அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட Lahaul Spiti Circuit Trip - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பாடுவோர் பாடினால் - 06-06-2026 :
காலை நேர நடை என்பது பல நேரங்களில் ஸ்வாரஸ்யம் என்றால் சில நேரங்களில் கடினமான ஒன்று மட்டுமல்லாது கொஞ்சம் வேதனையும் தரக்கூடிய விஷயமாகவும் மாறிவிடுகிறது. திருவரங்கத்து வீதிகளில் காலை நேரம் நடக்கும்போது வாசல் தெளிக்கும் பெண்மணிகள், மக்கள் நடக்கிறார்களே என்று கூட யோசிக்காமல் தண்ணீரை வாசலில் விசிறி அடிக்கிறார்கள். “அதான் தண்ணி தெளிக்கறோம்ல! கொஞ்சம் தள்ளிதான் போறது” என்று சொன்னால் கூட அஞ்சுவதற்கில்லை. அதே போல பல வீடுகளில் குப்பை எடுக்க வரும் நேரத்தில், குப்பையைக் கொண்டு வந்து தரும் அளவுக்கு எங்களால் காத்திருக்க முடியாது என்று வாசலில் வந்து குப்பையைக் கொட்டி விட்டுச் செல்கிறார்கள். வீசி அடிக்கும் குப்பை உங்கள் மேல் விழாமல் தப்பித்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்! இத்தனை தொல்லைகளைத் தாண்டி நடந்து கொண்டு தான் இருக்கிறார்கள் - என்னைப் போல சிலர்! நேற்று காலை கிடைத்த அனுபவம் வேறு வகையானது.
நேற்று காலை சற்றே சீக்கிரமாக எழுந்து ஐந்து மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டேன். சித்திரை வீதியில் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னர் ஒரு இளைஞர் - காதில் பெரிய Head Phone சகிதம் நடந்து கொண்டிருந்தார். வெள்ளைக் கோபுரத்தினை சில பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தவரை கடந்து விட்டேன். சில அடிகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டேன் - காதில் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் போல, அதனை அந்த இளைஞர் நாராசமான குரலில், - கூடவே தானும் சத்தமாகப் பாடினார். அவ்விளைஞர் பாடிய, இல்லை இல்லை கத்திய கத்தில் அனந்தசயனத்தில் ஆனந்தமாய் பள்ளிகொண்டிருக்கும் அரங்கனே அலறி அடித்துக் கொண்டு எழுந்திருந்து இருப்பார் என்று தோன்றியது எனக்கு! பாடிய பாடல் அத்தனை நல்லதொரு பாடல் - “ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்னா” பாடல்!
பொதுவாகவே ஹெட் ஃபோனில் பாட்டுக் கேட்கும்போது கூடவே பாடினால் சத்தமாகவே பாடுவோம். குரல் நன்றாக இருந்துவிட்டால் பரவாயில்லை. குரல் நன்றாக இல்லை எனும்போது மனதுக்குள் பாடிக்கொண்டால் நல்லது. இல்லை எனில் சுற்றி இருக்கும் அனைவருக்கும் தொல்லை தான். எனக்கு சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கமலா காமேஷ்-ஐ பெண் பார்க்கப் போகும்போது விசு சொல்வாரே “உன்னையே நான் கல்யாணம் பண்ணிக்கறேன் - ஆனால் எனக்கு நீ ஒரு சத்தியம் பண்ணனும் - நீ இனிமே பாடவே மாட்டேன்னு சத்தியம் பண்ணித் தரணும்!” என்று அது நினைவுக்கு வந்தது. அது போல அந்த இளைஞரிடம் பாடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டால் எல்லோருக்கும் நல்லது! இப்போது நினைத்தால் கூட, அவர் குரல் கொஞ்சம் கிலியைக் கொடுக்கிறது! பாடலைக் கேட்ட கிருஷ்ணரே கூட “நீ என்னைச் சரணாகதி அடையாதே” என்று சொல்லிவிடக்கூடும்! அப்படி ஒரு குரல்!
*******
பூ வாசம் புறப்படும் - 07-05-2026 :
காலை நேர நடை - கடந்த சில நாட்களாக நான் மட்டுமே தனியாக நடக்கச் செல்கிறேன். அதனால் நடையின் வேகம் அதிகமானது மட்டுமல்லாது நடக்கும் தூரமும் அதிகமாக இருக்கிறது. Google Fit கணக்குப் படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5000 அடிகள் - அதிக பட்சம் 10000 அடிகள் - என்று அளவீடு வைத்துக் கொண்டு நடக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாதையில்! சில சமயம் வீட்டிலிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் ஒரு உலாவும், உத்திர வீதிகளில் ஒரு உலாவும் சென்றால், சில சமயங்களில் வேறு பாதை, வேறு இலக்கு என்று வைத்துக் கொண்டு நடக்கிறேன். நேற்றைக்கு சித்திரை வீதியில் இரண்டு ரவுண்டு - இது வேறு ரவுண்டு! தப்பாக எடை போட்டுவிட வேண்டாம். ஒரு நாள் காலை வேளையில் சாலை ரோடு வழியே நடந்து நேரடியாக பூ மார்க்கெட் இருக்கும் சாத்தார வீதியில் நுழைந்து விட்டேன். சாத்தார வீதி - கலகலவென்று இருக்கும் - எந்த நேரத்திலும்!
