவிட்டார்கள். :( எந்தவிதமான அகங்காரமும் இல்லாமல் இறைவனுக்காக அவர்கள் வீட்டுப் பெண்களும் கூடவே அந்த ஊர்வலத்தில் ஆடிப்பாடிக் கொண்டு மாறி மாறிக் கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தது ஆச்சரியப்பட வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கொடிக்கும் பல கதைகள் உண்டு. துவஜ ஆரோகணம் - கொடிக்கு அளவு கூட ஒரே மாதிரி தான் 52 அடி! அதற்கும் சில காரணங்கள் உண்டு. கொடி கட்டுவதற்காக சிறப்பு வழிபாடுகளும் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 17. கோவிலிலும் இதைக்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நபர் மாத்திரமே மேலே ஏறிக் கொடியைக் கட்டுவார் என்பதையும் அறிந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 18. ஆஹா இந்த விருந்தே திகட்டுதே..இருந்தாலும் அடுத்த பதிவின் விருந்திற்கும் வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. திகட்டியது விருந்து.... இத்தனை வகை இனிப்பு இருந்தால்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete

 19. இதுக்குத்தான் உடனுக்குடன் படிக்க வேண்டும் என்பது....விட்டுவிட்டு இப்போ மொத்தமா படிச்சுட்டுருக்கேன்..ஆனா பிள்ளைகளைக் கூப்பிட போகும் நேரம் வந்துவிட்டது...மீதியை நாளைக்குப் படித்து முடித்துவிடுவேன் அண்ணா :)

  ReplyDelete
  Replies
  1. தொடரின் அனைத்து பகுதிகளையும் படிப்பது அறிந்து மகிழ்ச்சி. முடிந்த போது படியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....