எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, August 14, 2017

ரேடியோ பெட்டி – கதை மாந்தர்கள்

அந்த மனிதரை பெரும்பாலான நாட்கள் நான் பயணிக்கும் பேருந்தில் பார்க்கிறேன். அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் வங்காளத்தினைச் சேர்ந்தவர். தில்லியில் பல வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறவர். இப்படி மூன்று மாநிலத் தொடர்பு இருப்பதால் மூன்றுக்கும் மேலான மொழிகள் தெரிந்தவர். பார்க்கும் எல்லா சமயத்திலும் வாயில் பான் பீடா! பெங்காலிகள்/அசாம் மாநிலத்தவர் தூங்கும் போது கூட பான்/பீடா வாயில் வைத்திருப்பார்களோ என ஒரு சம்சயம் எனக்குண்டு! கண்களில் எப்போதும் கண்ணாடி. படிப்பதற்கும், பார்ப்பதற்கும் கண்ணாடி நிச்சயம் தேவை.  நிரந்தரமாக வாயில் பான் பீடா இருப்பவர் பேசினால்....  எனக்கு பத்தாம் வகுப்பு எடுத்த ஆங்கில ஆசிரியர் இப்படித்தான் – எதிரில் இருப்பவர் மேலே ஸ்ப்ரே தான்.ரேடியோ பெட்டி பட்டனைத் தட்டிவிட்டால் போதும், அதுவும், இப்போது வரும் FM ரேடியோ பெட்டிகளில் பட்டனைத் தட்டிவிட்டால் நாள் முழுக்க பேசிக்கொண்டே இருப்பதைக் கேட்க முடிகிறது. சில சமயங்களில் தனிமையை விரட்ட, இப்படி அலைபேசியில் இணையம் வழியே ஏதாவது தமிழ் FM ரேடியோ போட்டு விட்டால் போதும் எனக்கு. பேசியே கொல்கிறார்கள். பாட்டு ஒலிபரப்புவதை விட பேசுவது தான் அதிகமாக இருக்கிறது. அதுவும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் வேக வேகமாகப் பேசுகிறார்கள். பேருந்தில் தினம் தினம் வரும் அந்த நபரும் ஒரு ரேடியோ பெட்டி போலவே! யாராவது சும்மா இருக்காமல் பட்டனைத் தட்டிவிட, பேசிக்கொண்டே இருக்கிறார்.

சென்ற வாரத்தில் ஒரு நாள், பேருந்தில் ஏறிய உடன் அவரது அருகில் இருந்தவர் பட்டனைத் தட்டிவிட, ஆரம்பித்தது தொல்லை. பேருந்தில் இருந்த அனைவருக்கும் கேட்கும்படி, தனது பிரசங்கத்தினை ஆரம்பித்து விட்டார். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை என்ற அளவில் எதை எதையோ பேசிக்கொண்டிருந்தவர் தனது 93 வயது தந்தையைப் பற்றியும் பேசினார். பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருந்த அவரது தந்தை, இவ்வயதிலும் சொற்பொழிவுகள் ஆற்றுவதைப் பற்றியும் சொல்லி, தந்தையின் இந்த திறமை கொஞ்சமாகத் தன்னிடமும் வந்து விட்டது என்று சொல்ல, பேருந்தில் இருந்த ஒருவர் "உங்களோட இந்தத் திறமை பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். அதான் நாங்க தினம் தினம் அனுபவிக்கிறோமே.." என்று சொல்ல, பேருந்தில் இருந்த அனைவருமே சிரித்துவிட்டார்கள். அவருக்கே கொஞ்சம் வெட்கமாகிவிட்டது என்றாலும், இறங்கும் வரை பேச்சு நிற்கவில்லையே!

காலை நேரத்தில் வீட்டு வாசலில் இருந்து அலுவலகம் செல்லும் மூன்று பேருந்துகள் உண்டு. பெரும்பாலும் இரண்டாம் பேருந்தில் செல்வது வழக்கம். அதில் இந்த Chatter Box – ரேடியோ பெட்டி மனிதர் வருகிறார். இனிமேல் மூன்றாவது பேருந்தில் செல்லலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் – ஆனால் அதிலும் இந்த மாதிரி ஒரு ரேடியோ பெட்டி இருக்காது என்று என்ன நிச்சயம்?

பெரும்பாலான நேரங்கள் தனிமையில் இருந்ததால் இப்படி ரொம்பப் பேசும் மனிதர்களைக் கண்டால் கொஞ்சம் அலர்ஜியாக இருக்கிறது. "ராஜா காது கழுதை காது" பகுதிக்கு தகவல் கிடைக்கும் என்றாலும், தினம் தினம் இப்படி பேசுவதைக் கேட்டால் கஷ்டம் தானே.....

சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நமக்கு ஏதோ ஒரு பாடம் கற்பித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் இல்லையா? – ரொம்பப் பேசக்கூடாது என்பது இந்த ரேடியோபெட்டி மனிதர் தந்த பாடம்.....

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

30 comments:

 1. சிவப்பெழுத்தில் இருக்கும் ஒரு த் கட்செய்ய வேண்டும்.

  இது மாதிரி மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன். தொல்லை!

