எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, July 11, 2017

ஸ்ரீகூர்மம் – முதலில் சிங்கம் இரண்டாவதாக ஆமை!அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 4

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


படம்: ஸ்ரீகூர்மம் நோக்கி ஒரு பயணம்


படம்: ஸ்ரீகூர்மம் - கோவிலுக்குச் செல்லும் பாதையில் நுழைவாயில்...

சிம்ஹாசலத்தில் திவ்ய தரிசனம் பெற்ற பிறகு எங்களுக்கு வழிகாட்டியாக வந்த நண்பர் பாதி வழியில் இறங்கிக் கொண்டார். நாங்கள் தொடர்ந்து பயணித்தோம். அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல வேறொரு நபரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரை வழியிலேயே அழைத்துக் கொள்ள வேண்டும் என ஓட்டுனருக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் என்பதால் நேராக அந்த இடத்திற்கு வாகனத்தினைச் செலுத்தினார் ஓட்டுனர் – இளைஞராக இருந்தாலும் சிறப்பாக வாகனத்தினைச் செலுத்திக் கொண்டு வந்தார் – பேச்சே கிடையாது! வழியில் ஒரு உணவகத்தில் அந்த நபர் தனது இரு சக்கர வாகனத்துடன் காத்திருக்க, வண்டியை அந்த உணவகத்தில் விட்டுவிட்டு, மதியம் ஆனதால் அதே உணவகத்தில் அனைவரும் மதிய உணவினை முடித்துக் கொண்டோம். நல்ல ஆந்திரா காரத்தோடு தாலி மீல்ஸ்!


படம்: ஸ்ரீகூர்மம் கோவில்.... 
வெளிப்புறத் தோற்றம்


 படம்: ஸ்ரீகூர்மம் - கோபுரமும் கொடிமரமும்....

உணவு உண்ட பிறகு அங்கிருந்து அவரையும் எங்கள் வாகனத்தில் அழைத்துக் கொண்டு புறப்பட்டோம். அப்படி நாங்கள் சென்ற இடம் – ஸ்ரீகூர்மம் என அழைக்கப்படும் ஒரு ஊருக்கு! விஷ்ணுபகவானின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரமான கூர்மாவதாரத்தில் விஷ்ணுபகவானை தரிசிக்க இருக்கும் ஒரே கோவில் இங்கே தான் அமைந்திருக்கிறது. மிகவும் பழமையான கோவில் – பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னராகவே இக்கோவில் இருந்திருக்கிறது என்றும் பலமுறை புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோவில் சுமார் 700 வருடம் பழையது என்றும், கோபுரம் மட்டும் இரண்டாயிரம் வருடம் பழமையானது என்றும் தகவல் பதாகைகள் தெரிவிக்கின்றன.

எப்படிச் செல்வது?


படம்: ஸ்ரீகூர்மம் கோவில் சிறப்பைச் சொல்லும் பதாகை....

விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த ஸ்ரீகூர்மம் என்ற கோவில் நகரம். இரண்டரை மணி நேரத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து இங்கே வந்து விடலாம். விசாகப்பட்டினத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஸ்ரீகாகுளம் வரை பேருந்துகள் உண்டு. ஸ்ரீகாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீகூர்மம் வரை செல்லும் நகரப் பேருந்துகள் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இருக்கிறது. விமானம் மூலமாகவோ, ரயிலிலோ விசாகப்பட்டினம் வந்து ஸ்ரீகூர்மத்திற்கு இப்படி பேருந்திலோ, தனியார் வாகனத்திலோ வரலாம்.

கோவில் பற்றிய செய்திகளும் கதைகளும்:

படம்: ஸ்ரீகூர்மம் - கோவிலில் வளர்க்கப்படும் ஆமைகள்...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!

