செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரியில் என்ன பார்க்கலாம்…ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 14

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வண்ண வண்ண மாலைகள்...
குஃப்ரியிலிருந்து....

நார்கண்டாவிலிருந்து புறப்பட்டு, மதிய உணவு சாப்பிட்ட பிறகு குஃப்ரியில் இருக்கும் சில இடங்களைச் சுற்றலாம் என முடிவு செய்தோம். குஃப்ரியில் அப்படி என்னதான் இருக்கிறது? இந்தப் பகுதியில் பார்க்கலாம்.யாக் மீது அமர்ந்திருந்த போது...

குஃப்ரியிலிருந்து....
 

ஷிம்லா பார்க்கப் போகும் பலரும் சொல்வது ஷிம்லாவில் ஒன்றுமே இல்லை – ஷிம்லா போகும்போது அப்படியே குஃப்ரிக்கும் சென்று வாருங்கள் என்று – என்னைக் கேட்டால் பனிப்பொழிவு இருக்கும் மாதங்கள் தவிர மற்ற நாட்களில் குஃப்ரியில் பார்க்க ஒன்றுமே இல்லை என்று தான் சொல்வேன். தனியார் நிறுவனம் நடத்தும் Kufri Fun World, பனிப்பொழிவு காலங்களில் ஸ்கீ செய்யும் வசதிகள், மஹாசு பீக் என்ற இடம் [அந்த இடத்திற்குச் செல்லும் வழியைப் பார்த்தால் நிச்சயம் உங்களுக்குச் செல்லத் தோன்றாது!], Himalayan Nature Park மற்றும் உள்ளூர்வாசிகள் செய்த பல கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அவ்வளவு தான் குஃப்ரியில்! இதைத் தவிர சில View Points மற்றும் Yak மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு!


இரும்புக் குதிரைகளும், குதிரைகளும்....

குஃப்ரியிலிருந்து....
 

நாங்கள் சென்ற போது பனிப்பொழிவு இல்லாத காரணத்தால் Ski செய்யும் வசதிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்த வசதி இருந்திருந்தால் அந்த அனுபவம் பெற்றிருக்கலாம். Kufri Fun World என்பது நம்மூரில் இருக்கும் Wonderworld போன்ற சமாச்சாரம் – குழந்தைகளுடன் செல்பவர்கள் ரசிக்க முடியும்! எங்கள் குழுவில் என்னைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை! :) கீதாம்மா இல்லை இல்லை என்னைவிடச் சின்னக் குழந்தை இல்லை என்று சண்டைக்கு வரப் போகிறார்கள் – அதற்குள் அடுத்த விஷயத்திற்கு தாவி விடுகிறேன். View Points எனக்கென்னமோ அத்தனை ருசிக்க வில்லை – ஹாதூ பீக் பகுதியில் கிடைத்த வியூ ஷிம்லா-குஃப்ரியில் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


பூங்கா வாயிலில்....

குஃப்ரியிலிருந்து....
 

மஹாசு பீக் செல்லும் வழியில் Deshu Peak என்ற ஒரு இடமும் வருகிறது. மஹாசு பீக் செல்லும் பாதை குறுகிய பாதை தான் – இந்தப் பாதையில் வாகனங்கள் செல்ல இயலாது என்பதால் ஒன்று நடந்து செல்ல வேண்டும் – அல்லது இங்கே இருக்கும் குதிரை/போனியில் செல்ல வேண்டும். பாதை முழுவதும் குதிரை/போனியின் எச்சங்கள் மற்றும் சேறும் சகதியும் உண்டு என்பதால் நடந்து செல்ல வாய்ப்பே இல்லை. குதிரைக் காரர்கள் சொல்லும் கட்டணம் சற்றே அதிகமாகவே இருக்கிறது. மஹாசு பீக் வரை செல்ல ஒரு ஆளுக்கு 650 ரூபாய் வரை வாங்குகிறார்கள். Deshu Peak வரை என்றால் 350 ரூபாய். ஆனால் பெரும்பாலும் குதிரைக்காரர்கள் சுற்றுலா வாசிகளை ஏமாற்றவே முயற்சிக்கிறார்கள்.


இன்னும் எத்தனை பேரை சுமக்கணுமோ தெரியல... 
என்று பேசிக்கொள்ளுமோ?

குஃப்ரியிலிருந்து....சாலை ஒன்றில்....

குஃப்ரியிலிருந்து....
 

