சனி, 24 அக்டோபர், 2015

பாப்ரி.....



யானையைப் பற்றிய கதை. யானைக்கும் உணர்ச்சி உண்டு. அறிவுண்டு. நன்றியுண்டு. காதலும் போட்டியும் கூட உண்டு. 

எங்கள் முகாமில் மொத்தம் ஏழு ஆண்களும் - நாலு பெண்களும் இருந்தோம். ஏழு பேரில் கணபதியும் சிவாஜியும் தொண்டுகிழம்; அறுபதுக்குமேல் ஆகிவிட்டது. பாலன், சந்துரு, மணியன் மூவரும் இளம்பிள்ளைகள்; பதினாறு வயசுக்கு மேல் ஆகவில்லை. நானும் வேலனுந்தான் வாலிபம்; எனக்கு முப்பது வயசு; வேலனுக்கு முப்பத்தைந்து வயசு. ஆனால் வேலன் பார்வைக்கு விகாரம்; குள்ளமாயிருப்பான். என்னைப்போல் அழகு யாருமே கிடையாது என்று எல்லோரும் சொல்வார்கள். அது எனக்கே தெரியும்; சில சமயம் குளத்தில் என் நிழலை நானே பார்த்திருக்கிறேன். கொம்புகள் இரண்டும் வெள்ளை வெளேரென்று ஒழுங்காக இருக்கும். உருண்டு திரண்டு ஒத்த அளவான கையின் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எனக்குப் பெயர் திவான். இந்த மனிதர்கள் பெயர் வைப்பதில் நிபுணர்கள்!
அதே மாதிரி ரதிக்கு ‘ரதிஎன்று பெயர் வைத்தார்களே, அவர்களையும் மெச்சவேண்டும். அவள் தான் எல்லாப் பெண்களையும் விட அழகு. அவளைக்காட்டில் பிடித்துக் கொடுத்ததே நான் தான். எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. எங்கள் முகாம் அப்போது மைசூரில் இருந்தது. ரதி குழியில் விழுந்துவிட்டாள். எங்கள் முகாமில் இருந்த ஆண்கள் எல்லோரும் போய்ப் பார்த்துவிட்டார்கள். ரதியை அடக்க முடியவில்லை. கடைசியில் நான் போனேன். போனவுடன் ஆள் என்னை முறைத்துப் பார்த்தாள். என் மாவுத்தன், “போ! ஹத்ஜா!என்றான். நான் முன்பின் யோசிக்காமல் என் தலையால் வேகமாக மோதினேன். அந்த அடியின் வேகம் தாங்காமல் அவள், “மா!என்று அலறினாள். கொம்பால் இன்னொரு குத்து! முதுகிலிருந்து ரத்தம் பீரிட்டுக்கொண்டு வந்தது. ரதி அடங்கிவிட்டாள். நடுங்கிக் கொண்டு பதுங்கினாள். நான் கொண்டு போயிருந்த சங்கிலியை முதுகில் போட்டேன். என்னுடைய மாவுத்தன் கெட்டிக்காரன். ஒரு நொடியில் காலில் சங்கிலியைக் கட்டிவிட்டான். அவனை முறைத்துப் பார்த்தாள். என்னுடைய பளபளப்பான கொம்புகளைப் பார்த்ததும் அவளுக்குச் சப்த நாடிகளும் அடங்கிவிட்டன. அப்போது தான் அவளுடைய அழகை நான் பார்த்தேன். அன்று முதல் அதற்கு அடிமையானேன்.

அதன் பிறகு அவளை விட்டு நான் பிரியவில்லை. அவள் என்கூட இருந்தால்தான் வேலை செய்வேன். எங்கள் வேலை, மரம் தூக்குவது; அதாவது, காட்டில் உள்ள தேக்க மரங்களை வெட்டிப் போடுவார்கள்; அவைகளைத் தூக்கிக்கொண்டு வந்து மோட்டார் லாரிகளில் அடுக்க வேண்டியது. அவள் என் பக்கத்தில் இருந்தால் முப்பது நாற்பது மரங்களைக் கூட நான் அநாயாசமாகத் தூக்கிவிடுவேன். அதை நன்றாகத் தெரிந்துகொண்ட அதிகாரிகள் எங்கள் இருவரையும் பிரித்து வைப்பதில்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வேலை தானே?

