எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 6, 2015

நள்ளிரவுப் பிரசங்கமும் தொலைந்த தூக்கமும்.....சமீபத்தில் தமிழகம் சென்றபோது கிடைத்த அனுபவம் இது. ஒரு வார விடுமுறையில் தமிழகம் வந்து சில வேலைகளை முடிக்க வேண்டியிருந்தது.  ஆகஸ்டு மாத கடைசியில் வந்து செம்டம்பர் மாத ஆரம்பத்தில் தில்லிக்குப் பயணம். சென்னையிலிருந்து அதிகாலை இண்டிகோவில் தில்லிக்குப் பயணம் – வீடு திரும்பி வேலைகளை முடித்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.  இப்படி அதிகாலை நேர விமானப் பயணம் எனில் திருச்சியில்/திருவரங்கத்தில் இருந்து இரவு புறப்படும் Classic பேருந்தில் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது.

பொதுவாகவே இப்பேருந்தில் முன்பதிவு செய்யாவிடில் திருவரங்கத்திலிருந்து இடம் கிடைப்பதில்லை. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிடுகின்றன. அதனால் நானும் நேரடியாக மத்தியப் பேருந்து நிலையத்திற்கே சென்றுவிடுவது வழக்கம். அன்றைக்கும் அப்படியே. பேருந்தின் நடுப்பகுதியில் நிறைய இருக்கைகள் இருக்க, நடத்துனர் பின்பக்க இருக்கைகள் மட்டுமே காலி இருப்பதாகச் சொன்னார்! கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அப்படியே முன் இருக்கைகளில் பார்த்தால் ஒரு சில குடும்பங்களும், சில இளைஞர்களும் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள்.

மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து திருவரங்கம் வந்து சேர்ந்தது. இன்னும் சிலர் அங்கிருந்து பேருந்தில் ஏறிக் கொண்டார்கள். அப்படியும் முன்புற இருக்கைகள் காலியாக இருக்கவே, நடத்துனர் என்னை அழைத்து “சார், நீங்க முன்னாடி வந்து உட்கார்ந்துக்கோங்க, இங்கே இரண்டு சீட்டு காலி என்று சொல்ல நானும் முன்னாடி வந்து வசதியாக அமர்ந்து கொண்டேன்.  அங்கே தான் எனக்குப் பிரச்சனை ஆரம்பித்தது! எனக்கு பின்புற இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு மூதாட்டி. பெண்மணியின் கணவரும் அவர்களது மகனும் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.

திருவரங்கத்திலிருந்து அவர்களைச் சேர்ந்த இன்னும் சிலரும் பேருந்தில் ஏறி இருந்தார்கள்.  அவர்கள் அனைவருமே ஒரு சாமியாரின் சீடர்கள் போலும். சாமியாரின் பிரதாபங்களைச் சொல்லி அவர்கள் மெய்சிலிர்த்துக் கொண்டிருந்தார்கள்.  பேருந்தில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல் அவர்கள் குழுவினர் என்பதால் நிறையவே அருமை பெருமைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். அவரே கடவுள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பேருந்தும் மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. அனைத்து பயணிகளுக்கும் பயணச் சீட்டு கொடுத்து முடித்தபின் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஒரு இரவு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. 

பயணிகள் ஒவ்வொருவராக உறக்கத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டனர். அப்போது தான் பின்னிருக்கையில் இருந்த மூதாட்டி, பெண்ணிடம், “ஏதோ சாமியார் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்களே, யார் அவர்? அவர் உலகத்திற்கு சொல்ல வரும் கருத்து என்ன?என்று கேட்க, பெண்மணி பிரசங்கத்தினை ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து அந்த சாமியாரின் பிரதாபங்கள், உலகுக்கு அவர் செய்யப்போகும் நல்ல விஷயங்கள், இறைவனே அவர் தான், என்றெல்லாம் பலவற்றையும் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் பின் பக்கத்தில் அமர்ந்திருந்தால் கூட அவரது பிரசங்கம் எனக்குக் கேட்டிருக்காது. முன் இருக்கையிலேயே அமர்ந்திருந்ததால் அந்த பிரசங்கத்தினை எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ கேட்டாக வேண்டிய சந்தர்ப்பம்.  நேரமோ நடுநிசியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  பேருந்துப் பயணம் முடியும் வரை கொஞ்சமாவது உறங்கினால் தான் அடுத்த நாள் அலுவலகத்தில் போய் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.  பேச்சு எப்போது நிற்கும், எப்போது உறங்கலாம் என நினைத்தபடியே இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தேன்.