குதிரை மீது அமர்ந்து கொண்டு செல்ல, குதிரை வாலாக்கள் நடந்து வருகிறார்கள்.  அந்த சேறும் சகதியுமான குதிரை எச்சங்கள் நிறைந்த பகுதியில் நடப்பதற்கே அவர்களுக்குத் தனியாக காசு தர வேண்டும் என்றாலும் பல சமயங்களில் அவர்கள் ஏமாற்றுக் காரர்களாக இருப்பது பார்த்தால் வருத்தம் தான் மிஞ்சும். ஏற்கனவே ஹாதூ பீக் வரை சென்று வந்ததால் எங்கள் குழுவினருக்கு மஹாசு பீக் செல்ல ஆசையில்லை. கூடவே அந்த வழியைப் பார்த்தவுடன் அவர்கள் சொன்னது “ஹேய்…. ஒரே ச்சளி!” அதனால் அப்படியே மலைப்பாதையில் வேறு பக்கமாக கிராமங்கள் நோக்கி நடந்தோம். அந்தப் பாதையில் தான் இன்னுமொரு சுற்றுலாத்தலமான ஹிமாலயன் நேஷனல் பார்க் இருக்கிறது.


மரத்தில் கைவினைப் பொருட்கள்...

குஃப்ரியிலிருந்து....
 

இங்கே பலவித பறவைகள் மற்றும் பாலூட்டிகளை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த பூங்காவிற்குள் செல்ல கட்டணம் உண்டு. கூடவே கேமரா கட்டணமும். ஏற்கனவே இயற்கையாக விலங்குகள் வசிக்கும் காடுகளுக்கு பயணம் சென்றிருப்பதால் இந்த மாதிரி கூண்டுகளுக்குள் அடைபட்டிருக்கும் இடத்திற்குச் செல்ல மனது வருவதில்லை. பாவம் என்று தான் தோன்றும். வெளியிலிருந்து சில பல படங்களை எடுத்துக் கொண்டு மேலே நடந்தோம். இந்தப் பகுதியில் நிறைய கடைகள் இருக்கின்றன. பெரும்பாலும் தேவதாரு மரங்களிலிருந்து செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், குளிர் காலத்திற்குத் தேவையான உடைகள், பெண்களுக்கான அணிகள் விற்கும் கடைகள் போன்றவை தான் அதிகம்.இப்படி இருக்கும் நான்....
குஃப்ரியிலிருந்து....
இப்படி ஆயிடுவேன்!
பழக்கூடைகள்!

குஃப்ரியிலிருந்து....
 

மரப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குள் நுழைந்து பார்வையிட்டோம். நிறைய பேரம் பேச வேண்டியிருக்கிறது இது போன்ற கடைகளில். ஆள் பொருத்து விலை சொல்கிறார்கள் – சில வெளியூர் பயணிகள் ஹிந்தி தெரியாமல் கண்முன்னே ஏமாறுவதைப் பார்க்க முடிந்தது. எங்களிடம் ஒரு விலை சொல்லும் கடைக்காரர், அவர்களிடம் வேறு விலை – அதிகமான விலை சொல்கிறார்! எங்களை விட அதிகம் விலை கொடுத்து வாங்கியதையும் பார்த்தேன் – கடைக்காரரிடம் கேட்க, உனக்குக் கொடுத்த மாதிரியே எல்லாருக்கும் கொடுக்க முடியாது என்கிறார்! மரத்தினால் செய்யப்பட்ட சில பொருட்களை நானும் மற்ற நண்பர்களும் வாங்கிக் கொண்டோம். அங்கிருந்தபடியே எங்கள் வாகன ஓட்டுனரைத் தொடர்பு கொண்டோம். அவர் கீழே வாகன நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தி இருந்தார்.ஆப்பிள் போலவே - இது உலர் பழங்கள் வைக்க....

குஃப்ரியிலிருந்து....
 

அவர் நாங்கள் நின்ற இடத்திற்கு வந்து சேர வாங்கிய பொருட்களை உள்ளே வைத்து நாங்களும் அவரவர் இடங்களில் அமர்ந்தோம். இந்த மலைப்பகுதிகளில் இருக்கும் ஒரு விலங்கு Yak! பார்க்க நம் ஊர் எருமை போலவே இருந்தாலும் இந்த Yak பனிப் பிரதேசங்களில் மட்டுமே இருக்கின்ற ஒரு விலங்கு. குஃப்ரி பகுதியில் நிறைய இடங்களில் சாலையோரங்களில் ஒன்றிரண்டு யாக் வைத்துக் கொண்டு சிலர் நின்று கொண்டிருப்பார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவற்றின் மீது அமர்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்! ஒரு ஆளுக்கு 50 ரூபாய் வாங்குகிறார்கள். எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – அதற்கு தடை ஒன்றும் இல்லை. வழியில் இருந்த ஒரு யாக் அருகில் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர்.