பூக்களை தங்கள் நிலங்களிலிருந்து பறித்து, மூட்டைகளாகக் கட்டி, இரு சக்கர வாகனங்களிலோ, நான்கு சக்கர வாகனங்களிலோ கொண்டு வந்து பூ மார்க்கெட்டில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் தர, அதனை அவர்கள் சில்லறை வியாபாரிகளுக்கும், நேரடியாக வந்து பூ வாங்கிச் செல்லும் மக்களுக்கும் தருகிறார்கள். வரத்தைப் பொறுத்து பூக்களின் விலை நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு நாள் கிலோ எண்பது ரூபாய்க்கு கிடைக்கும் ரோஜாப் பூ, அடுத்த நாள் வரத்து அதிகமாக, நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் லோலடிக்கிறது. எத்தனை வகையான பூக்கள் என்று பார்க்கும்போது இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை மலர்கள் என்று வியக்காமல் இருக்க முடிவதில்லை. பூக்கள், இலைகள் என அங்கே கிடைக்கும் அத்தனை விஷயங்களுக்கும் விதம் விதமான வாசனை!
கெட்டுப் போகும் பூக்களை அப்படியே சாலையில் கொட்டி விடுவதால் உண்டாகும் கெட்ட வாடையை மீறி பூக்களின் வாசம் இருக்கிறது! அப்படிக் கொட்டப்படும் கெட்ட பூக்களை குப்பை வண்டியில் அள்ளிச் சென்று விடுவார்கள் என்றாலும், அவர்கள் வருவது ஒரு நாளைக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ (தெரியவில்லை!) என்பதால் காலை நேரத்தில் கெட்ட வாடையும் சேர்ந்தே வருகிறது. பூ விற்பனையாளர்கள் கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்க்காமல் சற்று தள்ளி ஏதேனும் இடத்தில் குப்பைகளைக் கொட்டினால் பூக்களின் நல்ல வாசனையை நாம் மட்டுமல்ல அவர்களும் நுகர்ந்து இன்புற்றிருக்க முடியும்! ஆனால் நிச்சயம் அவர்கள் செய்யப் போவதில்லை. இப்படி சாலையில் கொட்டுவது இன்றோ, நேற்றோ நடப்பது அல்ல! காலம் காலமாக இப்படியே தான் நடக்கிறது.
தாமரை மொட்டுகள், கனகாம்பரம், ரோஜா, இட்லிப்பூ, மல்லிப்பூ, முல்லைப் பூ, அரளிப்பூ, சாமந்தி, தாழம்பூ, மரிக்கொழுந்து என எத்தனை வகை மலர்கள், ஒவ்வொருன்றும் தரும் சுகந்தம் என காலைப் பொழுது ரம்மியமாக மாறிவிடுகிறது. ராஜகோபுரத்தினை வணங்கி, சாத்தார வீதி, உத்திர வீதிகள் என வலம் வந்து வீடு திரும்பினால் நல்லதொரு நடை. அன்றைய மாலையும் நடந்து வந்ததால், அன்றைய அடிக்கணக்கு - Google Fit - சொன்ன அடிக்கணக்கு - 10303; Heart Points - 80! எப்படி கணக்கு செய்கிறது என்பது புரியாத புதிராக இருந்தாலும் அந்தக் கணக்கை நம்பித்தான் தீர வேண்டும். வேறு சில செயலிகளும் பரிசோதித்துப் பார்த்தேன். சரியாகத் தோன்றாததால் மீண்டும் Google Fit பக்கமே சாய்ந்து விட்டேன். நடப்பதைக் கணக்குப் பண்ண, நீங்கள் எந்த செயலியைப் பயன்படுத்துகிறீர்கள் - பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
9 ஜூன் 2026










நான் உபயோகிப்பதும் கூகிள் ஃபிட்தான். சில நாட்களில் அறுபது நிமிடங்களில் 10,000 ஸ்டெப்ஸ். பல நாட்களில் 70 நிமிடங்களில். பொதுவா 10,000 ஸ்டெப்ஸக்கு 115-118 ஹார்ட் பாயின்ட். பொதுவா ஒரு நாளைக்கு 150 ஹார்ட் பாயின்ட், 10 கிமீ என்பது என் கணக்கு. கடந்த 1200 நாட்களுக்கும் மேலா தொடர்ந்து விடாமல் நடக்கிறேன். அதற்கு முன்பு வாரத்தில் அல்லது பதினைந்து நாட்களில் இரு நாட்கள் என விட்டுப் போயிடும்.
பதிலளிநீக்கு10,000 ஸ்டெப்ஸ் முடித்தால் குறைந்தது எட்டு கிமீ
// “அதான் தண்ணி தெளிக்கறோம்ல! கொஞ்சம் தள்ளிதான் போறது” என்று சொன்னால் கூட அஞ்சுவதற்கில்லை. //
பதிலளிநீக்குஆச்சர்யப்படுவதற்கில்லை என்று வரவேண்டுமோ...
மலர்ந்திருக்கும் பூக்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு வாசனையோ, மார்க்கெட்டில் அதற்கு ஈடான கெட்ட வாசனையும் சேர்ந்தே அடிக்கும்! கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் நானும் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு