அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
மாலை நேரத்தில் ஒரு உலா
இயற்கையை மட்டும் ரசித்தால் போதுமா!! கொஞ்சம் இறையுணர்வை ஏற்படுத்திக் கொள்ளவும் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும் ஏற்ற இடம் கோவில் தான்! அன்று நாங்கள் திருவரங்கம் கோவிலின் உப கோவிலான காட்டழகிய சிங்கர் கோவிலுக்குத் தான் சென்றிருந்தோம்! திருவரங்கம் ரயில்நிலையம் அருகே நெல்சன் ரோடில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ளது இந்த அழகான கோவில்!
திருவரங்கத்தில் நரசிம்மருக்காக ஏற்படுத்திய கோவில்களாக காட்டழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் என மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது! இதில் ஆற்றழகிய சிங்கர் காவிரிக்கரையிலும், மேட்டழகிய சிங்கர் கோவிலின் தாயார் சன்னிதி அருகேயும், காட்டழகிய சிங்கர் ரயில்நிலையம் அருகேயும் அருள்பாலிக்கின்றனர்!
முன்பொரு சமயம் இங்கே அடர்ந்த காடாக இருந்ததாகவும் அங்கே பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோவில் காட்டழகிய சிங்கப் பெருமாள் என அழைக்கப்படுகிறது! நாங்கள் சென்றிருந்த அந்த மாலைநேரத்தில் கோவில் மிகவும் அமைதியாக காணப்பட்டது! கோவில் நடை சார்த்தப்பட்டிருந்ததால் அதுவரை வெளிப்பிரகாரத்தை வலம் வரத் துவங்கினோம்!
‘ஒரு சமயம் நான் வாராவாரம் கூட இந்தக் கோவிலுக்கு வந்துண்டு இருந்தேன்! அப்புறம் என்னவோ வர்றது நின்னுடுத்து!’
இந்த மரத்துக்கு ரொம்ப வயசு இருக்கும்னு நினைக்கிறேன்! எவ்வளவு அடர்த்தியா இருக்கில்ல?
ம்ம்ம்! புளியம்பழமும் நிறைய இருக்கு!
சின்ன வயசுல உங்க வீட்டு மரத்துல ஏறி பறிச்ச மாதிரி இப்பவும் ஏறி பறிக்கறீங்களா..:)
அது ஒரு டைம்! ஏணியெல்லாம் கூட எங்க வீட்டுல இருக்காது! சைக்கிள் மேல ஏறி அப்படியே கிளைய பிடிச்சு ஏறிப் போய் உலுக்கி விடுவேன்! கீழே எங்கம்மா அக்கா எல்லாம் நின்னு எடுப்பா!
ம்ம்ம்! அன்னிக்கு அந்த சின்ன வயசுல எதைப் பத்தியும் யோசிச்சிருக்க மாட்டோம்!
சரி! காத்து நல்லா வருது! உள்ள நடை திறக்கிற வரை இந்த மண்டபத்துல உட்கார்ந்துண்டு இருப்போம்!
இதோ எத்தனை பூனைக்குட்டிங்க கோவில்ல இருக்கில்ல!! சின்னதும் பெரிசுமா ஒரு 15 குட்டிங்களாவது இருக்கும்!
நடை திறந்திட்டாங்கன்னு நினைக்கிறேன்! உள்ள போவோம் வா!
ஒவ்வொருத்தருக்கும் கோவில் வர்றதுக்கு ஏதோ ஒரு காரணம்னா இந்த பையனுக்கு பாரேன்! யாரை பத்தியும் கவலையில்ல! அவன்பாட்டுக்கு பூனையோட விளையாடிண்டு இருக்கான்!
நாங்களும் அங்கே நின்று கொண்டிருந்த வரிசையில் சேர்ந்து மெல்ல மெல்ல முன்னேறி கருவறையில் காட்சித் தரும் ‘லட்சுமி நரசிம்மரை’ மனதார பிரார்த்தித்து உருகி நின்றோம்! நல்லதோர் தரிசனம்! சன்னிதியை விட்டு வெளியே வந்து உள்பிரகாரத்தை வலம் வந்தால் அங்கே ஒரு வரிசை! தொன்னையில் சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக கிடைத்தது!
‘இந்த மாதிரி வரிசையில் நின்னு பிரசாதம் வாங்கிண்டு ரொம்ப நாளாச்சு!’ ஒரு தொன்னையில் உள்ள பிரசாதத்தை இருவருமாக பங்கிட்டுக் கொண்டோம்! அந்த நேரத்தில் ருசிக்க மிகவும் இனிமையாகவே இருந்தது! சாப்பிட்டு முடிச்சா வாங்கோ! லெமன் சாதம் இருக்கு! என்று மடப்பள்ளியில் இருந்து குரல் வந்தது! இருவரும் புன்னகைத்துக் கொண்டு அருகே இருந்த குழாயில் கைகளை சுத்தம் செய்து கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம்!
வழியில் மண்பாத்திர கடை ஒன்று தென்படவும் அங்கே வாணலி ஒன்றும் ரசம் வைப்பதற்காக பாத்திரம் ஒன்றும் வாங்கிக் கொண்டேன்! நம்ம வீட்டில் மண்பாத்திர சமையல் தானே! அதில் பல வருடங்களாக உபயோகித்து வந்த வாணலி விரிசல் விட்டு கசியத் துவங்கியதால் அப்புறப்படுத்தி விட்டேன்! இனி! புதியதை பழக்கணும்!
**********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
21ஆகஸ்ட் 2026


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....