பல புராணங்களிலிலும் இக்கோவில் பற்றிய குறிப்புகளைக் காணமுடியும் என்பதும், ராமர் காலத்திற்கு முன்பே இக்கோவில் அமைந்திருக்கிறது என்பதும் இங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். இத்தலத்தில் விஷ்ணுபகவானை ஸ்ரீகூர்மநாதர் என்ற பெயரிலும், லக்ஷ்மி தேவியை, ஸ்ரீகூர்மநாயகி என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.  கதைகள் இல்லாமல் எந்த பழைய கோவில்களும் இல்லையே…. இங்கேயும் கதைகள் உண்டு. 


படம்: ஸ்ரீகூர்மம் - ஸ்வேத மஹாராஜா, பிரம்மா மற்றும் ரிஷிகள் - ஓவியமாக....


படம்: ஸ்ரீகூர்மம் - ஸ்வேத புஷ்கரணி


படம்: ஸ்ரீகூர்மம் - புஷ்கரணி மண்டபத்தின் தூணில் ஒரு சிற்பம்.


படம்: ஸ்ரீகூர்மம் - புஷ்கரணி அருகேயுள்ள மண்டபம்...

கிருத யுகத்தில், ஸ்வேத மஹாராஜா என்ற அரசர் விஷ்ணுபகவானை நோக்கி, பல வருடங்கள் கடும் தவம் புரிய, பக்தனின் பக்தியை மெச்சிய விஷ்ணுபகவான் கூர்ம அவரதார உருவத்துடன் – அதாவது ஆமைவடிவத்துடன் ஸ்வயம்புவாக இங்கே எழுந்தருளினார். அவரின் அன்பில் திளைத்த மஹாராஜா இங்கே அதே வடிவில் கோவில் அமைக்க,  படைக்கும் கடவுளான பிரம்மாவே இங்கே ஸ்வயம்பு மூர்த்தியான ஸ்ரீகூர்மநாதர் இருக்கும் கோவிலுக்கு பூஜைகள் செய்விக்க, மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்திலிருந்து உருவான ஸ்வேத புஷ்கரணியிலிருந்து கருட வாகனத்தில் வரத முத்திரையோடு மஹாலக்ஷ்மி ஸ்ரீகூர்மநாயகியாக வெளியே வந்து இங்கே கோவில் கொண்டாராம்.

படம்: ஸ்ரீகூர்மம் - தூண்களில் சிற்ப வேலைகள்....


மற்ற கோவில்கள் போல இல்லாது இங்கே ஸ்ரீகூர்மநாதர் மேற்கு நோக்கி இருப்பதால் இங்கே இரண்டு த்வஜஸ்தம்பங்கள் – அதாவது கொடிமரங்கள்! கிழக்கில் ஒன்றும் மேற்கில் ஒன்றுமாய் இரண்டு கொடிமரங்கள்! இங்கே இருக்கும் ஒரு மண்டபத்திற்கு 108 தூண்கள் – ஒவ்வொரு தூணின் வடிவமும் வேறு, வேறு – ஒரு தூண் கூட மற்ற தூணைப் போல இருக்காது என்பது சிறப்பு. புராண காட்சிகள் பலவும் இங்கே ஓவியங்களாக வடித்திருக்கிறார்கள்.  சிம்ஹாசலம் போல இல்லாமல் இங்கே கருவறை தவிர மற்ற இடங்களில் படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள் என்பதால் நிறைய படங்கள் எடுத்துக் கொண்டேன்.

படம்: ஸ்ரீகூர்மம் - ஓவியங்களில் ஒன்று.... 
[மற்ற ஓவியங்கள் வரும் ஞாயிறில் தனிப்பதிவாக!]

ஸ்ரீகூர்மம் வாரணாசியைப் போலவே ஒரு மோக்ஷஸ்தலமாகவும் அறியப்படுகிறது. எனவே வாரணாசியைப் போலவே இங்கே இருக்கும் ஸ்வேத புஷ்கரிணியில் பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் செய்கிறார்கள்.  பலரின் பாவங்களைப் போக்கும் கங்கையே, வருடத்திற்கு ஒரு முறை இங்கே வந்து, ஸ்வேத புஷ்கரிணியில் குளித்து, பக்தர்கள் தன்னிடம் விட்ட பாபங்களை எல்லாம் போக்கிக் கொள்வதாக நம்பிக்கை! அத்தனை சிறப்பு பெற்ற இந்த ஸ்வேத புஷ்கரணியில் இப்போதும் தண்ணீர் இருக்கிறது என்பது சிறப்பு! ஸ்வேத புஷ்கரணியில் குளித்து கோவிலுக்குச் செல்லும் பக்தர்களைப் பார்க்க முடிந்தது. 


