புதன், 19 ஜூலை, 2017

கல்யாணியைக் கடித்த கதை – பொன்வீதி – மோகன்ஜி!வானவில் மனிதன்” எனும் வலைப்பூவில் எழுதி வருபவர் மோகன்ஜி அவர்கள். வலைப்பூவில் அவர் எழுதிய கதைகள், கவிதைகள் என அனைத்துமே ஸ்வாரஸ்யமானவை. உற்சாகம் தரும் பல கருத்துப் பரிமாற்றங்களை அங்கே காண முடியும். ஒவ்வொரு பதிவு எழுதிய நாளிலிருந்து தொடர்ந்து அந்தப் பதிவுகளில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் பல விஷயங்களை நமக்கு எடுத்துச் சொல்லும். சுப்பு தாத்தா, சிவகுமாரன், மன்னை மைனர் RVS, பத்மநாபன், சுந்தர்ஜி, அப்பாதுரை, ஸ்ரீராம், கீதாம்மா [திருமதி கீதா சாம்பசிவம்], வை.கோ., மூவார் முத்து என மோகன்ஜி அவர்களால் அழைக்கப்படும் ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்கள், நிலாமகள் என பலரும் அங்கே அடித்து விளையாடுவார்கள் – கருத்துப் பரிமாற்றங்களில் தான்!  ஒவ்வொரு பதிவுக்கும் வரும் பின்னூட்டங்கள் நூற்றுக்கு மேல் இருக்கும்! அனைத்துமே ஸ்வாரஸ்யமானவை. படிக்கும் நமக்கு உற்சாகம் தருபவை.
என்ன ஒரு பிரச்சனை என்றால் அவ்வப்போது காணாமல் போய்விடுவார் நம்ம மோகன்ஜி அண்ணா! அதுவும் வலைப்பூவிலிருந்து அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். முகநூலிலாவது அவரை பார்த்து விட முடிகிறது இப்போதெல்லாம். சமீபத்தில் சென்று வந்த பயணம் பற்றி அவர் எழுதி வரும் விஷயங்கள் பிரமிக்க வைப்பவை. ஒரே ஒரு உதாரணம் இங்கே…..

மலைகளின் அழைப்பு

"மலைகள் என்னை அழைக்கின்றன. நான் போயே ஆக வேண்டும்." என்பது ஜான் முய்ரின் மிக பிரபலமான வாசகம். மலையேற்ற ரசிகர்களின் காயத்ரி மந்திரமாக விட்டவை இவ்வரிகள்.

மலைகள் தன் உச்சிகளிலும் மடியிலும் பல ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. மலைகள் மேல் கொள்ளப்படுவது பெருங்காதல். தீராக் காதல். குறிஞ்சி நிலமே எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கியது. சங்க காலம் தொட்டு, மலைகள் படைப்பூக்கத்தை விருத்தி செய்யும் ஒரு லாகிரியாக இருப்பது.
நமது பண்பாட்டில் மலைகளுக்கு பெரிய ஆன்மிக முகம் உண்டு. இமயத்தில் சிவன், மலையாஜல புத்ரி பர்வதராஜகுமாரியான பார்வதி, ஏழுமலைவாசி பெருமாள், குன்று தோராடும் குமரன், உச்சிப் பிள்ளையார், சபரிமலை ஐயப்பன் என்று இறையில்லங்களாய் மலைகளே இருக்கின்றன.

மலையேற்றம் நம்மை உடைக்கின்றது. இயற்கையின் முன்னர் நாம் எத்தனை சிறியவர்கள் என்று உணர்த்துகிறது. மலையுச்சியைத் தொட்டு, சாதித்து விட்டதாய் நாம் நிமிரும் போது, தோள் மேல் பிள்ளையை ஏற்றி மகிழும் தகப்பனைப் போல் இறுமார்ந்து நிற்கிறது.

என்னய்யா இது, “கல்யாணியைக் கடித்த கதை” என்று தலைப்பிட்டு வேறு என்னத்தையோ சொல்லிக் கொண்டு இருப்பது நல்லா இருக்கா? என்று நீங்கள் கேட்குமுன்னர் விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.  இப்படியான ஸ்வாரஸ்ய எழுத்துக்குச் சொந்தக்காரரான மோகன்ஜி சமீபத்தில் அவரது சிறுகதைத் தொகுப்பு “பொன்வீதி” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது என்பதைத் தெரிவித்த போது, எனக்கும் பொன்வீதியில் உலாவர ஆசை வர, ஒரு புத்தகத்தினை எனக்கு அனுப்பி வைக்க வேண்டினேன். நான் அதற்குரிய பணத்தினை அவரது வங்கிக் கணக்குக்குச் செலுத்து முன்னரே புத்தகம் வந்து சேர்ந்தது. 