  ReplyDelete
  Replies
  1. மாற்றி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. //பெரும்பாலான நேரங்கள் தனிமையில் இருந்ததால் இப்படி ரொம்பப் பேசும் மனிதர்களைக் கண்டால் கொஞ்சம் அலர்ஜியாக இருக்கிறது.//

  அப்படித்தான் இருக்கும் வெங்கட்.

  குழந்தைகள் இல்லாத வீடாய் இருக்கிறது. நிறைய பேர் இப்போது இருவர் மட்டுமே வாழும் வீடாய் இருக்கிறது. அமைதியான வீடாய் இருக்கிறது.

  வேறு எங்காவது போனால் அதிகமான சத்தமாய் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 3. ரேடியோ பெட்டி மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. ஆம் ஜி! சில சமயம் நமக்கு வேண்டப்பட்டவர்கள் கூட இப்படி வாய் ஓயாமல் பேசும் போது நாம் முகம் தாட்சண்யம் பார்க்கும் நிலைக்கும் சில சமயம் தள்ளப்பட்டு, அதிலிருந்து தப்பிக்க அவர் மனமும் நோகாமல் ஏதேனும் சொல்லித் தப்பிப்பது பெரிய சவால்!!!

  கீதா:// அதுவும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் வேக வேகமாகப் பேசுகிறார்கள். //

  ஐயோ அதை ஏன் கேட்கிறீர்கள் ஜி! பல சமயங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதே புரிவதில்லை. அதுவும் தமிழ் இவர்கள் வாயில் படும் பாடு இருக்கிறதே!!!

  ரேடியோ பெட்டி யை நீங்கள் வர்ணித்த விதம் அருமை ஜி!! ரொம்ப அழகான நடை!!

  3 வது பேருந்தில் இப்படியான மனிதர்கள்யாரும் வராது இருக்கட்டும்!!ஹாஹாஹா

  இதுவும் நமக்கு ஒரு நல்ல பாடம் தான். நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்து நாம் நிறைய பாடம் கற்கலாம் தான் ஜி!..நாம் எப்படி இருக்கக் கூடாது என்று...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. தினமும் இப்படி என்றால் கஷ்டம் தான்.. ஆனாலும் -

  >>> சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நமக்கு ஏதோ ஒரு பாடம் கற்பித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் <<<

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. இது போன்ற மனிதர்கள் பலரை அடிக்கடி நாம் எதிர் கொள்கிறோம். விடாத பேச்சு அவர்களின் இயல்பு. யார் கேலி செய்தாலும் சுட்டிக் காட்டினாலும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாதவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. அடுத்தவர் ரசிக்கிறாரா என்று கூடப் பார்க்காமல் பேசும் மனிதர்களுமொரு வகை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. எல்லோருக்கும் வார்த்தைப் பகிர்வு எண்ணம் இருக்கும். வீட்டிலே பேசும் வாய்ப்பு இல்லைனா (அதாவது அவரது மனைவி இவரைப் பேசவிடாமல் மூச்சுவிடாம அவங்களே பேசிக்கிட்டிருந்தா), வெளில வரும்போது பேசும் வாய்ப்பை உபயோகப்படுத்திக்கொள்கிறார்னு நினைச்சுக்கவேண்டியதுதான்.

  எனக்கு பேசுபவர்களைவிட, மற்றவர்களுக்கு இடஞ்சலா செல்போன்ல வெளில இருக்கறவங்களுக்கும் கேட்கும்படி பாட்டு போடுவது, ரேடியோவை சத்தமாக வைக்கிறது போன்றவை பிடிக்கவே பிடிக்காது. எதைச் செய்தாலும் அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாம செய்தா நல்லது. (த ம)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 10. நானும் ரொம்ப பேசுவேனே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 12. ஆனால் ஒன்று என் ஆபீஸ் அனுபவப்படி ......( சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் .).இவர்கள் தங்கள் பெருமை தம்பட்டம் அடித்துக் கொள்வார்களே தவிர மேலிடத்தில் போட்டுக் கொடுப்பது ,மற்றவர்களை உசுப்பேத்தி விட்டு நம்பளைக் காலை வாரச்சொல்வது என்கிற கெட்ட குணம் இருக்காது ...ஏனெனில் ஜாஸ்தியாக இருப்பதால்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 13. read as "self obsession ஜாஸ்தியாக இருப்பதால் "

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 14. இத்தகைய நபர்களை நானும் நிறைய சந்தித்திருக்கிறேன். பேச்சைத் தொடங்கிவிட்டு, எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்களோ என்று தோன்றும். ஆனால், இப்படி கலர் கலராக மாந்தர்கள் இருப்பதனால்தான், உலகம் சுவாரஸ்யமாக இருக்கிறது. நல்ல பதிவு! சபாஷ்!

  ReplyDelete
  Replies
  1. கலர் கலராக மாந்தர்கள் இருப்பதனால் தான் உலகம் சுவாரஸ்யமாக இருக்கிறது! உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டைக்காரன்.

   Delete
 15. சந்திப்பவர்கள் எல்லாருமே நமக்கு
  ஒரு பாடத்தை கற்பிப்பவர்கள் தான் நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரையோரம் சிதறிய கவிதைகள்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....