திங்கள், 10 டிசம்பர், 2012

பரத்வாஜ ஆஸ்ரமமும் – அமிதாப் பச்சனும்திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 13

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10 11 12

சென்ற பகுதியில் ஷங்கர் விமான மண்டபம் மற்றும் குஸ்ரோ பாக் ஆகிய இடங்களுக்கு உங்களை அழைத்துச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். என்னது நினைவில்லையா? சரி அப்ப திரிவேணி சங்கமம் – காசி பயணம் பகுதி 12 படிச்சுட்டு திரும்ப இங்கே வாங்க.... 

த்வாஜ் ஆஸ்ரம்

இப்பகுதியில் அலாஹாபாத் நகரின் மேலும் சில இடங்களைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் பரத்வாஜ ஆஸ்ரமம் பற்றிப் பார்க்கலாம்.  குஸ்ரோ பாக் சென்று அங்குள்ள அமைதியையும் சூழலையும் ரசித்த நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது பரத்வாஜ ஆஸ்ரமத்திற்குதான். இந்த இடத்தில் தான் பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமம் இருந்ததாகவும், ராமர் வனவாசத்திற்குக்காக சித்திரகூட் செல்லும் வழியில் சில நாட்கள் இங்கே தங்கிப் போனதாகவும் சொல்கிறார்கள்.

த்ரேதா யுகத்தில் இருந்த ஆஸ்ரமத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சீடர்கள் இங்கே படித்ததாகவும், முனிவர் வேத புராணங்கள், சாஸ்திரங்கள், ஆயுர்வேதம் போன்ற பல விஷயங்களில் புலமை பெற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதே இடத்தில் தான் இன்றளவும் பரத்வாஜ முனிவரின் வழித்தோன்றல்கள் இருந்து பரத்வாஜ முனிவரின் கோவிலைப் பராமரிக்கிறார்களாம்.

தற்போது இருக்கும் கோவில் 1968 ஆம் ஆண்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.  இக்கோவிலில் பரத்வாஜ முனிவர் சிலை தவிர, சிவன், ஹனுமான், ராமர்-சீதை- லக்ஷ்மணர், ப்ரம்மா, சந்தோஷி மாதா போன்றவர்களுக்கும் தனிக்கோவில்கள் இருக்கின்றன.  நாங்கள் சென்று சில நிமிடங்கள் இந்த இடத்தில் இருந்து விட்டு அடுத்த இலக்கை நோக்கிச் சென்றோம். 

எங்களுடைய அடுத்த இலக்கு இந்த ஆஸ்ரமத்திற்கு எதிர்புறத்தில் இருக்கும் ஆனந்தபவன் [என்ன அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் அலஹாபாத்ல கூட கிளை திறந்துட்டாங்களா? என்று கேட்கக் கூடாது!]  ஆனால் அங்கு உங்களை அழைத்துச் செல்வதற்கு முன் வேறு ஒரு இடம் பற்றி இங்கே பார்த்து விடலாம்.  ஏனெனில் இவ்விடத்திற்கும் சொல்லப் போகும் இடத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த ஆஸ்ரமத்தில் குருகுலத்தில் நிறைய மாணவர்கள் படித்தார்கள். சொல்லப்போகும் இடத்தில் பல வருடங்களாக மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 தவி கூகிள்

அலஹாபாத் பல்கலைக்கழகம் பற்றியே இப்போது பார்க்கப் போகிறோம். டிசம்பர் 9, 1873 ஆம் ஆண்டு அன்று இப்பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆரம்பித்தபோது பல்கலைக்கழகத்தின் பெயர் Muir Central College – வடமேற்கு மாகாணத்தின் ஆளுநர் Sir William Muir பெயரில் தான் அழைக்கப்பட்டது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தினை கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்ட் என்றும் அழைத்தார்கள்.

பலகலைக்கழக கட்டிடம் கொல்கத்தாவின் விக்டோரியா மெமோரியல் மற்றும் மும்பை நகரின் க்ராஃபோர்ட் வளாகம் போன்றவற்றை வடிவமைத்த வில்லியம் எமர்சன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 

இக்கல்லூரியில் இந்தியாவின் பல பிரபலங்கள் படித்திருக்கிறார்கள். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி நேருவின் தந்தை மோதிலால் நேரு, ஜி.பி. பந்த், மதன் மோகன் மால்வியா, முன்னாள் பிரதம மந்திரி வி.பி. சிங், சந்திரசேகர், முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர்கள் நாராயண் தத் திவாரி, பகுகுணா, சத்யேந்த்ர நாராயண் சின்ஹா, அர்ஜூன் சிங், மதன் லால் குரானா மற்றும் முரளி மனோஹர் போன்ற அரசியல்வாதிகள்  படித்ததும் இப் பல்கலைக்கழகத்தில் தான்.


