எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 19, 2015

கேடியா உடையும் ஆபரணமும்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 14

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான நாகேஷ்வரில் உச்சிகால பூஜை பார்த்தபின்னர் அங்கிருந்து அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம்.  அப்படி பயணிக்கையிலும், குஜராத்தில் கிராமங்களைக் கடக்கும்போதும், வழியில் பார்த்த ஆண்களும் பெண்களும் அணிந்திருந்த உடைகள் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தேன். வித்தியாசமான உடையில் இருக்கும் ஆண்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் வேண்டும் என நினைத்திருந்தேன்.கோவிலை விட்டு வெளியே வந்து ஓட்டுனர் வசந்த் [bh]பாய் வண்டி நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்திற்கு வரும்போது அப்படி சில ஆண்களைப் பார்க்க முடிந்தது. என்றாலும் அவர்களைப் புகைப்படம் எடுக்கவில்லை. அவர்களிடம் பேசி அவர்களின் அனுமதி வாங்கியபிறகு புகைப்படம் எடுக்க வேண்டும். அவர்கள் பேசும் மொழி நமக்குப் புரியாதே என்ன செய்வது என்று யோசித்தபடியே நகர்ந்தேன்.  வண்டியில் அமர்ந்ததும் வசந்த் [bh]பாய்-இடம் புகைப்படம் பிடிக்க வேண்டியிருப்பதைச் சொல்லி, அடுத்து அப்படி உடையணிந்த ஆட்களைப் பார்க்கும் போது வண்டியை நிறுத்தி, அவர்களிடம் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க உதவி செய்யக் கேட்டுக் கொண்டேன். கோவிலிலிருந்து சில மீட்டர்கள் கடந்த பிறகு அப்படி இரண்டு ஆண்கள் சாலையில் வரவே, வண்டியை ஓரமாக நிறுத்தி, அவர்களிடம் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார் வசந்த் [bh]பாய்இரண்டு பேரில் மூத்தவர், உடனே “ஃபோட்டோ பாடோ, [b]பேட்[d], [b]பக்ரி, சப்[b] கா ஃபோட்டோ பாடோஎன்றார். அதாவது அவர் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகள், அவரை என அனைத்தையும் படம் பிடித்துக் கொள்ளச் சொன்னார். அவருக்கு ஹிந்தியில் நன்றி சொல்லி களத்தில் இறங்கினேன்.அவர்களின் உடையைப் பற்றியும் சொல்ல வேண்டும். இம்மனிதர்கள் பழங்குடி மக்கள். ரபரி எனும் பழங்குடி மக்கள் எனத் தெரிகிறது. அவர்கள் அணிந்திருக்கும் உடையை கேடியா உடை என்று சொல்கிறார்கள்.  ஆண்கள் அணிந்திருக்கும் கீழாடை தற்போது பெண்கள் அணிந்து கொள்ளும் பட்டியாலாவகை சுடிதார் போல இருக்கிறது.  மேலே அணிந்திருக்கும் உடைகளில் அத்தனை ஃப்ரில்.  கூடவே பலவித அலங்காரங்களும் செய்து கொள்வது அவர்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயம் போல! ஆண்கள் கூட தங்களது காது மடலில் – நட்டநடுவே துளை செய்து பெரிய தங்கக் காதணிகளை அணிந்து கொள்கிறார்கள்.பார்க்கும் பல ஆண்களும் இப்படி அணிகலன் அணிந்திருப்பதைப் பார்த்தால் உங்களுக்குக் கூட அப்படி அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிடலாம்! எனக்கு வந்தது! இத்தனை பெரிய அணிகலன் என்றால் ஒன்றிரண்டு பவுனில் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன்! ஆனாலும் ஆசை மட்டும் போதுமா? அணிந்து கொள்ள அனுமதியும் வேண்டுமே! :)  முகத்துல குறுந்தாடி வைச்சுக்கவே அனுமதி கிடைக்க மாட்டேங்குதே!அப்படி இரண்டு பேரின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவர்களுக்கும் ஓட்டுனருக்கும் நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் அடுத்ததாய்ச் செல்லும் இடம் த்வாரகாவிற்கு அருகில் இருக்கும் [b]பேட்[t] த்வாரகா. இந்த இடத்திற்கு நாம் செல்லப்போவது சாலை வழியே அல்ல. “நாவ்டேஎன்று அழைக்கபடும் படகு மூலம்! ஆமாங்க இந்த [b]பேட்[t] த்வாரகா சிறியதோர் தீவு. த்வாரகா நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.கடற்பகுதி என்பதால் வழியெங்கும் படகுகள் பெரியதும் சிறியதாகவும், மீன் பிடி வலைகளும், பிடித்துக் கொண்ட மீன்கள் குவியல் குவியலாகவும் பார்க்க முடிந்தது. மீன்களை கடற்கரையிலிருந்து ஊருக்குள் கொண்டு செல்ல இருக்கவே இருக்கிறது ஆல் இன் ஆல் அழகுராஜாவான [ch]சகடா.... நாங்கள் சாலையில் செல்லும்போது இப்படி மீன் ஏற்றிச் செல்லும் நிறைய [ch]சகடா வண்டிகளை பார்க்க முடிந்தது.நாகேஷ்வரிலிருந்து பயணித்து [b]பேட்[t] த்வாரகா செல்ல படகில் செல்ல நாங்கள் சென்றடைந்தது ஓக்கா [okha] எனும் இடத்திற்கு. துவாரகா செல்ல நீங்கள் ரயில் வந்தால் இறங்க வேண்டிய ரயில் நிலையம் இந்த ஓக்கா தான். தற்போது மிகப் பெரிய துறைமுக நகரமாக இருந்தாலும், [b]பேட்[t] த்வாரகா தான் முந்தைய துறைமுகமாக இருந்திருக்கிறது.  நாங்கள் படகில் செல்ல படகுத் துறைக்கு வந்து சேர்ந்தபோது, கோவில் மதிய நேரத்திற்காக மூடி இருக்கும் என்பதால் படகுகள் சேவை நிறுத்தப் பட்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கு தான் கோவில் திறக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.படகுத் துறைக்கு வெளியே சின்னச் சின்னதாய் நடைபாதை கடைகள் அமைத்து பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பீங்கான் பொம்மைகளில் ஒரு பாம்பு பொம்மையை பார்த்தேன்.  தவிர வேறு சில பொம்மைகளும் பார்த்தோம். சில தின்பண்டங்களும் விற்றுக் கொண்டிருக்க, காலைக்குப் பிறகு சாப்பிடாதது நினைவுக்கு வந்தது!

சரி மதிய உணவினை முடித்துக் கொள்ளுவோம் என நல்ல உணவகம் எங்கே இருக்கிறது என படகுத் துறையில் கேட்க, அவர்கள் எங்களை மேலும் கீழும் பார்த்து ஒரு விஷயம் சொன்னார்கள்....  அது என்ன?  அடுத்த பகுதியில் சொல்லட்டா?

நட்புடன்20 comments:

 1. சைவ உணவகமே இல்லை இங்கு என்றார்களா?!!

  படங்களையும், பதிவையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவில் தெரிந்து விடும்..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பொறுத்துப் பார்த்து, தம சப்மிட் செய்து, வாக்களித்து விட்டேன்! :)))

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணத்தில் இணைத்து முதல் வாக்களித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. உணவகத்திற்கே பஞ்சமா அங்கு.
  ஆனாலும் இப்பதிவில் ஒரு செய்தி புரிந்து விட்டது,
  குறுந்தாடி வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப் பட்ட விசயம் தெரிந்து விட்டது
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. குறுந்தாடி - அதை பதிவாகவே எழுதி இருக்கிறேன்... குறுந்தாடியில் “க்ளிக்”கினால் படிக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. மதியங்களில் படகுசேவையை நிறுத்திடறாங்களா என்ன? நாங்க போனது ஒரு பதினொன்னரை மணி அளவில் இருக்கலாம். ஆனாலும் அங்கே போய்ச்சேர்ந்து கோவிலுக்குப் போனால் மூடிட்டாங்க. மாலை நாலுமணிக்கு திறப்பாங்க என்பதால் பேட் த்வார்க்காவைச் சுத்துனதில் புது அனுபங்களா பலதும் கிடைச்சது!!!!

  ReplyDelete
  Replies
  1. [b]பேட்[t] த்வாரகா மிகச் சிறிய இடம் தானே.... நிறைய புது அனுபவங்கள் கிடைத்திருக்கும்....

   நானும் கொஞ்சம் நேரம் அங்கே சுற்றினேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. சாப்பாடு அதோ கதிதானா?

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்... அடுத்த பகுதியில் சொல்லிவிடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. வித்தியாசமான மனிதர்களை படம்பிடித்து பார்க்கத் தந்தமைக்கு நன்றி. ( இப்போதெல்லாம் முன்புபோல் யாரையும் அனுமதி இல்லாமல் படம் எடுக்க முடிவதில்லை. கேமராவை உயர்த்தினாலே, யார் நீ, எதற்கு போட்டோ எடுக்கிறாய் என்று கேள்விகள் வந்து விடுகின்றன. அந்த வகையில் அந்த பெரியவரைப் படம் எடுப்பதற்கு முன்பு கேட்டுக் கொண்டது நல்லதுதான்)

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். தெரியாதவர்களை படம் எடுப்பதற்கு முன்னர் கேட்டுக்கொள்வது நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 7. அன்று உணவு கூடாது உபவாசம் என்றார்களா. உங்கள் காலில் சக்கரம் இருக்கிறதா வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இல்லை... அப்படி சொல்லி இருந்தாலும் நான் சாப்பிட்டு இருப்பேன்! உபவாசம் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. மிகவும் ரசித்து படித்தேன் கூடவே வந்தது போன்ற உணர்வுடன் புகைப்படங்கள் அருமை ஜி ஆடு மேய்க்கும் மீசைக்காரர் அசத்தலாக நிற்கிறார்

  ReplyDelete
  Replies
  1. ஒரு மீசைக்காரரை இன்னுமொரு மீசைக்காரருக்கு பிடிக்கிறது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி...

   Delete
 9. சீக்கிரம் சொல்லுங்க!
  தம5

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமா சொல்லிடறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. வித்தியாசமான மனிதர்களின் படங்கள்...
  மீன் ஏற்றிச் செல்லும் சகடா வண்டிகள்...
  அருமை... அருமை அண்ணா...
  சீக்கிரம் சொல்லுங்க....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....