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், இந்த மனிதர்கள் எவ்வளவோ கெட்டிக்காரர்கள் என்றாலும், எங்கள் மனதில் நடப்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை. எங்களையெல்லாம் அடக்கி ஆண்டுவிட்டதாக பெருமை அடித்துக்கொள்கிறார்கள். கையில் ஒரு சின்ன கோலை வைத்துக் கொண்டு அதற்கு நாங்கள் பயந்து நடக்கிறோம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் மனம் வைத்தால் எவ்வளவு பேர் வந்தாலும் நசுக்கிக் கொன்று விடமுடியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. எங்கள் மனத்திலுள்ள நன்றியால், எங்களுக்கு அன்னமிடும் மாவுத்தன்மாரிடம் உள்ள விசுவாசத்தால்தான் அவர்கள் சொன்னபடியெல்லாம் கேட்கிறோம். இது அவர்களுக்குத் தெரியாது. ஒரு சமயம் அப்படித்தான் என்னுடைய ‘காவடிஎன்னிடம் சீண்டினான். காவடி என்பவன் மாவுத்தனுடைய சீடன் மாதிரி. எங்களைக் குளிப்பாட்டி, எங்களுக்குச் சோறு சமைத்து மற்றச் சிசுரூஷைகளை எல்லாம் செய்வான். அவனை ஒரு நாளும் எங்கள் மேல் ஏற விடமாட்டோம். அந்தக் காவடி ஒரு நாள் என்ன செய்தான்? என்னைக் கூப்பிட்டு, “ஆனை! இங்கே வா!என்றான். நான் பேசாமல் நின்றேன்.  அவன் மேலும், “ஆனை! வா! பரி! பரி!என்றான்.  ‘பரிஎன்றால் எங்கள் பாஷையில் ‘குனிந்துகொள்என்று அர்த்தம். அவனுக்குப் பக்கத்தில் இன்னும் நாலு பயல்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடம் தன் பெருமையைக் காட்டவேண்டும் என்று அவனுக்கு எண்ணம். எனக்கு அது தெரிந்துவிட்டது. இவனுக்கு வேடிக்கை காட்டுவதற்காக நான் ஆட வேண்டுமாம்! என்னிடமா நடக்கும்?

நான் பேசாமல் நின்றதும் அவன் கையில் உள்ள கம்பை ஆட்டிக் கொண்டே, “ஆனை! பரி! பரி!என்று அதட்டினான். பிறகு அதை ஓங்கி அடிக்க வந்தான். எனக்கு வந்தது கோபம். அப்படியே கையை நீட்டி அவனை இடுப்பில் பிடித்துத் தூக்கிச் சுழற்றி எறிந்தேன். அவ்வளவுதான். பயல் ஒரு மையல் தூரத்தில் போய் விழுந்தான். நல்ல வேளை, புதருக்குள் விழுந்ததால் உயிர் தப்பினான்.

ரதியைப் பற்றிச் சொல்ல வந்து வேறு என்னவோ சொல்லிக்கொண்டு போகிறேன். நாங்கள் இருவரும் இணை பிரியாமல்தான் இருந்தோம். கடைசிவரை அப்படித்தான் இருப்போம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் ஏமாந்துவிட்டேன். வேலன் என்று ஒரு பயலைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவன்தான் எனக்குச் சத்ருவாய் வந்தான். அந்தப் பயல் என்றைக்குமே கெட்ட பயல். எத்தனைப் பெண்கள் வந்தாலும் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருப்பான் மிகவும் அநாகரிகமான பயல். வேலைக்குப் போனால் வேலையைச் செய்ய மாட்டான். பெண்கள் இருக்கிற பக்கமே போய் முறத்துக் கொண்டே இருப்பான். அவனிடம் அகப்படாத பெண்களே எங்கள் முகாமில் இல்லை; அதாவது ரதியைத் தவிர.

