எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 8, 2017

சுடச்சுட தேநீரும் போண்டாவும் – நன்றி நவிலல் - அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 16

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


போரா குகை - நுழைவாயில்...
போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...

போரா குகைகள் பார்த்த பிறகு வெளியே வந்த நாங்கள் அங்கே இருந்த கடைகளில் தண்ணீர் வாங்கிக் குடித்து, தேநீருக்கு ஏங்கிய போது தான் எங்களுடன் வந்த வழிகாட்டி அடுத்ததாய் நாம் போகப்போகும் இடம் டைடாவில் உள்ள ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையின் ஒரு தங்குமிடம்/உணவகம் என்று சொல்ல மனதுக்குள் நிம்மதி. பொதுவாகவே வெளியே செல்லும்பொழுது, Aerated Drinks எதுவும் நான் குடிப்பதில்லை. காபியோ, தேநீரோ, இளநீர் அல்லது தண்ணீரோ தான். எந்தவித Aerated Drinks குடிப்பதையும் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். எனக்குப் பிடிக்காது என்பது மட்டுமல்ல, கண்ட கண்ட Chemicals கலந்து குளிர்பானம் என்ற பெயரில் விற்பதை வாங்கிக் குடித்து எதற்கு வயிற்றைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான்.


போரா குகை - நுழைவாயில்...
போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...

பேருந்து எங்களைச் சுமந்து கொண்டு டைடா எனும் இடத்திலிருக்கும் தங்குமிடத்திற்குச் சென்றது. அங்கே தான் மாலை நேரத்திற்கான தேநீரும் சிற்றுண்டியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதுவும் சுற்றுலாக் கட்டணத்திலேயே அடங்கும். ஆளுக்கு இரண்டு போண்டா மற்றும் தேநீர், தொட்டுக்கொள்ள பச்சைச் சட்னி, சிவப்பு சட்னி! சிவப்பு பயங்கர காரம், பச்சை சட்னி ஓகே! ஆளுக்கு இரண்டு போண்டா என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் சிலர் மட்டும் இரண்டு கைகளிலும் போண்டாக்கள் வாங்கி உள்ளே தள்ள, பின்னால் வந்த சுற்றுலாப் பயணிகள் சிலருக்கு கிடைக்கவில்லை. அவர்கள் கொஞ்சம் சத்தம் எழுப்ப, மீண்டும் உள்ளேயிருந்து கொண்டுவந்து கொடுத்தார்கள். போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...

போண்டாவும் தேநீரும் உள்ளே செல்ல, வயிறு கொஞ்சம் அமைதியானது! மதியம் நன்றாகச் சாப்பிட்டு இருந்தோம் என்றாலும், நிறைய நடை, போரா குகைகளுக்குள் சுற்றியதில் கொஞ்சம் பசி வந்திருந்தது. மாலை நேரத்தில் இப்படி ஒரு சிற்றுண்டி உள்ளே போனது கொஞ்சம் திருபதி தந்தது. அந்தத் தங்குமிடத்தில் இருந்த Washroom வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு பேருந்திற்குத் திரும்பினோம். மஹா கேவலமாகத்தான் வைத்திருந்தார்கள் என்றாலும் வேறு வழியில்லை! ஆண்கள் நிலை பரவாயில்லை, பெண்கள் பக்கம் இன்னும் மோசம் என்று தெரிந்தது.  இந்த வசதிகள் மட்டும் இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும் சரியாக இருப்பதில்லை என்பது சாபக்கேடு! உணவுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவம் இந்த வசதிகளுக்கும் தரவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளப்போவது எப்போதோ…..
போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...

பேருந்தில் இருந்த அனைவரும் வந்து சேரும் வரை சாலையோரத்தில் இருந்த மலையோரத் தடுப்புகளில் அமர்ந்து, இரவு நேரக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தோம். அனைவரும் வந்து சேர, பேருந்து புறப்பட்டது. பேருந்தின் ஓட்டுனரும், வழிகாட்டியும் எங்களை உள் இருக்கைகளில் அமர்ந்து கொள்ளச் சொன்னார்கள் – மலைப்பாதையில், இருட்டு சமயத்தில் ஓட்டுனரைத் தொந்தரவு செய்வது நல்லதல்லவே – என்ற எண்ணத்தில் நாங்களும் உள்ளே எங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரம் பயணித்தபிறகு காலை முதல் எங்களுடன் வந்து கொண்டிருந்த வழிகாட்டி எழுந்து நின்று பயணத்தினைப் பற்றிய சில வார்த்தைகள் சொன்னார். நீங்கள் எல்லோரும் பயணத்தினை ரசித்தீர்களா என்று கேட்க, எல்லோரும் ஆமோதித்தார்கள்!


போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...பேருந்தில் எங்களுடன் வந்த வழிகாட்டி....

