வியாழன், 18 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு


ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!நார்கண்டா பகுதியில் ஹாதூ பீக், மண்டோதரி கோவில் தவிர நிறைய விஷயங்கள் இருக்கின்றன – சுற்றுலாப் பயணிகளுக்கு – குறிப்பாக ட்ரெக்கிங் – மலைப்பாதையில் வன உலா, ஆப்பிள் தோட்டங்கள் போன்றவை. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு அனுபவம் அங்கே கிடைக்கும். நாங்கள் போன சமயத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே எங்களுக்குக் கிடைத்ததால் நார்கண்டாவில் ஹாதூ பீக் மட்டுமே பார்க்க திட்டமிட்டிருந்தோம். ஷிம்லாவில் தங்குவதற்கு பதிலாக நார்கண்டாவில் ஏதேனும் ஒரு ரிசார்ட்டில் ஒரு நாள் தங்கலாம் – தனிமை விரும்பிகள்! நல்ல இடம். ஹாதூ பீக் விட்டு வர மனமே இல்லாமல் இருந்தது என்றாலும் புறப்பட்டு தானே ஆக வேண்டும். எனவே அங்கிருந்து அதே பயங்கர மலைப்பாதையில் கீழ் நோக்கிய பயணம். சிறிது தொலைவிற்குப் பிறகு சாதாரண பாதை தான் – முதல் 7 கிலோமீட்டர் தான் கொஞ்சம் கஷ்டம்.

போகும் போது எடுத்துக் கொண்ட நேரத்தினை விட சற்றே அதிக நேரம் எடுத்தது – போக்குவரத்து அதிகமாக இருந்தது – வழியில் இருந்த சிறு கிராமங்களில் ஆங்காங்கே ட்ராஃபிக் ஜாம் வேறு. வழியில் அப்படி இருந்த ஒரு கிராமத்தில் வண்டியை நிறுத்தி அங்கே இருந்த கடைகளில் சும்மாவேனும் வேடிக்கை பார்த்தோம். நிறைய மலைப்பழங்கள், காய்கறிகளை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். கேரள நண்பர்கள் பேரக்காய் [கொய்யா] வேண்டும் என வாங்கினார்கள் – ஹிமாச்சல் வந்தும் நம் ஊர் பழம்! நான் அவர்களுக்காக அங்கே கிடைக்கும் கின்னு, ப்ளம், ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை வாங்கினேன். ஹிமாச்சலப் பிரதேசத்தினை இந்தியாவின் பழக்கூடை [Fruit Bowl of the country] என அழைப்பதுண்டு! இந்தியாவின் பெரும்பகுதி ஆப்பிள் தேவை இங்கேயிருந்து தான் கிடைக்கிறது!மலைப்பகுதிகளில் வளர்ந்து வரும் கட்டுமானங்களை பார்கும் போது மனதில் வேதனை – இன்னும் சில வருடங்களில் இந்தப் பகுதிகளும் கட்டிடங்களாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. மேலே உள்ள படத்தில் பாருங்கள் – எத்தனை அடுக்கு மாடி கட்டிடம் இந்த மலையில் கட்டி இருக்கிறார்கள். இது எத்தனை தூரம் பாதுகாப்பானது என்று புரியவில்லை. மலைச்சரிவு ஏற்பட்டால் அந்த கட்டிடம் என்ன ஆகும்? அங்கே இருப்பவர்கள் கதி என்ன என்ற சிந்தனைகள் மனதுக்குள். அதுவும் ஹிமாச்சல், உத்திராகண்ட் போன்ற இடங்களில் மலைகள் பாறைகளை விட மண் அதிகம் நிறைந்தது என்பதால் மலைச்சரிவுகள் அடிக்கடி நடக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஏற்படும் மலைச்சரிவுகள் நிறையவே.


இப்படி மலைப்பகுதிகளில் நடக்கும் விஷயங்களை அளவளாவியபடியே குஃப்ரிக்கு வந்து சேர்ந்தோம். அப்போது மதியம் இரண்டு மணி. குஃப்ரியில் இருக்கும் சில இடங்களைப் பார்ப்பதற்கு முன்னர் மதிய உணவினை எடுத்துக் கொள்வோம் என்று ஓட்டுனரிடம் சொல்ல, அவர் எங்களை அழைத்துச் சென்ற இடம் ஹோட்டல் ஹாலிடே இன்! அட குஃப்ரியில் கூட பிரபல ஹாலிடே இன் இருக்கிறதா என்று நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன் – பெயர் மட்டும் தான். இது லோக்கல் மனிதர் நடத்தும் உணவகம். காலையில் சாப்பிட்ட உணவகம் போல இதிலும் மலைப்பகுதியையும் சாலையும் பார்த்துக் கொண்டே சாப்பிட வசதி – கண்ணாடிச் சுவர்! அங்கே அமர்ந்து கொள்ள மெனு கார்டு வந்தது. வழக்கம் போல உணவு ஆர்டர் கொடுப்பது என் வேலை!