ரதியையும் எப்போதும் முறைத்துப் பார்ப்பான். அப்படித்தான் ஒரு சமயம் சாய்ங்காலம் நாங்கள் ஆகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அதைப்பற்றி உங்களுக்கு விவரமாகச் சொல்ல வேண்டும். அப்போழுதுதான் புரியும். தினம் எங்களுக்கு இரண்டு வேளை ஆகாரம் கொடுப்பார்கள். காலையில் ஏழு மணிக்கு ஒரு தடவை, வேலைக்குப் போவதற்கு முன்னால். பிறகு சாயங்காலம் ஆறு மணிக்கு வேலை முடிந்து வந்ததும் ஒரு தடவை. சர்க்கார் முகாமில் வேலை செய்தால் அது ஒரு பெரிய சௌகரியம். மணிப்படி ஆகாரம். வேலையும் மணிப்படிதான். காலை ஏழு மணியிலிருந்து பதினோறு மணிவரையில் வேலை. பிறகு மாலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணிவரையில். பிறகு ராத்திரியெல்லாம் எங்களை அவிழ்த்துக் காட்டிற்குள் விட்டுவிடுவார்கள். நாங்கள் சுயேச்சையாகக் காட்டுத்தழைகளை மேய்ந்துவிட்டு விடியற்காலம் முகாமுக்கு வந்துவிடுவோம்; அதாவது காலில் சங்கிலியும் கழுத்தில் மணியும் கட்டித்தான் விடுவார்கள். இதைத் தவிர, கோடைக்காலத்தில் வருஷத்துக்கு இரண்டு மாதம் எங்களுக்கு வேலை கிடையாது. இந்தச் சௌகரியங்கள் கோவில் யானைகளுக்கும், தனிப்பட்ட சொந்தப் பண்ணை யானைகளுக்கும் கிடையாது.

என்ன சொல்ல வந்தேன்? அந்தப் பயல் வேலன் – ஆமாம்; அன்று சாயங்காலம் எங்களுக்குச் சோறு உருட்டிக் கொடுத்தார்கள். வரிசையாகத்தான் எல்லோரும் நிற்போம். எனக்குப் பக்கத்தில் ரதி நின்றாள். எப்போதும் அப்படித்தான்.  இவன் மெதுவாக அவளுடைய பின்புறம் கையால் தடவினான். அவள் லட்சியம் செய்யவில்லை. பிறகு அவளுடைய கையில் உள்ள கவளத்தைத் தட்டி தன் வாயில் போட்டுக்கொண்டான்; அதையே தன் வாயிலிருந்து தோண்டியெடுத்து அவளுடைய வாயில் ஊட்டப் போனான். எனக்கு வந்துவிட்டது வேகம். ஒரே வேகத்தில் ரதியை அப்பால் தள்ளிவிட்டு அவன்மேல் பாய்ந்தேன். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. “ஹா!” என்று கத்திக்கொண்டு பின்வாங்கினான். நான் கோபத்தில் கொம்புகளை அவன் உடலில் அங்குமிங்கும் பாய்ச்சினேன். அவனும் சண்டை போட்டான். அவன் சுத்தச் சோதாப்பயல். நான் க்ஷத்திரிய ஜாதியைச் சேர்ந்தவன். எங்கள் மூதாதையர் பர்மாக்காட்டிலிருந்து வந்தவர்கள். எங்களுடைய வீரம் உலகப் பிரசித்தி பெற்றது. சற்று நேரத்தில் ரத்தம் ஆறாய்ப் பெருகத் தொடங்கியது. அதற்குள் அங்குள்ள மாவுத்தன்மார், அதிகாரிகள் எல்லோரும் ஓடி வந்துவிட்டார்கள். எல்லாரும் “ஹத்! ஹத்!என்று ஏகமாகக் கூச்சல் போட்டார்கள். கடைசியில் என்னுடைய மாவுத்தன் வந்து “ஹத்!என்று சொன்னதுந்தான் நான் அடங்கினேன். அந்தப் பயல், “மா! மா!என்று அலறியது இன்னும் எனக்குக் காதில் விழுகிறது.

இது நடந்து வெகு காலம் கழித்துத்தான் நான் சொல்லப் போகும் சம்பவம் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே ரதியை நாம் நம்பிவிட்டேன். நான் அவளிடம் எவ்வளவு ஆசையாயிருந்தேனோ அவ்வளவு தூரம் அவளும் என்னிடம் இருந்தாள் என்று நான் நம்பிவிட்டேன். எனக்கும் அவனுக்கும் சண்டை நடந்த அன்றைக்கே அவள் அவனிடம் ஒரு மாதிரியாக நடந்து கொண்டிருந்திருக்கிறாள். நான் தான் கவனிக்கவில்லை. அதன் பிறகு தான் எனக்கு ஒரு சமயம் உடம்பு சுகம் இல்லை. வயிற்றுப் போக்கு. நாலு நாள் நான் வேலைக்குப் போகவில்லை. காட்டிற்கும் போகவில்லை. இந்தச் சமயத்தில் அந்தப்பயல் அவளிடம் போய் ஒட்டியிருக்கிறான். இருவரும் தினம் காட்டிற்குள் போய் ஏகாந்தமாய் மேய்ந்திருக்கிறார்கள்.