அரசியல்வாதிகள் மட்டுமன்றி பல கலைஞர்களையும், அறிஞர்களையும் உருவாக்கியதில் பெரும்பங்கு இவ்விடத்திற்கு உண்டு. இங்கே தான் தலைப்பில் வந்த அமிதாப் பச்சனும் வருகிறார்.  எங்களுடைய வாகன ஓட்டுனர் திரு அப்துல் கலாம் பெருமையுடன் சொன்னார், “வாங்க நம்ம அமிதாப் பச்சன் படிச்ச கல்லூரிக்கு உங்களையும் அழைத்துப் போகிறேன் என. என்னடா இது புதுக் கதையா இருக்கேஎன நினைத்தாலும் கல்லூரி வளாகத்திற்குச் சென்றோம். அவரிடம் அது தவறு அமிதாப் பச்சனுடைய அப்பாவும், சிறந்த கவிஞருமான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள் தான் இப் பல்கலைகழக்கத்தில் படித்தார் எனச் சொல்லி அவர் மனதை நோக அடிப்பானேன்!  அமிதாப் படித்தது எங்கள் தில்லியில் உள்ள கிரோரி மால் கல்லூரியில். தவி கூகிள்

கல்லூரியின் முக்கிய நோக்கத்தினை கல்லூரியின் சின்னத்தில் லேட்டின் மொழியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  Quot Rami Tot Arboresஎன்பது தான் அது.  அதன் அர்த்தம் ஒவ்வொரு கிளையும் ஒரு மரத்தை உருவாக்குகிறது”.  பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் பல சிறப்பான மனிதர்களை உருவாக்கி இருப்பது கண்கூடு.

மீண்டும் அடுத்த வாரம் பயணத் தொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

 1. அப்பா சொத்து பிள்ளைக்குன்னா அப்பா படிச்ச கல்லூரியும் பிள்ளை படிச்சமாதிரிதான்:-)))))

  அப்பாவுக்குக் கிடைச்ச பட்டத்தையே குடும்பப்பெயரா ஆகிக்கிட்ட கதையெல்லாம் நமக்குப் பழக்கப்பட்டதுதான் இல்லையோ!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 2. ”ஒவ்வொரு கிளையும் ஒரு மரத்தை உருவாக்குகிறது”. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் பல சிறப்பான மனிதர்களை உருவாக்கி இருப்பது கண்கூடு.

  அருமையான் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   நீக்கு
 3. அமிதாப் பச்சன் அவர்களுடைய தந்தை ஹரிவம்ச ராய் பச்சன் ஒரு தலை சிறந்த இலக்கிய வாதி.

  தனக்கென ஒரு பாணி தனக்கென ஒரு சிந்தனை ஓட்டத்தை நிலை நிறுத்தி அதனை கவிதை இலக்கணத்தின் ஒரு
  அங்கமாக உருவாக்கியவர். ரஹஸ்ய வாத் எனப்படும் இந்த சிந்தனை ஓட்டத்திலே சூக்குமமான கருத்துக்களைச் சொல்லி
  அவ் வார்த்தைகள் மூலம் மற்றுமோர் பொருளை படிப்போர்க்குப் புரிய வைத்தவர் ஹரிவம்ச ராய் பச்சன்.

  ஆங்கில இலக்கியத்தில் வர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், ஷெல்லி ஆகியவர் ஒரு ரொமான்டிக் ஈரா எனச்சொல்வார்கள்.
  பின் வந்த டி. எஸ்.எலியட் ஒரு யுனீக் ( தனிப்பட்ட என்பது சரியான மொழிபெயர்ப்பா ?) பாணியைக் கொண்டு வந்து
  நிலை நிறுத்தினார். அது போலவே ஹரிவம்ச ராய் அவர்களின் இலக்கிய சாதனை தனித்துவம் வாய்ந்தது.
  மதுசாலா என்னும் அவரது கவிதைகளில் ஒன்று படிக்கப் படிக்கத் திகட்டாது தித்திக்கும் தென்னமுதம். பல சமூக நடப்புகளை
  இவரது படைப்புகளிலே காணலாம். ஒரு நாற்பது வருஷங்களுக்கு முன்பாக இவரின் ஓரிரண்டு கவிதைகளை நான் தமிழிலோ மொழிபெயர்த்து
  இருக்கிறேன்.  இவரது பின்னணியிலே வந்த மஹாதேவி வர்மா என்னும் கவிஞர் அதே ரஹஸ்யவாதத்தை இன்னும் ஒரு படி மேலே
  கொண்டு போய் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உண்டான அனந்தமான முடிவில்லாத தொடர்பினை விளக்குவார்.

  ஹரிவம்ச ராய் அவர்களின் புதல்வர் அமிதாப் பச்சன் என்று கூறுவதே சிறப்பு. அமிதாப் பச்சனே பெருமைப்படும் வார்த்தைகள் இவையே.

  இன்னும் வரும் பல நூற்றாண்டுகளிலும் ஹரிவம்ச ராய் பச்சன் இலக்கியவாதிகளால் போற்றப்படுவார் . இது திண்ணம்.
  அமிதாப் பச்சன் பெயர் அந்த அளவுக்கு வானில் விண்மீனாகத் தொடர்ந்திருப்பாரா ? காலம் தான் பதில் சொல்லும்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. ஹரிவன்ஷ் ராய் பச்சன் மிகச்சிறந்த கவிஞர். அவரது ஒரு சில கவிதைகளை நேரடியாக ஹிந்தியிலும், சில கவிதைகளை ஆங்கிலத்திலும் படித்திருக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   நீக்கு
 4. ஒவ்வொரு கிளையும் ஒரு மரத்தை உருவாக்குகிறது”. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் பல சிறப்பான மனிதர்களை உருவாக்கி இருப்பது கண்கூடு.