அதன் பிறகு அவர் விஷயத்திற்கு வந்தார். அவரும் அவர் போன்ற மற்ற வழிகாட்டிகளும் அரசாங்க ஊழியர்கள் அல்ல என்றும், இது போன்று பயணம் போகும் நாட்களில் மட்டும் முன்னூறு ரூபாய் ஊதியமாகக் கிடைக்கும் என்றும் சொல்லி, சுற்றுலா வாசிகள் அனைவரும் தங்களால் இயன்ற அன்பளிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெரும்பாலான பயணிகள் தூங்குவது போல கண்களை மூடிக்கொண்டிருக்க, எங்களுக்கு, பயணத்தில் கிடைத்த நட்பான Assistant Professor எழுந்து நின்று பயணம் பற்றிய சில வார்த்தைகளைச் சொல்லி, வழிகாட்டியைப் பாராட்டியதோடு, அவருக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டிய அவசியத்தினையும் சொல்ல சிலர் மட்டும், அதற்கு சம்மதம் சொன்னார்கள். அந்தப் பெண்ணே, ஒவ்வொரு இருக்கையாகச் சென்று எல்லோரிடமும் கேட்டு, வாங்கிக் கொண்டு வந்த தொகையோடு, நாங்களும் கொஞ்சம் சேர்த்து, வழிகாட்டியிடம் கொடுத்தோம்.  கூடவே அவருக்கு நன்றியும் சொல்ல, பயணம் தொடர்ந்தது.


போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...
மிதமான வேகத்தில் மலைப்பாதைகளில் பயணித்து, பேருந்து விசாகப்பட்டினம் வந்து சேர்ந்திருந்தது. இரயில் நிலையம் வரை செல்லும் என்றாலும், நாங்கள் வழியிலேயே, எங்கள் தங்குமிடம் இருந்த இடம் அருகிலேயே இறங்கிக் கொண்டோம். ரொம்பவும் விரும்பிய அரக்கு பள்ளத்தாக்கு பகுதிகளை பார்த்து ரசித்து சில புதிய நண்பர்களையும் பெற்றதோடு, நல்ல அனுபவங்களும் இந்த ஒரு நாள் பயணத்தில் கிடைக்கச் செய்த நண்பருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பயணம் இன்றோடு முடியவில்லை. அடுத்த மூன்று தினங்களும் இதே பயணத்தில் உண்டு என்றாலும் முதன்மையான் இடம் இந்த அரக்கு பள்ளத்தாக்கு தான்!


போரா குகைகள் - இன்னும் சில படங்கள்...
பயணத்தில் கிடைத்த நட்புக்கள் அனைவரிடமும் எண்களைப் பரிமாறிக்கொண்டோம்.  இரவு, அவர்களுடன் வந்து இரவு உணவு சாப்பிடவேண்டும் என்று கேட்க, பிறிதொரு சமயம் வருகிறோம் என்று பணிவாகத் தவிர்த்து தங்குமிடம் திரும்பினோம். என்றாலும், சாப்பிட வெளியே போகத்தான் வேண்டும்! எங்கே சென்றோம், அங்கே ஒரு முறை சாப்பிட, அதற்கு அடுத்த நாள் மூன்று வேளையும் அங்கே தான் சாப்பிடும்படியாக இருந்தது ஏன் என்பதையும் அடுத்த பகுதியில் சொல்கிறேன். !

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


36 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. >>> Washroom வசதிகள் மட்டும் இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும் சரியாக இருப்பதில்லை என்பது சாபக்கேடு!<<<

  உண்மை.. உண்மை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. இயற்கையின் அதிகயங்களுள் ஒன்றான அரக்கு பள்ளத்தாக்கினை நேருக்கு நேராகக் காட்டியது - பதிவு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 4. குகையில் இருக்கும் அந்த நிறங்கள் இயற்கையாக அமைந்தவையா? தனித்தனியாகப் பணம் கொடுத்தால் குறைவாகக் கொடுக்கிறோமோ என்று தோன்றும். கலெக்ட் செய்து கொடுக்கும்போது அவர்களுக்கு கொஞ்சம் கொடுக்கக் கூடாதோ.. பாவம்.

  ReplyDelete
  Replies
  1. மின்விளக்குகள் உபயம் அந்த நிறங்கள். சுண்ணாம்பு கலர் தான் பெரும்பாலான இடங்களில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. போரா குகைகள் என்னை வாவான்னு கூப்பிடுது! கட்டாயம் போகத்தான் வேணும்!

  வாஷ்ரூம்......... ஐயோ.... இதுதான் இந்தியப் பயணத்தில் நான் பயந்து நடுங்குவது...

  நம்மாட்களுக்கு சட்னு தூக்கம் வந்துரும் எதாவது பணச்செலவு அடுத்தவங்களுக்குன்னதுமே.......... ப்ச்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 6. வெயில் எப்படி? உல்லாச பயணத்துக்கான இடமா?