என்னைத் தவிர வேறு யாருக்கும் இந்தப் பிரசங்கம் பற்றிய கவலையில்லை. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். எனக்கோ இப்படி யாராவது பேசிக் கொண்டிருந்தால் சுலபத்தில் உறக்கம் வருவதில்லை. கண்களை மூடியபடி கொஞ்சம் இருக்கலாம் என்றால் காதில் வந்து விழும் சம்பாஷணைகள் தொல்லை கொடுத்தபடியே இருந்தது.  தூங்க முடியாததால் கோபமும் வர, மீண்டும் திரும்பி கொஞ்சம் முறைத்தேன்.  அந்த மங்கலான ஒளியில் நான் முறைத்தது அவர்களுக்கு தெரியவா போகிறது! பிரசங்கம் தொடர்ந்தது.

கேள்வி கேட்ட பெண்மணிக்கே “ஏண்டா இந்த கேள்வி கேட்டோம்? என்ற எண்ணம் வந்திருக்கும். ஒரு கேள்விக்கே இத்தனை நீண்ட பிரசங்கம் என்றால், கொஞ்சம் சந்தேகமோ, இல்லை துணைக்கேள்விகளோ கேட்டிருந்தால் என்னாவது.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலுப்பில்லாது அப்பெண்மணி பிரசங்கத்தினை நடத்திக் கொண்டிருந்தார். காதுகளின் ஓரத்தில் எனக்கு ரத்தமே வந்த உணர்வு! நாராயணா, இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா....என்று சத்தமாகவே புலம்ப, கேள்வி கேட்ட பெண்மணிக்கு உரைத்தது. சரிம்மா. தூக்கம் வருதுஎன்று சொல்லி விட்டார். பிரசங்கம் முடிந்தது. நானும் நித்திரா தேவியின் பிடியில் வீழ்ந்தேன்.

இப்படித்தான் சிலர் பொது இடங்களில் அடுத்தவர்களின் சௌகரியம் குறித்து யோசிப்பதே இல்லை. ஒருவருக்குப் பிடித்த விஷயம் மற்றவர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தங்களுக்குப் பிடித்ததை மற்றவர்கள் மேல் திணிக்க வேண்டியதும் இல்லை. இதையெல்லாம் எப்போது தான் புரிந்து கொள்வார்களோ... 

மேலும் ஒரு விஷயமும் தோன்றுகிறது! எனக்குன்னு ஏன் இப்படியெல்லாம் நடக்குது?  எல்லாப் பயணத்திலும் இப்படி ஏதாவது ஒன்று வந்து மாட்டி விடுகிறது! இவர் தவிர இன்னுமொருவரும் தனது பிரதாபங்களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் – தான் சினிமாவில் கதாசிரியர் ஆக முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பற்றி!  அது வேறு கதை! அதையே ஒரு சினிமா எடுக்கலாம்!

பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அடுத்தவர்களுக்கு தொல்லை தரக்கூடாது எனும் மிகச் சாதாரண விஷயங்களைக் கூட இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் பலரும். 

வேறு ஒரு பதிவுடன் நாளை சந்திக்கும் வரை.....

