வியாழன், 20 ஆகஸ்ட், 2026

ஆடிப்பூரம் cum ஆடி கடைசி வெள்ளி - ஆலய தரிசனம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


**********


விஜி வெங்கடேஷ் அவர்கள் தனது தோழிகளுடன் சென்று பெற்ற ஆலய தரிசனம் குறித்த அனுபவங்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.

******

*ஆடிப்பூரம் cum ஆடி கடைசி வெள்ளி அன்னபூர்ணேஸ்வரி & காமாக்ஷி அம்மன் தரிசனம் 14.8.2026*




கடைசி ஆடி வெள்ளியன்று காலை வீட்டில் பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நைவேத்யம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. சாயந்திரம் அருகிலுள்ளமாகாளியம்மன் கோவிலுக்குப் போய் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம் என்று நானும், தோழிகள் உஷா, லக்ஷ்மி ஆகியோர் முடிவெடுத்தோம்.


பிறகுதான் ஞாபகம் வந்தது இந்தக் கோவிலில் (மேலும் இதுபோல் சுற்றியுள்ள சிறு அம்மன் கோவில்களில்) மாலை 7.30 மணி வரை அம்மன் சன்னதிக்கு திரை போட்டு வைத்து கட்டளைதாரர்கள் (sponsors) வரும்வரை காத்திருந்து பின்னர்தான் அபிஷேகம் அர்ச்சனை மற்றும் பொதுமக்களுக்கு தரிசனம் & பிரசாத விநியோகம் செய்கின்றனர்.


இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஒரு கோவிலில் அம்மனுக்காக நாம் காத்திருக்கலாம், அவளை எப்படி காத்திருக்கச் செய்கிறார்கள்.. இதனால் சாமானிய பொது மக்களுக்கும் தரிசனம் கிடைக்காமல் காத்திருக்கவும் முடியாமல் பலர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது, அவளை தரிசிக்காமலேயே.. நிற்க..


ஆகவே நாங்கள் RS புரத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கே போகலாம் என்று 5.30 க்கு முடிவெடுத்து அதன்பின்னர் 

ஒரு auto கிடைத்து மூவரும் பயணப்பட்டோம்..


முதலில் அன்னபூர்ணேஸ்வரி கோவில் சென்றோம். அங்கு நுழைந்தவுடன் மூட்டைகளில் அரிசி வைத்துக்கொண்டு ஒரே அளவில் எவர்சில்வர் அடுக்குகளில் பாதி(க்கும் கீழே) அரிசியை நிரப்பி Rs.10 வாங்கிக் கொண்டு நம்மிடம் தருகின்றனர். நாம் அதை சற்று தூரத்திலுள்ள ஒரு திறந்திருக்கும் சாக்குப்பையில் கொட்டிவிட்டு (நம்மிடமிருந்து அரிசிப் பாத்திரத்தை வாங்கி அதில் கொட்ட அங்கு ஒருவர் நிற்கிறார்) பாத்திரத்தைத் திருப்பித் தரவேண்டும். அந்த அரிசியை அங்கு கோவிலோடு இணைந்திருக்கும் வேத பாடசாலைக்கு உபயோகித்துக் கொள்கிறார்களாம். நாமும் ஏதோ தர்மம் செய்தோம் எனும் திருப்தி...


அன்னபூர்ணேஸ்வரி சன்னதி முன் நின்றதும் ஆடிப்பூரம் என்பதால் அவளுக்குச் செய்திருந்த வளையல் அலங்காரம், அவள் அழகில் சொக்கிப் போய் நின்று விட்டோம். அத்தனை அழகு.. சன்னதிக்கு வெளியில் விநாயகருகக்கும் ஆதிசங்கரருக்கும் இரு புறமும் சிறு சன்னதி. பின் சுற்றி வந்தால் பிரகாரம் முழுவதும் ஐம்பொன் சிற்பங்களாக பல தெய்வ வடிவங்கள் கண்ணாடி கதவு போடப்பட்டு தங்கம் போல் ஜொலித்துக்கொண்டு வீற்றிருக்கின்றனர்.


அடுத்து யோக நரசிம்மர் சன்னதி..அங்கும் அவர் முன்னிருந்த ஆண்டாள் சிலைக்கு வளையல்கள்.. சன்னதிக்கு வெளியே சிறிய ஆஞ்சநேயர் சன்னதி. அங்கு சனிப் பரிகாரம் செய்ய எண்ணெய் வாங்கிக் கொடுக்கலாம்.

அவரை தரிசித்துவிட்டுத் திரும்பினால் அருகிலிருந்த வேத பாடசாலையின் ஹாலில் வேதம் படிக்கும் சிறுவர்கள் கணீரென்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தனர்.. அன்னபூரணியின் அழகுத் தோற்றமும் யோக நரசிம்மரின் உன்னத கோலமும் காதில் மந்திர ஒலியும் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன...