ஐந்தாவது நாள் நான் வேலைக்குப் போனேன். ரதி என் கூட வரவில்லை. எனக்கு மனசு திக்கென்றது. அவளைத் தேடினேன். காணவில்லை. சாயங்காலம் சாப்பிடும் போதும் அவளைக் காணோம். அப்போது தான் வேலன் இருக்கிறானா என்று பார்த்தேன். அவனையும் காணவில்லை.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ராத்திரி மேயப் போகும்போதுதான் சிவாஜி சொன்னான். இரண்டு பேரையும் வேறு ஒரு முகாமுக்கு மாற்றிவிட்டார்களாம். அப்போதும் எனக்கு மனசுக்குக் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.

ஒரு மாதம் ஆச்சு. நான் நடைப்பிணமாக இருந்தேன். வேலை செய்யாமல் மலைத்துமலைத்து நிற்பேன். இப்படி இருக்கையில் திடீரென்று ஒரு நாள் ரதியைக் கண்டேன். எங்கள் முகாமில் லாரிகளுக்குப் பக்கத்தில் நின்று மரம் அடுக்கிக் கொண்டிருந்தாள். குடகு மலைக் காட்டிற்குள் நாங்கள் மரம் தூக்கிக் கொண்டிருந்தோம். பகல் வேலை விட்டுத் திரும்பும் வழியில் அவளும் அவனும் மரம் ஏற்றுவதைக் கண்டேன். கண்டதும் நேராக அவள் அருகில் போய் நின்றேன். நான் வருவதைக் கண்டதும் அவள் விலகிப் போனாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது பேசாமல் போய்விட்டேன். அன்று இரவு காட்டில் மேயப் போனோம். நல்ல நிலா. நான் மலைச்சரிவு ஓரத்தில் போய் நின்றேன். அந்த இடத்தில்தான் நானும் ரதியும் சந்திப்பது. பளீரென்று நிலவு பட்டு மின்னும் அந்தப் பாறையைப் பார்த்ததும் எனக்குத் துக்கம் பீரிட்டுக்கொண்டு வந்தது.



அப்போது சற்றுத் தூரத்தில் ஓர் உருவம் செல்வது தெரிந்தது. நடையிலிருந்து யார் என்று தெரிந்துகொண்டேன்; ரதி தான். நான் வேகமாகச் சென்றேன். நான் வருவது தெரிந்து அவள் ஓடத் தொடங்கினாள். எனக்குக் கோபம் எல்லை மீறி வந்தது. அவளைத் துரத்தினேன். அவள் பயத்தில் வாலை உயரத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவள் ஓட, நான் ஓட, அன்று இரவு முழுவதும் அந்த மலைப்பிரதேசம் முழுவதும் சுற்றினோம்.

அவள் என் கையில் அகப்பட்டுவிட்டால் அவளுடைய கதி என்ன ஆகும் என்பதை அவள் அறிந்திருந்தாள். அதனால் தான் அப்படி ஓடினாள்.

விடியற்காலம் இருக்கும். மூங்கில் புதருக்குள் அவள் எங்கோ மறைந்துவிட்டாள். கழுத்தில் தொங்கிய மணியைக் கையால் அறுத்து எறிந்துவிட்டாள். அதனால் அவள் போகும் சத்தங்கூட கேட்கவில்லை. நான் புதர் முழுவதும் தேடினேன். அகப்படவில்லை.

