எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 27, 2015

பயணத்தினால் கிடைத்த நட்பு!தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 11

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10

 படம்: இணையத்திலிருந்து....

சென்ற பகுதியில் பார்த்தது போல ஜ்வாலாஜி கோவிலில் ஒரு உன்னதமான அனுபவத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புறப்படும் போதே நேரம் இரவு 08 மணிக்கு மேலாகி விட்டது. ஜ்வாலாஜி இருக்கும் இடத்திலிருந்து அன்றைய இரவு நாங்கள் தங்க வேண்டிய இடமான காங்க்டா [Kangra] சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு.  இரவு நேரம் என்பதால் சற்றே மெதுவாகத் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கூடவே மலைப் பிரதேசம் என்பதால் வேகமாக பயணிக்க இயலாது.

இரவு நாங்கள் அங்கே தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, அலுவலக நண்பரின் உறவினரிடம் சொல்லி இருந்தோம். இவர் தான் எங்களின் முதல் நாள் இரவு தங்கிய இடமான சிந்த்பூர்ணியிலும் தங்குமிடம் ஏற்பாடு செய்தவர். நாங்கள் காங்க்டா வரும்வரை தொடர்ந்து அலைபேசியில் அழைத்து எங்கே இருக்கிறோம் என்பதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். காங்க்டா நகரில் நுழைந்தவுடன் இருக்கும் ஒரு பிரதானமான இடத்தினைச் சொல்லி அங்கே காத்திருப்பதாகவும் சொன்னார்.  ஒரு வழியாக நாங்கள் அந்த இடத்தினை அடைந்தோம்.

அங்கே சேர்ந்தபிறகு அவரை அலைபேசியில் அழைக்க, சில நிமிடங்களுக்குள் தனது வாகனத்தில் வந்து சேர்ந்தார். அவருடைய வாகனத்தினைத் தொடர்ந்து நாங்களும் பயணித்து அவர் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். கீழே ஐந்து அறைகள், மேலேயும் தங்கும் அறைகள் என ஒரு இடம் – பெயர் Anmol Guest House.  காங்க்டா தேவி கோவில் இருக்கும் கடை வீதியிலேயே இருக்கிறது. அங்கே சென்று எங்கள் உடைமைகளை வைத்து விட்டு சற்றே இளைப்பாறினோம்.

அதற்குள் அந்த நண்பர், அவர் பெயர் மனிஷ் – இரவு உணவு எங்கே சாப்பிடப் போகலாம் என்று கேட்க ஆரம்பித்தார்.  மதியம் சாப்பிட்டிருந்தாலும், முந்தைய பதிவில் சொன்னது போல, நாலு மணிக்கு சாப்பிட்டிருந்தாலும், பயணத்திற்குப் பிறகு சிலருக்கு பசி இருந்தது. சிலருக்கு பயணத்தின் அலுப்பில் படுத்தால் போதும் போல இருக்கிறது, அதனால் நாங்கள் பழங்கள் சாப்பிட்டு விடுகிறோம் எனச் சொல்ல, சிலர் மட்டும் சாப்பிடப் புறப்பட்டோம் – அப்போது மணி இரவு 09.45 மணிக்கு மேல்!

அப்பப்பா, மனீஷ் உடனேயே அவரது நண்பரின் உணவகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, உணவு சாப்பிட எங்களை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டார். அப்படி ஒரு கவனிப்பு, ஆட்டமும் ஓட்டமுமாக மனிஷ் எங்களை கவனிக்க, நாங்களும் அவரது அன்பில் திளைத்தோம். மனீஷையும் எங்களுடன் சாப்பிடச் சொல்ல, அவரோ, வீட்டில் மனைவி காத்திருப்பார் [சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனதாம்!] என்று சொல்ல, எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம், நீங்கள் புறப்படுங்கள், காலையில் சந்திக்கலாம் என்று வலுக்கட்டாயமாக அனுப்பினோம்.

