எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, July 20, 2017

சிக்கு புக்கு ரயிலே – அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி ஒரு பயணம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 8

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு.....
அரக்கு நோக்கிய பயணம்

இப்பயணத்தின் இரண்டாம் நாள் – இப்பயணத்திற்கான முக்கிய காரணமும் இந்த இரண்டாம் நாளில் போகப்போகும் இடம் தான் – அந்த இடம் – அரக்கு பள்ளத்தாக்கு! விசாகபட்டினம் நகரிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் மலைத்தொடரில் இருக்கிறது அரக்குப் பள்ளத்தாக்கு! இங்கே சாலை வழியாகவும், இரயில் பாதையிலும் செல்ல முடியும். சில தனியார் சுற்றுலா நிறுவனங்களும் இங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்றாலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை மூலமாகத் தான் அரக்கு நோக்கிய பயணத்தினை மேற்கொள்ள தேர்ந்தெடுத்திருந்தோம்.ஓட்டமா ஓடி அந்த மலைச்சிகரத்தைத் தொடலாமா?
அரக்கு நோக்கிய பயணம்


விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு செல்ல ஒரு நாள் மற்றும் இரண்டு நாள் பயணத் திட்டங்கள் அவர்களிடத்தில் உண்டு.  மேலதிகத் தகவல்கள்/முன்பதிவு செய்யும் வசதி இந்தத் தளத்தில் கிடைக்கும். நாங்கள் தேர்ந்தெடுத்தது ஒரு நாள் திட்டம்.  அந்தத் திட்டம் கீழே!

ARAKU RAIL CUM ROAD

Araku Rail Cum Road Tour

Schedule (Start Time): Reporting at IRO/Railway Station AT 6.00 AM Schedule (End Time): Up journey to Araku by ordinary train unreserved Coach. Tour begins at 7.00 AM and arrival at RTC complex at 9.00PM

Fare:Adult-Rs.875/-,Child-Rs.700/- & A/C Adult-1160/-, Child-925/-

Covering Places: Padmapuram Gardens,Tribal Museum,Ananthagiri Coffee Plantation, galikonda view point &Borra Caves, Dimsa dance at araku.

Includes:Limited packed break fast, with tea Veg. lunch(buffet),Tea & snacks & Borra caves entries fees.
இந்த இரயில் தான் உங்களை அரக்கு நோக்கி அழைத்துச் செல்லப் போகிறது!
அரக்கு நோக்கிய பயணம்


காலை ஆறு மணிக்குள் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு செல்வது மட்டுமே நமது வேலை. அதன் பிறகு பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் சுற்றுலாத் துறையினரே பார்த்துக் கொள்வார்கள். ஆறு மணிக்குள் செல்ல வேண்டும் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து புறப்பட்டோம். தங்குமிடத்திலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து விசாகப்பட்டினம் இரயில் நிலையம் சென்று, அரக்கு செல்லும் இரயில் நிற்கும் நடைமேடைக்குச் சென்று சேர்ந்தோம். 58501 பாசஞ்சர் இரயில் எங்களுக்காகக் காத்திருந்தது.


அதிகாலையில் விசாகப்பட்டினம் இரயில் நிலையத்தில்....
அரக்கு நோக்கிய பயணம்


பச்சைப் பசேலென்று......
அரக்கு நோக்கிய பயணம்

ஆம்! நாம் பயணிக்கப்போவது ஒரு பாசஞ்சர் இரயிலில் தான்! அதில் ஒரு பெட்டி ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு அவர்களே பயணிகளுக்கான இருக்கைகளைச் சொல்கிறார்கள். நமக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டதும், அன்றைய பயணம் முழுவதும் நம்முடன் இருக்கப்போகும் வழிகாட்டி பயணத்திட்டத்தினை தெலுங்கிலும், அரைகுறை ஆங்கிலத்திலும், தட்டுத் தடுமாறிய ஹிந்தியிலும் சொல்கிறார். அதே சமயத்தில் நமக்கான காலை உணவும் நமக்கு வழங்கப்படுகிறது. நாம் பயணம் செய்யப் போகும் இரயில் பெட்டியில் சிறியவர்களும் பெரியவர்களும், பல ஊர்களிலிருந்து, பல மொழி பேசும் நபர்கள் வந்திருக்கிறார்கள். சில குழந்தைகளிடம் அப்போதிலிருந்தே நட்பு பாராட்ட ஆரம்பித்திருந்தேன்!


நான் டெயின்ல Bபிச்சி சாப்பிடுவேனே.....
அரக்கு நோக்கிய பயணம்


வளைந்து நெளிந்து போகும் பாதை.....
அரக்கு நோக்கிய பயணம்

நாம் பயணிக்கும் இரயில் பாசஞ்சர் என்பதால் நிறைய இடங்களில் நின்று தான் செல்லும். மலைப்பகுதிக்குள் பிரவேசித்த பிறகு ஆதிவாசிகள்/பழங்குடியினர் இருக்கும் பகுதி என்பதால், எங்கள் வழிகாட்டி அவர்கள் நமது பெட்டியில் வந்து அமர்ந்து கொண்டால் ஒன்றும் சொல்லக்கூடாது என்பதையும் முன்னரே சொல்லி விட்டார். அவர்களுக்கு இருக்கும் ஒரே பயண வசதி இந்த இரயில் மட்டுமே என்பதால் நாம் ஒன்றும் சொல்லக்கூடாது என்பதைச் சொல்லி இருந்தார். அப்படி வரப் போகும் நபர்களுக்காக நாங்களும் காத்திருந்தோம். இந்தப் பாசஞ்சர் இரயில், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கிரண்டுல் வரை செல்கிறது! மொத்தம் 51 இரயில் நிலையங்களில் நிற்கும் இந்த இரயில் காலை ஏழு மணிக்குப் புறப்பட்டால் அன்றைய இரவு 08.45 மணிக்கு கிரண்டுல் சென்று சேர்கிறது! பயணம் செய்யும் பாதை இங்கே!


ட்ரெயின் எப்ப வரும்.......
அரக்கு நோக்கிய பயணம்


தடக் தடக் என இரயில் இரும்புப் பாலத்தின் மீது கடக்கும்போது.....
அரக்கு நோக்கிய பயணம்


”நான் இங்கிட்டு போறேன்! நீ அங்கிட்டுப் போ!”
என பேசிக்கொண்டிருக்குமோ இந்த இரயில்கள்!
அரக்கு நோக்கிய பயணம்

இங்கே ரயில் பாதை அமைக்கப்பட்டதும் ஸ்வாரஸ்யமானது தான்.  இந்தப் பாதை சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு இரும்புத் தாதுப் பொருள்களை எடுத்து வருவதற்காகவே அமைக்கப்பட்ட பாதை! முதன் முதலில் இப்படி தாதுப் பொருளை எடுத்து வருவதற்காகவே அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையின் பெயர் K K Line! அதாவது கொத்தவலசா – கிரண்டுல் பாதை! பெரும்பாலும் மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகள் Meter Gauge தான் ஆனால் இங்கே அமைந்திருப்பது Broad Gauge! விசாகப்பட்டினத்தில் அமைந்திருக்கும் Vizag Steel நிறுவனத்திற்குத் தேவையான தாதுப் பொருட்கள் கொண்டு வரவும், விசாகப்பட்டினம் துறைமுகம் வழியே தாதுப் பொருட்களை மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்லவும் அமைக்கப்பட்ட இந்தப் பாதை ஆந்திர மாநிலத்திலிருந்து ஒடிசா வழியாக சத்தீஸ்கர் வரை இருக்கிறது!


இருந்த ஒரு பத்து ரூபா தாள இதுலதானே வச்சேன்.....
அரக்கு நோக்கிய பயணம்


ஹையா....  ஜாலி... நான் ட்ரெயின்ல போறேனே!
அரக்கு நோக்கிய பயணம் 


குகைக்குள் போகலாமா?
அரக்கு நோக்கிய பயணம்

இரயிலில் நாம் செல்லப் போவது பதினைந்தாவது நிறுத்தமான அரக்கு வரை மட்டுமே! இந்த இரயில் பாதை மூலமாக பயணிக்கும்போது மலைப்பகுதியில் சுமார் 84 பாலங்கள், 58 குகைகள், அருவிகள், கண்களுக்குக் குளிர்ச்சி தரும் பசுமையான பள்ளத்தாக்குகள் என ரம்மியமான ஒரு பயணம். நாங்கள் சென்ற சமயத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லை என்பதால் ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்கிறேன் – இந்தப் பயணத்தினை நீங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் செல்வது இன்னும் சுவாரஸ்யம் தரும்! சரியாக ஏழு மணிக்கு எங்கள் பயணம் துவங்கியது. இரயில் இஞ்சினின் சத்தத்தினை விட நாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் அடுத்த பகுதியில் இருந்த இளைஞிகள் குழு போட்ட ”ஊஊஊஊ……” சப்தம் அதிகமாக இருந்தது. அந்த உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ள, நாங்களும் எதிர்பாட்டு [சப்தம் தான்!] செய்ய உற்சாகமாக ஆரம்பித்தது பயணம்.  வாருங்கள் அரக்கு நோக்கி பயணிக்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


24 comments:

 1. ஒன்றிரண்டு படங்களை மிகவும் அபாயகரமாக நின்று எடுத்திருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. பாதையும், வண்டியும், குழந்தைகளும் படங்கள் அருமை. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ”அபாயகரமாக நின்று எடுத்திருக்கிறீர்களோ?” கதவருகில் நின்றும் உட்கார்ந்தும் எடுத்த படங்கள்! கொஞ்சம் ரிஸ்க் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஆரக்கு பள்ளத்தாக்கினை நோக்கிய பயணம்..
  ஆவலுடன் தொடர்கின்றேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. நிறைய கேள்விகள் இருந்தாலும் பயணக்கட்டுரையைத் தொடர்கிறேன். எல்லாவற்றையும் சொல்வீர்கள். த ம

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கேள்விகளை எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] செய்யலாமே.... பதில்களை பதிவில் சேர்த்துவிட சௌகரியம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. எழுதும் விதமும் தகவல்களும் அருமை. முந்தைய பகுதிகளை படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மற்ற பகுதிகளையும் முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் ஜி!

   Delete
 5. வெங்கட் ஜி! நான் எடுக்க நினைத்து எடுக்க முடியாமல் போன (கூட பயணம் செய்தவர்களின் அனுமதி கிடைக்காததால்) படங்கள் அருமை!! ஜி!!! நாங்கள் பயணித்த போதும் அருவிகளில் தண்ணீரே இல்லை. இதே இடங்கள் தான்....பார்த்தோம் ஒரு நாள் பயணத் திட்டம்தான்..ஆனால் உடன் வந்தவர்கள் சுற்றுலாத்துறை மூலம் புக் செய்ய வேண்டாம் என்று சொல்லித் தனியாகவே மேற்கொண்டோம். கையில் என்னிடம் இடம் பற்றிய தகவல்கள் இருந்ததால் சமாளிக்க முடிந்தது....ஒரு இடம் செல்வதற்கு முன் இடம் பற்றிய தகவல்கள், அங்கு என்னென்ன பார்க்கலாம், ஒரு நாளில் முடியுமா, எப்படிச் செல்லலாம் என்பதை எல்லாம் சேகரித்துவிடுவேன்....அப்படிச் சென்றதுதான் இந்தப் பயணம். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில்.....உங்கள் தகவல்களையும் அனுபவத்தையும், படங்களையும் காண மிகுந்த ஆவலுடன் தொடர்கிறேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பயணிப்பதற்கு முன்னர் இப்படி திட்டமிட்டு பயணிப்பது நல்லது. இல்லை என்றால் தடுமாற வேண்டியிருக்கும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. படங்களும் செய்திகளும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 7. உடன் வருகிறோம். புகைப்படங்கள் கலை ரசனையுடன் உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 9. இரயிலில் பயணிப்பது யாருக்குத்தான் பிடிக்காது தெளிவான விபரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இரயில் பயணிப்பது பெரும்பாலானவர்களுக்குப் பிடித்தது தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. சுவாரஸ்யமாக செல்கிறது சார்! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. அரக்கு பயணம் செய்யும் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளீர்கள்! இந்த இரயில் பயணம் மேட்டுபாளையம் – உதகைப் பயணம் போல் இருக்குமா என அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள் - பதிவில் சொன்னது போல, சீசனில் செல்வது உகந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. அழகிய இடங்கள் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....