புதருக்கு அப்பால் சரிவான பள்ளம். பள்ளத்துக்கு அப்பால் இரண்டு பக்கமும் மலைப்பாறை. அதன் வழியே போனால், அந்தப் பக்கம் ஒரு காட்டாறு ஓடுகிறது. ஆகவே பள்ளத்தில் சலசலவென்று சத்தம் கேட்டதும் அவள் இனித் தப்ப முடியாது என்று தீர்மானித்துவிட்டேன். அதனால் நிதானமாக என்னுடைய கழுத்து மணியை ஆட்டிக்கொண்டே போனேன். சற்று நேரத்தில் பள்ளத்தை அடைந்தேன். அப்போது அவள் ஓடுவது தெரிந்தது. திடீரென்று அவள் உருவம் மறைந்துவிட்டது. எனக்குத் ‘திக்கென்றது. ‘ஐயையோ!’’”’’’ ஓடாதே!என்று நான் அலறினேன். அதற்குள் அவள் போய்விட்டாள். ‘சளேரென்று ஆற்று ஜலத்தில் விழுந்த சத்தம் கேட்டது. நான் பாறை முனை வரையில் போய்ப் பார்த்தேன். என் கண் எதிரிலேயே என் உயிருக்கு உயிரான ரதி நிறைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள்!

என் துக்கம் எல்லாம் ஆத்திரமாக மாறியது. எதிரில் பட்ட மரங்களையெல்லாம் பிடுங்கி எறிந்தேன். காடு முழுவதும் அலைந்தேன். என் சத்துருவைக் காணவில்லை. அவனுக்கு என்ன பைத்தியமா என் கண்ணில் பட? எங்கேயோ பதுங்கிவிட்டான்.

மூன்று நாள் கழித்து முகாமுக்கு வந்தேன். அங்கேயும் அவனைக் காணவில்லை. கணபதிக் கிழவன் என் பக்கத்தில் வந்து நின்றான். அவனுக்கு ஓர் அறை கொடுத்தேன். அவன் ஓடிவிட்டான். எதிரில் பட்ட கூரையைப் பிய்த்து எறிந்தேன். காவடிமார் எல்லாம் அலறிக்கொண்டு ஓடினார்கள். அதற்குள் எனக்கு ‘பாப்ரிஆகிவிட்டது என்று முகாம் முழுவதும் பரவிவிட்டது. பாப்ரிஎன்றால் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து அதற்குப் பைத்தியம் என்று அர்த்தம் என்று தோன்றுகிறது. பைத்தியம்! யாருக்குப் பைத்தியம்? எனக்கா? இந்த மனிதர்களுக்குத் தான் பைத்தியம்! என்னுடைய துயரம் இவர்களுக்குத் தெரியுமா? மூளையில்லாத மனிதர்கள்!

அங்கு ஒரே மனிதக் கும்பல் கூடிவிட்டது. ஆனால் என்கிட்ட நெருங்க யாரும் துணியவில்லை. என்னுடைய மாவுத்தன் மட்டும் கையில் சின்னக் கோலைப் பிடித்துக்கொண்டு “வா! வா!என்றான். நான் பேசாமல் நின்றேன். அவன் இன்னும் கிட்டத்தில் வந்து  கோலை நீட்டினான். நான் வேண்டா வெறுப்பாக அதைக் கையில் பற்றினேன். உடனே அவன் பக்கத்தில் வந்து என்னைத் தட்டிக்கொடுத்தான். பிறகு இரண்டு கருப்பங்கழிகளை நீட்டினான். கரும்பு என்றால் எங்களுக்கு உயிர். ஆனால் அப்போது அது எனக்கு வேம்பாயிருந்தது. அந்தக் கருப்பங்கழிகளை வாங்கி வீசியெறிந்தேன். ராமநாயக்கன் உஷாராய்விட்டான். பரபரப்புடன் இரு பெரிய சங்கிலிகளை எடுத்து என் முன்ன்ங்கால்கள் இரண்டிலும் கட்டிவிட்டான். நான் ஒரே மூச்சில் உதறினேன். சங்கிலிகள் முறிந்து தூள் தூளாயின. ராமநாய்க்கன் கையில் அங்குசத்தை வைத்துக்கொண்டு “வா! வா! வா!என்றான். நான் ஒரே தாவில் அவனுடைய கையில் இருந்த அங்குசத்தைப் பிடுங்கி வீசி எறிந்தேன். பக்கத்தில் நின்ற காவடிமார் கூட்டத்தில் புகுந்தேன். கையில் அகப்பட்ட பேரையெல்லாம் தூக்கிப் பந்தாடினேன். அப்படியே காட்டுக்குள் புகுந்துவிட்டேன்.

