செவ்வாய், 14 மார்ச், 2017

சாப்பிட வாங்க – ராதா வல்லபி


ராதா Bபல்லபி

இந்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் ஒரு பெங்காலி உணவு பார்க்கலாலாமா… இந்த உணவின் பெயர் ராதா வல்லபி! ஏதோ பெண் பெயராக இருக்கே என்ற குழப்பத்தில் வந்தவர்களுக்கு ஒரு புன்னகை பரிசு! நான் வல்லபி என எழுதி இருந்தாலும் பெங்காலிகள் இதைப் படிப்பது Bபல்லபி! என்று தான் – அவர்களுக்கு ”வ”, ”வரலாம் வா, வரலாம் வா” என்றாலும் வராது! வ எல்லாமே Bப தான்! வெங்கட் – Bபெங்கட்! மாதிரி வல்லபி – Bபல்லபி! சரி அது என்ன ராதா Bபல்லபின்னு பார்க்கலாமா….

ராதா Bபல்லபி ஒரு சிற்றுண்டி! பொதுவாக பெங்காலிகள் குளிர் சமயத்தில் சாப்பிடும் ஒரு சிற்றுண்டி இது! அதுக்காக வெயில் அடிக்கும் நம்ம ஊரில் சாப்பிடக்கூடாது என்று சொல்ல முடியாது! நாமும் சாப்பிடலாம்! என்ன பொருட்கள் தேவை, எப்படிச் செய்யணும்னு பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

அரை கப் கடலை பருப்பு, இஞ்சி ஒரு துண்டு, பச்சை மிளகாய்-1, பெருங்காயத் தூள், சோம்பு ஒரு ஸ்பூன், Bபாஜா மசாலா ஒரு ஸ்பூன் [ஒரு ஸ்பூன் ஜீரா, 1 ஸ்பூன் தனியா, இரண்டு சிவப்பு மிளகாய், ஆகியவற்றை எண்ணை விடாமல் வறுத்து, பொடித்து வைத்துக் கொண்டால் அது Bபாஜா மசாலா!], அரை ஸ்பூன் சர்க்கரை, எண்ணை மற்றும் உப்பு தேவையான அளவு.

மேலே சொன்னது தவிர, ஒரு கப் மைதா, இரண்டு ஸ்பூன் நெய் [அ] எண்ணை, அரை ஸ்பூன் உப்பு, கால் கப் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் பொரித்து எடுக்க எண்ணை.

எப்படிச் செய்யணும் மாமு?

காலையில் ராதா வல்லபி செய்ய வேண்டுமென்றால், இரவே கடலைப் பருப்பை ஒரு முறை கழுவி, தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். காலையில் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு! கொரகொரப்பாக அரைத்துக் கொண்டால் போதும்!

கொஞ்சமாக எண்ணையை வாணலியில் விட்டு, காய்ந்ததும், பெருங்காயம் மற்றும் சோம்பு சேர்க்கவும், சோம்பு வெடித்ததும், அரைத்து வைத்த பருப்பைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.  அடிபிடிக்கும் வாய்ப்பு உண்டு என்பதால் கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும்! மிதமான சூட்டில் வைத்துக் கொண்டால் நல்லது. வாணலி அடி பிடித்துக் கொண்டால் உங்களுக்கு, குறிப்பாக சமையல் செய்யும் கணவர்களுக்கு அடி நிச்சயம்! சிறிது நேரத்தில் இறக்கி விடலாம்.  இறக்குவதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் Bபாஜா மசாலாவினைத் தூவி விடவும்! அப்படி இறக்கி வைத்தது ஆறட்டும். அதற்குள் அடுத்த விஷயம் செய்யலாம்!


அரைத்து வைத்த  Stuffing!பிசைந்து வைத்த மாவு....

ஒரு கப்பில் கொடுத்திருக்கும் மைதா [நான் கோதுமை மாவும் சரி பாதி சேர்த்து இருக்கிறேன்], உப்பு, எண்ணை [அ] நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.  பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு பிசையவும். ரொம்ப தண்ணீர் சேர்க்கக் கூடாது. நன்கு பிசைந்த பிறகு, கொஞ்சம் எண்ணை தெளித்து, ஒரு துணியில் மூடி வைக்கவும்! பெரும்பாலும் வட இந்தியர்கள், சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் கூட, ஈரத் துணியில் கொஞ்சம் நேரம் மூடி வைப்பார்கள். மாவு காய்ந்து விடாமல் இருக்க இது ஒரு வழி. கால்/அரை மணி நேரம் மூடி வைத்த பிறகு நல்ல சாஃப்டாக இருக்கும்.