சப்பாத்தி, தால் தடுக்கா, பிண்டி மசாலா, பூந்தி ராய்தா, சாலட், ஜீரா ரைஸ் மற்றும் கடாய் பனீர் ஆர்டர் செய்து காத்திருந்தோம். காத்திருக்கும் வேளையில் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். இந்த குஃப்ரி பகுதி ஷிம்லாவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், ஷிம்லாவினை விட இங்கே பனிப்பொழிவு அதிகம் இருக்கும். அதனால் குஃப்ரி பகுதி பாதை அடிக்கடி மூடி விடுவார்கள். அந்தச் சமயங்களில் இங்கே அதிக அளவு போக்குவரத்து பிரச்சனை உண்டு. குஃப்ரியில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பார்த்தால் சில பாயிண்டுகள் மட்டுமே. அவற்றில் பாதிக்கு மேல் மலைப்பகுதிகளைப் பார்வையிட அமைத்திருக்கும் பாயிண்டுகள் தான். குஃப்ரி ஃபன் பாயிண்ட், மஹாசு பீக் [கோவேறு கழுதையில் பயணிக்க வேண்டும்!], ஹிமாலயன் நேஷனல் பார்க், இந்திரா டூரிஸ்ட் பார்க் போன்றவை மட்டுமே. இதில் எங்கே போக வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்ய சில விஷயங்களை பிறகு சொல்கிறேன்.
நாங்கள் சொல்லி இருந்த மதிய உணவும் வந்தது. பொறுமையாக அனைத்தையும் சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது உணவு. மொத்தமாக மதிய உணவுக்கான செலவு ரூபாய் 820/-. இங்கேயும் அதிகமில்லை. எப்போதும் போல, இந்த முறையும் ஓட்டுனர் ரஞ்சித் சிங் எங்களுடன் சாப்பிடாமல் தனியாகவே ஹோட்டலின் வேறு பகுதியில் சாப்பிடச் சென்று விட்டார். நாங்கள் அழைத்தாலும் எங்களுடன் வராமல் வேறு இடத்திற்குச் செல்கிறார். சுற்றுலாத் தலங்களில் இருக்கும் இந்த மாதிரி ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களை அழைத்து வரும் ஓட்டுனர்களுக்கு சாப்பாடு இலவசம்! அதனால் அங்கே தான் செல்கிறார். நாங்கள் காசு கொடுத்து சாப்பிடச் சொன்னாலும் வாங்கிக் கொள்வதில்லை! ஏமாற்றக் கூடாது என்ற மனது – வாழ்க ரஞ்சித் சிங்.உணவை உட்கொண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் எது, அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...

16 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். மலைக்கிராமங்கள் அழகு. நீங்கள் கையில் வைத்திருப்பது சேப்பங்கிழங்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேப்பங்கிழங்கின் அண்ணன் - என் பக்கத்தில் இந்த காய்கறி பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன் ஸ்ரீராம்.

   https://venkatnagaraj.blogspot.com/2017/08/blog-post_18.html

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. இயற்கையை மனிதன் எதிர்த்துக்கொண்டே இருக்கிறான். மக்களுக்கு சௌகர்யம் என்கிற பெயரில் காசு பார்க்கிறான். அதுதான் கட்டிடங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சௌகர்யம் என்ற பெயரில் காசு பார்க்கிறான்.... கலங்க வைக்கும் உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. ரஞ்சித் சிங்கின் நேர்மை வாழ்க. படங்களையும் விவரங்களையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஞ்சித் சிங் போன்றவர்கள் சிலராவது இருக்கிறார்களே என்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. படங்கள் அழகு
  மலை முழுவதும் கட்டிடங்கள் நிரம்பிவிட்டால் அபாயம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபாயம் என்று தெரிந்தும் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது தான் வேதனை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. ஆமாம் ஜி. இப்படியான கிராமங்களைக் காண்பதும் ஒரு ஸ்வாரஸ்யம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. கைலாயம் போகும் போது மலை ஓரத்தில் இப்படி அடுக்குமாடி கட்டிடங்கலைப் பார்த்த போது பயமாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலைப் பிரதேசங்களில் இப்படியான கட்டிடங்கள் ஆபத்தானவை. ஆனால் அரசாங்கமும் தனிமனித்ரகளும் இதைப் பற்றிய கவலை கொள்ளாமல் இருப்பது தான் நடக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. நாங்களும் பயணித்தது போல் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....