திங்கள், 31 ஆகஸ்ட், 2026

ரிலாக்ஸான ஒரு ஞாயிறு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 





ஞாயிறு என்றாலே தாமதமாக எழுவதும், அவசர கதியில் இல்லாமல் அன்று நிதானமாக சமைத்து சாப்பிடுவது என்பது தானே உலக வழக்கம்! நாங்களும் அன்று அந்த வழமையை மாற்றாமல் பின்பற்றினோம்! மாலைநேரம் தேநீர் பருகிய பின் எங்காவது சென்று வரலாம் எனக் கிளம்பி விட்டோம்! எங்கு செல்வது என எங்களிடம் எந்த திட்டமிடலும் இல்லை!


மினிமலிசம் கொள்கையை பின்பற்றும் வாழ்வில் வெட்டியாக ஷாப்பிங் செய்வதில் எங்களுக்கு என்றுமே விருப்பம் இருந்ததில்லை என்பதால், கொஞ்சம் தூரமா ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வருவோமே என்றேன்! இந்த கோவிலா! அந்த கோவிலா! என்ற ஆலோசனையில் இறங்கினோம்….!



சரி! நம்ம டூவீலர் எங்கு போகிறதோ அங்கே போவோம் வா! என்றார் என்னவர்..:) காவேரி பாலம், மலைக்கோட்டை, தில்லை நகர், தென்னூர் என பயணித்து அன்று நாங்கள் சென்று இறங்கிய இடம் எதுவென்றால் உக்கிர மாகாளியம்மன் கோவில்! 


திருச்சியின் அண்ணாநகர் பகுதியில் உள்ள இந்தக் கோவிலை ஆட்டோவில் ஜங்ஷனுக்கு போகும் பாதை என்பதால் வெளியிலிருந்து தான் பார்த்திருக்கிறேனேத் தவிர இதுவரை உள்ளே சென்றதில்லை! சோழர்களால் வழிபாடு செய்யப்பட்ட இந்த அம்பாள் இங்கே மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் எட்டுக்கரங்களுடன் உக்கிர காளியம்மனாக அழகுற வீற்றிருக்கிறாள்!



விசாலமான கோவிலாக காட்சித் தரும் இந்தக் கோவிலின் ஸ்தல விருட்சம் வன்னிமரம்! இங்கே உற்சவ அம்பாள், விநாயகர், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களும், சப்தகன்னியர், கருப்பண்ணசாமி, மதுரை வீரன், சாம்பக மூர்த்தி போன்ற காவல் தெய்வங்களும் காட்சித் தருகின்றனர்! நவக்கிரகங்கள் தங்கள் இணையுடனும், வாகனங்களோடும் அழகுற காட்சித் தருகின்றனர்!



ஒவ்வொரு சன்னிதியிலும் நின்று நிதானித்து தரிசித்து பிரகாரத்தை வலம் வந்தோம்! அங்கே ஒரு மரம் முழுவதும் பிரார்த்தனைக்காக கட்டப்பட்ட தொட்டில்களும், ஜாதகங்களும், துண்டு சீட்டுகளுமாக காட்சி தந்தது! அந்த மரத்தின் கிளைகள் வில்லாக வளைந்திருக்க, இலைகளே இல்லாத அந்த மரத்தில் தான் எத்தனை பேரின் வேண்டுதல்கள்!


தங்களின் வாழ்விற்கு ஒரு அர்த்தம் சொல்ல குழந்தை வேண்டியும், வாழ்க்கை நேராக வேண்டியும் எண்ணிலடங்கா பிரார்த்தனைகள்! அதை பார்த்த போது மனதை என்னவோ செய்துவிட்டது! ஒருநிமிடம் அங்கே நின்று மனமுருக பிரார்த்தித்துக் கொண்டேன்! அனைவரின் வேண்டுதல்களையும் அம்பாள் கூடிய விரைவில் நிறைவேற்றி வைக்க வேண்டும் என!


கோவிலை விட்டு வெளியே வந்ததும் நாங்கள் அடுத்து செல்லப் போகும் இடத்திற்காக தொடர்ந்து பயணிக்கத் துவங்கினோம்! சில நாட்களுக்கு முன்னேயும் கூட புகழ்பெற்ற அந்தக் கோவிலுக்கு சென்றிருந்தோம்! ஆனால் அவசரகதியில், இருளில் என்பதால் இம்முறை நிதானமாக தரிசிக்க எண்ணி சென்று கொண்டிருந்தோம்! எங்கே?? 


அடுத்த பதிவில் சொல்கிறேன்!

**********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

31/08/2026


பட உதவி - கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....