Step-1


Step-2


Step-3: Stuff செய்து பூரிக்கட்டை கொண்டு இட்டது....

பிறகு மாவை மீண்டும் எடுத்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வட்ட வடிவங்களாக கைகளில் தட்டி, அதில் ஒரு ஸ்பூன் தயாராக இருக்கும் அரைத்து வைத்த கடலைப் பருப்பு வைத்து, மாவினால் மூடவும். பிறகு பூரிக்கட்டையால் [The Famous பூரிக்கட்டை!] மெதுவாக வட்ட வடிவமாக தேய்க்கவும்! சாதாரணமா இருந்தாலே சப்பாத்தி ரவுண்டா வராது, இதுல உள்ளே கடலைப்பருப்பு வைச்சு செய்தா பல நாட்டு மேப் உருவாகுமே என்ற பயம் வேண்டாம்! உள்ளே ஸ்டஃப் செய்தது வெளியே வராம பார்த்துக்கறது உங்க பொறுப்பு!

இப்படி எல்லா உருண்டைகளையும் செய்து முடிப்பதற்குள், வாணலில் கொஞ்சம் எண்ணை வைத்து, ஒவ்வொன்றாக பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.  ஒரு பக்கம் நிறம் மாறியதும், திருப்பி விடலாம்! அனைத்தையும் பொரித்து ஒரு ப்ளேட்டில் Tissue paper வைத்து அதன் மேல் இந்த ராதா Bபல்லபியை வைத்துக் கொள்ளலாம்!  அவ்வளவு தான் சுடச் சுட ராதா Bபல்லபி ரெடி!

இந்த ராதா Bபல்லபியைச் சும்மாவே சாப்பிடலாம். இல்லை என்றால் ஊறுகாய் உடனோ, உருளைக்கிழங்கு சப்ஜியுடனோ சாப்பிடலாம்! செய்து பாருங்களேன்!

அடுத்த வாரம் வேறு ஒரு குறிப்புடன் வரேன்…. சரியா! இந்த வார சாப்பிட வாங்க பதிவில் உள்ள ராதா Bபல்லபி செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் எழுதுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

34 கருத்துகள்:

 1. உள்ளே ஸ்டஃப் உடன் வட்ட வட்டமாக... சிரமம் தான்...

  பூரிக்கட்டை Catch...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. அட! எல்லாம் நம்மூர் போளி சமாச்சாரம்தான். உள்ளே வைக்கும் உருண்டைதான் வேற !

  செஞ்சு பார்க்கணும், வீட்டுக்கு விருந்தாளி வந்தால் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போளி இனிப்பு என்றால் இது காரம்! அது தவாவில், இது வாணலியில்.. :)

   விருந்தாளி வந்தால் தானா! அது சரி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 3. படங்களை காணும்போதே ஆசையாக இருக்குது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிடவும் செய்யலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. செய்துப் பார்க்க சொல்லும் படங்கள்.
  செய்முறை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது செய்து பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 5. அட! கார போளி என்று சொல்லலாமோ?!! ஆனால் பொரித்தல்!! மெனு இங்கு போட்டாச்சு...

  பெங்காலிகளின் 'பB' வ வுக்குப் பதில் பயன்படுத்துவது ரொம்ப ஃபேமஸ் ஆச்சே!

  பெங்கட்ஜி! ஓ சாரி...வெங்கட்ஜி!!! ஃபைவ் ஸ்டார் செஃப் தோத்தார்கள் போங்கள் என்ன அழகாக ஏதோ காம்பஸ் வைத்து வட்டமடித்து இட்டது போன்று அவ்வளவு பெர்ஃபெக்டாகத் தேய்த்து இருக்கிறீர்களே!! வாவ்! சூப்பர்...

