சனி, 8 ஆகஸ்ட், 2026

பத்துமலை பந்தம் - காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம்





நெடுநாட்களுக்கு பின் நான் வாசித்த சுவாரஸ்யமான ஆன்மீகத் த்ரில்லர் நாவல் இது! ஆசிரியர் நம்ம காலச்சக்கரம் நரசிம்மா சார்! புஸ்தகாவின் வெளியீடாக கோவை கொடிஷியாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியிலிருந்து என்னவரும் மகளும் எனக்காக வாங்கி வந்திருந்தார்கள்! 370 பக்கங்களை கொண்டது இந்த புத்தகம்!


பள்ளங்கிப் பாறை!! இப்படிச் சொன்னால் யாருக்கும் தெரியாது! அதாங்க கொடைக்கானலில் ‘Devil’s kitchen’ என்று சொல்லப்படும் ‘குணா குகை’ இருக்கே, இப்படிச் சொன்னால் எல்லாருக்கும் தெரிந்து விடும்! உண்மையில் அந்தப் பகுதியை ‘போகர் பாசறை' என்று தான் அழைக்க வேண்டும்!  சித்தர் பெருமக்கள் நடமாடும் பகுதி இது!


போகர் உருவாக்கிய மூன்று நவபாஷாண சிலைகளில் முதலாவது பழனியிலும், இரண்டாவது பள்ளங்கியிலும் மூன்றாவது மலேஷியாவிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது! பள்ளங்கியில் உள்ள நவபாஷாண சிலையை வழிவழியாக ஆராதித்து வரும் குடும்பத்தினரில் மூத்தவராக நல்லமுத்து தாத்தா!


அவரின் மகன் வழி மகள் வழி என எல்லோரும் பேரும் புகழுமாக கொடிகட்டி பறக்கின்றனர்! இதில் உண்மையில் வானில் சிறகடித்து பறப்பவளாக Air hostessஆக ஹீரோயின் மயூரி! நல்லமுத்து தாத்தாவின் மகன் வழியில் வந்த பிரியமான பேத்தியாக மயூரி வளைய வருகிறாள்! இந்தக் கதையின் ஹீரோவும் விமானி தான்! அவன் பெயர் குகன்மணி!


முன்பொரு காலத்தில் வைத்தியமும், கல்வியும் ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்கும் தூரத்தில் இலவசமாக இருந்ததாம்! இப்போது அந்த இரண்டுமே பெரும் வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றது! அப்படித்தான் இலையில் வைத்து தந்த மூலிகை மருந்துகள் பிளாஸ்டிக் டப்பாவிற்கு மாறியதில் வியாபாரம் புகுந்தது! ஆசை புகுந்தது! வன்மம் புகுந்தது! ஒரு கட்டத்தில் பாஷாணத்தின் வீர்யமும் குறைந்தது! 


முருக பக்தியில் சிறந்தவளான ஹீரோயின் மயூரிக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம் அங்கே குகன்மணி அவளை காத்து ரட்சிக்கிறான்! அவன் எப்போதுமே மயூரிக்கு மர்மமாகவேத் தெரிகிறான்! ஒரு சந்தர்ப்பத்தில் மலேஷியாவில் உள்ள மூன்றாவது நவபாஷாண சிலையையும் அவனுடன் சேர்ந்து தான் தரிசிக்கிறாள்!


காலம் மயூரிக்கு ஏற்படுத்தி தந்த சோதனைகள் என்ன?? இந்த குகன்மணி என்பவன் உண்மையில் யார்? அவன் ஏன் மயூரியைச் சுற்றிச்சுற்றி வருகிறான்? மூன்றாவது நவபாஷாண சிலையை ஏன் தேடிச் செல்ல வேண்டும்? என்று உங்கள் அனைத்து கேள்விகளுக்குமான விடையாக இந்த சுவாரஸ்யமான புத்தகம் இருக்கப் போகிறது! 


நல்லதோர் நூலை படைத்திட்ட திரு காலச்சக்கரம் நரசிம்மா சாருக்கு பாராட்டுகள்! புத்தகத்தில் ஆங்காங்கே கதாப்பாத்திரங்களின் பெயர்கள் மாறியுள்ளது என்பதைத் தவிர குறை என்று எதுவும் இல்லை! 


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

7/8/26


#வாசிப்பனுபவம்

1 கருத்து:

  1. கால சக்கரம் நரசிம்மா என் அபிமான எழுத்தாளர் கிடையாது, ஆனாலும் வாசிக்கலாம் என்று தோன்றுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....