வியாழன், 24 டிசம்பர், 2009

அணு அளவும் பயமில்லை?

விஜய் டிவியில் அணு அளவும் பயமில்லை சீசன்-2 வந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் அனுஹாசன் ஹோஸ்ட் செய்த இந்த நிகழ்ச்சி இப்பொழுது லக்ஷ்மி ராயினால் [தமிழ் அங்கங்கே எட்டிப்பார்க்கும் ஆங்கிலத்தில்] ஹோஸ்ட் செய்யப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சி தமிழுக்குப் புதிது என்றாலும், இதற்கு இந்தியாவில் முன்னோடி "கலர்ஸ்" ஹிந்தி சேனலில் வரும் "கத்ரோன் கே கிலாடி" [ஆபத்துகளுடன் விளையாடுபவர்]. இந்த ஹிந்தி நிகழ்ச்சி பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாரினால் நடத்தப்படுகிறது.

டி.வி.யில் வரும் பெரும்பாலான சீரியல்கள் வெறும் அழுகாச்சி ரகம் தான் . இல்லையெனில் யாரை எப்படி கவுக்கலாம், எப்படி மத்தவங்களை ஒழிக்கலாம் என்பதையெல்லாம் காட்டும்படியாகத்தான் இருக்கு. என்னதான் இந்த "அணு அளவும் பயமில்லை" நிகழ்ச்சி மற்ற சீரியல்களில் இருந்து மாறுபட்டு இருந்தாலும் "ரியாலிட்டி ஷோ" என்று சொல்லும் அளவுக்கு இதில் ரியாலிட்டி இருப்பதாக தோன்றவில்லை.

தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சரி எவ்வளவோ மக்கள் தினம் தினம் தங்களது வாழ்க்கையில் பல ஆபத்தான பணிகளில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். பலருக்கு தங்களது வயிற்று பிழைப்புக்காக என்றால் வேறு சிலருக்கோ அப்போதைய சந்தர்ப்பங்களினால்.

தமிழகத்தில் இருப்பவர்களில் பலர் கழைக்கூத்தாடிகளை பார்த்திருக்கலாம். இரண்டு பக்கத்திலும் குச்சி நடப்பட்டு, குறுக்கே கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றின் மேல் கையில் ஒரு நீண்ட குச்சியை பிடித்துக்கொண்டு சர்வ சாதாரணமாக நடப்பார் ஒரு சிறிய சிறுமி. டி.வி நிகழ்ச்சியில் காட்டப்படுவது போல கீழே எந்த விதமான பாதுகாப்பு வலையோ/ மெத்தையோ கிடையாது. கயிற்றின் மேலே நடக்கும் சிறுமியின் கண்களில் பயமோ, தடுமாற்றமோ இருப்பதில்லை. வயிற்று பிழைப்பு அவர்களை இப்படி நடக்க வைக்கிறது.

குற்றாலம் மலைப் பகுதிகளில் பலர் தேன் எடுப்பதற்காகவும் தங்களின் தினசரி உணவினை சேகரிக்கவும் மலைச்சரிவுகளில் எந்த விதமான பிடிமானமும் இன்றி ஏறி இறங்குகின்றனர். குற்றாலம்/பாபநாசம் அருவிகளில் குளிக்க வந்து, பொங்குமாங்கடலில் தடுமாறியோ அல்லது தற்கொலைக்கு முயன்றோ விழுந்துவிடும் பயணிகளை காப்பாற்ற அல்லது உடலை மீட்க மலை உச்சியில் இருந்து அனாயாசமாக தண்ணீருக்குள் குதிப்பவரை பார்க்கிறோம் . குதிக்கும் போது அவர்களுக்கு பயமாக இருக்காதா? "பயமா? அப்படின்னா...?" என்று நம்மிடமே திருப்பிக் கேட்கிறார்கள் அவரைப் போன்றவர்கள்.மேலே உள்ளது ஒரு பெண் இரண்டு ரயில் பெட்டிகளின் நடுவில் உள்ள connector -இல் உட்கார்ந்து பயணம் செய்பவரின் படம். அவரது முகத்தில் பயக் களை கொஞ்சமாவது இருக்கிறதா? இல்லையே!. அவரை பொறுத்தவரை இது ஒரு சாதாரணமான, தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு.

சீரியல் எடுத்து லட்சங்களில் பணத்தை அள்ள இவர்களுக்கு இப்படியெல்லாம் ஒரு வழி. தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறிய பகுதியையாவது இவர்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தினால் தாங்கள் போகிற வழிக்கு புண்ணியம் தேடிக்கொண்டவர்களாக இருப்பார்கள். செய்வார்களா?

5 கருத்துகள்:

 1. அப்படியே வழி மொழிகிறேன். தற்போதைய reality ஷோக்கள் எல்லாமே வெறும் reawitty ஷோக்கள் ஆகிவிட்டன.

  அருவிகளில் குதித்து சடலங்களை எடுப்பவர்கள் வெறும் காசுக்காக அதை செய்பவர்கள் அல்ல. ஒரு சவாலாக செயகின்றனர். அதற்கு உடல் வலிமை மட்டுமல்ல, பெரும் மனோவலிமையும் வேண்டும்.

  அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் நம்ம லச்சு சும்மா நச்சுன்னு இருக்கால்ல. ஹ்ம்ம்...

  பதிலளிநீக்கு
 2. //இல்லையெனில் யாரை எப்படி கவுக்கலாம், எப்படி மத்தவங்களை ஒழிக்கலாம் என்பதையெல்லாம் காட்டும்படியாகத்தான் இருக்கு//

  இருநூறு சதவிகிதம் உண்மை. இவர்களே மக்களுக்கு தீமையை
  போதித்துவிட்டு பணத்தையும் அள்ளிக்கொண்டு போகிறார்களே? இது எங்கே எப்போது எப்படி முடிவுக்கு வருமோ தெரியவில்லையே!

  ரேகா ராகவன்

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறிய பகுதியையாவது இவர்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தினால் தாங்கள் போகிற வழிக்கு புண்ணியம் தேடிக்கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் காதில் விழுமா???

  பதிலளிநீக்கு
 4. அணு நடத்தியப்ப ஒரு முறை பாத்தேன்.. சும்மானாச்சும் அழுதுட்டே இருந்தாங்க.. நல்ல ட்ராமாவா இருந்தது. அவங்க அழலைன்னாலும் அனுவே அழ வைக்கிறாப்ப்ல கேள்வி கேட்டாங்க..

  இந்த படம் எங்க இருந்து எடுத்தீங்க .. ஹப்பா.. :(

  பதிலளிநீக்கு
 5. 'அணு அளவும் பயமில்லை’ நிகழ்ச்சியையும் உண்மையாகவே அணு அளவும் பயமில்லாதவர்களையும் ஒப்பிட்டிருக்கீங்க. ஆனா, நெஜம்மாவே அப்படி வாழ்ந்து பழக்கப்பட்டவங்களுக்கு அதெல்லாம் பயமா இருக்காதுதான். அதுல எந்த ஆச்சரியமும் இல்லை. திடீர்னு சிலரை அப்படி செய்யச் சொல்லும்போதுதானே பயம் வரும்? அதுதான் இந்த நிகழ்ச்சியோட மையம். என்னங்ணா, நாஞ் சொல்றது சரிதானுங்களே?

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....