சனி, 22 ஜூலை, 2017

இரயில் ஸ்னேகம் – அரக்கு பள்ளத்தாக்கு – இரயில் காதலன்…


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 9

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...


சரக்கு இரயிலும், பாசஞ்சரும்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

காலை ஏழு மணிக்கு விசாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் K K Line – பாசாஞ்சர், இடையில் இருக்கும் எல்லா இரயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டும், இறக்கி விட்டும் தான் தொடர்ந்தது. பாசஞ்சர் இரயிலில் பயணிப்பது கொஞ்சம் அலாதியான விஷயம். பல விதமான மனிதர்கள், காட்சிகள், இரயிலை நம்பியே இருக்கும் விற்பனையாளர்கள், இரயிலில் போகும் நபர்களைப் பார்த்து ஏங்கி கை அசைக்கும் கிராமத்து சிறுவர்கள் என ஒவ்வொன்றும் இரசிக்க வேண்டிய விஷயம். ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்கிறதே, எவ்வளவு நேரமா இப்படியே போகும், வேகமா போனா என்ன என்று யோசிப்பவர்களுக்கு இந்த  பாசஞ்சர் பயணங்கள் சரி வராது! ஆனால் இப்படி நின்று நின்று பயணிப்பதும் ஒரு சுகம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு ஜாலி தான்!


பள்ளத்தாக்கு - இயற்கைக் காட்சிகள்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

மாரிப்பாலம், சிம்ஹாசலம், பெண்டூர்த்தி, கொத்தவலசா, மல்லிவீடு, லக்கவரப்புகோட்டா, ஷ்ருங்கவார்புக்தா, பொத்தவாரா, சிம்மிடிபள்ளி, போராகுஹாலு, கரக்கவலசா, ஷிமிலியகுடா, டைடா, என்று வித்தியாசமான பெயர் கொண்ட இரயில் நிலையங்களில் சில நிமிடங்கள் நின்று செல்லும் இரயிலில் மலைப்பாதையில் பயணிப்பதால் மிகவும் மெதுவாகவே இரயில் செல்கிறது. பயணத்தில் பெரும்பாலான நேரம் நான் கதவருகே தான் நின்று கொண்டிருந்தேன் – கையில் கேமராவுடன் தான். எனக்குக் கிடைத்த இருக்கை இடப்புறம் இருக்க, வலப்புறத்தில் பள்ளத்தாக்கு! இடப்புறம் இருக்கும் அருவிகளில் நீர்வரத்து இல்லை என்பதால் கதவுக்கு அருகே நின்று கொண்டு புகைப்படங்கள் எடுக்க வாகாக நின்று காட்சிகளை இரசித்தபடி புகைப்படங்களையும் அவ்வப்போது எடுத்துக் கொண்டிருந்தேன்.தூரத்தில் தெரியும் இரயில்வே பாலம்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்... 

ஏற்கனவே எழுதி இருந்தபடி நிறைய பாலங்கள், குகைகள் இந்தப் பாதையில் இருப்பதால், ஒவ்வொருமுறை குகைக்குள் இரயில் நுழைந்ததும் இரயிலில் இருக்கும் அனைவருமே உற்சாகமாக சப்தம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நானும் கையில் கேமராவுடன் புகைப்படம் எடுத்தபடியே கத்திக் கொண்டிருந்தேன்! எனக்கே கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது! என்றாலும் இதுவும் ஒரு அனுபவம் தானே! சென்ற பகுதியை முடிக்கும்போது சொன்னது போல சில இளைஞிகள் மிகவும் உற்சாகமாக பயணத்தினை இரசித்து, குகைகள் வரும்போது குரல் எழுப்பியும், கைகளைத் தட்டி ஓசை எழுப்பியபடியும் வந்து கொண்டிருந்தனர். 


ஒரு குகையிலிருந்து வெளியே வரும்போதே அடுத்த குகை!....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

நான் நின்று கொண்டிருந்த கதவருகே அப்பெண்களும் வந்து சேர, எங்களுக்குள் அறிமுகம் ஆனது! ஒருவர் மருத்துவப் படிப்பில், இரண்டாமவர் பள்ளியில், மூன்றாவது பெண் IAS Aspirant, நான்காவது பெண் கல்லூரியில் M.Sc படித்துவிட்டு, மேற்படிப்பைத் தொடர்ந்தபடியே, படித்த கல்லூரியில் Assistant Professor. இந்த நான்கு பெண்களுக்குத் துணையாக மருத்துவம் படிக்கும் பெண்ணின் அம்மா! அவரும் இந்த உற்சாகத் துள்ளலில் பங்கு கொண்டார்…. அனைவரும் உறவினர்கள். ஐந்து பெண்கள் மட்டும் இந்த ஒரு நாள் பயணத்திற்காக வந்திருக்கிறார்கள். மூவர் விசாகப்பட்டினத்திலும் மற்ற இரு பெண்கள் வேறு இடங்களிலும் இருக்கிறார்களாம்! அனைவருக்குமே பயணம் செய்வது ரொம்பவே பிடிக்கும் என்று சொல்ல – “அட இவங்க நம்ம ஆளுக!” என்ற உணர்வு எனக்குள்…..


