எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 20, 2015

DHAK மேளமும் ஆட்டமும்

தலைநகரிலிருந்து.....தலைநகரிலிருந்து பகுதியில் கடைசியாக சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னர்! எழுதிய பதிவு நீங்க நல்லவரா கெட்டவரா? அதற்குப் பிறகு தலைநகர் பற்றிய விஷயங்களை எழுதவில்லை – அதற்காக தலைநகரில் ஒன்றுமே நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. ஒரு பதிவர் சந்திப்பு கூட நடந்தது!  ஆமாங்க நம்ம தில்லையகத்து கீதா அவர்கள் தலைநகர் வந்திருந்த போது இரண்டு பதிவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் – அது பற்றி அவர்கள் தளத்தில் கூட எழுதி இருந்தார்கள்.  நான் எழுதவில்லை!
இப்போது மீண்டும் தலைநகரிலிருந்து பகுதிக்காக ஒரு பதிவு. தலைநகரில் வெறும் ஹிந்தி மொழி பேசுபவர்கள் தான் இருப்பார்கள் என சிலர் நினைக்கக்கூடும். இல்லை! இங்கே இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் இருக்கிறார்கள். தங்களது மண்ணை விட்டு விலகி இருந்தாலும் அவர்களது பண்டிகைகள், விழாக்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை. அவர்களது பகுதியில் இருந்தால் எப்படி கொண்டாடுவார்களோ அதே மாதிரி உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவது வழக்கம்.தற்போது நவராத்திரி விழாக்காலம்.  இங்கிருப்பவர்கள் ராம்லீலாவிற்கு தயாராகிக் கொண்டிருக்க, பெங்காலிகள் துர்கா பூஜை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். துர்கா பூஜையின் போது அவரவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் பெரிய பெரிய பந்தல்கள் போட்டு, வண்ணமயமான அலங்காரங்கள் செய்து, அவற்றிலே பெரிய பெரிய துர்காதேவி, பிள்ளையார், கார்த்திக் ஆகியோரின் சிலைகளை வைத்து மிகவும் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.தில்லியில் இருக்கும் சித்தரஞ்சன் பார்க் எனும் இடத்தில் தான் பெங்காலிகள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அங்கே அமைக்கப்படும் பந்தல்கள் மிகவும் அருமையாக இருக்கும். அப்படி அமைக்கப்படும் பந்தல்கள் அனைத்தையும் பார்த்து, சிறப்பான பந்தல் அமைத்த குழுவிற்கு பரிசுகள் தருவது கூட உண்டு.  எங்கள் பகுதியில் இருக்கும் பெங்காலி நண்பர்களும் இப்படி பந்தல் அமைத்து துர்கா பூஜை கொண்டாடுவார்கள். நேற்று எங்கள் பகுதியில் இருக்கும் பெங்காலி நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு. துர்கா பூஜைக்கான மூர்த்திகளை எடுத்து வரப் போகிறோம், உடனே வாஎன அழைக்கவே கையில் காமிராவுடன் புறப்பட்டேன்.சில நாட்களுக்கு முன்னர், க்ருஷ்ண ஜென்மாஷ்டமி சமயத்தில் வெளியிட்ட வீதி உலாவும் சில காட்சிகளும் என்ற பதிவில் கொல்கத்தாவில் இருந்து வந்திருக்கும் கலைஞர்கள் பொம்மைகள் செய்வது பற்றி எழுதி இருந்தேன். கொல்காத்தாவிலிருந்து கலைஞர்கள் வந்து எங்கள் பகுதியில் இருக்கும் காளி கோவிலில் முகாம் அமைத்து பொம்மைகள் செய்வார்கள். அப்படி செய்யப்பட்ட பொம்மைகளை துர்க்கா பூஜைக்கு முன்பு இங்கிருந்து, ஒவ்வொரு இடத்திலும் பூஜா நடத்துபவர்கள் தாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பந்தலுக்கு எடுத்துச் செல்வார்கள். இம்முறை சனிக்கிழமை இரவு சிலைகளை எடுத்துச் செல்வதற்காக அனைத்து பகுதியிலும் வந்த வண்ணம் இருந்தார்கள்.மேள தாளங்கள், நடனம் என அமர்க்களப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பக்தர்கள் குழுக்களாக Tempo மற்றும் Mini Lorry-களில் வந்தபடியே இருந்தார்கள்.  ஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பகுதிக்காக செய்து வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்வார்கள்.  மூர்த்திகளை அவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மேடைகளிலிருந்து தூக்கி வந்து வாகனங்கள் வைக்கும்போது “துர்க்கா மா கி ஜெய்கோஷங்களும், மேள தாளங்களும் விண்ணை பிளக்கும். பெரிய அளவு மேளங்கள், அவற்றிற்கு அலங்காரம், வால் போன்று ஒரு ஏற்பாடு, அதிலிருந்து வரும் ஓசை என அனைத்துமே சிறப்பாக இருக்கும். அந்த பெரிய அளவு மேளத்திற்கு பெங்காலி மொழியில் DHAK என்று பெயர். வாசிப்பவர்களை DHAKI என அழைக்கிறார்கள். அவர்களுடன் சிறிய மேளங்கள் வாசிப்பவர்களும் உண்டு.  அவர்கள் வாசிக்க, வந்திருக்கும் ஆண்களும் பெண்களும் கொஞ்சம் நேரம் சும்மா இருந்தாலும், வாசிப்பு தன்னால் ஆட வைத்து விடுகிறது.ஒவ்வொரு குழுவினராக மூர்த்திகளை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். அதற்குள் நான் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.  வேறு சிலரும் தங்கள் அலைபேசி மூலம் துர்கா தேவியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தவிர்த்து புகைப்படம் எடுக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. யாரையும் தள்ளி நிற்கவும் சொல்ல முடியாதே!பெரிய பெரிய மூர்த்திகளை பின்னமில்லாது கொண்டு சேர்ப்பது கொஞ்சம் கடினமான வேலை. இருபது முப்பது பேராக சேர்ந்து தான் ஒவ்வொரு மூர்த்தியையும் தூக்கி வாகனங்களில் வைக்க வேண்டியிருந்தது என்றால் அவற்றின் கனம் எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே சிந்திக்கலாம். அப்படி மூர்த்திகளை வாகனங்களில் ஏற்றும் போது மேள தாளங்கள் உச்சஸ்தாயியில் ஒலிக்க, சுற்றி இருக்கும் மக்கள் அனைவரும் தன்னை மறந்து நடனமாட, ஒரே உற்சாகக் குரல்கள் அங்கே ஒலித்துக் கொண்டிருந்தது.  என்னை அழைத்த நண்பரும் திடீரென களத்தில் குதித்து நடனமாடத் தொடங்கினார். அவரையும் சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.உற்சாகமாக வாகனங்களில் மூர்த்திகளோடு அவர்கள் பந்தலுக்குப் புறப்பட்டார்கள். என்னையும் அவர்கள் பந்தலுக்கு அழைக்க, அப்போது நேரம் இரவு 11.00 மணி. அங்கு சென்று, திரும்ப வீடு வந்து சேர நள்ளிரவிற்கு மேல் ஆகலாம் என்பதால், பூஜா அன்று வருகிறேன் எனச் சொல்லிவிட்டேன்.இந்த பூஜா சமயத்தில் DHAK வாசிக்கும் கலைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு. தில்லி முழுவதும் இருக்கும் பந்தல்களில் வாசிப்பதற்கு இந்த காளி கோவிலில் வந்து தங்கி இருக்கும் DHAKI-களைத் தான் அழைத்துச் செல்வார்கள்.  100-150 DHAK வாசிக்கும் கலைஞர்கள் வருவார்கள். ஆனால் அவர்கள் தங்குமிடம் இல்லாமல் காளி கோவில் வாசலில் இருக்கும் நடைபாதையில் தங்கள் வாத்தியத்தினை பக்கத்தில் வைத்துக் கொண்டு உறங்குகிறார்கள். தில்லியில் இரவு நேரத்தில் சற்றே குளிர ஆரம்பித்து விட்டது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். துர்கா பூஜைக்காக நிறையவே செலவு செய்யும் அமைப்பாளர்கள், இவர்கள் இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யலாமே....
இப்படி பல விஷயங்களை பார்த்து, சில புகைப்படங்களை எடுத்து வீடு வந்து சேர்ந்தேன். சனிக்கிழமை இரவில் எடுத்த புகைப்படங்கள் இன்றைய பதிவில்.  பூஜாவிற்கும் அழைத்திருக்கிறார்கள். பந்தலில் எடுக்கப் போகும் புகைப்படங்கள் பிறிதொரு சமயத்தில் வெளியிடுகிறேன்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.
22 comments:

 1. கார்த்திக் என்பது முருகனா?

  நடனத்துக்கும், dhak தாளத்துக்கும் சிறு வீடியோ ஒன்று எடுத்திருக்கலாமோ?

  ReplyDelete
  Replies
  1. முருகனே தான்!....

   நான் அங்கே வீடியோ எடுக்கவில்லை ஸ்ரீராம். உங்களுக்காக dhak தாளத்தின் ஒரு காணொளி [இணையத்திலிருந்து] சேர்த்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. காணொளியை ரசித்தேன்.

   Delete
  3. மீள் வருகைக்கும் காணொளியை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அழகான காணொளி வெங்கட். என் கல்கத்தா நாட்களை நினைவுபடுத்தி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   Delete
 3. காணொளி கண்டேன் ஜி புகைப்படங்கள் வழக்கம் போலவே அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. நவராத்திரி,ராம்லீலா,துர்கா பூஜைப் பகிர்வு அருமை.இனிமையான நேரம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி சென்னை பித்தன ஐயா.

   Delete
 6. காணொளி கண்டேன்
  ரசித்தேன் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. நம்ம ஊர் தாரை தப்பட்டை சத்தம் போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. படங்களும் பகிர்வும் குறிப்பாக அந்த மேள வீடியோவும் அருமை அண்ணா...
  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 9. மிக மிக அருமையான பதிவு சகோதரரே!
  துர்க்கா தேவி சிலைகள் பார்ப்பதற்குச் சில பயங்கரமாகக் காட்சி தந்திருப்பினும்
  அழகுக்குப் பஞ்சமில்லை!

  காணொளி பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் கலை பண்பாட்டின் சிறப்பை
  வெளிப்படுத்த அவர்களுக்கே உரிய மேளதாளங்களும் அவ்வாசிப்பு முறையும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருந்தது.

  நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி ஜி!

   Delete
 10. வித்தியாசமான விழாவாகத்தான் இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....