புத்தகத்தில் மொத்தம் 21 கதைகள். அனைத்துமே சிறப்பான கதைகள். கதைகளைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் ஒரு விஷயத்தினை தெளிவுபடுத்த வேண்டும் – நிச்சயம் இது விமர்சனம் அல்ல! அவரது புத்தகத்திற்கு விமர்சனமாகவே எட்டு பதிவுகள் போட்டிருக்கிறார் வை.கோ. அவர்கள். அப்படி இருக்கையில், நான் இங்கே சொல்லப்போவது வாசிப்பனுபவம் மட்டுமே. ஒவ்வொரு கதையும் படிப்பவர்களை அக்கதைக்குள் இழுத்துச் செல்லும்படி அமைப்பது தான் கதாசிரியரின் சிறப்பு. 

கூளம், பச்ச மொழகா, தத்த்தி, கல்யாணியைக் கடித்த கதை, நிழல் யுத்தம், அங்கிங்கெனாதபடி, பியார் கி புல்புல், என ஒவ்வொரு கதையும் ஒரு படிக்கப் படிக்க மனதுக்குள் பல்வேறு உணர்வுகள் நம்மைக் கட்டிப் போடும். 21 கதைகளும் சிறப்பானவை – அதிலும் பச்ச மொழகா – “ரசத்துக்கு ருசியே அதுல நாலு பச்ச மொழகா கிள்ளிப் போட்டாத்தான் சார்” என்றுதான் கதையே ஆரம்பிக்கிறது. மெஸ் வைத்து நடத்தும் ராஜாமணியின் வாய், புகையிலை அதக்கலில் குழைந்து பச்சை மிளகாய் ’பச்ச மொழகா’ ஆகிவிட்டது எனத்தான் முதலில் நினைத்தாலும், அது இல்லை எனத் தெரிந்து கொண்டது – மெஸ்ஸில் சாப்பிட வருபவருக்கு வடையில் முடி வந்த போது. ”வடைக்கு அரைக்கறச்சே தலையை விரிச்சிப் போட்டு நர்த்தனம் பண்ணினியா? தலையை செரைக்க… ஜடமே, ஜடமே” என்று கைக்குழந்தையுடன் வந்த மனைவியை சட்டுவத்தால் அடித்த கணம், படிக்கும் நமக்கும் வலிக்கிறது. கோபம் நமது வாழ்க்கையை திசை மாற்றிவிடும் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம்.

கல்யாணியைக் கடித்த கதை – சிறு வயதில், சீட்டாட்டத்தில் ஏற்பட்ட சண்டையில், ஆம்பளைக் காமாட்சி என்று சித்தியால் அழைக்கப்படும் கல்யாணி, தனது கால்களை கழுத்தில் போட்டு அழுத்தி மூச்சடைக்க வைக்க, கடிக்க வாகாய் இருந்த இடத்தில் கடித்து விட்டார்! நிலைமையைச் சமாளிக்க “கடிக்கவா கடிக்கற, உனக்கு சூடு வைக்கிறேன் வா” என இழுத்துக் கொண்டு போனாராம் சித்தி! பல வருடங்களுக்குப் பிறகு, குடும்பத்துடன் கல்யாணியைப் பார்க்கும் போது கல்யாணியின் மகள் மூலம் ஒரு விஷயம் தெரியவர, குற்றவுணர்வு வருகிறது கதை நாயகனுக்கு…. அதுவும் சூடு போட்டுக்கொண்டதாக பொய் சொன்ன குற்ற உணர்வு.

தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை கதைக்குள் இழுத்துச் செல்லும் திறன் கொண்டதாக, மிகச் சிறப்பானதாக இருக்கிறது.  கதைகளை நீங்களும் வாசிக்க நினைத்தால், “பொன்வீதி” என்ற தலைப்பிட்ட தொகுப்பினை வாசிக்கலாம். புத்தகத்தின் பதிப்பாளர்கள்: அக்ஷரா பிரசுரம், G1702, அபர்ணா சரோவர், நல்லகண்டலா, ஹைதராபாத்-500107.  விலை ரூபாய் 125/- பக்கங்கள் 160.  புத்தகம் வேண்டுமெனில் நூலாசிரியர் மோகன்ஜி அவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் – மின்னஞ்சல் முகவரி: mohanji.ab@gmail.com.

நிச்சயம் உங்கள் புத்தக அலமாரியில் இருக்க வேண்டிய ஒரு புத்தகம் – மோகன்ஜி அவர்களின் “பொன்வீதி” கதைத் தொகுப்பு!  வாங்கிப் படிக்கலாமே!

நாளை மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


43 கருத்துகள்:

 1. பொன்வீதியின் வாசிப்பனுபவத்தை மறுபடியும் நினைவு படுத்தி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. நன்றி ஶ்ரீராம்! உங்கள் விமரிசனத்தையும் நினைத்து மகிழ்கிறேன்.