மலைப்பாதையில் எங்கள் இரயில்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

கேமராவைப் பார்த்து தான் உங்களிடம் பேச வந்தோம் என்று Assistant Professor சொல்ல, எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அன்றைய பயணம் முழுவதுமே நாங்கள் ஒன்றாகவே எல்லா இடங்களிலும் சுற்றி வந்தோம். மாலைக்குள் அந்த நட்பு, ஸ்னேகம் நன்கு வேறூன்றி வளர்ந்தது. பயணம் முடிந்து, இப்போதும் அனைவரும் தொடர்பில் இருக்கிறார்கள். சமீபத்தில் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு அழைப்பு வந்தது – எனக்கு அலுவலகத்திலிருந்து விடுப்பு கிடைக்காததால், நண்பர் மட்டும் சென்று வந்தார் – ஹைதைக்கு! இப்படி ஒரு இரயில் ஸ்னேகம் இந்தப் பயணத்தில் கிடைத்ததில் அனைவருக்குமே மகிழ்ச்சி! ஸ்னேகம் என்பது நம் அனைவருக்குமே வேண்டியிருக்கிறதே!


குகை எண் மூன்றில் நுழையும்போது....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

மீண்டும் KK line பற்றிய தகவலுக்கு வருவோம். ஏற்கனவே சொல்லி இருந்ததுபோல, இந்த இரயில் பாதை இந்திய ரயில்வே துறைக்கும், விசாகப்பட்டினத்தில் இருக்கும் பல தொழிற்சாலைகளுக்கும் மிகவும் தலையாய தேவை – நாள் ஒன்றுக்கு 34 சரக்கு இரயில்கள் இப்பாதையில் பயணிக்கின்றன – சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பைலிடாலா சுரங்கத்திலிருந்து வருடத்திற்கு சுமார் 15 மில்லியன் டன் இரும்புத் தாதுப் பொருட்களை விசாகப்பட்டினத்திற்கு எடுத்து வர இந்தப் பாதை தானே பயன்படுகிறது! இதில் பெரும்பாலான தாதுப் பொருட்கள் Vizag Steel, Essar, Vikram Ispat போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தினாலும், சில பகுதி அங்கே இருக்கும் துறைமுகம் வழியாக ஜப்பானுக்கு ஏற்றுமதி ஆகிறது!வளைவில் பயணிக்கையில்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

இந்தப் பாதையில் இருக்கும் குகைகளின் எண்ணிக்கை – 58. குகைக்குள் பயணிக்கும் மொத்த தூரம் – 10 கிலோமீட்டர்! இருப்பதிலேயே நீண்ட குகை சுமார் 869 மீட்டர்! எண்ணிப் பார்க்கவே உற்சாகமாக இருக்கிறதல்லவா! 58 குகைகள் – நாங்களும் 58 முறை உற்சாகக் குரல் எழுப்பி எங்களது குரல்வளைகளைக் கதற வைத்தோம்!  84 பெரிய பாலங்கள், 1187 சிறிய பாலங்கள், அதில் மிக நீளமானது 457 மீட்டர்…..  584 வளைவுகள் என கடினமான பாதை! சில வளைவுகளில் உங்கள் பெட்டியிலிருந்து இரயில் இஞ்சின், இரயிலின் கடைசி பெட்டி இரண்டையுமே பார்க்க முடியும் என்று சொல்லும்போது எத்தனை பெரிய வளைவு என்பது புரியும்!


பச்சைப் பசேலென பாதையோரத்தில்........
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

இந்தப் பாதையில் நாம் சுகமாக பயணிக்க, பாதையை அமைத்தவர்கள் எத்தனை கடினமான உழைப்பைக் கொடுத்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்க பிரமிப்பாக இருந்தது. அமைப்பது மட்டுமல்ல, இதைத் தொடர்ந்து பராமரிப்பதும் இன்றியமையாதது – பயணித்த பாதையில் நிறைய இரயில்வே துறையின் உழைப்பாளிகளைப் பார்க்க முடிந்தது. பாதையை அமைத்தவர்களுக்கும், பராமரிக்கும் அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்த படியே தொடர்ந்து பயணம் செய்து நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு அரக்கு பள்ளத்தாக்கு இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.


