செவ்வாய், 2 ஜூன், 2026

கடலோரக் குருவிகள் - பாலகுமாரன் - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Lahaul Spiti Circuit - ஒரு சுற்றுப்பயணம் போகலாம் வாங்க - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******





வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது பாலகுமாரன் அவர்கள் எழுதிய கடலோரக் குருவிகள் எனும் நூல் குறித்த வாசிப்பனுபவம் தான். விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக 1995 - ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதன் முதலாக வெளியிடப்பட்ட நூல். நான் படித்தது ஆறாம் பதிப்பு - 2016 - ஆம் ஆண்டு வெளிவந்தது.  இயக்குநர் ஷங்கர் அவர்களின் கடிதம் முன்னுரைக்கு முன்னால் இருக்கிறது! அவரது எண்ணங்களுடன் துவங்கிய இந்த நூல், வழக்கம் போல பாலகுமாரன் அவர்களின் சிறப்பான எண்ணங்களுடன் தொடர்கிறது.  நல்லதொரு நூல்.  நான் படித்தது அமேசான் கிண்டில் வழி! Monthly Subscription வைத்திருப்பதால் மாதத்திற்கு 169 ரூபாய் கட்டிவிட்டால் தளத்தில் இருக்கும் பல நூல்களை படிக்க முடிகிறது - நமக்கு நேரமிருப்பின் நல்லதொரு வசதி இது.  புத்தகமாக வாங்கினால் ஒன்றிரண்டு புத்தகம் மட்டுமே வாங்க முடியும் இந்தப் பணத்தில்! அதை பாதுகாப்பதும் கடினமாக இருக்கிறது என்பதால் இந்த வசதியை நான் பயன்படுத்தத் துவங்கி சில வருடங்களாகிவிட்டது.  சரி நூலுக்குள் போகலாம், வாருங்கள். 


ஒரு வேளைச் சோற்றுக்கே உள்ளூர் கோவிலில் தரும் பட்டை சாதத்திற்கு காத்திருக்கும் குடும்பமாக கதையின் பிரதான கதாபாத்திரம். வேதங்கள் பயின்று கற்றறிந்த தந்தை. தனது வேதத்தினை வைத்துக் கொண்டு காசு சம்பாதிக்கலாம் என்று எண்ணாமல் குலத்தின் வேலையை மட்டும் செய்து, தருவதை வாங்கிக் கொண்டு வரும் அப்பா.  அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் சிறப்பான விஷயம். ஆனால் தற்கால நடைமுறைக்கு ஒத்துவராமல் இருப்பது.  மகன் படித்து முடித்த பிறகு வீட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பது பெற்றவருக்கும் கஷ்டம் தான்.  தஞ்சை அருகே இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் அவருக்கு தஞ்சை கோவிலின் பல வரலாற்றுச் செய்திகளும், ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டுகளும், தகவல்களும் அத்துப்படி.  அவர் சொல்லி தெரிந்து கொண்ட தகவல்களை மகன் ஒரு சமயத்தில் சென்னையிலிருந்து வந்த பெண்கள் குழுவிற்குச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாழ்க்கைப் பாதை மாற ஆரம்பிக்கிறது.  அவன் சந்தித்த பிரச்சனைகள், வாழ்க்கை அவனுக்குத் தந்த மாறுதல்கள் என பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் கடலோரக் குருவிகள் கதை வழியாக.  மிகவும் சிறப்பான கதை சொல்லி என்பதால் பாலகுமாரன் அவர்கள் கதை வழி பல சிறப்பான விஷயங்களை வாசகர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெறுகிறார்.  


கதை குறித்து அதிகம் பேசாமல், கதையில் எனக்குப் பிடித்த சில வரிகளை இங்கே எடுத்துக்காட்ட விரும்புவதால், சில வரிகள் மட்டும் இங்கே, ஒரு மாதிரிக்காக.  


“உள்ளங்கையில் விரித்துப் பிடித்திருந்த மந்தாரை இலையில் மூன்று பட்டைச் சாதமும் ஒரே நேரத்தில் சொத்தென்று விழுந்ததும் மாதவனுக்கு பசிக்கத்துவங்கியது. வயிறு மெல்ல சுழன்று பசியை அதிகரிக்க வைத்தது. கன்னக்கதுப்பில் சட்டென்று உமிழ் நீர் பொங்கி நாக்கடியில் வழிந்து அதிகப்படியான அந்த எச்சிலை முழுங்க வைத்தது. நாசித்துவாரங்கள் விரிந்து அந்த வெப்ப உணவின் வாசனையை வேகமாய் வாங்கிக் கொண்டு ஒரு சின்ன சுகக்கிறக்கம் அனுபவித்தது” - பசியோடு இருப்பவனின் உணர்வுகளைச் சொல்லும் வரிகளில் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. 


“அப்படிக் கடன் கேட்க விஜயலட்சுமியிடம் நிறைய பேச வேண்டும். அவள் கவிதைகளைப் பாராட்ட வேண்டும். விஜயலட்சுமியின் கவிதைகள் பாராட்டும்படியாய் இருக்காது என்பதே நிஜம். ஆனால் நிஜம் சோறு போடாது என்பது இன்னொரு நிஜம்” - கடன் வாங்குவது எவ்வளவு கடினம் என்பதைச் சொல்லும் வரிகள் நிதர்சனம்.  கடன் வாங்குவதற்காகவே பொய்யும் புரட்டும் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர்த்தும் வரிகள். கடன் வாங்க வேண்டும் என்பதற்காக அப்பாவின் உடல் நிலை சரியில்லை என்று பணம் வாங்கிக் கொண்டு திரும்பித் தராத நண்பர் நினைவுக்கு வருகிறார். 


“தமிழை அலட்சியம் பண்றவன் மூடன். பல நாகரிகம் பார்த்த பாஷை அது. பெரியகோவில் விமானத்த பார். ஒரு கணிதமில்லாம இவ்வளவு பெரிய கட்டடம் கட்டியிருக்க முடியுமா? ஒரு இழை பிசகியிருந்தா கோபுரம் கோணலாயிருக்கும். தமிழ்ல கணக்கு இருந்திருக்கடா. ரொம்பத் துல்லியமா இருந்திருக்கு. காவியமும் கணக்கும் இருக்கற பாஷையை கேலி செய்ய முடியுமா? இந்த மொழி பெரிசு அந்த மொழி சிறுசுன்னு சொல்றவன் தற்குறி. சக்கரம் கண்டுபிடிச்சது சிறுசு. மின்சாரம் கண்டுபிடிச்சது பெரிசுன்னு சொல்ல முடியுமா? கண்டுபிடிப்புகள்ல வித்தியாசம் உண்டா? மொழி மனுஷாளோட கண்டுபிடிப்பு. எவரோ கண்டுபிடிச்ச சக்கரத்துல வேற எவரோ மின்சாரம் கண்டு பிடிச்சு வேகமாக ஓட வைக்கலயா? ரெண்டு கண்டுபிடிப்பும் சேர்ந்து இன்னொரு கண்டுபிடிப்பு வரலையா? அப்படித்தான் ரெண்டு மொழி கலந்து வேற மொழி வரும். புதுசாகும். எல்லாக் கண்டுபிடிப்புகளும் மாறும். மொழியை மாறக்கூடாதுன்னு சொல்றவன் மொழியினுடைய துரோகி. யாருக்கு மாறக்கூடாதுன்னு ஆத்திரம் வரும்? தன் மொழி பெரிசுன்னு நினைக்கிற மூடனுக்குத் தான் வரும். மொழி மேல காதல் இருக்கலாம். காமம் இருக்கப்படாது. காமம்கற வார்த்தைக்கு பேராசைன்னு பொருள். பேராசையுள்ளவன் தனக்கும் தான் சார்ந்ததற்கும் எதிரி.” - மொழி குறித்த சிறப்பான வரிகள். இதை விட சிறப்பாகச் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. 


“ஒரு இருபது வயசுப் பெண் தனது எட்டுத் தோழிகளுடன் ஒரு பையனைத் தேடி அவன் வீட்டுக்கு விருந்தாளியாய் வருவது என்பது தஞ்சாவூரில் அபூர்வம். நாகரிகம் என்பது ஊருக்கு ஊர் மாறும் விஷயம். பம்பாயில் உள்ள பெண் காபி சாப்பிட வருகிறாயா என்று வலியக் கேட்பாள். சென்னையிலுள்ள பெண் கூப்பிட்டால் வருவாள். தஞ்சையில் பெயர் சொல்லி அழைத்தாலும் பெண்ணுக்குக் கோபம் வரும். சாப்பிட அழைத்தால் கொலையே நடக்கும். அவர்களில் எவரும் தவறானவர்கள் இல்லை. யாரும் உசத்தி, மட்டம் இல்லை. அந்தந்த இடத்தின் சூழ்நிலை அது. தஞ்சாவூர் ஒரு தூங்கும் நகரம்.” - இந்த வரிகளில் கொஞ்சம் உண்மை இருக்கலாம். இருக்கும் இடத்தினைப் பொறுத்தே மாறுதல்கள் வருகின்றன.