அடுத்து அன்னபூர்ணேஸ்வரி கோவிலை ஒட்டியே அமைந்திருந்த காமாக்ஷி அம்மன் கோவிலுக்குள் சென்றோம். வாசலில் பார்த்த செருப்பு குவியலை வைத்து கூட்டம் எத்தனை என்பதை அளவிட முடிந்தது. ஆகவே அன்னபூரணி கோவில் வாசலிலேயே எங்கள் பாதரக்ஷைகளை விட்டுவிட்டு காமாக்ஷி கோவிலுக்குள் நுழைந்தோம். நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது அமர்ந்த நிலையில் இருக்கும் மிகப் பெரிய மஹா பெரியவா படம். அதன் முன்னர் விளக்கேற்றி யிருக்கிறார்கள். அதன் பீடத்தில் தோடகாஷ்டகம் அச்சிடப் பட்டிருக்கிறது.


அந்தக் கோவிலின் விசேஷம், திரும்பிய பக்கமெல்லாம் நம்மை நோக்கி புன்னகைத்தவாறு அருள் செய்தவாறு இருக்கும் பிரம்மாண்டமான life size மஹா பெரியவா படங்கள் (காரணம், இக்கோவில் காஞ்சி காமகோடி பீட மட சமஸ்தானம் சார்ந்தது). 


இடது பக்கம் திரும்பினால் முதலில் விநாயகர் சன்னதி. வெள்ளிக்காப்போடு தக தகவென மின்னியது அவர் மூர்த்தி.அடுத்தது ஐயப்பன் சன்னதி, அடுத்தது குருவாயூரப்பன், அடுத்தது சிவன் லிங்க ரூபமாக. அடுத்தது முருகன் சன்னதி. சுற்றி வந்தால் பின்புறம் தத்தாத்ரேயர் சன்னதி, பாண்டுரங்கன் சன்னதி.அனைத்தையும் தரிசித்துவிட்டு 

நாம் வந்தது காமாக்ஷி சன்னதிக்கு.

பாம்புபோல் வளைந்து வளைந்து 4,5 வரிசைகளில் ஜனங்கள். கையில் மலர்கள் வாயில் அவள் ஸ்தோத்திரத்தோடு.


நாங்கள் முதலில் வரிசையில் நிற்காமல் கொடிமரம் பின்னால் நின்று நேரடியாக அவளை தரிசித்தோம். அப்பப்பா... வித்யாசமாக எல்லா அம்மன் கோவில்களிலும் செய்யப்படும் முழு உருவ வளையல் அலங்காரமில்லாமல் முகம் தவிர மற்ற இடம் முழுவதும் பலவிதமான பூக்களால் அவள் உருவம் மூடப்பட்டிருந்தது. அதுவும் கழுத்துப் பகுதியிலிருந்து பாதம் வரை 5,6 படிகள் போல் ஜோடனை செய்யப்பட்டு அது முழுவதும் மலர்கள் மலர்கள் மலர்கள். அதன் நடு நடுவே கண்ணாடி வளையல்கள். அதுபோல் அலங்காரத்தில் நான் இதுவரை பார்த்ததில்லை அவளை. அம்பாளின் மேற்புறம், இரண்டு புறம் எல்லா இடத்திலும் வளையல்கள் தொங்கின...

எத்தனை நிறம் தினுசுகளில் உண்டோ அத்தனையிலும் வளையல்கள்... அம்பாளைப் பார்க்கப் பார்க்க மெய் சிலிர்த்தது.கூப்பிய கை கூப்பிய படி...🙏🏻🙏🏻ஒன்றுமே வேண்டிக் கொள்ளத் தோன்றவில்லை.


பின்னர் வரிசையில் நின்று அவளை அருகில் சென்று தரிசித்தோம்.நீளமாக இருந்தாலும் வரிசை வேகமாக நகர்ந்தது. கண்ணார அவளைக் கண்டுவிட்டு பிரதிக்ஷணம் செய்து கொண்டு வரும்போது அங்கங்கு சிலர் கையில் மஞ்சள் கயிறு, மஞ்சள் குங்குமம், கண்ணாடி வளையல்களுடன் தரிசனம் செய்து விட்டு வரும் சுமங்கலிகளுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தனர். சுற்றி வந்தால் காமாக்ஷி சன்னதியிலேயே வெளிப்புறம் விஷ்ணு துர்கை.அவளுக்கும் கண்ணாடி வளை மாலை.அவள் முன் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தில் தாழம்பூ குங்குமம்.. எடுத்து இட்டுக் கொண்ட பின்பும் வெகு நேரம் விரல்களில் அந்த வாசம்...


அருகில் ராமர் சன்னதி. அதன் அருகில் கால பைரவர் சன்னதி. அதனருகே நவக்கிரகம்.. அதை சுற்றி முடிந்தவுடன் ஒரு பெரிய ஹால் போன்ற இடத்தில் மிகப் பெரிய ஆதிசங்கரர் சிலை. மஹாபெரியவரின் அழகான வெண்கலச் சிலை. அவர் அமர்ந்த பல்லக்கு... அங்கு அனுஷ பூஜை வெகு விமர்சையாக நடக்குமாம்.


தரிசித்துவிட்டு நடந்தால் அருகிலேயே பெரிய மேடை.அதில் ஒரேமாதிரி உடை அணிந்து 10,15 பெண்கள் வரிசையாக அமர்ந்து கையில் ஜால்ராவோடு மைக்கில் அம்மன் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தனர்.