என்னையா ஃபோட்டோ புடிக்கற? என்று குரல் விடும் குரங்கார்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

போராகுஹாலு என்ற இரயில் நிலையம் இருப்பதை மேலே சொல்லி இருந்தேன். இந்தப் பாதைக்கு நேர் கீழே தான் போரா குஹாலு என அழைக்கப்படும் மிகப்பெரிய குகை இருக்கிறது! இரயில் பாதையிலிருந்து 178 அடி கீழே மிகப் பெரிய குகைகள்! குகைகளுக்கு மேலே இரயில் பாதை என்று நினைக்கும்போதே இருதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரிக்கிறது அல்லவா!குகைகளுக்கு பஞ்சமே இல்லை!....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

இந்த மாதிரி இரயில் பாதைகளில் பயணிப்பதையே விரும்பிச் செய்யும் ஒரு இரயில் காதலன் இருக்கிறார். இந்தப் பதிவில் இருக்கும் சில தகவல்கள் அவரது தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவரது பயணங்கள் பற்றியும், அவர் எடுத்த புகைப்படங்களையும் காண விருப்பம் இருப்பவர்கள் இங்கே சென்று பார்க்கலாம்!


கதவு வழியே எட்டிப்பார்க்கும் நண்பர்....
கே.கே. லைன் - அரக்கு நோக்கிய பயணத்தில்...

இரயில் பயணம் முடிந்த பிறகு நாங்கள் என்ன செய்தோம், எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…..

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


22 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான தகவல்களுடன் படங்கள். ரசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. வெங்கட்ஜி எனக்கும் உங்களை போன்று இடப்புறத்தில் தான் இருக்கை. வலப்புறத்தில் பள்ளத்தாக்கு....கதவருகில் நிற்க என்னுடன் இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. அப்புறம் கல் லூரிக் குழுவினர் இளைஞர்கள், இளைஞிகள் பிடித்தக் கொண்டு விட்டனர்...அதனால் என்னால் படம் எடுக்கவும் முடியவில்லை.....பாறைகளில் நீர்வ்வ்எழ்ச்சி இல்லை...குகைகள், பாலங்கள் வரும் போது இளைஞர் இளைஞிகள் எலோரும் ஒரே உற்சாகக் குரல்....ஒரே பாட்டும் சிரிப்பும். எனக்கும் இது போன்ற பாசஞ்சர் ரயில் பயணம் அதுவும் மலைப் பகுதியில்...மிகவும் பிடிக்கும்...ரசித்தேன் என்றாலும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு...என்ஜாய் செய்யும் குழுவினருடன்!!!

  ஆம் ஜி...பயணங்கள் நல்ல நட்பினையும் தரும்....நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்....தொடர்கிறோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத்தில் உடன் வருபவர்கள் சரியாக அமையாவிட்டால் கொஞ்சம் திண்டாட்டம் தான். எனக்கும் இப்படி அனுபவங்கள் உண்டு! பயணம் சென்றபிறகு, அறைக்குள் அடைந்து கிடப்பார்கள் - மதுவருந்தி அறைக்குள் இருப்பதற்காகவே பயணம் செய்யும் சிலர் உண்டு! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. இரயில் சினேகம் இரயிலை விட்டு இறங்கியதும் போய்விடும் என்பார்கள். ஆனால் உங்களுடையது தொடர்வது அறிந்து மிக்க மகிழ்ச்சி! தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   நீக்கு
  2. நண்பிகளின் வளைக் காப்புக்கு போகலாம் ஜி :)

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 8. பேரூந்துகளில் விலங்குகளை ஏற்றி வருவது போல் ரயிலிலும் உண்டா. இத்தனை புள்ளிவிவரங்களைப் பிரயாணத்தின் போதே தெரிந்து கொண்டீர்களா பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரயாணத்தில் எங்களுடன் வந்த வழிகாட்டி இதில் நிறைய தகவல்களைத் தந்தார். விலங்குகள் - எங்கள் பெட்டியில் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 9. ஹைய்யோ...... எனக்குப் போயே ஆகணும் என்ற வெறி வந்தாச் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது சென்று வாருங்கள் - செப்டம்பர் - நவம்பர் சீசன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....