இதற்குள் ராமநாய்க்கன் சும்மாயிருக்கவில்லை. கையில் ஒரு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு இன்னொரு புதிய யானையின் மேல் ஏறிக்கொண்டு என்னைத் துரத்தத் தொடங்கினான். நான் ஓடிப்போய் புதருக்குள் புகுந்தேன். எனக்கு உயிர்மேல் ஆசையில்லை. ஆனால் பழிக்குப் பழி வாங்காமல் சாக மனமில்லை. அந்தப் பரதைபயல் வேலனைக் கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும்.

எங்கே போனாலும் என்னை விரட்டிக்கொண்டே இருந்தான் ராமநாய்க்கன். அவன் பழம் பெருச்சாளி. அந்தக் காட்டுப் பாதையெல்லாம் அவனுக்குப் பொட்டைப்பாடம். அதோடு அது வரையில் நூறு யானைகளுக்கு மேல் அவன் கையாலேயே பழக்கியிருக்கிறான்.

அன்று ராத்திரி ஏழு மணி இருக்கும். ஓடி ஓடிக் களைத்துப் போய் நான் ஒரு பாறையின் சரிவில் போய்ப் பதுங்கிக்கொண்டேன். அங்கு அடர்ந்த மூங்கில் காடு. என்னுடைய மணியை அன்று காலையிலேயே அறுத்து எறிந்து விட்டேன். அதனால் நான் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது.

எப்படியோ சுற்றிக்கொண்டு ராமநாய்க்கன் அங்கே வந்து விட்டான். நான் கூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். நான் பதுங்கியிருக்கும் இடத்தைக் கடந்து ராம்நாய்க்கன் போய்விட்டான். பிறகு என்ன நினைத்தானோ என்னவோ, நின்று திரும்பிப் பார்த்தான். எனக்குத் தப்ப ஒரே வழிதான். இல்லையானால் அடுத்த கணத்தில் அவன் என்னைப் பார்த்துவிடுவான். அதனால் என் முழுப்பலத்தையும் உபயோகித்து அவன் ஏறிவந்த யானையின் பின்பக்கத்தில் குத்தினேன். மா!என்று அலறிக்கொண்டு அது கீழே விழுந்தது.  அந்த அதிர்ச்சியில் ராமநாய்க்கன் என் காலடியில் வந்து விழுந்தான். அப்போதும் அவன் துப்பாக்கியை விடவில்லை. சமாளித்து எழுந்திருக்கப் பார்த்தான். அந்தச் சமயத்தில் நான் என் காலைத் தூக்கி அவன் மேல் வைத்தால் போதும். நாய்க்கன் சட்னி!யாய்ப் போயிருப்பான். நான் அப்படிச் செய்யவில்லை. இவ்வளவு நாள் அன்னமிட்டு வளர்த்தவனைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. நான் இரண்டு நாள் சாப்பிடவிட்டால் அவனும் சாப்பிடமாட்டான். என்னைக் குழந்தையைப் போலத்தான் வளர்த்தான்.

அதனால் அப்படியே அவனுடைய கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி வீசியெறிந்து விட்டு நான் ஓட்டம் பிடித்தேன். காட்டுக்குள் புகுந்துவிட்டால் இனி அவன் என்னைக் கண்டுபிடிப்பது எப்படி?

எனக்கு என்ன புரியவில்லை என்றால், எவ்வளவோ கெட்டிக்காரர்கள் ஆனாலும், எங்களுடைய மன ஓட்டத்தை மட்டும் இந்த மனிதர்களால் அறிந்து கொள்ள முடியவில்லையே! அது ஏன்?

**** 

டிஸ்கி:  கலைமகள் 1951-ஆம் வருட தீபாவளி மலரிலிருந்து.  கி.ரா. அவர்கள் எழுதியது.  

34 கருத்துகள்:

  1. அருமையான கதை. பகிர்ந்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      நீக்கு
  2. மிக மிக அருமையான பகிர்வு. விரைவில் எங்களிலும் ஒன்று இது போல் வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பக்கத்தில் வருவதையும் படிக்கும் ஆவலோடு நானும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. கதை அழுத்தமாக அழகாக செல்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி அவர்களே.