ஒரு வித பயத்துடன் அமர்ந்த குழந்தை...

குஃப்ரியிலிருந்து....
 

எங்கள் குழுவில் இருந்த அனைவரும் தனித்தனியே யாக் மீது அமர்ந்து படங்கள் எடுத்துக் கொண்டோம். பார்க்க ரொம்பவே சாது மாதிரி இருந்தாலும், இவற்றுக்கும் கழுதைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு – பின்னங்கால்கள் அருகில் சென்றால் கழுதை போலவே யாக்-உம் உதைத்து விடும்! குழுவில் இருந்த ஒரு கேரள நண்பர் வால் அழகா இருக்கே, என பின்னங்கால் அருகே செல்ல, நண்பரை விலகச் சொல்லி, யாக் உரிமையாளர் அலறினார். நல்ல வேளை யாக் உதைக்காமல் விட்டது! யாக் உரிமையாளருக்கு எங்கள் நால்வருக்கும் சேர்த்து ரூபாய் 200 கொடுத்து அவரிடம் என்ன சாப்பிடக் கொடுப்பார், என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தோம் – பதில் சொல்ல அவருக்கு விருப்பமில்லை – ”படம் எடுத்துக்கிட்டியா, போயிட்டே இரு” என்ற எண்ணத்துடன் இருந்தார்!

இப்படியாக குஃப்ரி பகுதியில் சில பல விஷயங்களைப் பார்த்து, பொருட்களை வாங்கி, படங்கள் எடுத்துக் கொண்டு ஷிம்லா நோக்கி புறப்பட்டோம். வழியில் என்ன செய்தோம், ஷிம்லா வந்த பிறகு என்ன செய்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

 1. குஃப்ரீயில் ஒன்றுமில்லை ஜீ நாங்கள் சென்ற போதும் பனிப்பொழிவு இல்லை எனவே ஸ்வாரஸ்யம் இல்லை. மஹாசு பீக் ஹையோ போகும் வழி ஒரே ச்சளிதன்னே...ஹா ஹா ஹா ஹ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே.... பனிப்பொழிவு இருக்கும் சமயங்களில் இங்கே நிறைய கூட்டம் வந்துவிடும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. குட்மார்னிங் வெங்கட்... கட்டிப்போட்ட யாக்கா? அதுபாட்டுக்கு ஓட ஆரம்பிச்சுதுன்னா என்ன ஆறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

   ஓட ஆரம்பித்தால், ஓட்ட வேண்டியது தானே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஜி என் மகனும் யாக் மேல் அமர்ந்து பார்க்க ஆசைப்பட்டு அமர்ந்தான். அப்போது அவன் வயது 21/2 குதிரை மேல் அமர்ந்து செல்ல ஆசைப்பட்டான் ஆனால் போகலை...

   கீதா

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. பேட்டி எடுப்பவர்களைக் கண்டால் யாக் உரிமையாளர்களுக்கு அலர்ஜி போல...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம்...... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. சாதாரணமாக சுற்றுலா செல்லும் இடங்களில் நீங்கள் எதுவும் வாங்க மாட்டீர்களே.. (ரொம்பத் தெரிஞ்ச மாதிரி சொல்றேனோ! படித்ததிலிருந்து தெரிந்து கொண்டதுதான்!) நீங்கள் இங்கு மரத்தட்டு போன்ற சாமாச்சாரங்கள் வாங்கி இருக்கிறீர்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். பெரிதாக எதுவும் வாங்கியது இல்லை. ஆனால் இந்த முறை வாங்கினேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஸ்ரீராம் நீங்க சொல்லியிருப்பதை நானும் காலையில் சொல்ல வந்து அப்புறம் காபி ஆத்தப் போயிட்டேன்...ஹா ஹா ஹ

   கீதா

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 5. கைவினைப் பொருட்கள் வித்தியாசமாக, அழகாக உள்ளன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். நன்றாக இருக்கும். இன்னும் நிறைய உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. யாக் புகைப்படம் பிரமிப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. பயண அனுபவங்கள் அருமை. யாக்கின் மீது அமர்ந்துள்ள குழந்தையின் பயம் எங்களுக்கும் வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. பயணம் அருமை.
  தேவதாரு மரத்தில் செய்த பொருடகள் அழகு.
  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. ஜி உங்கள் பழைய பதிவுகளை இனிதான் வாசிக்க வேண்டும். வாசித்துவிடுவேன் ...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில நாட்களாக நானும் பதிவு எழுதவில்லை ஜி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....