சனி, 1 ஆகஸ்ட், 2026

ஆகாயம் காணாத நட்சத்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன் - வாசிப்பனுபவம் - ஆதி வெங்கட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம்   பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


*******




இந்திரா சாரின் எழுத்தில் உருவான இந்தப் புத்தகத்தை சில நாட்களுக்கு முன் நெய்வேலி புத்தக கண்காட்சிக்குச் சென்றிருந்த என்னவரும், மகளும் எனக்காக வாங்கி வந்திருந்தார்கள்! நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களின் பட்டியல் மகளுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் நான் இதுவரை வாசிக்காத புத்தகமாக பார்த்து வாங்கி வந்தாள்!


இந்திரா சாரின் எழுத்தை திருவரங்க வாழ்வில் தான் ஸ்பரிசிக்கத் துவங்கினேன்! அப்போது என் பக்கத்து வீட்டில் வசித்த தோழி அமுதாவின் கணவர் கல்லூரி பேராசிரியர் என்பதால் தன் மனைவிக்காக கல்லூரி நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வருவார்! அதில் பெரும்பாலும் இந்திரா சாரின் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும்! பின்பு வாடகை நூலகத்திலும் அவரின் நூல்களை தேடி எடுத்து இருவரும் வாசித்தோம்! தோழி இப்போது இல்லையென்றாலும் அவரின் நினைவுகள் எப்போதும் என் மனதில் உழன்று கொண்டிருக்கும்!


ஆகாயம் காணாத நட்சத்திரம் என்ற இந்த புத்தகம் 2002ல் முதல் பதிப்பை கண்டிருக்கிறது! அப்போது அவள் விகடனில் தொடராக வெளிவந்ததாகவும் தெரிய வருகிறது! சிவமும், சித்தர்களும், மர்மங்களுமாக வாசித்து பழகிய இவரின் எழுத்தில் உருவான இந்த நூல் ஒரு குடும்பக் கதை! 


மீனாட்சி என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியும், அவள் மகன் அரவிந்தன், மருமகள் ரஞ்சனி, பேத்தி ராகவியும் தான் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள்! மீனாட்சிக்கு மாலதி என்ற மகளும் இருக்கிறாள்! திரைப்பட தயாரிப்பாளர் ஆதிரங்கராஜின் மனைவியான மீனாட்சி தன் கணவனின் நடத்தை பிடிக்காததால் தன் மகன் அரவிந்தையும் மகள் மாலதியையும் இருபது வருடங்களுக்கு முன்பே தன்னுடன் அழைத்து வந்து சுயமரியாதையுடன் வாழ்பவள்!


இப்படிச் சென்று கொண்டிருக்கும் வாழ்வில் ஆதிரங்கராஜின் சொத்துக்காக சண்டையும் சச்சரவுமாய் உருவாகவே மருமகள் ரஞ்சனியின் பேராசையின் காரணமாக மீனாட்சி வீட்டை விட்டு வெளியேறி அனாதை ஆசிரமத்திற்கு செல்கிறாள்! அங்கே அவளுக்கான புது உலகு உருவாகிறது! சமையல்காரியாக சேவை செய்து கொண்டிருந்தவளுக்கு புதியதோர் அவதாரம் எடுக்க வாய்ப்பும் கிடைக்கிறது!


இங்கே பேராசை கொண்ட மருமகள் ரஞ்சனியின் செயல்கள் நாளுக்கு நாள் மோசமாக போய்க் கொண்டிருக்க, தன் மாமனாரான ஆதிரங்கராஜின் சொத்துக்கான தேடலில் அவளுக்கு கிடைத்தது என்ன? மீனாட்சியின் சுயமரியாதை வாழ்வில் அவளின் அடுத்த நிலை தான் என்ன? என்ற கேள்விகளுக்கான பதிலாக மேற்கொண்டு கதை நகர்கிறது!


ஒரு மெகா சீரியலை பார்த்த உணர்வு! பணம் பாதாளம் வரை பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்! எத்தனை தேடல்! எத்தனை முயற்சி! எத்தனை வன்மம்! எங்கள் வீட்டில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நாங்கள் டிவியே வைத்துக் கொள்ளவில்லை! இணையத்திலும் சீரியல் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று சொல்வேன்!


********

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

1 ஆகஸ்ட் 2026






10 கருத்துகள்:

  1. முகநூலிலும் வாசித்தேன்.  அமைதிச்சாரலின் கமெண்ட்டும் அங்கே கண்டேன்!!  அப்படி சேர்த்து வைத்த புத்தகங்களை எடைக்குப் போட மிகவும் கஷ்டமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு எடைக்குப் போடணும்? பிறருக்கு வேணுமா வந்து வாங்கிக்கொள்ளுங்கள் எனச் சொல்லிக் கொடுத்துவிடலாமே

      நீக்கு
    2. டெல்லியில் எங்கள் வீட்டு அலமாரியில் இருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை நண்பர்களுக்கு தான் என்னவர் தந்தார். உண்மை தான் நான் சேர்த்து வைத்திருந்த மாத இதழ்கள் பெட்டியில் நிறைந்திருந்தன. அவற்றை இங்கே கொண்டு வர இயலவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார் & நெல்லை சார்.

      நீக்கு
  2. மனைவி குழந்தைகளுடன் தனியே வந்து விடுகிறாள்.  அப்;புறம் எப்படி மருமகள் மாமனாரின் சொத்துக்கு ஆசைப்படுகிறாள்?  கேட்டால் வாசித்துப் பாருங்கள் என்பீர்கள்!!  சரிதானே! 

    ஆனால் ஓரளவு கதையை யூகிக்க முடிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. உண்மை தான். எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால் எப்படி சார்..:) எந்த வகையில் உரிமை கோரினாள் என்பது கதையின் முக்கிய சாவி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. இ.சௌ வின் அமானுஷ்ய, மர்ம நாவல்களை விரும்பி வாசிப்பேன். இதனை வாசித்ததில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பெரும்பாலும் அவரின் மர்ம நாவல்களைத் தான் வாசித்திருக்கிறேன். என் பெயர் ரங்கநாயகி, கிருஷ்ணதாசி, இப்படி வாசித்திருந்தாலும் இது வித்தியாசமான கதை.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. கதை அறிமுகம் கண்டோம்.

    "பணம் பாதாளம் பாயும்" "எத்தனை வன்மம் "என்று கூறியுள்ளீர்கள் இக் காலம் எங்கும் இப்படித்தான் உள்ளதுவோ? என நினைக்கத் தோன்றுகிறது.

    " வாரண மெளனி" என்ற நாவல் படிக்கிறேன். ஆபிரிக்கக் காட்டில் யானைக்கூட்டத்துடனான வாழ்க்கை பற்றி பேசுகிறது.
    லாரன்ஸ் ஆண்டனி கிரகம் ஸ்பென்ஸ் ஆங்கிலத்தில் எழுதியது. தமிழில் மான்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாசிப்பு அருமை. நான் சமீபத்தில் வாசித்த எழுத்தாளர் ஜெயமோகனின் யானை டாக்டரை நினைவூட்டுகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  5. கதை விமர்சனம் நன்று.
    நான் இவர் கதை ராஜரகசியம் படித்தேன், படித்தேன் என்று சொல்ல்க்கூடாது கேட்டேன்.
    விகடன் இதழில் ஆடியோ புத்தகமாய் படித்தேன் ராணி மங்கம்மாள் காலமும் இதில் வரும். பூர்வஜென்ம கதை. நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....