நட்புடன்54 comments:

 1. அப்படி என்னதான் அந்த சாமியார் பண்ணார்.. கேட்ட வரைக்கும் சொல்லுங்க..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... என்னையும் பிரசங்கம் பண்ணச் சொல்றீங்க! அடுத்த பயணத்தில் திருவரங்கம் வரும்போது பிரசங்கம் பண்ணிடறேன்.... உங்களுக்கு மட்டும் தனியா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ரிஷபன் ஜி!

   Delete
  2. இடம்,பொருள், ஏவல், தெரியாதவர்கள் எப்படி நண்பரே?
   தெய்வீகத்தை உணரப் போகிறார்கள்?
   உறக்கத்தை தொலைத்து விட்டு
   என்போன்றவர்களின் இறக்கத்தை சொல்லும்படியாக அமைந்துவிட்டது நண்பரே இந்த பதிவு!
   நேரடிப் பயணத்தில் கண்ட பகுத்தறிவு இல்லாத செயல் !
   த ம +
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 2. Replies
  1. ம்.... அந்த சாமி.... யார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. ஒரு நாளைக்கு பிரசங்கம் கேட்க உங்களுக்கு இவ்வள கஷ்டம் என்றால் என்னை நினைச்சு பாருங்க... தினமும் பிரசங்கம் கேட்கவில்லையென்றால் பூரிக்கட்டையால் அர்ச்சனை நடக்கும்

  ReplyDelete
  Replies
  1. பிரசங்கமும் கூடவே பிரசாதமாய் பூரிக்கட்டை பயன்பாடும்!.... ஹா.ஹா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுய நல மனப்பாங்கே இதற்குக் காரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்`

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். சுயம் மட்டுமே சிந்திக்கும் மனது......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 5. நீங்க திரும்பிப் பார்க்க, ஒருவேளை நீங்களும் ஆர்வமுடன் கேக்குறீங்களோ'னு பிரசங்கத்தை மேலும் நீட்டிக்காமல் போனாரே ! மாத்த முடியாது !

  ReplyDelete
  Replies
  1. மேலும் தொடர்ந்திருந்தால் நானே நேரடியாக ”நிறுத்தும்மா உன் பிரசங்கத்தை” எனச் சொல்லி இருப்பேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 6. >>> எனக்குன்னு ஏன் இப்படியெல்லாம் நடக்குது? எல்லாப் பயணத்திலும் இப்படி ஏதாவது ஒன்று வந்து மாட்டி விடுகிறது!..<<<

  சிந்திக்க வேண்டிய விஷயந்தான்..

  தங்களுக்கு மறுபடியும் சிரமங்கள் ஏற்படக்கூடாது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதால்தான் இன்னும் சாமியார்கள் சுகவாசியாய் காலம் தள்ளுகிறார்கள் அண்ணா...

  பொது இடத்தில் இப்படிப் பேசுபவர்கள் அடுத்தவரைப் பற்றி கவலைப்படுவதில்லை... எங்கள் அறைக்கு புதிதாய் ஒரு நண்பர் வந்தார். இரவு 4.30 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விடுவார். பின்னர்தான் ஆரம்பம் அவரின் வேலை... முதலில் லேப்டாப்பை ஆன் பண்ணுவார்.... அது ஊரில் மைக் செட் செய்தது போல 'கிர்ர்ர்ர்ர்ர்'ந்னு கொஞ்ச நேரம் கத்தும். பின்னர் பிளாஸ்டிக் கவர்களுடன் விளையாடல்... எல்லாரும் 5.30 மணிக்கு மேல் ஒவ்வொருவராய் குளிக்கப் போவோம். ஆனால் இவர் வந்த பின்னர் 4.30க்கே முழித்துவிடுவோம்.

  பூனைக்கு யார் மணி கட்டுவது...? எல்லோரும் பேச்சோடு நிறுத்த நான் தான் அவரிடம் எடுத்துச் சொன்னேன். அதுக்கு என்னங்க பண்றது... 4 மணிக்கு எழுந்தாலும் குத்தம் 6 மணிக்கு எழுந்தாலும் குத்தம்ன்னான்னு சவுண்டைக் கூட்டுனாரு...