 படம்: இணையத்திலிருந்து....

நாங்கள் உணவு சாப்பிட்டு முடித்தபிறகு உணவுக்கான தொகையைக் கொடுக்கலாம் எனக் கேட்டபோது, கடை உரிமையாளர், எங்களிடம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார் – மனீஷ் ஏற்கனவே அவரிடம் சொல்லி விட்டாராம் – வாங்கக் கூடாது என! நன்கு உண்ட பிறகு அதற்கான தொகையைக் கொடுக்கவில்லையே என நினைத்த போது மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கடை உரிமையாளருக்கும் நன்றி சொல்லி, நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு நடந்தே திரும்பினோம். 

காங்க்டாவில் நாங்கள் தங்கி இருந்த போதும், நாங்கள் பயணித்த போதும், மனீஷ் எங்களுக்குச் செய்த உதவிகள் என்றும் மறக்கமுடியாதவை. தொடர்ந்து அவர் ஓட்டமும் நடையுமாக பல ஏற்பாடுகளை எங்களுக்காக செய்து கொடுத்தார். இத்தனைக்கும் நாங்கள் அவரை முன்னரே பார்த்ததோ, அறிந்ததோ இல்லை. அவரின் உறவினர் எங்களுடன் அலுவலகத்தில் ஒன்றாக பணி புரிந்தவர் [அதுவும் சில வருடங்களுக்கு முன்னர்!].  அவர் சொல்லி விட்டார் என்பதற்காக, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

அவரிடம் பேசியபோது ஒரு விஷயத்தினைத் தெரிந்து கொண்டோம். அவரது மனைவியின் ஊர் தலைநகர் தில்லி தானாம். அவ்வப்போது தில்லி வருவேன் என்று சொல்ல, எப்போது தில்லி வந்தாலும் சொல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டோம்! இந்த மாதிரி பயணங்களில் நமக்குக் கிடைக்கும் நட்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விடுகிறது. 

இரவு உணவினை முடித்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பி, படுத்துக் கொண்டு, அன்றைய தினத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை நினைத்தபடியே கிடக்க, சிறிது நேரத்திலேயே நித்ரா தேவி என்னை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றாள்.......  சரி நான் கொஞ்சம் தூங்கி எழுந்து கொள்கிறேன்! அடுத்த நாள் என்ன இடங்களுக்குச் சென்றோம், என்னென்ன அனுபவங்கள் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 comments:

 1. மனீஷ் மாதிரியன ஆட்களை பார்ப்பதென்பது அரிதுதான். அவர் டில்லிக்கு வந்த பிறகு, சந்தித்தது, எப்படியும் பதிவாக வரும், பார்த்துக்கொள்ளலாம். பயணத்தைத் தொடருங்கள் !

  ReplyDelete
  Replies
  1. எப்படியும் பதிவாக வரும்! :)))) என்னவொரு நம்பிக்கை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 2. நட்பின் பெருந்தக்க யாவுள
  போற்றுதலுக்கு உரிய நட்பு
  தம1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. சிலசமயம் இதுபோன்ற முன்பின் தெரியாத மனீஷ் போன்ற நண்பர்கள் செய்யும் உதவியை என்றும் மறக்க இயலாது. எனக்கும் இதுபோன்ற உதவி கிடைத்திருக்கிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குக் கிடைத்த நட்பு பற்றியும் எழுதுங்களேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. வணக்கம்
  ஐயா.