படம்: ஸ்ரீகூர்மம் - வாரணாசி செல்லும் சுரங்கப் பாதை....
படத்தினை பெரிது செய்து மேலே ஆங்கிலத்தில் எழுதி இருப்பதைப் படியுங்கள்! தெலுங்கு தெரிந்தால் தெலுங்கிலும் படிக்கலாம்!

ஸ்ரீகூர்மம் கோவிலில் இருந்து ஒரு சுரங்கப்பாதை வாரணாசி வரை அமைந்திருக்கிறது என்றும் அதன் வழியே பல சித்தபுருஷர்கள் முற்காலத்தில் வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். தற்போது அந்த சுரங்கப்பாதையில் பல உயிரினங்களின் தொல்லைகள் இருப்பதால் கதவு போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள் என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். நம்ப முடிகிறதோ, இல்லையோ, அப்படி பூட்டு போட்டு வைத்திருந்த சுரங்கப்பாதை கதவுகளையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு தான் வெளியே வந்தேன்! கோவில் சுற்றுப்பிரகார பாதைகளைத் தாங்கிக் கொண்டு இருக்கும் சிற்பங்களாக யானை போன்றவையும் அழகாய் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.  இங்கே இருக்கும் சிற்பங்கள் வியக்க வைக்கின்றன.


படம்: ஸ்ரீகூர்மம் - கோவிலில் வளர்க்கும் ஆமை...
ஹலோ... எச்சூஸ்மி... நீ என்னை கடிப்பியா!


படம்: ஸ்ரீகூர்மம் - கஜ வாகனம்.

இக்கோவிலில் நிறைய ஆமைகளும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆமைகள் இருக்கும் சிறு தோட்டத்தினைச் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்மணி, சர்வ சாதாரணமாக ஆமைகளை தூக்கி வேறு இடத்தில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.  அவரிடம் சிறுபிள்ளை போல, ”ஆமைகள் கடிக்குமா?” எனக் கேட்டுக் கொண்டேன். தொட்டுப் பார்க்க ஆசை இருந்தாலும், கடிக்குமோ என்ற பயத்தில் தோட்டத்திற்குள் செல்லாது, வெளியிலிருந்தே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.  சுற்றுப் பிரஹாரத்தில் இருந்த வாகனங்களின் [தாமிரமோ?] படங்கள், சிற்பங்களின் படங்கள் என நிறைய இருக்கிறது. அனைத்தும் இங்கே பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால் ஏதேனும் ஒரு ஞாயிறில் மற்ற படங்களையும் தனிப்பதிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
படம்: ஸ்ரீகூர்மம் - சில சிற்பங்கள்....
கோவில் நிர்வாகம் பராமரித்தாலும், பக்தர்கள் அவற்றின் மீது குங்குமம் போன்றவற்றை தடவாமல் விட்டாலும் எத்தனை நல்லது!

ஸ்ரீகூர்மம் க்ஷேத்திரத்தில் ஸ்ரீகூர்மநாதரையும், ஸ்ரீகூர்மநாயகியையும் சேவித்து அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 comments:

 1. ஆகா
  கண்ணுக்கினிய காட்சிகள் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. அழகான படங்கள்.. சிற்பிகளின் உழைப்பு பளிச்சிடுகின்றது.. ஆனாலும்,

  கோயில் நிர்வாகம் சுத்தமாக பராமரித்தாலும், சிற்பங்களின் மீது குங்குமம் போன்றவற்றை தடவாமல் விட்டால் இவர்கள் பக்தர்கள் ஆகமாட்டார்களே!..