  இரவில் இடையில் எல்லாரும் எழுகிறோம்... உங்களுக்கு தொந்தரவு இருக்கா... இல்லையில்ல... அது மாதிரி 3 மணிக்கு அல்லது 6 மணிக்கு எந்திரிங்க... எங்களுக்கு தொந்தரவு இருக்கக்கூடாது. நான் 6.30 மணிக்கு எந்திரிக்கிற ஆள் எதுக்கு 4.30 மணிக்கு எந்திரிக்கணும் அப்படின்னு கொஞ்சம் சூடாகப் பேச, தற்போது சிறிது குறைத்திருக்கிறார்.... பிளாஸ்டிக் கவர்கள் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன....

  ReplyDelete
  Replies
  1. அதிகாலை நான்கு மணிக்கு பிளாஸ்டிக் கவர்கள்.... ரொம்பவே கஷ்டம். ஒரு சென்னைப் பயணத்தின் போது - அதிகாலை ஐந்து மணிக்கு விமானம், மூன்று மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டேன். இரவு நல்ல உறக்கம் இல்லை என்பதால் விமானத்தில் உறங்க நினைதேன். பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்த பெருச்சாளி ஒன்று தொடர்ந்து கொசகொசவென எதையோ பிளாஸ்டிக் பையிலிருந்து எடுப்பதும் வைப்பதுமாக ஒரே தொல்லை! இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 8. உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இது மாதிரியான அனுபவங்கள் நிச்சயம் இருக்கும். அதுவும் தனி ஆளாக பயணம் செய்யும் போது ஸ்பெசலாக சில சங்கடங்கள் வந்தே தீரும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். ஒவ்வொருவருக்கும் இப்படி அனுபவங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 9. //எனக்குன்னு ஏன் இப்படியெல்லாம் நடக்குது?//

  இதெல்லாம் பூர்வ ஜன்ம கொடுப்பினை. நம் கர்ம வினையை நாம்தான் அனுபவித்துத் தீர்க்கவேண்டும் என்று பெரியவா சொல்லிக் கேட்டதில்லையோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 10. அவர்களுக்கு தெரிந்துவிட்டது போல இவர் சிறப்பாக பயணக்கட்டுரை எழுதுபவர் என்று அதனால் இப்படி தங்கள் மூலம் தகவல் பரப்ப எண்ணியிருக்கலாம்.ஹஹஹ.

  ReplyDelete
  Replies
  1. ஹா.ஹா.. இப்படி ஒரு யோசனையா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

   Delete
 11. என்னதான் கஷ்டப் பட்டிருந்தாலும் உங்களுக்கு பதிவு எழுத விஷயம் கிடைத்ததே .

  ReplyDelete
  Replies
  1. பதிவு எழுத ஒரு விஷயம் - இப்படி கிடைக்க வேண்டாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 12. எனக்கொரு வியாதி உண்டு. யாராவது நீளமாக பேசிக்கொண்டே இருந்தால் தூக்கம் வந்து விடும். கேள்வி கேட்ட அந்தப் பா(ர்)ட்டிக்கும் அந்தப் பழக்கம் இருந்திருக்க வேண்டும். உபயோகப் படுத்திக் கொண்டு விட்டார் போல!

  ReplyDelete
  Replies
  1. பேச்சுக் கொடுத்தால் தூங்கி விடலாம்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. கொடுமைதான் சகோதரரே!

  எனக்கும் எங்காவது பயணிக்கும்போது (இப்பவல்ல முன்பு) பக்கத்தில் என் கணவரோ பிள்ளைகளோ ஏதாவது பேசிக்கொண்டே வந்தால் அவ்வளவு பிடிப்பதில்லை.
  பகலெனில் வெளியே இயற்கையை ரசிப்பேன்.
  இரவெனில் தூங்கமாட்டேன்.. கண்களை மூடி ஏதாவது கற்பனை..:)

  நீங்கள் பட்ட மனத்துயர் பதிவில் வெளிப்பட்டது.
  இனியும் இப்படி ஏற்படாதிருக்கட்டும்!..