“களைப்பாய் சுவரில் சாய்ந்து கண்களை மூடி மனசுக்குள் விதவிதமாய் பாட்டுப்பாடி கனவுகள் நெஞ்சை அரிக்க தூங்கிப் போனார்கள். தமிழ்நாட்டின் மிகப்பெரிய இளைஞர் கூட்டம் அநேகமாய் இப்படித்தான் இருக்கிறது. எந்த ஆற்றலையும் வெளிப்படுத்தாமல் கிடைத்த திண்ணையில் சுருண்டு தூங்குகிறது. கனவுகள் கிளறி, கிளறி கண்களை மறைக்க நிஜம் மறந்து வாழ்கிறது.” - எழுதப்பட்ட காலத்தில் மட்டுமல்ல, தற்போதும் இப்படியே தான் பல தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.  


“பெண் உதவி என்று கூப்பிட்டால் எந்த நேரமாயினும் எந்த இடமாயினும் எப்பேர்ப்பட்ட விரதத்தில் இருந்தாலும் எவ்விதமான சமயத்தில் இருந்தாலும் ஒரு ஆண் உதவிக்குப் போக வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்கிறது. பெண் ஓலமிட கண்டும் காணாது செல்பவன் நரகத்தை அடைவான் என்று சொல்கிறது.”  - இன்று பல இடங்களில் பெண், ஆண் பாகுபாடு இல்லாமல் யார் சிக்கலில் இருந்தாலும் கண்டுகொள்ளாமல் செல்வதும், அப்படியே அங்கே இருந்தாலும் படம் எடுப்பதும், காணொளி எடுப்பதுமாகவே இருக்கிறது இந்த உலகம். 


“‘சே, தமிழ்நாட்ல ஏன் பொம்பளைய யாருக்கும் மதிக்கவே தெரியலை. பொம்பளையை ஏன் உடம்பாகவே பார்க்கறாங்க…’ அவள் தனக்குத் தானே பேசியது மாதவனுக்கு மிகவும் உறுத்தியது. தான் பெண்களை எப்படிப் பார்க்கிறோம் என்று கேள்வியைக் கொடுத்தது. மாதவன் கலங்கிப் போய் மனசுக்குள் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் சொல்லத் துவங்கினான். உலகத்தின் எல்லா அனுபவங்களிலிருந்தும் எனக்குப் பாடம் கற்றுக் கொடு என்று வேண்டினான்.” - தமிழகம் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் பெண்களைப் பார்க்கும் பார்வை இப்படித்தான் இருக்கிறது, என்பது வேதனை தரும் உண்மை. 


“வாழ்க்கை என்பது பிறர் பேசுவதைக் கேட்டு, நடப்பதைப் பார்த்து, தன் அனுபவத்தை ஒப்பிட்டுத்தானாய் புரிந்து கொள்வது. எல்லாம் தெரிந்து இங்கு பிறந்தவன் எவருமில்லை. அப்படிப்பிறப்பவனை கடவுள் என்று உலகம் கொண்டாடுகிறது. அவன் யுகத்துக்கு யுகம் அவதரிப்பான் என்று உறுதி கூறுகிறது. மற்றபடி, மனிதர்கள் அறிவுரை கேட்டு அதை அனுபவத்தில் தோய்த்து மேற்கொண்டு நடப்பவர்கள். அறிவுரையைக் கேட்க மாட்டேன் என்பவன் நிர்மூடன், சொல்ல மாட்டேன் என்பவன் அகம்பாவி. இங்கே நீ கற்றதனைத்தும் பிறர் எச்சம். பிறர் வாழ்ந்த்து அனுபவித்ததின் மிச்சம்.” - சிறப்பான வரிகளாக எனக்குத் தோன்றுகிறது. இங்கே கற்றுக்கொள்ள எத்தனையோ உண்டு. கற்றுக்கொள்ள மனமிருந்தால் கற்றலும் சுலபம்.