அந்த மேடை முன்பு ஒரு சிறிய ஊஞ்சல் போடப்பட்டு அதில் ஒரு அம்பாள் சிலை. அவளுக்கு அலங்காரம், வளையல்கள் மாலை..சிலர் அந்த மேடை முன் போடப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள் (கேட்டதை விட பாடியவர்களின் ஒன்றுபோல்(uniform) அணிந்திருந்த புடவை, நகை அலங்காரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்) பலர் வெறுமனே பார்த்துவிட்டு திரும்பி அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரே இருந்த 2 ஆள் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த மெகா நிலைக்கண்ணாடியைப் பார்த்து குங்குமத்தை சரி செய்து கொண்டு நடையைக் கட்டினர். நாங்கள் கொடிமரம் பின்னாலிருந்து அவளை மீண்டும் மீண்டும் தரிசித்துவிட்டு மனமில்லாமல் கிளம்பினோம். 


எங்களுக்கு அந்தக் கோவிலில் அமர்ந்து அம்பாள் முன்னால் லலிதா சஹஸ்ரநாமம் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அந்த மேடையிலிருந்து மைக் வழியாக வந்த பெரும் இ(ஓ)சையில் அருகிருந்து பேசுவதே கேட்கவில்லை.


இதுபோல் சிறப்பான நாட்களில் கச்சேரிகளை கோவிலுக்குள் வைக்காமல் வெளியே வைத்துக்கொண்டால் கச்சேரி கேட்பவர்கள் அங்கு அமர்ந்து கேட்கலாம். கோவிலுக்குள் பக்தர்கள் அனைவரும் நிம்மதியாக அவள் சுலோகங்களைச் சொல்லிக் கொண்டு மனதார தொழலாம்...


வெளியே வந்த பின் ஒரு காபி குடிக்கலாம் என்று எதிர் புறமிருந்த ஒரு சிறு கடைக்குப் போனோம். நானும் லக்ஷ்மியும் காபி, உஷாக்கு டீ சொன்னோம்.

கடித்துக் கொள்ள சூடான 2 வாழைக்காய் பஜ்ஜி, 2 உருளை போண்டாவும் order செய்து அருகே இருந்த மரத்தடி சிமெண்ட் பெஞ்சில் ஆற அமர்ந்து சுடச் சுட வந்தவற்றை சாப்பிட்டு, குடித்துவிட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம். அன்று கோவில் தரிசனம், காபி பஜ்ஜி போண்டாவுடன் Devi's (நாங்க😊) day out!


ஆட்டோவில் வரும்போது தரிசித்த அன்னபூரணி, காமாக்ஷி பற்றியும், லக்ஷ்மி அவர் பார்த்த மதுரை மீனாக்ஷி பற்றியும் பேசிக் கொண்டு வந்தோம். Auto driver ஆச்சர்யத்துடன், எங்க வீட்டு பெண்டுகளும் கோவிலுக்குப் போவாங்க, ஆனா வீட்டுக்கு வந்தப்புறம் வேற அரட்டை தான் அடிப்பாங்க. ஆனா நீங்க அதைப் பத்தியே பேசறீங்களே...

என்றார். என்ன செய்வது! அன்னபூரணி, காமாக்ஷியின் உருவம் கண்களை, மனதை விட்டு வெகு நேரம் அகலவில்லையே...🙏🏻


(கோவிலில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் இணையத்திலிருந்து எடுத்து இணைத்திருக்கிறேன்)


விஜி வெங்கடேஷ்.

15.8.2026.

*******

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

20 ஆகஸ்ட் 2026

5 கருத்துகள்:

  1. உங்கள் ஆதங்கம் நியாயமானது.  அம்மனை காக்க வைத்திருப்பதும் மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும் தவறு.  கோவில்களும் பிஸினஸ் கூடங்களாகும்போது யார்தான் என்னதான் செய்ய முடியும்?  யார் கேட்பது..

    பதிலளிநீக்கு
  2. எனக்கு நிறைய சந்தேகங்கள் வரும்.  அந்த அரிசி வேத பாடசாலைக்குப் போகுமா, அல்லது மறுபடி புறப்பட்ட இடத்துக்கே (கொஞ்சமாவது) வந்து விடுமா என்று தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சந்தேகம் எனக்கும் வந்து உடனேயே அதை மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டேன்..அன்னபூர்ணேஸ்வரி பார்த்துக்கொள்ளட்டும் என்று...
      விஜி.

      நீக்கு
  3. கா கா கோடி பீட சமஸ்தானம் என்று வருமா?  கோவில் விவரங்கள் நாங்களே கோவிலைப் பார்த்தது போல இருந்தன.   ஆனாலும் என் கண்களில் மனதில் சட்டென இடம்பிடிப்பது பஜ்ஜிதான்!  என்னவோ போங்க!!

    பதிலளிநீக்கு
  4. அது தெரிஞ்சுதான அதைப் பத்தி எழுதினேன்...
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....