  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 14. இவ்வாறாகப் பலர் இருக்கின்றார்கள். தாம் கவனிக்கப்படவேண்டும், தம் பேச்சு கவனிக்கப்படவேண்டும் என்ற மன நிலை. அவர்களைத் திருத்த(வே) முடியாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 15. இயர் போன் ஒன்றை காதில் மாட்டிக் கொண்டு நிம்மதியா தூங்க வேண்டியதுதானே :)

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete

 16. இது போலத்தான் ஒரு முறை நான் தஞ்சையிலிருந்து சென்னைக்கு இரவு பேருந்தில் பயணித்தபோது என் அருகே இருந்தவர் இரவு 11 மணிக்கு மேல் கைபேசியில் யாரிடமோ உரத்த குரலில் பேசிக்(கத்திக்) கொண்டு இருந்தார். யாரும் அவரை தட்டிக்கேட்கவில்லை. நான் பலமுறை திரும்பி பார்த்தும் அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை. இவர்களையெல்லாம் பேருந்தில் வரும் நடத்துனர் தான் கண்டிக்கவேண்டும். நீங்கள் சொல்வதுபோல் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் பலருக்குத் தெரியவில்லை என்பது நூற்றுக்கு நூறு சரியே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 17. ஸ்வாரஸ்யமா எழுத ஐடியா கிடைக்கிரது.. பிரயாண அலுப்பு இருக்கவே யிருக்கு. ஆமாம் அதுவும் ஏதாவதொரு ஆனந்தாவா. இன்னொரு பதிவுக்கும் விஷயம் இருக்கு.. இப்படியும் சும்மா ஒரு பேச்சுுக்குச் சொல்றேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. இன்னுமொரு பதிவுக்கும் விஷயம் இருக்கு! - அது சினிமா கதை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   Delete
 18. எரிச்சலா வரும்! என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 19. அனைத்து இடங்களிலும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 20. கொஞ்சம் முறைத்தேன். அந்த மங்கலான ஒளியில் நான் முறைத்தது அவர்களுக்கு தெரியவா போகிறது
  ஹாஹாஹா ரசித்தேன் ஜி ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 21. திருந்தாத ஜென்மங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 22. எனக்கு இப்படிப்பட்ட அனுபவம் பலமுறை நடந்திருக்கிறது. அதிலும் சில நேரம் பகலில் அதிக தூரம் நடந்து களைத்துப் போயிருப்போம். எப்போது தூங்குவோம் என்றிருக்கும், அப்போது இப்படி வந்து மாட்டிக்கொண்ட அனுபவங்கள் ஏராளம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 23. சிவ்க் சென்ஸ் இல்லாத மக்கள்....ம்ம் என்னத்த சொல்ல..

  கீதா: இது போன்ற நிறைய அனுபவங்கள் உண்டு ஜி! ஆனால் எனக்கு தூக்கம் வந்துவிட்டால் அவ்வளவுதான்...லைட்டே எரிந்தாலும், பேச்சுக் குரல் கேட்டாலும்...ஏன் இடியே விழுந்தாலும் நன்றாகத் தூங்கிவிடுவேன்....என்னைப் பார்த்து எல்லோரும் சொல்லுவது கொடுத்து வைச்சவ..அப்படினு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 24. உண்மையிலே இது மிகவும் துன்பமே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 25. யார் அந்தச் சாமி யார்? :)

  ReplyDelete
  Replies
  1. சாமி யார்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 26. பாவம் வெங்கட். ரயிலில் அனுபவங்களைச் சொன்னீர்கள். பஸ்ஸிலும் இப்படியா.
  முன்பெல்லாம் இப்படி வீடியோக்களோ ,மக்கள் தொந்தரவுகளோ இருக்காது.
  பேசித் தீர்க்க வேண்டும் என்பவர்களை எப்படித் திருத்துவது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....