“மனுஷா மனசு விசித்திரமானது மாதவா. மனசுக்கு நீ எதைக் கொடுக்கிறியோ அதை வச்சிக்கிட்டு தான் விளையாடும். உன் மனதை நீ உற்றுக் கவனிக்க கத்துக்கணும். ஏன் என் மனசு இப்படி யோசிக்கிறது அப்படீன்னு யோசிக்கக் கத்துக்கணும். இதைச் செய், அதைச் செய்யின்னு ஏன் மனசைத் தூண்டுதுன்னு பார்க்கக் கத்துக்கணும். மனசை உற்றுப் பார்க்கக் கத்துக்கணும். மனசை உற்றுப் பார்க்க பார்க்க அது கனிய ஆரம்பிச்சுடும்.” - தன் மகனுக்கு அப்பா சொல்லித்தரும் விதமாகச் சொன்ன வரிகள் - இங்கே மட்டுமல்ல, கதையின் கடைசியில் கூட மாதவனுக்கும், கதையின் நாயகி மீனாட்சிக்குமாக, மாதவனின் அப்பா சொல்லும் அறிவுரைகள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கேட்க வேண்டிய வரிகள்.  பெரிய பெரிய விஷயங்களைச் சுலபமாகச் சொல்லிக் கொண்டு செல்கிறார்.  கதை முழுக்க இப்படி நிறைய விஷயங்கள் உண்டு.  முடிந்தால் நீங்களும் கடலோரக் குருவிகள் நூலை வாசித்துப் பாருங்களேன் - உங்களுக்கு விருப்பமிருந்தால்.  அமேசான் தளத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்க, இணைய தள முகவரி கீழே.


Kadalorak Kuruvigal (Tamil Edition) eBook : ., Balakumaran: Amazon.in: Kindle Store 


மீண்டும் வேறொரு வாசிப்பனுபவத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

2 ஜுன் 2026


10 கருத்துகள்:

  1. 169 ரூபாயில் பல புத்தகங்கள்..  நல்ல தேர்வு.  நல்ல வசதிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இது ஒரு நல்ல வசதியாகவே இருக்கிறது. நிறைய புத்தகங்களும் கிடைக்கின்றன. அச்சுப் புத்தகங்களை பராமரிக்க நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கிறது. தில்லியில் என்னிடம் இருந்த பல புத்தகங்களை நண்பர்களுக்குக் கொடுத்து விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இப்படியொரு தலைப்பில் பாலகுமாரன் கதை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  கிடைத்தால் வாசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நூல். முடிந்தால், கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். பதிவில் சொல்ல விட்டுப்போன ஒரு விஷயம் - கதையின் தலைப்பாக வந்திருக்கும் கடலோரக் குருவிகள் பற்றிய ஒரு கதை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. என்னிடமும் ஒரு நண்பர் அந்த அவசரம் இந்த அவசரம் என்று கடன் வாங்கி திருப்பித் தரவில்லை.  எனக்கும் அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றா, ரெண்டா.... இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். சிலருக்கு, வராது என்று தெரிந்தே கொடுத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. உங்கள் ரசனைக்கேற்ற வசனத் தெரிவுகளை படித்து ரசித்தேன்.  பாலகுமாரன் இப்படியான சிந்தனைகளை படிப்போர் மனதில் தூண்டுவதில் ஜித்தன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜித்தன் - உண்மை. அவரது பல வசனங்களும் கவிதைகளும் ஒரு காலத்தில் தனியாக எடுத்து எழுதி வைத்திருக்கிறேன். சில வசனங்கள் மனப்பாடமாக இருந்தது. சில நூல்களை அவற்றில் இருக்கும் சிந்தனைகளுக்காகவே பல முறை படித்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அன்பின் வெங்கட். மிகத் தெளிவான நடை.அருமையான தமிழ். பாலகுமாரன் அவர்களின் எழுத்தைப் படித்துப் பல காலம் ஆகிறது. இரும்புக் குதிரைகள், தாயுமானவன் இந்த நூல்களோடு ஒன்றிய நாட்கள் நினைவில். கடலோரக் குருவிகள். கப்பலில் ஏறி விட்டுத் திரும்ப முடியாமல் திணறும் ஆங்கிலக் கதையும் நினைவில். ஆசிரியன் அறிவுரைகள் இப்போது தடுமாற்றம் அடையும்
    இளம் பருவத்தினருக்கு அருமையான புத்திமதியாக அமையு, எப்பொழுதுமே இதமாகச் சொல்லப் படும் அறிவுரைகளை ஏற்பது எளிது. கடின சொற்களை இப்போதுள்ள உள்ளங்கள் ஏற்பதில்லை. மிக நன்றி மா. படிக்க முயல்கிறேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் மா. அவரது எழுத்துக்களும் எண்ணங்களும் பலரை கட்டிப் போட்டு வைத்திருந்தது. பின்னாட்களில் சற்றே அவரது எழுத்துப் பாணி மாறிப்போனாலும் ஆரம்ப கால எழுத்துக்களில் பலருக்கு ஒரு கவர்ச்சி இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....