  கட்டல் சப்ஜி செய்து பார்த்தாயிற்று உங்கள் ஸ்டைலில்...சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள...நன்றாக வந்தது ஜி!இதையும் செய்துவிடுகிறேன்....பகிர்வுக்கு மிக்க நன்றி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டல் சப்ஜி செய்து பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. இதுவும் செய்து பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. ராதா வல்லபி, கார போளியை எண்ணெயில் பொரித்தெடுப்பதுபோல் உள்ளது. அத்துடன் ஆலு பாஜி நன்றாகத்தான் இருக்கும் (எல்லாமே எண்ணெய் என்றாலும்).

  கடைசி படம் ஏதோ ஆர்ட் ஒர்க் போலத் தெரிகிறதே. இப்படி சரியான வட்டமாக வருமென்றால், நீங்கள் எக்ஸ்பெர்ட்தான். அரங்கம் செல்லும்போது உங்கள் குடும்பத்துக்கு இவைகளைப் பண்ணிக்கொடுக்கத் தயாராகுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசி படம் க்ராப் செய்தது.... Step-1 மற்றும் Step-2 படங்கள் க்ராப் செய்யாதது... பல வருடங்களாக சப்பாத்தி செய்து பழக்கம் என்பதால் வட்டமாகவே வரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. பூரி! போளி அல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 9. ஏழிசை வல்லபிங்கற மாதிரி இருக்கு பெயர். புதுசா இருக்கு. ஒருமுறை முயற்சி செய்து விடுவது (மாமு) என்று தீர்மானம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏழிசை வல்லபி! :) நல்ல பெயர். மாமு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஜெகசிற்பியனின் "ஆலவாய் அழகன்" நாவலில் இன்னொரு கதாநாயகி ஏழிசை வல்லபிங்கற பேரிலே வருவாள். மெயின் கதாநாயகி முக்கோக்கிழானடிகள்! :) கதை முடிவிலே இறந்து விடுவாள்.

   நீக்கு
  3. ராஜஸ்தான், உ.பி கசோடி மாதிரி ஏழிசை வல்லபி, சேச்சே அதென்ன பெயர் ராதா வபல்லவிபி இருக்கு. அதிலே பாசிப்பருப்பு இல்லைனா உளுத்தம்பருப்பு வைத்துச் செய்வார்கள். அதுவும் ராஜஸ்தானில் நாங்க இருந்த நசிராபாதில் கசோடானு ஒண்ணு கசோடிக்கு அண்ணன்! அண்ணன்னா பெரியய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அண்ணன் செய்வாங்க பாருங்க! கண்ணிலே நீர் வடியும்! நூறு கிராம் கசோடாவும் கால் கிலோ ஜிலேபியும் தான் அங்கே பாதிப்பேருக்குக் காலை ஆகாரம்! நூறு கிராம் கசோடாவை நாங்க ஒரு வாரத்துக்கு வைச்சுப்போம்! :)

   நீக்கு
  4. ஆலவாய் அழகன் - பெயரும் அழகு. முக்கோக்கிழானடிகள்... வித்தியாசமான பெயர் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
  5. பெங்காலிகளும் கடலைப் பருப்பிற்கு பதில் உளுத்தம்பருப்பு வைத்தும் செய்வதுண்டு. ராஜஸ்தான்/உத்திரப் பிரதேச கச்சோடியும் பிடித்த உணவு! அளவு தான் படுத்தும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 10. எனக்கும் கார போளி மாதிரித் தோன்றியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. செய்து சாப்பிடலாம்.... செய்து பாருங்களேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 12. ராதா வல்லபி! வித்தியாசமான பெயர்! கண்ணனின் ராதாவும் வல்லபி விநாயகரும் நினைவுக்கு வந்தார்கள்! வித்தியாசமான, அதே சமயம் நல்ல குறிப்பாகவும் இருக்கிறது. பூரியாக போடாம‌ல் சப்பாத்தியாக போட்டு விடலாம். குறிப்பிற்கு அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூரியாக இல்லாமல் சப்பாத்தியாக [பராட்டாவாக!] செய்து பார்க்கலாம்! நல்ல யோசனை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 13. சகலகலா வல்லவர் அய்யா நீர்
  [The Famous பூரிக்கட்டை!] மச்சானை வம்புக்கு இழுக்காட்டி தூக்கம் வராதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூரிக்கட்டை என்றவுடன் மச்சான் தானே நினைவுக்கு வரார்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது!

   நீக்கு
 14. பூரிக்கும் ,போளிக்கும் இடையில் இதென்ன புது அயிட்டம் ,சாப்பிட்டுப் பார்க்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....