  இப்படியாக கிடைக்கும் நட்பு என்றென்றும் மறக்ககூடாது... மிகஅருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 5. பயணக்கட்டுரை அருமை. மனீஷ் அவர்களின் உதவி இனிமை. நல்லதொரு நட்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. அருமையான நட்பு. பல சமயங்களிலும் இப்படி முன்பின் தெரியாதவர்கள் செய்யும் உதவி பெரிதாகவே இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 7. எங்களுக்கும் இந்த மாதிரியான அனுபவம் இருக்கிறது எங்கள் வட இந்தியப் பயணத்தின் முதல் கட்டம் ஜெய்பூரிலிருந்து தொடங்கியது. ஜெய்ப்பூர் முன் பின் சென்றிராத ஊர். என் மகன் சொன்னான் என்பதற்காக அவன் அலுவலகத்தின் ஜெய்ப்பூர் கிளையில் வேலையிலிருந்தவர் நாங்கள் ஜெய்ப்பூர் ரயில் நிலையம் போனதிலிருந்து மறு நாள் மதுராவுக்கு ரயில் ஏறும் வரை எல்லா உதவிகளையும் செய்தார். நான் என் பதிவில் ஓரளவு சொல்லி இருந்தேன் முன்பின் தெரியாதவர்க்காக எல்லாஉதவிகளும் செய்தவரை மறக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. இது போன்ற நட்புகள் கிடைப்பது அரிது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆவி.

   Delete
 9. சிறந்த மனிதர் மனிஷ். பாராட்டுகள்.

  அது சரி, என்ன சாப்பிட்டீர்கள் என்று சொல்லவில்லையே.... காங்(ரா)டா போன்ற ஊர்களில் சாப்பிட என்ன கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவல்தான்!!

  ReplyDelete
  Replies
  1. ஹிமாச்சலத்திலும் சப்பாத்தி தான். நாங்கள் அன்று சாப்பிட்டது தந்தூரி சப்பாத்தி, கடி, தால் மற்றும் ரைத்தா - கூடவே பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் முள்ளங்கி சலாட்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. பயணக் கட்டுரை படு வேகம் எடுத்து விட்டது நண்பரே!
  உதவி என்னும் "உயிர்" எழுத்தாய் உலவி வரும் "மனீஷ்"
  போன்ற மனிதர்கள் "மெய்"யாய் போற்றுதலுக்குரியவர்களே!
  தொடருங்கள்!
  த ம 5
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 11. மணிஷ் மாதிரி நண்பர்கள் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமாவது மழை பொழிகிறது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. ஓடி ஓடி உங்களுக்கு விருந்தோம்பல் செய்த மனீஷ் – இவர் போன்ற அன்பானவர்கள் இந்த பூமியில் அரிது. கட்டுரையை முடித்ததும் எனக்கு கம்பராமாயணத்தில், கானகத்தில் இராமனுக்கு தோழனாய் வந்த, அந்த நாவாய் வேட்டுவன் குகன் மனீஷ் வடிவினில் தெரிந்தான்.
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 14. வணக்கம் சகோதரரே.

  புதிதாக சென்றவிடங்களில் நட்புகள் அதுவும் முன்பின் தெரியாத, எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காத நட்புக்கள் இந்த மாதிரி அமைந்து விட்டால் நாம் வாழும் காலம் வரை அவர்களை மறக்க இயலாது. எங்கும்,எந்த ஒரு சந்தர்பத்திலும் அவர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். பயணத்தை தொடர்ந்ததும் நாங்களும் தொடர்கிறோம். நல்ல நட்பை பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 15. நட்பைப்பற்றியது அருமை நண்பரே
  தமிழ் மணத்தில் நுழைக்க 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. விருந்தோம்பல், பொதுவாக இந்தியர்களுக்கே உரித்தானது. அது இன்னும் சிலரிடம் அனுபவப் படும்போது, நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிடற்கரியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 17. அருமையான நட்பு~! மனீஷைப் பாராட்டியே ஆக வேண்டும். இவர்களைப் போன்றோரைப் பார்ப்பது அரிது......

  பதிவு அருமை.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 18. இப்படித்தான் முன்பின் தெரியாத நபர்களின் உதவி கிடைக்கும்போது.... தெய்வம் மனுஷ்ய ரூபேணே என்பது புரிகிறது!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். முன்பின் தெரியாத இடத்தில், இது போன்று உதவி கிடைப்பது நல்ல விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....