  ReplyDelete
  Replies
  1. குங்குமம் தடவாமல் விட்டால் பக்தர்களே இல்லை! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. புகைப்படங்கள் அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. உங்கள் பயணங்கள் மூலம் பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. க்ருஷ்ணன் வெண்ணெய் திருடும்போது யசோதை கையில் கோலுடன் வரும் படம், "அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட நீ வாராய்" என்ற ப்ரபந்தப் பாடலை நினைவுபடுத்திற்று. த ம

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 6. இனிய படங்கள் தொடர்வேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 7. ஸ்ரீகூர்மம் கோவில் அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 8. படங்கள் மிக அருமை. தலபுராணக் கதைகளும் பகிர்வும் சுவாரஸ்யம். பெங்களூர் நந்தி தீர்த்தக் கோவிலின் புஷ்கரணியிலும் நிறைய ஆமைகள் உண்டு. ஆனால் இப்படித் தூக்கி வைத்து அதனோடு பழகுவார்களா தெரியாது:).

  ReplyDelete
  Replies
  1. சர்வ சாதாரணமாக ஆமைகளை நகர்த்துவதை பார்க்க முடிந்ததில் எனக்கும் ஆச்சர்யம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. கோயில் சிற்பங்களில் பக்த கோடிகள் குங்குமம், விபூதி தீட்டாமல் வருவதில்லையே...பெரும்பான்மை சிற்பங்கள்....உருவம் தெரியாத அளவிற்கு மேக்கப் போடப்பட்டிருக்கும்....நாங்கள் போக திட்டமிட்டு போக முடியாமல் ஆன கோயில் இது...

  உங்கள் பதிவிலிருந்து கோயில் பற்றித் தகவல் அறிந்து கொண்டேன்....படங்கள் அழகு. தொடர்கிறோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நீங்கள் திட்டமிட்டு போக முடியாமல் போனதா? இன்னும் பராமரிப்பு தேவை என்பது இங்கேயுள்ள பல இடங்களுக்கும் பொருந்தும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. கூர்ம அவதாரத்தில் உள்ள விஷ்ணு பகவான் இருக்கும் ஸ்ரீகூர்மம் பற்றிய தகவல்களையும் படங்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. படங்கள் எல்லாம் அழகு.
  ஸ்வேத புஷ்கரணியில் தண்ணீர் பர்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.
  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஏப்ரல் மாதத்திலும் இப்படி தண்ணீர் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 12. புகைப்படங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப் ஜி!

   Delete
 13. அன்பு வெங்கட்
  அரக்கு பள்ளத்தாக்கு பகுதி 4 அருமை. நிறைய புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். மற்ற பகுதிகளையும் படித்து பின்னர் எழுதுகிறேன். வாழ்த்துக்கள். நான் சமீபத்தில் 15 தினங்களுக்கு முன் யு பிஎஸ் ஸியில் சேர்ந்து உள்ளேன்.
  விஜயராகவன்
  Note: I am visiting your blog after a long time. Hope I will be regular soon.

  ReplyDelete
  Replies
  1. UPSC - வாழ்த்துகள். சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்களை இங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 14. கூர்மம் படித்தோம், பார்த்தோம், அறியாதன அறிந்தோம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 15. ஆமைகள் சுதந்திரமாக நடமாடுகின்றன போலும். சிறப்பான இடம் பற்றி சுவாரஸ்யமான பதிவு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்பது ஆச்சர்யத்தையும் சுவாரஸ்யத்தையும் தோற்றுவிக்கிறது. மிகப் பழமையான அந்தப் படங்களைக் காண அந்த ஞாயிறுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. #கதவு போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள்#
  அண்டா காகசம் ,அபூகா காகசம் திறந்திடு சீசே ன்னு சொல்லிப் பார்த்திருக்கலாம் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 17. இனிய தரிசனம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 18. திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு குகைக் கோவில் மாதிரி ஒன்று இருக்கும் அங்கும் ஒரு சுரங்கப் பாதைதஞ்சாவூர் செல்லும் என்றுமொரு கதை யாராவது முயற்சித்திருக்கிறார்களா தெரியாது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....