அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட Lahaul Spiti Circuit Trip - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
விஜி கல்யாண வைபோகமே - 30 மே 2026 :
இரு உள்ளங்கள் ஒன்றாக இணையும் திருமணம்! உறவினர்களும் நண்பர்களும் சூழ வேத மந்திரங்களும், மங்கள வாத்தியங்களும் ஒலிக்க இரு மனங்கள் ஒன்றாக சங்கமிக்கும் திருமணம்! முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, அக்னி பகவான் சாட்சியாக மங்கல நாண் பூட்டும் விழா! அவையில் உள்ள பெரியோர்கள் மனதார ஆசி வழங்கி அட்சதையும் மலர்களும் மாரி போல் பொழியும் திருநாள்!
என் பள்ளிப்பருவத்தில் கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அவள் பிறந்த போது ‘பிங்க்’ நிறத்தில் இருந்த அவளது பிஞ்சு கால்களை பார்த்த நினைவு இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது! பின்பு சுட்டிப்பெண்ணாக ‘பிங்க்’ நிறக் கன்னங்களுடன் அவள் அழகியாய் காட்சித் தந்தாள்! காலத்தின் ஓட்டத்தில் கொஞ்சிப் பேசும் பருவ மங்கையானாள்! இதோ திருமண மேடையில் மாலைசூடி அழகு மிளிற திருமதியும் ஆனாள்!
நேற்றைய நன்னாளில் என் மாமன் மகளுக்கு சென்னையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது!! சின்னஞ்சிறு வயது முதல் அவளோடு என் இனிமையான பொழுதுகளை நிறைய செலவிட்டிருக்கிறேன்! மாமா அப்போது கோவையில் பணியாற்றிக் கொண்டிருந்த போதும், பின்பு நான் சென்னையில் மாமா வீட்டில் தங்கியிருந்த போதும் என நிறைய இனிமையான தருணங்கள் பேசி மகிழவும் விளையாடி மகிழவும் அப்போது எங்களுக்கு கிடைத்தன!
இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இரு நாட்கள் சிறு பயணமாக குடும்ப சகிதமாக சென்னைக்கு சென்று வந்தோம்! திருமணம் என்றால் உறவினர்களும் நண்பர்களும் சூழ இருந்த திருமணக்கூடத்தில் எல்லோரையும் ஓரிடத்தில் சந்தித்து பேசி மகிழ்ந்தோம்! மனது நிறைய மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வளைய வந்து மனதிற்கு இனிமையான தருணங்களை பதிவு செய்து கொண்டேன்!
தொன்று தொட்டு நடைபெற்று வரும் நம் திருமணச் சடங்குகள் ஒருபுறம் என்றால் தற்போதைய கலாச்சாரமான DJ வுடன் ஆடல் பாடல், பின்பு அழகான தருணங்களை பதிவு செய்து கொள்ளும் ஃபோட்டோ ஷூட் என இந்தத் திருமணத்தில் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக நடைபெற்றது! வயிற்றை குளிர்வித்த பலவிதமான உணவு பதார்த்தங்களும் மனதைக் கவர்ந்தன!
என்னைப் பார்த்ததும் உன்னோட பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன் புவனா! அழகா எழுதற! கமெண்ட் தான் பண்றதில்லை! 25வது திருமண நாள் வாழ்த்துகள்! உன்னை எப்போதும் பிஸியா வெச்சிருக்க! சூப்பர்! சமஸ்கிருத கிளாஸ் எப்படி போறது! என எல்லோரும் விசாரித்ததும், மனதார பாராட்டியதும் பகிர்ந்து கொண்டதும் மனதை நிறைத்தது!
சிறுபயணம் தான் என்பதால் எங்களுக்கு கிடைத்த சிறிது நேரத்தில் அருகிலிருந்த என் சமஸ்கிருத வகுப்புத்தோழி ஒருவரை மட்டும் பார்த்து விட்டு வந்தேன்! அவரே என்னைத் தேடி நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து தன் வாகனத்தில் எங்களை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்!
அவர் வீட்டிற்குச் நாங்கள் சென்றிருந்த நேரம் என் வகுப்பு நேரம் என்பதால் தோழி வகுப்பில் இணைந்து என்னையும் என் குடும்பத்தையும் எங்கள் ஆசிரியரிடம் காண்பித்து மகிழ்ந்தார்! சிறிது நேரம் என்பதால் சற்றே அவரிடம் பேசி விட்டு அவர் தந்த தாம்பூலத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம்! இதுவும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது!
நேற்றைய நாளில் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் விஜி மற்றும் ப்ரேம் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் பகிர்ந்து கொண்டு அங்கிருந்த உறவினர்களிடமும் சொல்லிக் கொண்டு கூட்டை நோக்கி பயணம் செய்து நேற்று இரவு நல்லபடியாக திருவரங்கம் திரும்பி விட்டோம்!