  ReplyDelete
  Replies
  1. அக்டோபர் முதல் ஜனவரி வரை நல்ல சீசன். மலைப்பகுதி என்பதால் வெயில் பரவாயில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 7. போரா குகை படங்கள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 9. வெங்கட் ஜி! அருமையான பயணம் என்று தெரிகிறது. பார்க்க வேண்டிய இடம்..

  கீதா: அருமை ஜி! சூப்பர் படங்கள். நானும் மிகவும் ரசித்த இடம். கேவ்ஸின் வெளியிலேயே அதாவது வெளியே வரும் முன்னே டிக்கெட் கவுண்டரிலிருந்து நுழைந்ததும் படியிறங்கும் முன்னரேயே இடது புறத்தில் ரெஸ்ட் ரூம்கள் இருக்கின்றனவே. அவை சுத்தமாக இருந்தன. வெளியே வந்த பின் ஒரு சின்ன உணவகம் இருக்கிறது. ஆனால் நாங்கள் வெளியில் வந்த சமயம் 5 மணி நெருங்கிக் கொண்டிருந்தது அப்போதும் உணவுதான் இருந்தது அல்லாமல் காஃபி டீ எதுவும் இல்லை. ஏரேட்டட் ட்ரிங்க்ஸ் இருந்தது... நானும் ஏரேட்டட் குடிப்பதில்லை...வெளியில் கடைகளில் இளநீர் கிடைத்தது. எனவே அதை குடித்துக் கொண்டோம்...

  அடுத்து உங்கள் அனுபவங்களுக்கு வெயிட்டிங்க் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு வருவது பிடித்திருக்கிறது. பதிவாகவும் படிக்கக் காத்திருக்கிறேன் கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. குகைக் காட்சிகள் அருமை.

  Guide பணம் கேட்பது நம்ம ஊர்ல மாத்திரம் அல்ல. உலகம் முழுமைக்கும் இதே கதைதான். பயணம் முழுமையும் நல்லா பேசிக்கிட்டு வர்ற பயணிகள் (கைடு கிட்ட), கடைசி நேரத்தில் நீங்கள் சொன்ன எல்லா செயலையும் செய்து பணம் கொடுப்பதைத் தவிர்ப்பார்கள் (நான் உள்பட). இது மனித இயற்கை. ஏன்னா, காரியம் முடிந்தபின் யாருக்கும் பணம் கொடுக்க மனம் வராது. (எனக்கு இதுல என் F.IN.LAW நிறைய கத்துக்க வச்சிருக்கார், அவர் செய்யும் செயல்களின் மூலம். அவர் சொல்வது, குறைந்த சம்பளம், ஆட்டோ ஓட்டுனர், கீரை விக்கறவங்க போன்றவர்களிடம் பேரம் பேசக்கூடாது. 10 ரூ அதிகம் கொடுப்பதால அவங்க வீடு கட்டப்போறதில்லை, நாமும் வீட்டை இழக்கப்போறதில்லை என்று எப்போவும் சொல்லுவார். அவர்தான் என் இன்ஸ்பிரேஷன்)

  ReplyDelete
  Replies
  1. //இது மனித இயற்கை. ஏன்னா, காரியம் முடிந்தபின் யாருக்கும் பணம் கொடுக்க மனம் வராது.// உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. போரா குகைகளின் படங்களை மேலும் பகிர்ந்து ஆவலை கிளப்பியுள்ளீர்கள்
  வாஷ்ரூம் பிரச்னைதான் மிக பெரிய பிரச்சனை பயணங்களின் போது உண்மை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 12. முதல் புகைப்படம் கடந்த பதிவில் போட்டீர்களோ... ஜி

  ஆச்சர்யமான தகவல்கள் தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. அதே போன்ற படம் கடந்த பதிவில் இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. அழகான போரா குகைகள் எந்த படத்திலும் வரவில்லையே ,தடை செய்துவிட்டார்களோ :)

  ReplyDelete
  Replies
  1. சினிமாப் படங்களில் வந்திருக்கிறதா என்பது தெரியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 14. படங்கள் அருமைண்ணே

  ரெஸ்ட் ரூம் கொடுமை இந்தியாவுல எப்போதான் மாறும்ன்னு புரில.

  எவ்வளவோ செலவு செய்வோம். ஆனா, உதவியர்களுக்கு கொடுக்க மனசு வராது நம்மாளுங்களுக்கு. கோவில் உண்டியல்ல கொண்டு போய் கொட்டுவாங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 15. போரா குகைகள் என்னை ரொம்பவே attract பண்ணுகிறது

  ReplyDelete
  Replies
  1. முடிந்தால் சென்று பார்த்து வாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 16. சுற்றுலாத்தலங்களிலாவது ஸ்வச் பாரத் நன்றாக செயல் படுத்தலாம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 17. தங்களோடு அரக்கு பள்ளத்தாக்கிற்கு பயணித்ததுபோல் இருந்தது. படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 18. போரா - வெகுஜோரா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....