  சிறப்பான பகிர்வு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 5. அமிதாப்பின் தந்தை கவிதைகள் சில சில்சிலா படத்தில் கூட (அல்லது கபிகபி?) இடம்பெற்றுள்ளன என்று ஞாபகம். சுப்பு தாத்தா சொல்லியிருக்கும் விஷயங்கள் கொஞ்சம் தெரியும் அவர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ஒன்று சில வருடங்களுக்குமுன் படித்தேன். அதில் சில விவரங்கள் படித்த நினைவு இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. அரிய தகவல்
   படங்களுடன் அருமையாக பதிவாக்கித் தந்தமைக்கு
   மனமார்ந்த நன்றி

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
  4. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 6. ஹிந்தி படிச்சவங்க ஹரிவன்ஷ்ராய் பச்சன் பற்றியோ, மஹாதேவி வர்மா குறித்தோ அறியாமல் இருக்க முடியாது. இருவரும் மாபெரும் கவிஞர்கள். அவர்களை நினைவு கூர்ந்த இந்தப் பதிவுக்கு நன்றி. இந்த இடங்களெல்லாம் நாங்களும் பார்த்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 7. அலகாபாத்-மீண்டும் போனது போல் உணர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை சொக்கன் ஐயா.

   நீக்கு

 8. அலகாபாத் சென்றும் சிலவற்றை பார்க்க இயலவில்லை! தங்கள் பயண விவரம் பல செய்திகளைத் தெரிவிக்கிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 9. அனைத்துப் பதிவுகளும் பயன் தருவதாக இருக்கின்றன.

  இரு பெருமிலக்கியவாதிகளின் வரலாறும் தெரிந்து கொள்ளமுடிந்தது. நல்லதொரு பயணம்.நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 10. அலஹாபாத் பல்கலைக்கழகம் - இன்னும் அதே பெயரில் இருப்பதே பெரிய விஷயம். ஏதோ ஒரு நேரு இல்லை காந்தி பல்கலைக் கழகம் - என்று இன்னும் ஆகாமல் இருப்பதே பெரிய விஷயம் தான்.

  (நாராயண் தத் திவாரி எந்தக் கலையில் பட்டம் வாங்கியிருப்பார் என்று யோசித்தேன். சிப்பு சிப்பா வருது.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   நீக்கு
 11. "அலஹாபாத் பல்கலைக்கழகம் " இருப்பது தெரியும். விபரங்கள் உங்கள் பகிர்வின் மூலம் இன்றுதான் அறிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 12. //கல்லூரியின் முக்கிய நோக்கத்தினை கல்லூரியின் சின்னத்தில் லேட்டின் மொழியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ”Quot Rami Tot Arbores” என்பது தான் அது. அதன் அர்த்தம் ”ஒவ்வொரு கிளையும் ஒரு மரத்தை உருவாக்குகிறது”. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும் பல சிறப்பான மனிதர்களை உருவாக்கி இருப்பது கண்கூடு.//

  மிகவும் அருமையான வாசகம். சந்தோஷம். பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 13. பயண அனுபவத்துடன் பல தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 14. அந்த ஓட்டுனர் மாற்றி சொன்னதும் அமிதாப் அப்பாவை எங்கள் வரை கொணர்ந்து சேர்த்தது. மேலதிக தகவல்கள் தந்த சுப்பு ஐயாவுக்கும் உங்களுக்கும் நன்றி. கல்லூரியின் சின்னத்தில் பொறித்திருந்த வார்த்தைகளில் தான் எவ்வளவு ஆழ்ந்த கருத்துப் பொதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 15. //அவரிடம் அது தவறு ”அமிதாப் பச்சனுடைய அப்பாவும், சிறந்த கவிஞருமான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள் தான் இப் பல்கலைகழக்கத்தில் படித்தார்” எனச் சொல்லி அவர் மனதை நோக அடிப்பானேன்! அமிதாப் படித்தது எங்கள் தில்லியில் உள்ள கிரோரி மால் கல்லூரியில்.//

  பிறர் மனதை நோக அடிப்பானேன் என்பது நல்ல சிந்தனைதான் ஆனால் வாகன ஓட்டுனர் திரு அப்துல் கலாம் அவர்களிடம் அமிதாபச்சன் அவர்களின் தந்தை படித்த கல்லூரி என்று சொன்னால் அடுத்து வருபவர்களுக்கு அவர் சரியாகச் சொல்வார் அல்லவா!

  உங்கள் பயண அனுபவங்கள் மூலம் புதிதாக நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன் வெங்கட்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அடுத்து வருபவர்களுக்கு அவர் சரியாகச் சொல்வார் அல்லவா!//

   இந்தக் கோணத்தில் யோசிக்க வில்லை! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....