      நீக்கு
  5. யானையை எத்தனை முறை, எத்தனை வயதில் பார்த்தாலும் அதன் மீதான பிரமிப்பு, ஆர்வமும் அகலுவதில்லை. நல்லதொரு கதையை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு விஷயம் யானை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  6. விலங்குகள் என்றாலும் அவைகளுக்கும் மனம் உண்டு அல்லவா!..
    யானையின் நடையழகைப் போல அழகான கதை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  7. அருமையாக இருக்கிறது! 51 கலைமகள் இதழ் படித்துவருகிறீர்கள் என்பதும் புரிகிறது! தொடர்ந்து அணிவகுக்கின்றதே! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. பகிர்வுக்கு நன்றி வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  11. அருமையான கதை ஐயா
    மனிதர்களால் மனிதர்களையே புரிந்து கொள்ளமுடியவில்லையே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. அட்டகாசமான கதை. ரதி என்ன ஆனாள். வேலனும் திவானும் என்ன ஆனார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையிலேயே சொல்லி இருக்கிறாரே - ரதி வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டாள்.... வேலனை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது திவான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  13. அருமையான கதை வெங்கட். படைப்புகள் இப்போது மிகுந்து விட்டன. நல்ல தரமான படைப்புகள் தான் அருகி வருகின்றன.. பகிர்ந்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். படிக்கும் போதே எனக்கும் இது தோன்றியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - என்று தான் இங்கே பொக்கிஷப் பகிர்வாக பகிர்ந்து கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

      நீக்கு
  14. ஆஹா! என்ன அருமையான கதை. இது போன்ற கதைகளையையும் திரு கி ரா போன்ற எழுத்தாளர்களையும் இனி எப்போது காணப்போகிறோம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  15. யானைக்கு மதம் பிடித்துவிட்டது, பாகனைக் கொன்றுவிட்டது என்றெல்லாம் படிக்கிறோம்.. கேள்விப்படுகிறோம்..அதன் பின்னணியில் என்ன காரணம் இருக்கமுடியும் என்றெல்லாம் யோசிப்பதும் இல்லை.. யோசிக்கத் தோன்றுவதும் இல்லை.. கிட்டத்தட்ட 64 வருடங்களுக்கு முன்னரே கி.ரா அதை யோசித்து யானையின் பார்வையில் கதையாக்கியிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது. அருமையான கதைப்பகிர்வுக்கு மிகவும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  16. அருமையான பகிர்வு வெங்கட் ஜி! கிராவின் எழுத்தும் அது போல...

    கீதா: இந்தக் கதையை ஏற்கனவே படித்து அசந்த நாட்கள், கல்லூரி படிக்கும் போது. நான் இந்தக் கதையை வாசித்து வியந்து வியந்து... ஏனென்றால் நானும் விலங்குகளின் உணர்வுகள் என்று அவைகளின் நடை, பார்வை, உடல் மொழி என்று பார்த்து மனதில் அப்போதே தோன்றிப் பேசுவதுண்டா....அதனால்....
    அருமையான கதை சொல்லி கிரா. அவரது எழுத்தின் நடையும் . யானைகளுக்கும் உணர்வுகள் உண்டு என்று அந்தக் கோணத்தில் யோசித்து அசத்தி விட்டார். ஏன் எல்லா விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு. எங்கள் தளத்திலும் அவ்வப்போது வரும். இப்போது ஒன்று எங்கள் செல்லங்களின் உணர்வுகள் பதிவாக உருவாகிக் கொண்டிருக்கின்றது....வரும்....

    அருமையான பகிர்வு ஜி. மிக்க நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  17. இந்தக் கதை படித்தவுடன் பாவம் இந்த யானைகள் என்று தோன்றியது. இயற்கை சூழலை விட்டு செயற்கையில் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு எத்தனை கஷ்டப்பட்டு இருக்குமோ என்று தோன்றியது. கிரா என்பது கி. ராஜநாராயணன் -ஆ? இல்லை இவர் வேறு ஒருவரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      கிரா - கி. ராஜநாராயணன் -ஆகத் தான் இருக்க வேண்டும். என்றாலும், கி.ரா. அவர்களின் முதல் சிறுகதை 1958-ஆம் ஆண்டு வெளி வந்ததாக இணையத்தில் பார்த்த நினைவு. கீதாஜி முன்னரே படித்திருப்பதாக எழுதி இருக்கிறார். கி.ரா. அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலா என்பதை அவர் தெளிவு படுத்தலாம்!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....