இனி! அடுத்த வாரம் நடைபெறப் போகும் சமஸ்கிருத இறுதித் தேர்வுக்கு தயாராகும் முனைப்பில் தீவிரமாக இறங்க வேண்டும்!
******
இரயில் பயணங்களில் - 31 மே 2026 :
திருச்சிக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட நேரம் என்றால் வெறும் ஐந்து மணிநேரங்கள் தான்! வீட்டிலிருந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுக் கிளம்பினால் மதிய உணவுக்கு சென்னைக்கு சென்று விடலாம். அதுபோல் மாலை தேநீருக்கு பின்பு சென்னையிலிருந்து கிளம்பினால் இரவு உணவுக்கு திருச்சியை எட்டி விடலாம்! பயணப்பிரியரான என்னவருக்கு இந்தப் பயணம் என்பது ஷேர் ஆட்டோவில் செல்வதைப் போன்றது..🙂
இம்முறை சென்னைக்கு சென்று வந்த ரயில் பயணங்கள் மனதுக்கு இணக்கமாகவே இல்லை என்று சொல்லணும். கோடையின் தாக்கம் ஒருபுறம் என்றால் அதை விட சக பயணிகளின் மனப்பாங்கு மிகவும் எரிச்சலைத் தந்தது! பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ளணும் என்ற நெறிமுறைகள் வழக்கொழிந்து விட்டது என்றே நினைக்கிறேன்!
நம் சுதந்திரம் என்பது எதுவரை என்றால் அது அடுத்தவரை தொந்தரவு செய்யாத வரை தான்! நம் வீட்டில் நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! அங்கும் கூட நம் வீட்டு உறுப்பினர்களுக்கு நம் செய்கையோ அல்லது சொற்களோ பிடிக்கவில்லை என்றால் அதை முடிந்தவரை தவிர்ப்பது நலம்!
நம் வீட்டிலேயே இப்படி என்றால் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ரயில் பயணங்களில் பொழுதுபோக்க எத்தனையோ வசதிகளும், வழிகளும் தான் இருக்கிறதே! நம் காதுகளில் மட்டும் ஒலிக்கும் விதமாக பாடல்கள் கேட்கலாம்! ஏதாவது காணொளிகள் பார்க்கலாம்! ஆனால் அது நம் காதுகளுக்கு மட்டும் கேட்டால் போதும்! மொத்த ரயில் பெட்டிக்கும் கேட்க வேண்டாமே!
சிறுபிள்ளைகளுடன் பயணிக்கும் பெற்றோரின் கவனம் அந்த பிள்ளைகளின் மீதிருந்தால் நலம்! அந்தப் பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை கண்டும் காணாமல் உடன் பயணிப்போருக்கு அது பெருத்த இடைஞ்சலையும், எரிச்சலையும் தரும் போது என்னவென்று சொல்வது!
பெற்றோர் பிள்ளைகள் கேட்பவற்றை எல்லாம் தடையேதும் சொல்லாமல் வரிசையாக வந்து கொண்டிருக்கும் உணவுப் பதார்த்தங்களை இடைவெளியே இல்லாமல் வாங்கித் தந்து கொண்டிருக்கிறார்கள்! அதையெல்லாம் சாப்பிட்டு விட்டு குப்பையையும் அங்கேயே வீசிக் கொண்டிருக்கிறார்கள்!
சாய்ந்து கொள்ளும் விதமாக தரப்பட்டுள்ள இருக்கைகளை நம் பின்னால் அமர்ந்திருப்பவர் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்று ஒருநிமிடம் கூட பாராமல் நம் மேலேயே சாய்ந்திருப்பது போல அமர்ந்து கொண்டு சத்தமாக வீடியோ பார்ப்பது, யாரிடமாவது பேசுவது என்று இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வோரை எல்லாம் என்னவென்று சொல்வது!!
எங்களுடைய பயணங்கள் என்றால் ஆரம்பகாலங்களில் புத்தகம் வாசிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, சீட்டாட்டம் என்று இருந்தது! பின்பு இப்போதோ spotifyல் பாடல்கள் கேட்பது, இம்முறை சிக்னல் கிடைத்ததால் கூகுள் மீட்டில் இணைந்து வகுப்பும் கூட அட்டெண்ட் செய்தேன், pdfல் தேர்வுக்காக பாடங்களை படித்துக் கொண்டிருந்தேன்! இப்படி ஏதேனும் அடுத்தவருக்கு இடையூறு தராத வகையில் செயல்படலாம்!
********
இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
4 ஜுன் 2026



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....