   நீக்கு
 2. படிச்சேன். வந்ததுமே படிச்சேன். அந்தக் கதைகள் வலைப்பக்கம் வந்தப்போ என்ன கருத்துச் சொல்லி இருக்கேன்னு போயும் பார்த்தேன். :) ஆனால் எழுதவில்லை. தயக்கம் தான் காரணம். பலரும் எழுதி விட்டார்கள். வைகோ பிரிச்சு அலசித் துவைத்துக் காயப் போட்டு விட்டார். அதை விட என்னப் பெரிசா எழுதப் போறோம்னு ஓர் எண்ணம் தான். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வைகோ பிரிச்சு அலசித் துவைத்துக் காயப் போட்டு விட்டார். அதை விட என்னப் பெரிசா எழுதப் போறோம்னு ஓர் எண்ணம் தான். :)//

   ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. அக்கா! உங்கள் விமரிசனத்துக்காக காத்திருக்கேன்னு தாவாங்கட்டையை பிடித்துக் கொண்டு கெஞ்சவா முடியும்? இப்போ எழுதப் போறீங்களா இல்லையா?!

   நீக்கு
  3. தயக்கம் தான் காரணம் தம்பி. அந்த அருமையான, கற்பனை வளம் செறிந்த தேர்ந்த எழுத்துக்கு முன்னே நாம் விமரிசிக்கும் தகுதி உள்ளவரா இருக்கோமா என்னும் எண்ணமும் காரணம்! :)

   நீக்கு
  4. எழுதுங்களேன்.... படிக்க நாங்க இருக்கோம்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 3. ரசமான அனுபவம்.. அவர் கதைகள் வாசிப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

   நீக்கு
  2. நன்றி ரிஷபன்ஜி! அந்நாளைய கொண்டாட்டமின்றி போய்விடுமோ என்ற ஐயத்தில் தான் வலைப்பூ பக்கம் வரத் தயக்கமாய் இருக்கிறது.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. மோகன்ஜியின் எழுத்துகள் மோகனமானவை.. அவற்றை இங்கே சாம்ப்பிளோடு வெளியிட்டு கதைகளை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள். அவரது பல கதைகள் இப்போதும் மனசுக்குள் நேற்று வாசித்தது போலவே நிறம் மாறாமல் பசுமையாக உள்ளன. நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறம் மாறாமல் பசுமையாக.... அதே உணர்வு தான் எனக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 6. நல்லதொரு சிறுகதை நூல்.. அறிமுகம் இனிமை..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி

   நீக்கு
 7. இந்தக் கதை மீது எனக்குத் தனிக்காதல் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அப்பாதுரை காரு. உங்களுக்கான 'பொன்வீதி' காப்பி ஒன்று, எங்கே என் காதலன் என்று அரற்றியபடியே உள்ளது.

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   நீக்கு
 8. நல்லதோர் நூலை அறிமுகப்படுத்திய விதம் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டும் நான் மோகன் ஜியின் ரெகுலர் வாசகன் பதிவுகளில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. GMB சார்! முன்னமேயே உங்கள் முகவரியைக் கேட்டிருந்தேன். அனுப்பி வையுங்கள். புத்தகம் வந்து சேரும்

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 10. இதைப் படிக்கும்போதே, கோபு சார் அவர்களின் தளத்தில் பல பதிவுகளாக (8 பதிவுகள்?) படித்த ஞாபகம். அவர் ஒவ்வொரு கதையையும் சிலாகித்து, பிடித்த வரிகளை குறிப்பிட்டு ரொம்ப விவரமாக விமரிசனம் செய்திருந்தார்.

  உங்கள் கருத்தையும் பார்த்தேன். வாய்ப்பு வரும்போது படிக்கிறேன். (உங்களுக்கு எங்கிருந்துதான் நேரம் கிடைக்கிறதோ. பாராட்டுக்கள்) த.ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சார்! வை கோ சார் பதிவுகளிலேயே பல கருத்துகள் சொல்லி கௌரவித்தீர்கள். மிக்க நன்றி !

   நீக்கு
  2. எங்கிருந்து தான் நேரம் கிடைக்கிறதோ! :)))) பல சமயங்களில் நேரம் கிடைப்பதில்லை! கிடைக்கும் நேரத்தில் படிப்பது தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. அருமையான அறிமுக விமர்சனம் வெங்கட்ஜி...பலரது விமர்சனங்களும் வாசித்து வருகிறோம்...நேரடியாக இனிதான்....வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜி! முகவரி மின்னஞ்சல் செய்யுங்கள். புத்தகம் வந்து சேரும்

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 12. அருமையான விமர்சனம்.

  நானும் என் திடியன் மலையில் பதிவில் மோகன்ஜியிடம் கேட்டு மலைகளின் அழைப்பு என்று அவர் எழுதியதை பகிர்ந்தேன். மிகவும் பிடித்து இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 13. அடுத்த பயணத்தில் புத்தகக்கடை போகும்போது ஞாபகம் வரணும். மூளையில் முடிச்சு :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூளையில் முடிச்சு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 14. ஜிலேபியை எங்கு கண்டாலும் இனிக்கிறது...! ரோஜாவை எங்கு கண்டாலும்...மணக்கிறது...! மாதவன் அவர்களின் கதைகளைப்போல ஒரு யதார்த்தமான வாசிப்பனுபவம் கிட்டக்கூடும்.! வாழ்த்துகள். நண்பர்களே!! அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரவிஜி ரவி.

   நீக்கு
 15. நல்ல நூல் அறிமுகம்.ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....